சேவை அமைப்புக்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சேவை அமைப்புக்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஒரு ரூபாய்க்கு ஒரு சாப்பாடு...


Posted by,
எல்.முருகராஜ்



மதிய உணவு வேளை
ஈரோடு, பவர்ஹவுஸ் ரோடு, அரசு ஆஸ்பத்திரி எதிரே உள்ள ஏவிஎம் உணவு விடுதி அருகில், காலில் செருப்பு கூட இல்லாதவர்கள், உடம்பில் சட்டை போடாமல் துண்டு மட்டும் கொண்டு இருப்பவர்கள், ஒரு காலத்தில் வெள்ளையாக இருந்த வேட்டியை அணிந்தவர்கள், நைந்து போன புடவையுடன் காணப்பட்டவர்கள் என சுமார் இருபது பேர் அந்த உணவு விடுதி அருகே, கண்களில் கவலையையும், கையில் ஒரு பையையும் வைத்துக்கொண்டு நின்றார்கள்.





சிறிது நேரத்தில் உணவு விடுதியில் இருந்து அழைப்பு வந்ததும் கையில் இருந்த ஒரு டோக்கனையும், ஒரு ரூபாயையும் கொடுத்துவிட்டு ஒரு பார்சல் சாப்பாட்டை வாங்கிக்கொண்டு திரும்பினர்.

பார்த்த நமக்கு ஆச்சர்யம், இந்த காலத்தில் ஒரு ரூபாய்க்கு ஒரு சாப்பாடா என்று!

உள்ளே வாங்க விவரமா சொல்றேன் என்று மெஸ் உரிமையாளர் வெங்கட்ராமன் அழைத்துச் சென்றார், முதல்ல சாப்பிடுங்க என்று சூடான சாப்பாடை சாம்பார், ரசம், மோர் கூட்டு பொரியல், அப்பளத்துடன் வழங்கினார் சுவையாகவும், திருப்தியாகவும் இருந்தது.

நீங்க சாப்பிட்ட சாப்பாட்டின் விலை இருபத்தைந்து ரூபாய், இந்த சாப்பாட்டைதான் இப்போது வந்தவர்கள் ஒரு ரூபாய் கொடுத்து வாங்கிச் சென்றார்கள், அவர்களுக்கு மட்டும்தான் ஒரு ரூபாய். அது ஏன் அவர்களுக்கு மட்டும் ஒரு ரூபாய் என்ற உங்கள் சந்தேகத்தை விளக்கிவிடுகிறேன்.

எங்க ஒட்டலுக்கு எதிரே உள்ள அரசு ஆஸ்பத்திரியில் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்படுபவர்கள் பெரும்பாலும் சுற்றுப்பக்கம் உள்ள கிராமத்தைச் சேர்ந்த ஏழை, எளிய மக்கள்தான். நோயாளிகளுக்கு மதிய உணவு ஆஸ்பத்திரியில் வழங்கப்பட்டுவிடும், ஆனால் கூட இருக்கும் உறவினர்களுக்கு ஆஸ்பத்திரி நிர்வாகப்படி உணவு வழங்கமுடியாது, அவர்கள் வெளியில்தான் சாப்பிட்டுக்கொள்ள முடியும், அவசரமாக வந்தாலும், நிதானமாக வந்தாலும் அவர்கள் கையில் காசு இருக்காது.

ஆகவே அவர்களைச் சார்ந்த உறவினர்கள், நண்பர்கள் பலர் பல நாள் ஒட்டலுக்கு வந்து சாப்பாடு என்ன விலை என்று கேட்பதும் கையில் உள்ள காசை திரும்ப, திரும்ப எண்ணிப்பார்ப்பதும், பிறகு அரைச்சாப்பாடு என்ன விலை என்று கேட்டு அதையும் வாங்காமல் கடைசியில் ஒரு டீயும் வடையும் சாப்பிட்டு போவார்கள் சில நேரம் வெறும் டீயுடன் வயிற்றைக்காயப் போட்டுக்கொண்டு போவார்கள்.

