சாக்ரடிஸின் மரணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சாக்ரடிஸின் மரணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

தத்துவ ஞானி சாக்ரடீஸ்

கிரேக்க நாட்டில் உள்ள ஏதென்ஸ் நகரில் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் சாக்ரடீஸ்.
கிரேக்க நாட்டின் த்த்துவஞானி என்றும், உலகத்தின் முதல் தத்துவஞானி என்றும் சாக்ரடீஸ் போற்றப்படுகிறார்.
சிறிது காலம் இராணுவத்தில் பணியாற்றிய சாக்ரடீஸ் அந்தப் பணியில் ஈடுபாடு இல்லாததால் வேலையை விட்டு வெளியேறினார்.
சாக்ரடீஸின் எழுத்துக்களும், சொற்பொழிவுகளும் மக்களைச் சிந்திக்க வைத்தது; செயல்களில் ஈடுபடவும் அவர்களைத் தூண்டியது.
சிறுவனாக இருந்த போதே சாக்ரடீஸ் கேள்விகள் கேட்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். இந்த வழக்கம் அவர் வளர வளர வளர்ந்தது.
எதைப்பற்றியும் கேள்வி கேட்டு, அது பற்றிய உண்மையை அறிந்துகொள்வதே அவருடைய வளர்ச்சிக்குக் காரணமாயின.
பொது இடங்களில் மக்களைச் சந்திப்பதிலும், அவர்களோடு உரையாடுவதிலும், அதிக நேரங்களை சாக்ரடீஸ் செலவிட்டார்.
ஆனால் மற்றவர்கள் சக்ரடீஸீடம் கேள்வி கேட்டால் அதற்கு நேரடியாகப் பதில் சொல்வதை அவர் தவிர்த்தார்.
ஏதாவது ஒரு பிரச்சினையை மையமாக்க் கொண்டு மக்களிடம் கேள்வி மேல் கேட்டு, அவர்களிடமிருந்தே பதிலைக் கேட்டு, அந்தப் பிரச்சினையை எழுப்பியவர்களே காரணத்தைப் புரிந்து கொள்ளுமாறு செய்வார் சாக்ரடீஸ்.
பிரச்சினையின் காரணத்தைத் தமது கேள்வியின் மூலம் உணரச்செய்த சாக்ரடீஸ், அந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கும் கேள்விகளைக் கேட்டார்.
இதுபோன்ற செயல்களால் பொதுமக்கள் தெளிவு பெற்றனர்; பிரச்சினையைப் புரிந்தனர். அதற்கான காரணத்தையும் அறிந்தனர். அதைப் போக்குவதற்குச் செய்ய வேண்டியவற்றையும் அவர்கள் உணர்ந்தனர்.
இதனால், ஏதென்ஸ் மக்கள் தங்களுக்கு ஏற்படும் சிக்கல்களுக்கெல்லாம் சாக்ரடீஸிடம் தெளிவு கிடைக்கும் என்று நம்பினர். அவர்களின் நம்பிக்கையும் வீண் போகவில்லை.
சாக்ரடீஸின் இந்தக் கேள்வி கேட்கும் முறை ஏதென்ஸ் நகர இளைஞர்களைக் கவர்ந்தது. இளைஞர்கள் மத்தியில் சாக்ரடீஸ் எப்போதும் காட்சி தந்தார். சாக்ரடீஸ் இருங்குமிடங்களில் எப்போது இளைஞர்கள் கூட்டம் சூழ்ந்திருப்பது சிலருக்கு எரிச்சலைத் தந்தது.
அனிடஸ் என்ற அரசியல்வாதியும், மெலிட்டஸ் என்ற கலைஞனும், லைகோன் என்ற மேடைப் பேச்சாளனும் சாக்ரடீஸ் மீது வழக்குத் தொடுத்தனர். இதற்கு சாக்ரடீஸ் மீது அவர்கள் கொண்டிருந்த வெறுப்பே காரணமாகும்.
