பாரதியார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாரதியார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள் -பாரதியார்

* ஆல மரத்தின் விழுதுகள் அந்த மரத்தினைத் தாங்குவது போல, பெற்றவர்களைப் பிள்ளைகள் ஆதரித்து காப்பாற்ற வேண்டும்.
* மனிதனின் முயற்சிகளில் தவறுகள் ஏற்படுவது இயல்பே. அதற்காக ஒருவன் மனவுறுதியை இழக்கக்கூடாது.
* உள்ளத்தில் நேர்மையும், தைரியமும் இருப்பவன் தனக்குத் தானே நல்ல நண்பனாக இருப்பான். தனக்குத் தானே நண்பனாக இருப்பவன் எல்லாரிடமும் நட்பு பாராட்டுவான்.
* எல்லா சாஸ்திரங்களும் ஒரே கடவுளையே பலவழிகளில் எடுத்துக்காட்டி வழிகாட்டுகின்றன. ஆனால் எல்லாத்தரப்பு மக்களுக்கும் ஒரே சாஸ்திரம் ஒத்துவராது.
* எல்லா விதமான செல்வங்களுக்கும் அறிவுதான் வேர். அறிவை வளர்த்துக் கொண்டால் கடினமான செயல் கூட எளிதாகிவிடும்.
* பொறுமை இல்லாதவன் வாழ்வில் எதையும் சாதிக்க முடியாது. அன்பு எங்கிருக்கிறதோ அங்கு பொறுமையும் இருக்கும்.
* சோம்பேறியாக இருப்பது மிகப் பெரிய குற்றம். மனவலிமை கொண்டவர்கள் சோம்பேறித்தனத்தை புறந் தள்ளி விட்டு உழைப்பதிலேயே அக்கறை கொள்வார்கள்.
 
-பாரதியார்

பெண்களைத் திட்டாதீர்கள்-பாரதியார்

குடும்பத்தை விடுவோன் கடவுளைத் துறக்க முயற்சி பண்ணுகிறான். குடும்பம் நாகரிகமடையா விட்டால் தேசம் நாகரிகமடையாது. குடும்பத்தில் விடுதலையிராவிடில், தேசத்தில் விடுதலை இராது.

குடும்பத்திலிருந்து பொறுமை என்பதொரு தெய்வீக குணத்தையும், அதனால் விளையும் எண்ணற்ற சக்திகளையும் எய்த விரும்புவோர், தாய், மனைவி முதலிய ஸ்திரீகள் தமக்கு வெறுப்புண்டாகத் தகுந்த வார்த்தை பேசும் போது, வாயை மூடிக் கொண்டு பொறுமையுடன், கேட்டுக் கேட்டுப் பழக வேண்டும். அவ்வாறின்றி ஒரு ஸ்திரீ வாயைத் திறந்த மாத்திரத்திலேயே, அவள் மீது புலிப்பாய்ச்சல் பாயும் ஆண் மக்கள் நாளுக்கு நாள் பொங்கிப் பொங்கித் துயர்பட்டுத் துயர்பட்டு மடிவார்.


தான் ஒரு குற்றஞ் செய்தால், அதைச் சுண்டைக்காய் போலவும், அதே குற்றத்தை மற்றவன் செய்தால், அதைப் பூசணிக்காய் போலவும் நினைக்கிறார்கள். மூடன் தான் செய்த குற்றத்தை மறந்து விடுகிறான். அல்லது பிறருக்குத் தெரியாமல் மறைக்கிறான். அல்லதுபொய்க் காரணங்கள் சொல்லி, அது குற்றமில்லை என்று ருஜுப்படுத்த முயற்சி செய்கிறான். ஜனங்கள் குற்றஞ் செய்யாமல் நீதிக்காரர் பார்த்துக் கொள்ள வேண்டும். நீதிக்காரர் குற்றம் செய்யாமல் ஜனங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும்.

குற்றம் செய்த மனிதனைச் சீர்திருத்தி இனிமேல் அவன் குற்றம் செய்யாதபடி அறிவிலும் ஒழுக்கத்திலும் மேம்பட வழி செய்ய வேண்டும். குற்றத்திற்குக் காரணம் அறியாமை; அதை நீக்கும் வழி சத்சங்கமும்; தைரியமும். பிறர் குற்றங்களை மன்னிக்கும் குணம், குற்றமில்லாதவர்களிடத்திலே தான் காணப்படும்.