தினமும் ஒரே மாதிரி மனிதர்கள் வருவதில்லை ஆனால் அன்றாடம் வரக்கூடிய இருபதுக்கும் குறையாத மனிதர்கள் பலரும் நான் மேலே சொன்னது போல ஒரே மாதிரிதான் நடந்து கொள்வார்கள்

பசியாற சாப்பாடு போட கடை நடத்தும் எனக்கு இதை பார்தது மனசு பகீர் என்றது. சரி தினமும் இருபது பேருக்கு ஒரு வேளையாவது உணவு தானம் செய்தது போல இருக்கட்டும் என்று எண்ணி இருபது சாப்பாடை பார்சல் கட்டி வைத்துவிடுவேன், ஆனால் இலவசமாக கொடுத்தால் அவர்களது தன்மானம் தடுக்கும், ஆகவே பெயருக்கு ஒரு ரூபாய் வாங்கிக்கொள்கிறேன். மேலும் இந்த இருபது பேரை அடையாளம் காட்டுவதற்காக ஆஸ்பத்திரியில் உள்ள உள்நோயாளிகளை கவனித்துக்கொள்ளும் வார்டு பொறுப்பாளரிடம் இருந்து டோக்கன் வாங்கிவரவேண்டும்.

இதுதான் சார் விஷயம். இது இல்லாம எங்க ஒட்டலில் சாப்பிடும் உடல் ஊனமுற்றவர்களுக்கு 10சதவீதமும், கண் பார்வையற்றவர்களுக்கு இருபது சதவீதமும் எப்போதுமே தள்ளுபடி உண்டு. பொருளாதார நிலமை கூடிவந்தால் மூன்று வேளை கூட கொடுக்க எண்ணியுள்ளேன்.






இந்த விஷயத்துல நாங்களும் கொஞ்சம் புண்ணியம் தேடிக்கிறோம் என்று என்னை தெரிந்தவர்கள் வந்து இருபது சாப்பாட்டிற்கான முழுத்தொகையை (ஐநூறு ரூபாய்)கொடுத்துவிட்டுப் போவார்கள், நான் அவர்கள் பெயரை போர்டில் எழுதிப்போட்டு நன்றி தெரிவித்துவிடுவேன் என்ற வெங்கட்ராமன், நமக்கு விடை கொடுக்கும் போது சொன்னது இதுதான்...







"எப்படியோ வர்ர ஏழை,எளியவர்களுக்கு வயிறு நிறையுது, எங்களுக்கு மனசு நிறையுது''

ரத்த வகை! அதற்கேற்ற உணவு ..

Thanks to,
Green India Foundation

உங்களது ரத்த வகை எது? அதற்கேற்ற உணவு முக்கியத்துவம் ..............

இந்த பதிவின் நோக்கம், சைவ உணவின் முக்கியத்துவம் குறித்து தான். உலகம் முழுவதிலும் அசைவ உணவுக்கு மாற்றான இயக்கங்கள் எழுந்து வருகின்றன. காரணம்,மனித பரிணாம வளர்ச்சியில் அவனது இயற்கை உணவு என்பது தாவரங்கள் மட்டுமே. இறைச்சி என்பது விலங்கு உலகத்திற்கு படைக்கப்பட்டது. இதில் எது சரி. எது தவறு என்பது குறித்து ஆய்வுகள் நடந்து வருகின்றன. அது ஒரு பக்கம் இருக்கட்டும். சைவ உணவு மட்டுமே மனிதனுக்கு பொருந்திய உணவு என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

காய்கறிகள் என்ற மரக்கறிகள் எளிதில் செரிக்க கூடியது. மனித உடலின் இயங்கு மண்டலத்திற்கு தேவையான சக்திகள் அனைத்தும் சைவ உணவில் அதிகமாகவே இருக்கின்றன. இவை மட்டுமே மனித உடலின் செரிமான மண்டலத்திற்கு பொருந்தி போக கூடியவையும் கூட. இருந்தாலும் சில நேரங்களில் மாமிச உணவும் பொருந்தி தான் போகிறது. ஆனால் அளவோடு உண்டால் அது மருந்தாக அமைகிறது.

