அமெரிக்கா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அமெரிக்கா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ரஜினிகாந்த் படத்தில் வரும் அழகான தமிழ் பாடலுக்கு இங்கிலீஷ்காரங்க எப்படி பாடுறராங்க

ஆஹா என்ன இப்படியும்  நடக்குமா!....




ரஜினிகாந்த் படத்தில் வரும் ஒரு அழகான தமிழ் பாடலுக்கு
இங்கிலீஷ்காரங்க எப்படி பாடுறராங்க

சுதந்திரச் சிலை


சுதந்திர தேவி சிலை (Statue of Liberty அல்லது Liberty Enlightening the World) என்பது ஐக்கிய அமெரிக்காவின் நியூயார்க் துறைமுகத்தில் உள்ள ஒரு புகழ்பெற்ற சிலையாகும். பத்தொன்பதாம் நூற்றாண்டில் இச்சிலையை பிரான்ஸ் நாடு அமெரிக்காவிற்கு அன்பளிப்பாக வழங்கியது. இச் சிலையை வடிவமைத்தவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பிரெடெரிக் ஆகுஸ்டெ பார்த்தோல்டி ஆவார். அவர் அக்டோபர் 28, 1886 இல் இதனை வழங்கினார்,


வரலாறு

அமெரிக்கப் புரட்சியின் போது ஐக்கிய அமெரிக்காவிற்கும், பிரான்சிற்கும் இடையே நிலவிய நட்புறவின் வெளிப்பாட்டினை எடுத்தியம்பும் முகமாக பிரான்ஸ் நாட்டினால் ஐக்கிய அமெரிக்காவிற்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது இந்த சுதந்திரதேவி சிலை. இது சர்வதேச ரீதியில் நட்பையும், விடுதலையினையும், மக்களாட்சியினையும் வெளிப்படுத்தும் சின்னமாக விளங்குகின்றது.


ஐக்கிய அமெரிக்காவிற்கு விடுதலை கிடைத்து நூற்றாண்டுகள் நிறைவு பெற்றதை சிறப்பிக்கும் முகமாக அமெரிக்காவும், பிரான்சும் ஒன்றிணைந்து சிலை ஒன்றினை வடிவமைக்க அமெரிக்காவில் நடைபெற்ற மாநாடொன்றில் ஒத்துக்கொண்டன. அதன் அடிப்படையில் பீடத்தினை அமெரிக்க மக்கள் நிர்மாணிப்பதென்றும், பிரான்ஸ் மக்கள் சிலையினை நிர்மாணிப்பதென்றும் முடிவு செய்தனர். அதன்பின் இரு நாட்டவர்களையும் நிதிப்பிரச்சினை பெரிதும் பாதித்தது. அதனால் பிரான்ஸ் நாடு களியாட்டங்கள், அதிர்ஷ்டலாபச் சீட்டிழுப்பு, மூலம் நிதியைத் திரட்டியது. அமெரிக்கா கலை நிகழ்வுகள், கண்காட்சிகள், மற்றும் வேறு நிகழ்வுகள் மூலமும் நிதியை திரட்டினர்

கண்ணீர்த் தடங்கள்

1838 ஆம் ஆண்டில், செரோக்கீ இனத்தவரை, அவர்களுடைய தாயகமான ஜோர்ஜியாவிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றி மேற்கு ஐக்கிய அமெரிக்காவில் உள்ள இந்தியப் பகுதி என அன்று அழைக்கப்பட்ட ஒக்லகோமாவுக்கு அனுப்பப்பட்ட நிகழ்வே கண்ணீர்த் தடங்கள் (Trail of Tears) எனக் குறிப்பிடப்படுகின்றது. இந் நிகழ்வின்போது 5,000 வரையான செரோக்கீகள் இறந்து போனதாகச் சொல்லப்படுகிறது. செரோக்கீ மொழியில் இது, நுன்னா டவுல் இசுன்யி எனப்படுகின்றது. இதன் பொருள் "அவர்கள் அழுத தடம்" என்பதாகும். அமெரிக்க இந்தியர்களை வெளியேற்றும் ஐக்கிய அமெரிக்காவின் முயற்சி இது மட்டும் அல்ல. பிற தொல்குடி அமெரிக்க இனத்தவர்களும், இந்தியானா, புளோரிடா ஆகிய இடங்களிலிருந்து அகற்றப்பட்டனர். செமினோலே இனத்தவர்கள் ஐக்கிய அமெரிக்காவின் இம் முயற்சியை எதிர்த்துக் கரந்தடி (Guerrilla) முறையில் போரிட்டனர். ஓராண்டு காலம் வரை அமெரிக்க அரசை வெற்றிகரமாகத் தோற்கடித்து வந்தனர் எனினும், அவர்களது அன்புக்கு உரியவனும், துணிவுள்ளவனுமான தலைவன் ஒசியோலாவின் இழப்பினால் தோற்றனர். கண்ணீர்த் தடங்கள் என்பது, பிற இந்தியக் குழுக்கள் தொடர்பிலான பலவந்தமான இடப்பெயர்வு நிகழ்வுகளையும் குறிக்கப் பயன்படுவது உண்டு. இச் சொற்றொடர்ப் பயன்பாடு 1831 ஆம் ஆண்டில் சொக்டாவ் இனத்தவர் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டபோது உருவானது.

