லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பெப்சி கம்பெனியை சீல் வைத்த வரலாறு தெரியுமா உங்களுக்கு ?...



ஒரு பெரியவர் தான் வாங்கிய பெப்சியில் அழுக்குப் படலம் இருந்ததாகப் புகார் கொடுத்தார். சாம்பிளை லேப் டெஸ்ட்டுக்கு அனுப்பினதுல, 'மனிதர்கள் குடிக்க ஏற்ற பானமில்லை'ன்னு ரிப்போர்ட் வந்தது. சட்டப்படி அந்த நிறுவனம் மேல என்ன நடவடிக்கை எடுக்கணும்னு ஒரு அறிக்கை தயாரிச்சேன். ரொம்ப யோசனைக்குப் பிறகு தாசில்தார்கிட்ட எட்டு பூட்டு மட்டும் வாங்கிட்டு வரச் சொன்னேன். எதுக்குன்னு புரியாம வாங்கிட்டு வந்தவரைக் கூட்டிக்கிட்டு மதுராந்தகத்துல இருக்குற பெப்சி கம்பெனிக்குப் போனேன்.

நான்(சகாயம்) தயாரித்த அறிக்கையின் ஒரு நகலை கம்பெனி மேனேஜர்கிட்ட கொடுத்துட்டு, 'கம்பெனியைப் பூட்டி சீல்வைக்கப் போறோம். எல்லாரையும் வெளியே வரச் சொல்லுங்க'ன்னு சொன்னோம். அந்த மேனேஜரைவிட என்கூட வந்த தாசில்தார் ஆடிப் போயிட்டாரு. 'சார்... பெரிய பிரச்னை ஆயிடும். எதுக்கும் கலெக்டரை ஒரு வார்த்தை கேட்டுக்கலாம்'னு பதறுனாரு. 'கலெக்டரைக் கேட்டா சீல்வைக்க விட மாட்டாரு. சட்டப்படி இந்தக் கம்பெனியை மூட நமக்கே அதிகாரம் இருக்கு. நீங்க தைரியமா உங்க கடமையைச் செய்யுங்க'ன்னு அவரை உள்ளே அனுப்பினேன். ஒரு மணி நேரம் கழிச்சு இன்னும் பதற்றத்தோடு வெளியே வந்தவரு, 'சார்... அவங்க அமெரிக்கா வரைக்கும் பேசுறாங்க சார். சி.எம்-கிட்ட பேசுறதாச் சொல்றாங்க சார். என்ன பண்ணலாம்?'னு கேட்டாரு. 'உள்ளே இருக்கிறவங்களை அரெஸ்ட் பண்ணிட்டு சீல்வைக்க வேண்டியதுதான்'னு நான் சொல்லவும்தான் எல்லாரும் பயந்து வெளியே வந்தாங்க. கம்பெனியை இழுத்து மூடி, எட்டு பூட்டுகளையும் போட்டு சீல்வெச்சுட்டோம்.


நான்(சகாயம்) உடனே அலுவலகத்துக்குப் போகாம ஒரு குக்கிராமத்துக்குப் போயி ரேஷன் கடை, பள்ளிக்கூடத்தை எல்லாம் ஆய்வு பண்ணி முடிச்சுட்டு, ராத்திரி எட்டு மணிக்கு வீட்டுக்கு வந்தேன். என் மனைவி வாசல்லயே காத்துட்டு இருந்தாங்க. கலெக்டர், சீஃப் செக்ரெட்டரி, உள்துறைச் செயலாளர்னு பலரும் என்னைக் கேட்டு வீட்டுக்கு போன் பண்ணிஇருக்காங்க. நான் திரும்ப எல்லோருக்கும் போன் பண்ணா, 'யாரைக் கேட்டு சீல்வெச்சீங்க? என்ன காரியம் பண்ணியிருக்கீங்க தெரியுமா?'ன்னு எல்லாரும் கேள்வி கேட்டாங்க. 'நான் என் கடமை யைத் தான் சார் செஞ்சேன். மக்களுக்கு நல்லது செஞ்சதுக்காக சஸ்பெண்ட் பண்ணா, தாராளமாப் பண்ணிக்கோங்க'ன்னு சொல்லிட்டேன். மறு நாள் எந்தப் பத்திரிகைலயும் பெட்டிச் செய்தியாக்கூட பெப்சிக்கு சீல்வெச்ச சம்பவம் ரிப்போர்ட் செய்யப்படவே இல்லை.
ரெண்டு நாள் கழிச்சு ஜூனியர் விகடன்ல மட்டும் அந்தச் செய்தி விரிவா வந்திருந்தது. அதுக்குப் பிறகுதான் பெப்சிக்கு நான் சீல்வெச்ச விஷயமே வெளி உலகத்துக்குத் தெரிஞ்சது. 

"லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர்' என்ற லஞ்சத்தை ஒழிப்பதை பற்றி சகாயம் வாசகம்....