சரி, எந்த இரத்த வகையினருக்கு எந்த மாதிரியான உணவு முறை பொருந்து என்று பார்க்கலாம். அதாவது, இரத்தத்தின் வகை என்பது கார, அமில நிலைப்பாடுகளை பொருத்து அமைகிறது. செவ்வாய் தோஷம் உள்ள பெண்ணுக்கு செவ்வாய் தோஷம் உள்ள ஆண் தான் பொருத்தமாக இருக்கும் என்பார்களே..அது ஏன்? இரத்தத்தின் தன்மையை வைத்துதான் இந்த முடிவுக்கு வந்திருக்கிறார்கள் என்பது தான் உண்மை.

ஆக..இரத்தத்தின் தன்மைக்கு ஏற்றபடி அமில, காரத்தன்மையுள்ள உணவு வகைகளை உண்டால் அது நமது செயல் திறனை அதிகரிக்கும். ஆரோக்கியமான உடலை தரும். இந்த பதிவில் எந்த இரத்த வகை கொண்டவர்களுக்கு என்ன மாதிரியான உணவுகள் பொருந்தும் என்று பார்க்கலாம்.

'ஏ' பிரிவு இரத்த வகை
இவர்களுக்கு சைவ உணவு மட்டுமே பொருத்தமானது. புத்தம் புதிய காய்கறிகள்,கீரை வகைகளை இவர்கள் அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பீன்ஸ் மற்றும் பயறுவகைகளில் அதிகமான புரதச்சத்து உள்ளது. அவை இவர்களுக்கு இதய நோய்கள், புற்றுநோய்,நீரிழிவு போன்றவை ஏற்படுவதை ஓரளவு தடுக்கும். 'ஏ' இரத்த பிரிவு கொண்டவர்களுக்கு மேற்கண்ட நோய்கள் ஏற்படும் சூழ்நிலை அதிகம் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த இரத்த வகை கொண்டவர்கள் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை தவிர்ப்பது நலம். இவை இவர்களுக்கு எளிதில் சீரணம் ஆவதில்லை. முட்டைக்கோஸ், தக்காளி, உருளைக்கிழங்கு,மிளகு போன்றவற்றில் இருக்கும் 'லெக்டின்' என்ற பொருள் இவர்களின் வயிற்றுக்கு தொந்தரவை தரும்.

'பி' இரத்த வகை
மிதமான மென்மையான உணவுகளே இந்த வகை இரத்த பிரிவு கொண்டவர்களுக்கு ஏற்றவை. பழம், காய்கறிகளை இவர்கள் அதிகமாக சாப்பிடலாம். பாலும், பால்வகை பொருட்களும் உடலுக்கு உகந்தவை அல்ல. தக்காளி அதிகமாக சாப்பிட்டால் வயிற்றுக் கோளாறுகளை உருவாக்கும். சோளம், கோதுமை,பயறு வகைகள்,வேர்க்கடலை சாப்பிட்டால் இவர்களின் உடல் எடை அதிகரிக்கும். இவற்றில் இருக்கும் சில ரசாயனங்கள் இந்த ரத்த பிரிவுகாரர்களுக்கு மந்தம், சோர்வை உருவாக்கும்.

'ஏ'பி' பிரிவு இரத்த வகை
இந்த பிரிவு இரத்தம் இருப்பவர்கள் இறைச்சி உணவை அதிகம் உண்பது கூடாது. இவர்களது வயிற்றில் உணவை சீரணம் செய்யும் அமிலச்சுரப்பு குறைவாக இருப்பதுண்டு. அதனால் சீரணம் மெதுவாக நடக்கும். குறிப்பாக இவர்கள் கோழி இறைச்சியை உண்பது கூடாது. பால், வேர்க்கடலை மற்றும் பருப்பு வகை பொருட்கள், தானியங்களை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் கோதுமையை அதிகம் சேர்க்க கூடாது. இந்த இரத்த பிரிவு கொண்டவர்களுக்கு அதிகமாக சளித் தொந்தரவு இருக்கும். காலையில் இளம் சுடுநீரில் பாதி எலுமிச்சை பழத்தை பிழிந்து வெறும் வயிற்றில் குடித்தால் சளி தொந்தரவு நீங்கும்.