க‌ட‌ல் க‌ட‌ந்தும் ஒலிக்கும் திருக்குற‌ள்!

POSTED BY,
ஆல்ப‌ர்ட்,விஸ்கான்சின்,அமெரிக்கா.


அமெரிக்காவில் திருக்குறளின் வாரிசாக "திருக்குற‌ள் காவியா"!


திருவள்ளுவர் தவமாய் தவமிருந்து எழுதிய அனைத்தையும் அக்குவேறு ஆணிவேறாக அலசி ந‌ம்மை மூக்கில் விர‌ல்வைக்க‌ வைக்கிறார், இவர். பார்வையாள‌ர்க‌ள் ப‌குதியிலிருந்து இந்த‌க் குற‌ள் வ‌ருவ‌து எந்த அதிகார‌த்தில்? குற‌ள் எண் 412 எப்ப‌டி துவ‌ங்குகிற‌து? "இக‌லின் மிக‌லினி" என்று துவ‌ங்கும் குற‌ள் எந்த‌ அதிகார‌த்தில் வ‌ருகிற‌து? அத‌ன் குற‌ள் எண் என்ன? "முய‌ங்க‌ப்பெறின்" என்று முடியும் குற‌ள் எத்த‌னையாவ‌து குற‌ள்?.....இப்ப‌டிப் ப‌ட‌ப‌ட‌வென‌ பார்வையாள‌ர்க‌ள் வினாக்க‌ளை விசிறிய‌டித்து வாய் மூடும் முன் வாய் திற‌க்கிறார் மிகச்ச‌ரியான‌ விடையுட‌ன்!


திருவள்ளுவர் இன்றைக்கு இருந்தால் இவரையே தன் வாரிசாக அறிவித்திருப்பார்.


யாரிந்த‌ப் பெரும்புல‌வ‌ர் என்று உங்க‌ள் புருவ‌ம் ச‌ற்றே விரிகிற‌தா? ஒரு சிறுமி என்றால் வியந்து விரியாம‌ல் என்ன‌ செய்யும்? இன்னும் இதில் விய‌ப்பு என்ன‌வென்றால், தாய்த் த‌மிழ‌க‌த்தில் அன்றாடம் தமிழ் பேசி வளர்ந்த சிறுமியல்ல;தும்மினால் ஆங்கிலம்; இருமினால் ஆங்கிலம் என்ற அமெரிக்க மண்ணில் வளர்ந்தசிறுமி என்பது தெரிந்தால் பெருவியப்பே ஏற்படும் அல்லவா?


சிகாகோ தமிழ் பள்ளிகள் இணைந்து நடத்திய‌ விழாவில் அசைந்தாடி மேடையேறிய அந்தச் சின்னஞ்சிறு சிறுமி,"தன் நினைவிலூறிய‌ திருக்குறளைப் பாடலாகப் பாடி, தனக்கு பிடித்த குறள்களைக் கூறி, அதன் அதிகாரங்கள் கூறி, கூடி இருந்தவர்களைக் கவர்ந்தார்.


பட்டம்....