இளைஞர்களைத் தூண்டி விடுவதாகவும், மத எதிர்ப்பைக் கிளப்பி விடுவதாகவும், தனக்குப் பெருமை சேர்ப்பதற்காக சாக்ரடீஸ் தவறான வழிகளில் இளைஞர்களை ஈடுபடுத்துவதற்காகவும், அதன் வழியாக ஏதென்ஸ் அரசுக்கு ஆபத்தை விளைவிப்பதாகவும் சாக்ரடீஸ் மீது அனிடஸூம், லைகோனும், மெலிட்டஸூம் குற்றம் சுமத்தி வழக்குத் தொடுத்தனர்.
நீதிபதிகள் சாக்ரடீஸ் குற்றவாளிதான் என்று தீர்ப்புக்கூறி அவருக்கு என்ன தண்டனை கொடுக்க வேண்டும் என்பதை சாக்ரடீஸையே அறிவிக்கும்படி அறிவித்தனர்.
தாம் எந்தவிதக் குற்றமும் செய்யவில்லை என்றும்; தம் தாய் திருநாட்டிற்குத் தமது செயல்களின் மூலம் நன்மையே செய்ததாகவும், அதன் பொருட்டு இந்த நீதிமன்றம் நமக்குத் தண்டணைக்குப் பதிலாக பாராட்டும், பரிசும்தான் கொடுத்திருக்க வேண்டும் என்றும் வாதிட்டார் சாக்ரடீஸ்.
ஆனால் தண்டனை வழங்குவதாக இந்த நீதி மன்றம் முடிவு செய்தால், அது அபராதத் தொகையாக இருக்க வேண்டும் என்றும்; அந்த அபராதத் தொகையைத் தமது நண்பர்கள் அரசுக்குச் செலுத்த தயாராக இருப்பதாகவும் நீதி மன்றத்தில் சாக்ரடீஸ் முழங்கினார்.
சாக்ரடீஸ் தமது செயல்களுக்கு மன்னிப்புக் கேட்பார் என்று நீதிபதிகள் எதிர்பார்த்தனர்.. அதற்கு மாறாக அவர் நீதிமன்றத்தில் வாதங்களை முன் வைத்தது நீதிபதிகளுக்கு எரிச்சலை ஊட்டியது. அதனால் நீதிபதிகள் சாக்ரடீஸூக்கு மரண தண்டனையை அறிவித்தனர்.
நீதிமன்ற விசாரணையின் போது சாக்ரடீஸ் செய்த மூன்று சொற்பொழிவுகள் அவருடைய அறிவு விசாலத்தையும் அஞ்சாமையையும், வெளிப்படுத்துவதாக அமைந்தது.
சாக்ரடீஸ் சிறையில் இருந்தபோது அவருடைய நண்பர் கிரிட்டோ என்பவர் சாக்ரடீஸைச் சந்தித்து, சிறையிலிருந்து தப்பிச் செல்வதற்கு ஆலோசனை கூறினார். அதற்கு வேண்டிய ஏற்பாடுகளைத் தாம் செய்வதாகவும் கூறினார். அதற்கு,
“நான் தப்பிச் செல்வது பொது மக்களின் கருத்துகளுக்கும், என் மீது தொடுக்கப்பட்ட தவறான குற்றச்சாட்டுகளுக்கும் நான் பணிந்து விட்டதாக ஆகிவிடும். அத்துடன் என் வாழ்நாளில் நான் கொண்டிருந்த கொள்களைகளுக்கும் எதிராக அமைந்ததாகும்.
நீதிமன்ற விசாரணையின்போது, நான் சாவைக்கூட சந்திக்க தயார்; மன்னிப்புக் கேட்க முடியாது , என்று கூறி சாக்ரடீஸ் தப்பிச்செல்ல மறுத்ததுடன், சாவை எதிர்கொள்ள மகிழ்வுடன் இருந்தார்.
சாக்ரடீஸூக்கு மரண தண்டனையை நிறைவேற்றும் நாள் வந்தது…
அவருடைய கால் விலங்குகள் அகற்றப்பட்டு, விஷம் கொடுக்க வேண்டும் என்பது நீதிபதிகளின் தீர்ப்பு.
இறுதியாக சாக்ரடீஸைக் காண்பதற்கு அவருடைய நண்பர்களும், மனைவி தம் குழந்தைகளுடனும் வந்திருந்தனர்.