'ஓ' இரத்த பிரிவு
இவர்கள் உணவுகளை சாப்பிடலாம். ஆனால் அதைவிட அதிக நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளை சாப்பிடலாம், இயற்கையாக இவர்களின் வயிற்றில் சீரணத்திற்கு சுரக்கும் அமிலத்தின் அளவு அதிகமாக இருப்பதுண்டு. அதனால் செரிக்க சற்று கடினமான உணவுகளை எடுத்துக் கொண்டாலும் எளிதில் சீரணமாகி விடும். கோதுமை இவர்களுக்கு பொருந்தாது. காரணம், கோதுமையில் இருக்கும் ஒரு வகை ரசாயனம் இவர்களது உடலுக்கு பொருந்துவதில்லை. பால் பொருட்களும் பொருந்துவதில்லை. பீன்ஸ்,பயறு வகைகளும் இவர்களுக்கு எதிராக இருக்கின்றன. இவற்றை அதிகம் சாப்பிடும் நிலையில் மந்தமான குணம் காணப்படுவதுண்டு. அது போல் முட்டைகோஸ்,காலிபிளவர்,கடல் உயிரினங்கள்,அயோடின் சேர்நத உப்பு போன்றவற்றையும் தவிர்ப்பது நல்லது.

இந்த விடயங்கள் ஒரு வேதியியல் மற்றும் சித்த மருத்துவம் தெரிந்த நண்பரின் ஆலோசனையில் பதியப்பட்டது. இங்கு குறிப்பிட்ட உணவுப்பொருட்கள் உங்களுக்கு ஒத்து வராத ஒன்றாக நீங்கள் அறிந்தால் இங்கு குறிப்பிடப்படும் தகவலும் பொருந்துவதாகும். மற்ற படி இந்த தகவல் பொதுவானது என்பதை உங்கள் கவனத்திற்கு வைக்கிறேன். நன்றி.

ஏழைப் பெண்களை வாழவைக்கும் மனித தெய்வங்கள்

.
18-40 வயதி்ற்குட்பட்ட மாணவியா/மகளிரா? படிப்பறிவு இல்லையா/பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்தியவர்களா?உங்கள் குடும்ப வருமானம் ரூபாய் 5000-ம் குறைவாக உள்ளதா? பொருளாதார சுதந்திரம் பெற விரும்புகின்றீர்களா? யாராவது உதவமாட்டார்களா என்று ஏங்குகின்றீர்களா? கவலை வேண்டாம். உங்களுக்கு உதவி செய்ய நன்னெஞ்சுடையவர்கள் காத்துக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களை அணுகலாம். விண்ணப்பிக்கலாம். பின் வரும் பயிற்சியளிக்கத் தயாரர்யுள்ளனர்.கணிப்பொறிப் பயிற்சி பெறுவதற்கு +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

1. HOUSE NURSING 2. HOUSE KEEPING 3. AUTO/CAR DRIVING

4. DCA (computer) 5. DTP(computer) 6. TALLY & ACCOUNTING


பயி்ற்சியளிப்பதுடன் நின்றுவிடவில்லை. வேலையும் வாங்கித்தருகின்றார்கள்.
1997-ல் 10 பெண்களுக்கு உதவத் தொடங்கினார்கள். இன்று எண்ணிக்கை அதி்கரித்திருக்கின்றது. சென்னை மற்றும் புறநகர்ப்பகுதி மகளிர் பயன் பெறுகின்றனர்.வெளியூர்ப் பெண்களுக்கும் உதவத் தயாராய் இருக்கின்றார்கள்.
இன்றளவும் 3000-த்திற்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளனர்.

ஆக்ககபூர்வமான இவர்களது தொண்டினை"புதியதலைமுறை" மக்களுக்குக் கொண்டு வந்துள்ளது.சமூக முன்னேற்றத்திற்கு உதவிடும் , நெஞ்சங்களைப் பாராட்டுவோம்.வாழ்த்துவோம்.வணங்குவோம்.இயன்றவரை பொருள் உதவியும் செய்வோம்.

போற்றுதலுக்குரியவர்களின் தொடர்பு முகவரி:-

Association For Non-Traditional Employment Of women (ANEW)

BASIL SELLERS CENTRE, AH 107, New No.16, Fourth Street, SHANTHI COLONY,

ANNA NAGAR,CHENNAI-600 040.

044-2620 0697 & 2621 0492
E-mail: anew@vsnl.net

வாயாடிகளுக்கு சம்பளம்!