சிறுமியின் திறமையை முற்றிலுமாக அறிய சோதனையில் ஈடுபட்ட மாணக்கர்கள் கேட்ட குறள் எண்களுக்கும், ஆசிரியர்கள் கேட்ட குறள் அதிகாரங்கள் எண்களுக்கும், பெற்றோர்கள் கேட்ட உதடு ஒட்டாத குறளையும், வானத்தையும், மலையையும், கடலையும் விட பெரியவை என்னென்ன எந்தெந்தக் குறளில் அமைந்துள்ளது? அந்தக் குறளின் பண்புப் பெருமைகளையும் சற்றும் பிசிறடிக்காமல் சொல்லி குறளில் தன் ஆழ்ந்த ஈடுபாட்டை குறையின்றி வெளிப்படுத்த அரங்கம் கரவொலியில் அதிர்கிறது. கரஒலி எழுப்பியவர்கள் இருக்கையிலிருந்து எழுந்து மீண்டும் கரஒலி எழுப்பி ஆரவாரிக்கிறார்கள். குறையின்றி நிறைவாகக் குறள் சொன்ன சிறுமிக்கு உலகத் தமிழ்மொழி அறக்கட்டளையின் இயக்குநர் இராம்மோகன் திருக்கரங்களால் "திருநிறைசெல்வச்சிட்டு" என்ற பட்டமளித்து மரியாதை செய்யப்படுகிறது.


குறளுக்கு ஒரு டாலர்


சிகாகோ, தமிழ் பள்ளி விழாவில் அதிக திருக்குறள்களை கற்று, நினைவில் பதிக்கும் மூன்று மாணாக்கர்களுக்கு ஒவ்வொரு குறளுக்கும் ஒரு டாலர் (dollar) அளிக்கப்படும் என்று காவியாவின் திறனை இங்கு தமிழ் கற்கும் ஒவ்வொரு மாணாக்கரும் அடைய வேண்டும் என்ற எண்ணத்துடன் அந்த விழாவில் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


அமெரிக்காவில் வாசிங்டன் தமிழ் சங்கம், டெக்சாசின் டல்லாஸ்ஃபெட்னா விழா,ஹூஸ்டன் பாரதி கலைமன்றம் விழா, ஆஸ்டின் தமிழ் சங்க விழா என்று தமிழ் மேடைகளில் திருக்குறள் புகழ்பாடிய காவியாவை இப்போது அமெரிக்காவில் "திருக்குறள் காவியா" என்றால் எல்லோரும் அறிகிற நிலைதனைப்பெற்றிருக்கிறார்.






''ஆறுவயதில் அமெரிக்காவுக்கு வந்துவிட்டேன். எல்லாம் ஆங்கிலம் என்றாகிவிட்ட பிறகு நம் தாய்மொழியை மறந்துவிடக்கூடாது என்பதற்காக என் பெற்றோர் தமிழை நாள்தோறும் சொல்லிக்கொடுத்தார்கள். திருக்குறளும் அவற்றில் ஒன்று. பத்துவயதில் ஒரேவாரத்தில் 45 குறள்களை மனப்பாடம் செய்தேன். அப்போது முயற்சி செய்தால் 1330 குறள்களையும் படித்துவிடலாம் என்று என் அம்மாவும் அப்பாவும் சொன்னதை ஒரே வருடத்தில் அத்தனை குறளையும் மனப்பாடம் செய்து 2005ம் ஆண்டு 1330 குறள்களையும் சொல்லும் திறன் பெற்றேன். முதன் முதலில் வாஷிங்டன் தமிழ்ச்சங்கவிழாவில் கலந்துகொண்டு சொன்னேன். சிகாகோவில் என்னை அழைத்து கெளரவப்படுத்தியதை நான் பெருமையாகக் கருதுகிறேன். 1330 குறள்களையும் ஆங்கிலத்திலும் படிக்கவேண்டும் என்று இப்போது அதில் பயிற்சி பெற்றுவருகிறேன். குறளோவியம் தீட்டிய முதல்வர் கலைஞர் அவர்களையும் கவிஞர்.கனிமொழி எம்.பி.அவர்களையும் சந்திக்கக்கூடிய பெருவாய்ப்பைப் பெற்றதை பெருமையாகவும் என் வாழ்வின் மகிழ்ச்சியான தருணமாகவும் கருதுகிறேன்'' என்றார்.




உங்கள் வாழ்க்கையின் இலட்சியம் என்ன என்று கேட்ட‌போது,"செய்யும் செயலை உண்மையாகவும் முழுமையான‌ ஈடுபாட்டுடனும் செய்வது. செய்யும் தொழிலும், ஈட்டும் பெருளும் மற்றவர்களுக்கும் பயன்படும் வகையில் நடப்பது" என்று சொல்லி அறிவின் முதிர்ச்சியையும் வெளிப்படுத்தினார் காவியா.

திருவள்ளுவர் கூறியுள்ள அறிவுரைகளில் எதையாவது நடைமுறை வாழ்க்கையில் கடைப்பிடிக்கிறீர்களா? என்ற வினாவுக்கு,"செய் நன்றி அறிதல், பொறுமை, அடக்கம் முதலான நற்பண்புகளை பின்பற்றி நடக்கிறேன்" என்றார்.