சாக்ரடீஸின் இறுதி முடிவைக் காணச் சகிக்காது அவருடைய மனைவி அழுது துடித்தாள்.
மனைவியையும், குழந்தையையும் வீட்டிற்கு அனுப்பி வைத்த பின், சாக்ரடீஸின் விலங்குகள் அகற்றப்பட்டன. மெதுவாகத் தம் கால்களை சாகரடீஸ் பிணைந்து கொண்டார்.
அப்போது தாம் நண்பர்களிடம் “உடல்தான் நமக்குக் கிடைத்த மிகப் பெரிய சிறைச்சாலை அந்த உடலிருந்து நமது உயிர் தாமாக தப்பிவிட முடியாது. உடம்பு என்ற சிறையிலிருந்து உயிர் விடுதலையாவது பேரானந்தம்!” என்று தத்துவார்த்தமாக சாக்ரடீஸ் பேசினார்.
“மரணத்தைச் சந்திக்கும் வேளையில் அதிகமாகப் பேசக் கூடாது” என்று விஷம் கொடுக்கும் பொறுப்பில் இருந்த அதிகாரி சாக்ரடீஸிடம் சொன்னான். ஆனால் அவர் அது பற்றிக் கவலை கொள்ளாமல் நகைச்சுவையுடன் நண்பர்களிடம் பேசிக் கொண்டிருந்தார்.
இறுதியாக சாக்ரடீஸ் குளித்து முடித்தார்.
“மரணத்திகுப் பின் உங்களை எப்படி சவ அடக்கம் செய்ய வேண்டும்?” என்று நண்பர்கள் சாக்ரடீஸிடம் கேட்டார்கள்.
அதற்கு, “நீங்கள் எப்படிச் செய்தாலும் எனக்கு மகிழ்ச்சியே!” என்றார் சாக்ரடீஸ்.
சிறை அதிகாரி ஒரு கோப்பை விஷத்தை சாக்ரடீஸீடம் நீட்டினார்.
நண்பர்கள் எல்லாம் கண்ணீர் சிந்தியபடி சாக்ரடீஸையே பார்த்துக் கொண்டிருந்தனர்.
விஷக் கோப்பையை வாங்கிய சாக்ரடீஸ், “இனி நான் செய்ய வேண்டியது என்ன?” என்றார்.
அதற்கு, “கோப்பையில் உள்ள விஷத்தை முழுவதுமாக நீங்கள் குடிக்க வேண்டும்… குடித்து முடித்ததும் சிறைக்குள்ளேயே நீங்கள் நடந்து கொண்டிருக்க வேண்டும்… உங்கள் கால்கள் செயல் இழக்கும்போது படுத்துக்கொள்ள வேண்டும்” என்றான் சிறைப்பணியாளன்
கவலை கொள்ளாது, கண் கலங்காமல், சிரித்த முகத்துடன் ஒரு கோப்பை விஷத்தையும் குடித்து முடித்தார் சாக்ரடீஸ். அதைக் கண்ட நண்பர்கள் அனைவரும் அழுது தீர்த்தனர்.
“பெண் மக்களைப் போன்று நீங்களும் ஏன் கண்ணீர் சிந்துகிறீர்கள்?” என்று சிரித்தபடி கேட்டுவிட்டு,சாக்ரடீஸ் நடக்கத் தொடங்கினார்.
சிறிது நேரம் நடந்து முடிந்ததும், அவர் மல்லாந்து படுத்துக் கொண்டார்.
விஷம் கொடுத்த பணியாளன், சாக்ரடீஸின் கால்களை அமுக்கியபடி, “நான் உங்களை கால்களை அமுக்குவது உங்களுக்குத் தெரிகிறதா?” என்றான்.
“இல்லை” என்றார் சாக்ரடீஸ்.
சிறிது நேரத்தில் அவர் விழிகள் மூடின!
தம்மை ‘அறிஞன்’ என்று அழைப்பதை வெறுத்த சாக்ரடீஸ் என்ற அந்தப் பேரறிஞனின் ஆயுள் முடிந்தது.
அவருடைய தத்துவங்களையும், போதனைகளையும் அவருடைய சீடரான பிளாட்டோ எழுதி வைத்தார். அதுதான இன்றும் சாகரடீஸை மக்கள் நெஞ்சில் வாழ வைத்துக் கொண்டிருக்கிறது.