எப்போதும் வளவளவென்று பேசிக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் பேசுவதற்கு யாராவது சம்பளம் வழங்கினால் மாட்டேன் என்றா சொல்வீர்கள். கொடுக்கிறார்களே? ரேடியோ நிறுவனங்களில் வாயாடிகளை தேடிப்பிடித்து ஆயிரக்கணக்கில் சம்பளம் கொடுக்கிறார்கள். பந்தயங்களில் குதிரை ஓட்டுபவர்கள் வெறும் ‘ஜாக்கி’. ரேடியோவில் நேயர்களை ஓட்டோ ஓட்டுவென்று ஓட்டுபவர்கள் ரேடியோ ஜாக்கி. சுருக்கமாக ஆர்.ஜே.

ஒரு காலத்தில் எல்லோருக்கும் துணைவனாக இருந்தது ரேடியோ. பாட்டு கேட்க, செய்தி கேட்க, நாடகம் கேட்க, ஒலிச்சித்திரம் கேட்கவென்று நிறைய ‘கேட்க’ சொல்லலாம். ஆனால் காட்சி ஊடகமான தொலைக்காட்சி வந்த புதிதில் ரேடியோவுக்கு இருந்த ‘மவுசு’ கொஞ்சம் குறைந்தது. தொலைக்காட்சி அளவுக்கு ரேடியோவில் பொழுதுபோக்கு அம்சங்கள் குறைவாக இருந்ததும் இதற்கு ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.

டிவி முன்பாகவே சம்மணம் போட்டு உட்கார்ந்திருந்தால் மற்ற வேலைகள் கெட்டுவிடும். ஆனால் ரேடியோ கேட்டுக் கொண்டே கம்ப்யூட்டரில் வேலை பார்க்கலாம். சமையல் செய்யலாம். உடற்பயிற்சி மேற்கொள்ளலாம். வாகனம் ஓட்டலாம். சும்மாவும் இருக்கலாம். கலகலப்புக்கு ரேடியோ நிச்சய உத்தரவாதம்!

மீண்டும் எஃப்.எம். (பண்பலை) வானொலிகள் வந்ததோ இல்லையோ.. மறுபடியும் பழைய மவுசு ரேடியோவுக்கு கிடைத்துவிட்டது. ஜாக்கிகள் விதவிதமான நிகழ்ச்சிகளை தந்து மீண்டும் ரேடியோ மறுமலர்ச்சி ஏற்படுத்தியிருக்கிறார்கள். முன்பெல்லாம் அரசின் தகவல் தொடர்பு ஊடகங்களான ஓரிரு வானொலி நிலையங்கள் விரல்விட்டு எண்ணும் அளவிலான சேவைகளையே கொஞ்சம் ‘வறட்சியான மொழியில்’ வழங்கி வந்தன.

ஆனால் இப்போதோ சூரியன், ரேடியோ மிர்ச்சி, ரேடியோ ஒன், ஹலோ, ஆஹா, பிக் என்று தனியார் எப்.எம். சேவைகள் வரிசையாக படையெடுத்து தமிழர்களின் காதில் தேனையும், பாலையும் இருபத்து நான்கு மணி நேரமும் தொடர்ச்சியாக ஊற்றிக் கொண்டேயிருக்கிறார்கள். அவர்களது ‘தமில்’ தான் தாங்கலை என்றாலும் தனியார் எப்.எம்.களின் வருகைக்கு பிறகு ஏராளமான வேலைவாய்ப்புகள்.. குறிப்பாக ரேடியோ ஜாக்கிகளின் தேவையும் அதிகரித்து வருகிறது என்பதை ஒப்புக்கொண்டே ஆகவேண்டும்.

ரேடியோ ஜாக்கிகள் என்றால் பொதுவாக பாடல் நிகழ்ச்சிகளை வழங்குபவர்கள் என்றே எல்லோரும் நினைக்கிறோம். இவர்கள் மட்டுமன்றி வேறு வேறு வித்தியாச நிகழ்ச்சிகளை வழங்குபவர்களையும் ரேடியோ ஜாக்கி என்றே அழைக்கலாம், தப்பில்லை. வீட்டு வரவேற்பறையில் நம்மோடு குலாவும் விருந்தினரைப் போன்ற உணர்வுகளை நிகழ்ச்சிகளின் மூலமாக தருபவர்கள் இவர்கள். முகம் காட்டாமலே நமக்கு நெருக்கமாகும் சுவாரஸ்யமான நட்புகள். ஒவ்வொரு வானொலி நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் இவர்களது பங்கு மிக முக்கியமானது. இவர்களுக்கு எல்லாம் இன்னமும் தமிழ்நாட்டில் ரசிகர்மன்றம் தொடங்கப்படாதது ஒன்றுதான் பாக்கி!