சகாயம்  பேசியது:----

்:""உத்திரமேரூர் கல்வெட்டில், மக்கள் பிரதிநிதிகளாக வருபவர்களுக்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும். அதற்கான தகுதி நிர்ணயம் குறித்த தகவலும், திருடர்கள், ஊழல்வாதிகள் பதவிக்கு வரவிடக்கூடாது. நேர்மையானவர்கள் மட்டுமே பதவிக்கு வரவேண்டும் என்பது பற்றியும், அதில் குறிப்பிடப்பட்டுள்ளது, அதுபோல் ஆட்சியாளர்கள் வரவேண்டும்,'' என,கோ ஆப்டெக்ஸ் மேலான் இயக்குனர் சகாயம் பேசினார்.



லஞ்ச, ஊழலற்ற சமுதாயம் என்ற தலைப்பில், சேலம் குஜராத்தி திருமண மண்டபத்தில், சிறப்பு கருத்தரங்கு நேற்று நடந்தது. கோ ஆப்டெக்ஸ் மேலாண் இயக்குனர் சகாயம் பேசியதாவது:ரத்தம் சிந்தி வாங்கிய தேசத்தில், லஞ்சமும், ஊழலும் பெருகி கிடக்கிறது. நாமக்கல் கலெக்டராக பணியாற்றியபோது, ராசிபுரத்தில் கல்லூரி விழாவுக்கு காரில் சென்று கொண்டிருந்தேன். அப்போது, முன்னால் இரு சக்கர வாகனத்தில் சென்ற, இரு வாலிபர்கள், அங்கும், இங்குமாக ஓடியபடி சென்றனர்.

அவர்களை மறித்து, என்னுடைய உதவியாளர்கள் சோதனை செய்தபோது, அவர்கள் மது அருந்தியிருந்ததும், லைசென்ஸ் இல்லாமல் வண்டி ஓட்டியதும் தெரியவந்தது. உடனடியாக அவர்களை எச்சரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டேன்.அப்போது, அதில் ஒரு வாலிபர், 100 ரூபாயை எடுத்து என்னுடைய கையில் கொடுத்தான். லஞ்சம் கொடுத்தால், தப்பித்து விடலாம் என்ற பழக்கத்தை, இந்த சமூகம் உருவாக்கியுள்ளது.

மூன்று ஆண்டுக்கு முன், அப்போதைய முதல்வருக்கு கடிதம் எழுதினேன். அதில், "நான் சரியாக வேலை செய்யவில்லையென்றால், என்னை பணி நீக்கம் செய்யுங்கள். ஜாதி, மத ரீதியாக யாருக்காவது உதவியிருந்தால் கைது செய்யுங்கள். 19 ஆண்டு காலத்தில், யாரிடமாவது, ஒரு ரூபாய் லஞ்சமாக பெற்றிருந்தால், தூக்கிலிடுங்கள்' என, கூறினேன். என்னுடைய இருக்கைக்கு பின்புறம், "லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர்' என்ற வாசகம் தான் இருக்கும்.

உத்திரமேரூர் கல்வெட்டில், அப்போதே, மக்கள் பிரதிநிதிகள் எப்படியிருக்க வேண்டும். அவருக்கு உண்டான தகுதிகள் என்னன்ன, திருடர்கள், ஊழல்வாதிகள் பதவிக்கு வரக்கூடாது. நேர்மையானவர்கள் மட்டுமே வரவேண்டும் என, கூறப்பட்டுள்ளது.ஊழல் நாடுகள் பட்டியலில், இந்தியா, 140வது இடத்தில் உள்ளது. இது, இந்தியாவுக்கு நேர்ந்த தேசிய அவமானம். அரசு பள்ளிகளில், முன்பு ஆய்வு செய்தபோது, அங்குள்ள மாணவர்களிடம், உன்னுடைய லட்சியம் என்னவென்று கேட்டால், சம்பாதித்து அரிசி வாங்க வேண்டும் என்கின்றனர். அந்த அளவுக்கு வறுமையின் பிடியில் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

லஞ்சத்தை ஒழிப்பதை பற்றி பேசுகின்றனர், ஆனால், பின்னர், அவர்களே லஞ்ச ஒழிப்பு போலீஸில் சிக்குகின்றனர். ஊழல், லஞ்சம் என்பது புற்றுநோய் போன்றது. அது தொற்றுநோயாக உருவெடுத்து, தேசத்தையே அழித்து விடும்.

தமிழகத்தில், கடந்த காலங்களில், 40 சதவீதம் இருந்த ஊழல், தற்போது, 80 சதவீதமாக உயர்ந்து விட்டது. கோவணம் தான், இன்றைய விவசாயியின் தேசிய அடையாளமாக மாறிவிட்டது. ஒவ்வொரு மாணவரும், லஞ்சம், ஊழலற்ற சமூகத்தை உருவாக்க வேண்டும் என, சபதம் ஏற்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்