சாக்ரடிஸின் மரணம்

சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469--399) மூவங்க நாடகம் அங்கம் -3 காட்சி -4

ஆங்கில மூலம் : லிஸ்டர் ஸின்கிளேர் & ஜி. எம். ஏ. குரூப்

சாக்ரெடிஸ் வாய்மொழிகள்.

******************************
"அனைத்து மனிதரின் ஆத்மாக்களும் அழியாத் தன்மை (Immortal) பெற்றவை. ஆனால் அவற்றில் நன்னெறியோடு வாழும் ஆத்மாக்கள் தெய்வீகத்தனம் பெற்றவை."


"அழகு என்பது அற்ப ஆயுளுடைய ஒரு கொடுங்கோல் ஆட்சி."


"எப்படி முயன்றாயினும் திருமணத்தைச் செய்து கொள் ! நற்குண மனைவி ஒருத்தி அமைந்தால் நீ மகிழ்ச்சி அடைவாய் ! துர்க்குண மனைவி கிடைத்தால் நீ வேதாந்தி ஆவாய் !"


"என்னைப் பொருத்த வரை எனக்குத் தெரிந்தது இதுதான் : 'எனக்கு ஒன்றும் தெரியாது.' என்பது."


"ஒரு நேர்மையான மனிதன் சிறு குழந்தையைப் போன்றவன்."


-----------------
சாக்ரடிஸின் மரணம்

மூவங்க நாடகம்

அங்கம் -3 காட்சி -4


காலம் : கி. மு. 399


இடம் : ஏதென்ஸ் நகரத்தில் திறந்த வெளி நீதி மன்றம். வட்ட வளைவான அரங்கின் அடுக்குத் தட்டுகளில் பலர் அமர்ந்திருக்கிறார். முன்புறம் மாஜிஸ்டிரேட்களுக்கு ஆசனங்கள் போடப் பட்டுள்ளன. ஒருபுறம் குற்றம் சாட்டியோர் அமர்வார். மறுபுறம் குற்றவாளி நிற்கும் பீடம். நியமிக்கப் பட்ட 500 ஜூரர்கள் தனியே அமர்ந்துள்ளார்.


நேரம் : பகல் நேரம்.


பங்கெடுப்போர் : நீதி மன்ற மாஜிஸ்டிரேட்டுகள், குற்றம் சாட்டியோர், சாக்ரடிஸ் மற்றும் இராணுவக் காவலர்கள், பொது மக்கள்.


காட்சி அமைப்பு : திறையைத் திறந்ததும் இராணுவக் காவலர் நாற்காலிகளை நேராக நகர்த்துகிறார். அப்போது லைகான் (Lycon)., மெலிடஸ் (Meletus), ஆனிடஸ் (Anytus) நுழைகிறார். அவரது தனிப்பட்ட ஆசனங்களில் அமர்கிறார். அச்சமயம் காவலன் ஒருவன் வேலைத் தரையில் தட்டி அனைவரது கவனத்தையும் கவர்கிறான். மக்கள் அரவம் அடங்குகிறது.



டிரிப்தோலிமஸ்: சாக்ரடிஸ் ! இப்போது தெளிவாகச் சொல்வீர் ! நீவீர் எவற்றின் மீது நம்பிக்கை வைத்துள்ளீர் ?


மெலிடஸ்: (ஆவேசமாய் முந்திக் கொண்டு) நான் சொல்கிறேன் அவரைப் பற்றி ! பேய், பிசாசு, போலித் தெய்வம் ! பாதி மனிதனும் பாதித் தெய்வமான அரைத் தெய்வம் ! சாக்ரடிஸ் காதிலே எப்போதும் ஏதோ ஓர் அசரீரி ஆன்மா உரையாடுவதாகச் சொல்வார் ! அதுவே அவர் செய்வதை ஆணை இடுவதாகச் சொல்வார் ! அது உண்மையா இல்லையா ? சொல் சாக்ரடிஸ் !


நீதிபதி ·பிளிப்: மெலிடஸ் ! ஏன் குறுக்கே பாய்கிறாய் ? சாக்ரடிஸ் சொல்லப் போவதை யூகித்து நீ கூறுவது வழக்காடல் ஆகாது ! வழக்கு நெறி தவறிய செயல் அது !


மெலிடஸ்: (மீண்டும் குறுக்கிட்டு) நான் சொல்வது உண்மை தானே சாக்ரடிஸ் !