“எனக்குத் தெரிஞ்சு பத்தாவது படிச்சவங்கள்லேருந்து எம்.எஸ்.சி. படிச்சவங்க வரைக்கும் ரேடியோ ஜாக்கியா ஒர்க் பண்றாங்க. முறையான கல்வித்தகுதின்னு எதுவும் இந்தத் துறைக்கு அவசியமில்லை. குரல் இனிமையா இருக்கணும்னு சொல்ல மாட்டேன். ஆனா வசீகரமா இருக்கணும். மிமிக்ரி தெரிஞ்சா ரேடியோவில் ஜாக்கி ஆயிடலாம்னு ஒரு ‘மித்’ இருக்கு. அது தப்பு. சுவாரஸ்யமா நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிற திறமை, டைமிங் சென்ஸ் இதெல்லாம் தான் ரேடியோ ஜாக்கியா வரணும்னா முக்கியமான தகுதிகள்” என்கிறார் ரேடியோ ஒன் நிறுவனத்தில் நிகழ்ச்சிகளை வழங்கும் சுசித்ரா.

ரேடியோ ஜாக்கிகளுக்கு சமூகத்தில் கிடைக்கும் கூடுதல் கவனிப்புகள், சினிமா வாய்ப்புகள் போன்றவை அவரவர் தனிப்பட்ட திறமையைப் பொறுத்த விஷயம். வானொலியில் நிகழ்ச்சிகள் வழங்குவதால் மட்டுமே இவை கிடைத்துவிடாது என்பது சுசித்ராவின் கருத்து. இவர் மணிரத்னம் இயக்கிய ‘ஆயுத எழுத்து’ திரைப்படத்தில் நடித்திருக்கிறார். சினிமாவிலும் தொடர்ந்து பாடி வருகிறார்.

பிக் எப்.எம்.மில் பணிபுரியும் தீனாவும் பிரபலமான ரேடியோ ஜாக்கி. தற்போது ‘வெட்கத்தைக் கேட்டால் என்ன தருவாய்?’ என்ற திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். ரேடியோ மிர்ச்சியின் ஜாக்கியான சுஜாதா கமல்ஹாசனுடன் இரு படங்களில் உதவி இயக்கம், தயாரிப்பு, ஆடை வடிவமைப்பு போன்ற துறைகளில் பணிபுரிந்திருக்கிறார். ‘பாட்டுக்கு பாட்டு’ புகழ் அப்துல் ஹமீதைப் பற்றி அறிமுகப்படுத்தவே தேவையில்லை. இலங்கை வானொலியில் ’பாட்டுக்கு பாட்டு’ நிகழ்ச்சியை வழங்கிக் கொண்டிருந்தவர், இன்று அதே நிகழ்ச்சியை டிவியிலும், மேடைகளிலும் நடத்தி உலகத் தமிழர்களிடையே பிரபலமானவராக இருக்கிறார்.

நிகழ்ச்சிகளின் தன்மைக்கு ஏற்றவாறும், ஒவ்வொரு ரேடியோ ஸ்டேஷனுக்கு ஏற்றவாறும் இவர்களது பணிகளில் சின்ன சின்ன மாறுதல்கள் இருக்கும். பொதுவாக சில அடிப்படைத் தகுதிகளை மனதில் வைத்தே ஜாக்கிகளை ரேடியோ நிர்வாகம் தேர்ந்தெடுக்கிறது. தனியார் நிறுவனங்களில் முப்பத்தைந்து வயதுக்கு மிகாதவராக இருக்குமாறு பார்த்துக் கொள்கிறார்கள். குரல்வளமும், பேச்சுத்திறமையும் அடிப்படைத் தகுதி என்பது உங்களுக்கே தெரியும். உச்சரிப்பு தெளிவானதாக இருக்க வேண்டியது அவசியம்.