வானமே இடிந்தாலும் பயப்படாதீர்!-பாரதியார்

* இந்த உலகில் உள்ள அனைவரும் எதிர்த்து நின்றாலும் அச்சம் கொள்ளக்கூடாது. தலையில் வானமே இடிந்து வந்து விழுந்தாலும் பயம் இருக்கக்கூடாது.
* பயம் என்னும் பேயினை அடித்துவிரட்டுங்கள். பொய் என்னும் பாம்பைக் கொல்லுங்கள். மறைந்து வந்து தாக்கும் எமனும் நடுங்கும்படி விழிப்போடு இருங்கள். 'உயிர்களைப் பறிக்கும் காலனே! உன்னைச் சிறு புல்போல மதிக்கிறேன். என் கால் அருகே வந்தால் சற்றே மிதிப்பேன்' என்று மனதுக்குள் அடிக்கடி சொல்லுங்கள்.
* காலம் மிக முக்கியமானது. அதுபோய் விட்டால் திரும்ப வராது.சென்றதையே எண்ணி கவலை என்னும் குழியில் குமைந்து கிடக்கவும் கூடாது. இன்று புதிதாய் பிறந்தோம் என்ற எண்ணத்துடன், திடமாகவும், மகிழ்ச்சியாகவும் வாழுங்கள். தீமையை விரட்டியடியுங்கள்.
* பெருமையையும், மேன்மையையும் பெறுவதற்கு முதலில் உங்களை நீங்களே வெல்ல வேண்டும். வெல்லும் திறமை இல்லாமல் உலகில் எதையும் சாதிக்க முடியாது. ஆனால், இதற்கெல்லாம் அன்னை பராசக்தியின் துணையும் வேண்டுமென்பதால் அதை அவளிடம் வேண்டிப் பெறுங்கள்.
-பாரதியார்

சக்தியின் பாதம் சரணடைவோம் -பாரதியார்

* அன்னை பராசக்தியின் பாதமலர்களைச் சரணம் என்று அடைக்கலம் புகுந்தாலும், பக்தி கொண்டு வாழ்ந்தாலும், அவளது புகழைப் பாடினாலும் அழியாத பேரின்பவாழ்வு வாழ்வு கிடைக்கும். நம் கவலையைப் போக்கி அருள் செய்வாள்.
* பராசக்தியிடம் சுகத்தை வேண்டி வணங்குங்கள். அவளிடம் மனக்குறைகளை சொல்லி அழுங்கள். அவ்வாறு செய்தால், வாழ்வில் நல்ல மாற்றத்தையும், மனதிற்கு வலிமையும், ஆறுதலையும் தந்தருளுவாள்.
* தாயே! எங்களைக் காப்பது உன் கடன்! இவ்வுலக வாழ்வினையே உனக்காக அர்ப்பணித்துவிட்டேன். உன் துணை இருக்கும்போது மரணத்தைக் கண்டும் அஞ்சத் தேவையில்லை. நோய்,பேய், ரணம், பழி என்று இனி எதை எண்ணியும் சிறிதும் பயமில்லை.
* ஒளி பொருந்திய நீலநிறம் கொண்டவளே! எங்கள் சிந்தையில் நிறைந்திடும் திறம் உடையவளே! அச்சம், பொய், சினம் என்னும் பொய்ம்மைக் குணங்கள் எல்லாம் எங்களை விட்டுப் போகட்டும். உள்ளவுறுதியோடு வாழ்க்கையை எதிர்கொள்ள அருள்கொடு. உலகங்கள் அனைத்தையும் படைத்து, காத்து, அழிப்பவளே! உன்னருளால் சிந்தையும் தெளியட்டும்.
-பாரதியார்

பாரதியாரின் இந்தக் கருத்து

தேடிச்சோறும் நிதம்தின்று - பல

சின்னஞ்சிறு கதைகள் பேசி - மனம்

வாடித்துன்பம் மிகவுழன்று - பிறர்

வாடப்பல செயல்கள் செய்து - நரை

கூடிக் கிழப்பருவம் எய்திக்கொடுங்

கூற்றுக்கு இரையெனப் பின்மாயும் -பல

வேடிக்கை மனிதரைப் போலே -நான்

வீழ்வேனென்று நினைத்தாயோ



-பாரதி