சாக்ரடிஸ்: (மெதுவாக, பொறுமையாக) நீதிபதி அவர்களே ! நான் பேய், பிசாசு, போலித் தெய்வங்களை நம்பாதவன் ! அரைத் தெய்வம் என்றால் புரியவில்லை எனக்கு ! ஆனால் ஓர் அசரீரி ஆன்மா என் காதில் எனக்கு ஆணை இடுவது உண்மைதான் ! அதன்படி நடப்பவனும் நான்தான் ! அதன் ஆலோசனகளில் நன்னெறிகள் இருக்கும்.


நீதிபதி ·பிளிப்: அதென்ன அசரீரி ஆன்மா ? எனக்குப் புரியவில்லை.


சாக்ரடிஸ்: (சிரித்துக் கொண்டு) ஆத்மா சுத்தமாக இருப்பவர் காதில்தான் அந்த அசரீரி பேசும் ! அதை ஒரு குட்டிக் கடவுள் என்று வைத்துக் கொள்வீர். அல்லது ஒரு தெய்வத்தின் பிள்ளை என்றும் நினைத்துக் கொள்ளலாம். தப்பாகப் பிறந்த பிள்ளை !


மெலிடஸ்: எமக்குத் தெரியும் அது ! தெய்வத்தின் பிள்ளையை இப்படித் தப்பான பிள்ளை என்று கேலி செய்யும் நீவீர் தந்தையான தெய்வத்தையும் அவமதிக்கிறீர் !


சாக்ரடிஸ்: நான் இந்தப் போலி தெய்வத்தையே நம்பாத போது அதன் பிள்ளையை எப்படி நம்புவேன் ? நான் குதிரையை நம்புகிறேன் ! கோவேறு கழுதையை நம்புவதில்லை.


மெலிடஸ்: தெய்வத்தைக் கோவேறு கழுதைக்கு இப்போது ஒப்பிட்டுக் காட்டுவது கண்டிக்கப் பட வேண்டும் !. கனம் நீதிபதி அவர்களே ! உடனே இவரைக் கண்டித்துத் தண்டிக்க வேண்டும் !


நீதிபதி: நான்தான் இங்கே நீதிபதி ! குற்றதை ஏற்றுக் கொள்ள வைக்காமல் கண்டிப்பதோ தண்டிப்பதோ தவறு ! அதை நிர்ணயம் செய்வது நான் ! மெலிடஸ் ! வாயைத் திறக்காதே அழைக்கப் படாமல் !


சாக்ரடிஸ்: நீதிபதி அவர்களே ! இப்போது எனக்கு ஓர் விளக்கம் தேவை ! தெய்வம் என்பது என்ன ? யாராவது எனக்கு விளக்கம் தர வேண்டும். இதில் அரைத் தெய்வம் எது ? முழுத் தெய்வம் எது ? மனிதத் தெய்வம் எது ?


ஆனிடஸ்: நீதிபதி அவர்களே ! இத்தகைய வினாக்களைத் தொடராமல் நிறுத்த வேண்டும் ! சாக்ரடிஸ் சாமர்தியசாலி ! இப்படி முதலில் விளக்கம் கேட்பார் ! பிறகு அதிலே பதில் அளிப்பவனை மூழ்க்கிவிடுவார் ! அவரைச் சொல்லாடி யாரும் வெல்ல முடியாது ! இதுவரை யாரும் அவரை வென்றதில்லை !


சாக்ரடிஸ்: நீதிபதி அவர்களே ! எனக்குப் புரியாத ஒரு கேள்விக்கு என்னால் பதில் கூற முடியாது. சொல்லுங்கள் ! கடவுள் என்பது என்ன ? நீங்கள் விளக்கம் தராவிட்டால் என் விளக்கத்தைக் கேட்கத் தயாராக இருப்பீரா ?


டிரிப்தோலிமஸ்: சாக்ரடிஸ் ! முதலில் இதற்குப் பதில் சொல் ! கடவுளைப் பற்றி நீ என்ன நம்பிக்கை கொண்டிருக்கிறாய் ?