நாம் அன்றாடம் பயன்படுத்தும் சொற்களையே ரேடியோ ஜாக்கிகளும் நிகழ்ச்சிகளில் பயன்படுத்துகிறார்கள். எனவே மொழிப்புலமை கட்டாயம் இருந்தே ஆகவேண்டும் என்ற கட்டாயம் எதுவுமில்லை. மொழிப்புலமை இருந்தால் அது கூடுதல் தகுதியாக எடுத்துக்கொள்ளப்படும். பொழுதுபோக்கு துறைக்கு தேவையான எல்லாத் திறன்களும் ரேடியோ ஜாக்கிகளுக்கும் தேவை. ரேடியோ ஜாக்கிகளாக தேர்ந்தெடுக்கப் படுபவர்களுக்கு பொதுவாக தேர்ந்தெடுத்த நிறுவனமே பயிற்சியையும் வழங்குகிறது.

பல்கலைக்கழகங்கள் சிலவற்றிலும், சில கல்வி நிறுவனங்களிலும் வழங்கப்படும் கம்யூனிகேஷன்ஸ் & பிராட்காஸ்டிங் கல்வியை கற்பவர்கள் சுலபமாக ரேடியோ ஜாக்கி ஆகிவிடலாம். சில தனியார் கல்வி நிறுவனங்கள் குறுகியகால சான்றிதழ் படிப்பையும் வழங்குகிறது. இது இரண்டுமாத சான்றிதழ் கோர்ஸிலிருந்து, ஒருவருட டிப்ளமோ கோர்ஸ் வரை வேறுபடுகிறது.

வருமானத்தைப் பொறுத்தவரை இத்தொழிலில் வரையறை ஏதும் குறிப்பிட்டு சொல்லும்படி இல்லை. அவரவர் திறமைக்கும், உழைப்புக்கும் ஏற்றவகையில் பணம் கிடைக்கும். பயிற்சிக்காலத்திலேயே குறைந்தபட்சம் மாதத்துக்கு ஐந்தாயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம். ஒரு நாளைக்கு ஓரிரு மணி நேரமே ரேடியோக்களில் இவர்களுக்கு வேலை இருக்கும். மீதி இருக்கும் நேரத்தில் டப்பிங், விளம்பரப் படங்களுக்கு குரல் கொடுப்பது உள்ளிட்ட வருவாயைத் தரக்கூடிய வேறு பணிகளையும் செய்யலாம். இல்லையேல் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் ரேடியோ அலுவலகத்திலேயே நிர்வாகம் மாதிரியான வேறு பணிகளையும் செய்து கூடுதல் வருவாய் பெறலாம்.

“இன்று உலகம் முழுவதும் தமிழர்கள் பரந்து, விரிந்து வாழ்வதால் அவர்கள் வாழும் நாடுகளிலெல்லாம் வானொலிகள் தமிழ் சேவை தொடங்கி வருகின்றன. சாட்டிலைட் ரேடியோக்களும் தமிழ்சேவையை தொடங்கியிருக்கின்றன. அதுபோலவே இண்டர்நெட்டுகளில் இயங்கும் ரேடியோக்களும் பெருகிவருகின்றன. இப்படிப்பட்ட சூழலில் ரேடியோ ஜாக்கிகளுக்கான தேவை அதிகரித்துக் கொண்டே போகிறது. தகுதியும், திறமையும் இருப்பவர்களுக்கு இத்துறையில் நிச்சயம் பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது” என்கிறார் வளைகுடாவில் இருந்து ஒலிபரப்பாகும் சக்தி எப்.எம்.மில் பணியாற்றிய ஆர்.நாகப்பன்! இவர் இண்டர்நெட் ரேடியோக்களிலும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

‘வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!’ என்பது பழமொழி. வாய் மட்டும் போதாது. சில கூடுதல் தகுதிகளும் அதோடு இருந்தால் ரேடியோ ஜாக்கியாகி பிழைத்துக் கொள்ளலாம். பிழைப்போடு சேர்த்து புகழும், கூடுதல் கவனிப்புகளும் கிடைக்கப் போகிறது என்றால் கசக்கவா செய்யும்?

(நன்றி : புதிய தலைமுறை)

இந்து சேவை அமைப்புக்கள் பட்டியல்

இந்தப் பட்டியல் முழுமையானதல்ல. இன்னும் ஏராளமான சேவை அமைப்புகள் பல ஊர்களில் உள்ளன. நீங்கள் அறிந்திருக்கும், இணைந்து பணியாற்றும் அமைப்புகள் பற்றிய தகவல்களை தமிழ்ஹிந்து தளத்திற்கு அனுப்புங்கள்.

அகில இந்திய அளவில் பணியாற்றும் அமைப்புகள்:

சேவா பாரதி (மையம், தமிழ்நாடு கிளை ) : கல்வி, மருத்துவம் & பல்வகை சேவைகள்
ஜெய்பூர் கால்கள் :ஊனமுற்றோருக்கு செயற்கைக் கால்கள்
மாதா அம்ருதானந்தமயி மடம் - சேவைப் பிரிவு :கல்வி, மருத்துவம் & பல்வகை சேவைகள்
சத்யசாயி சேவை அமைப்பு :கல்வி, மருத்துவம் & பல்வகை சேவைகள்
ஏகல் வித்யாலயா : வனவாசிகளுக்கான பள்ளிகள், மையங்கள்
வாழும் கலை அமைப்பு (Art of Living) :கல்வி, மருத்துவம் & பல்வகை சேவைகள்
ஸ்ரீராமகிருஷ்ண மடம் - சென்னை, இந்திய கேந்திரங்கள்
சின்மயா மிஷன் : கல்வி, மருத்துவம் & பல்வகை சேவைகள்
அக்ஷய பாத்ரா : அகில உலக கிருஷ்ணபக்தி அமைப்பின் மாபெரும் சத்துணவுத் திட்டம்
அகில இந்திய சேவை இயக்கம் (AIM for Seva)
வித்யா பாரதி :கல்வி
வனவாசி கல்யாண் அமைப்புகள் - 1, 2
தமிழகத்தை மையமாகக் கொண்ட அமைப்புகள்:

அரவிந்த் கண் மருத்துவ மனை, மதுரை
ஈஷா கிராம புத்துணர்வு இயக்கம் (Isha Foundation)
இயற்கை வள மேம்பாட்டுத் திட்டம் (விவேகானந்த கேந்திரம், கன்னியாகுமரி)’
காஞ்சி காமகோடி பீடம்
சிவானந்த குருகுலம் & அனாதை இல்லம், காட்டாங்குளத்தூர் (சென்னை அருகில்)
ஸ்ரீராமகிருஷ்ண தபோவனம்
வேர்கள் அறக்கட்டளை , சென்னை (குழந்தைத் தொழிலாளர்கள் மறுவாழ்வு)
கிராம கோயில் பூசாரிகள் பேரவை
சேவாலயா, சென்னை
ஓம் பிரணவ ஆசிரமம், தென்காசி, நெல்லை மாவட்டம் (குழந்தைகள், முதியோர் பாதுகாப்பு)
இளைய பாரதம் சேவா டிரஸ்ட், சென்னை (ஏழை மாணவர்களுக்குக் கல்வி உதவி)
அமர் சேவா சங்கம், ஆய்க்குடி, நெல்லை மாவட்டம் (ஊனமுற்றோர் மறுவாழ்வு)
பாரதத்தின் மற்ற மாநிலங்களில் இயங்கும் அமைப்புகள்:

விவேகாநந்தா கேந்திர அருண் ஜ்யோதி - அருணாசலப் பிரதேசம்
ஹிந்து சேவா பிரதிஷ்டானம் - கர்நாடகம்
இந்து சேவை அமைப்புகளுக்கு வெளிநாடுகளில் வாழ்வோர் உதவ:

India Development and Relief Fund
Sewa International
இந்து திருக்கோயில்கள் ஆற்றும் சேவைப் பணிகள்:

திருமலை திருப்பதி தேவஸ்தானம்
மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில்
பழனி முருகன் ஆலயம்
சித்திவிநாயகர் ஆலயம், மும்பை
மஞ்சுநாதஸ்வாமி ஆலயம், தர்மஸ்தலா, கர்நாடகம்
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆலயம், தமிழ்நாடு