சாக்ரடிஸ்: கடவுள் என்பது ஒன்று ! நான் நம்புவது அந்த ஒற்றக் கடவுளைத்தான் ! பற்பல தெய்வங்களை நான் நம்புவதில்லை ! என் காதில் கேட்கும் பல தெய்வங்கள் புராண நூல்களில் எழுதப் பட்டவை ! இதிகாசக் கதைகளில் காணப்படுபவை ! சில தெய்வங்கள் சினம் கொண்டவை ! சில தெய்வங்கள் செந்நெறி யுடையவை ! சில தெய்வங்கள் மூர்க்கத்தனம் படைத்தவவை ! சில பயங்கரத் தெய்வங்கள் மக்களைக் கொல்கின்றன ! கதைகளில் வரும் அவை யாவும் கடவுள்கள் அல்ல ! அவைதான் பேய்கள், பிசாசுகள் ! நான் அவற்றை நம்புவதில்லை ! இதிகாசக் கதைகளில் நாம் தெரிந்து கொண்ட அந்தத் தெய்வங்கள் நம்மை மகிழ்விக்கவோ, பயமுறுத்தவோ அல்லது துயர்ப்படுத்தவோ சொல்லப் பட்டவை ! நான் அவற்றை நம்புவதில்லை ! நான் நம்புவது உலகம் அனைத்துக்கும் ஒன்றான கடவுளை ! ஒற்றைக் கடவுளை ! புராண நூல்களில் எழுதப்பட்ட அநேகத் தெய்வங்களை அல்ல ! ஆனால் புராண நூல்களில் அந்த ஒற்றைக் கடவுளின் ஒளிவீசலாம். அந்த ஒப்பற்ற கடவுள் இந்தப் பேருலகில் இருக்கிறது. அழகுமயம், சத்திய நெறி, நீதி நெறி (Beauty, Truth & Justice) என்பவை அந்தக் கடவுளுக்கு உள்ள சில பெயர்கள் ! அந்தக் கடவுளுக்கு உள்ள மற்ற பெயர்கள் எனக்குத் தெரியாது ! ஆனால் ஒன்று எனக்கு நன்றாகத் தெரியும். அந்தக் கடவுள் பிறரிடம் உள்ள நன்னெறிகளைக் காண எனக்குச் சொல்லிக் கொடுக்கிறது. அக்கடவுள் நன்னெறிகளை எனக்குப் புகட்டுகிறது. கடவுளை அறிவது என்று கூறுவது நேர்மை நெறி அதுவென்று அறியப்படுவது. அந்தக் கடவுளை அறியாமல் இருப்பது பாபம் என எண்ணப்படுவது. மனிதரின் பாபத் தவறுகள் மூன்று : வெறுப்பு, பழிவாங்கல், பொறாமை. இதுதான் என் கடவுள் நம்பிக்கை. இதைத்தான் நான் ஏதென்ஸ் நகர் வாலிபருக்குப் பல்லாண்டுகளாய்ச் சொல்லிக் கொடுக்கிறேன். இது உங்களுக்குத் தெய்வத் துரோகமாகத் தெரிகிறதா ? நான் ஏதென்ஸ் வாலிபரைக் கெடுத்தேன் என்பதில் நியாயம் உள்ளதா ?



(தொடரும்)


***************************

தகவல் :


Based on The Plays :


(A) Plato : The Trial & Death of Socrates Translated By : G. M. A. Grube

Hackett Pulishing Company. Inc. Second Edition 1983, USA.


(B) Socrates - A Drama in Three Acts By Lister Sinclair,

The Book Society of Canada (July 1966)


(C) Plato - Drama Euthyphro, Apology, Crito & Phaedo (The Death Scene) By : F.J. Church (1956)


++++++++++++++


ஆதாரங்கள்


1. Plato's Symposium Tranlated By : Benjamin Jowett, The Liberal Arts Press, New York (1956)


2. Plato - Gorgias By : Walter Hamilton (1981)


3. Encyclopaedia Britannica (1973 Edition)


4. The New Hutchinson 20th Century Encyclopedia (1979 Edition)


5. Britannica Concise Encyclopedia (2003 Edition)


6. The Oxford Dictionary of Quotations New Edition (1992)


7. The Great Quotations Compiled By : George Seldes (1967)


8.. The Wordsworth Dictionary of Quotations (1997)


9. Great Dialogues of Plato By : W. H. D. Rouse - A Mentor Book (1984)


10. From Socrates to Sartre - The Philosophic Quest By : T. Z. Lavine (Mach 1984)


11 The Last Days of Socrates By: Plato - Translated By : Hugh Tredennick (1972)


12. The Trial of Socrates in Plato's Apology By : Reem Regina Tatar (2000)


13. The Trial of Socrates By : Douglas Linder (2002)



********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com (October 22, 2009)]