உங்களையொத்த‌ வ‌யதுக் குழ‌ந்தைக‌ளுக்கு நீங்க‌ள் சொல்ல‌விரும்புவ‌து என்ன? என்று கேட்டு முடிக்கும் முன்,"பெற்றோர் சொல்படி நடக்க வேண்டும். பல்துறை திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும். வீட்டில் தாய் மொழியில் பேச வேண்டும்." என்று விடையளித்தார்.


10ம் வகுப்பு பயிலும் இவர், பள்ளியில் ஸ்பானிஷ் மற்றும் பிரெஞ்ச் மொழிகளைக் கூடுதலாக‌ப் படிப்ப‌தாக‌வும், கர்நாடக இசை, புல்லாங்குழல்,பரத நாட்டியம் ஆகியவற்றின் மீது ஆர்வம் ஏற்பட்டு இவைகளை முறையாக கற்றுக்கொள்வதாகவும் ஓய்வு நேரங்களில் ஓவியம் தீட்டுவேன் என்றும் தம் எண்ணங்களை வெளிச்சமிட்டுக்காட்டினார்.


புறங்கூறுவது பிடிக்காது என்று கூறும் இவர், இயற்கை அதிசயங்கள், வரலாற்று முக்கியம் வாய்ந்த இடங்களை சுற்றிப்பார்ப்பது, பெற்றோரிடம் இரவு படுக்கும் முன் கதை கேட்பது எல்லாம் எனக்குப் பிடித்தமானது என்கிறார்.


சிகாகோ நகரில் மகளுக்கு பட்டம் கொடுத்தபோது தாயையும் பாராட்டிக் கெளரவித்தார்கள். "ஈன்ற‌ பொழுதின் பெரிதுவ‌க்கும் த‌ன் ம‌க‌னைச் சான்றோன் என‌க்கேட்ட‌ தாய்" என்பது குறள். இங்கே உங்கள் ம‌களால் அந்த‌ நிலையை நிச்சயம் எய்தியிருப்பீர்க‌ள். அந்த‌ச்சூழ‌லில் என்ன‌ நினைத்தீர்கள் என்று காவியாவின் அம்மா தேன்மொழியிடம் கேட்டபோது பிரகாசமாய்ச் சொன்னார். "சிகாகோ நகர விழாவில் காவியாவை கௌரவித்தது பெருமையாக இருந்தது. அதை விட, அடுத்து வரும் ஆண்டுகளில் திருக்குறள் ஒப்புவிக்கும் குழந்தைகளுக்கு குறள் ஒன்றுக்கு 1 டாலர் பரிசு அறிவித்து ஆர்வத்தை ஏற்படுதியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.


காவியாவுக்கு என்ன‌ மாதிரியான‌ ஊக்க‌ம் த‌ந்து திருக்குற‌ளை ம‌ன‌ப்பாட‌ம் செய்ய‌வைத்தீர்க‌ள் என்று கேட்க‌,"

ஒரு வாரத்தில் 45 குறள்களை உன்னால் படிக்க முடியும் என்றால் 1330 குறள்களையும் கொஞ்சம் முயற்சி செய்தால் கண்டிப்பாக படித்துவிடலாம் என்றும், அது உனக்கு தன்நம்பிக்கையும் அளிக்கும் என்றும், முதலில் உற்சாகம் ஊட்டும் சில குறள்களை அவளுக்கு சொல்லி, அதற்கு சிறுகதைகளையும் சொல்லி ஆர்வத்தை ஏற்படுதினோம்," என்றார் பெருமித‌த்தோடு.


காவியா எதிர்கால‌த்தில் ஒரு ம‌ருத்துவ‌ராக‌, பொறியாள‌ராக‌...என்ன‌வாக‌ ஆக‌ வேண்டும் என்று த‌யார்ப‌டுத்துவீர்க‌ளா? அல்ல‌து ம‌க‌ள் விருப்ப‌த்துக்கு விட்டுவிடுவீர்க‌ளா? என்று காவியாவின் த‌ந்தை ப‌ன்னீர்செல்வ‌ம் அவ‌ர்க‌ளைக் கேட்க‌,"எதிலும் கட்டாயப்படுத்த மாட்டோம். அவள் விருப்பத்தை அறிந்து, அதில் உள்ள நன்மை தீமைகளை ஆராய்ந்து, நாங்கள் மூவரும் கலந்து முடிவு செய்வோம்," என்றார்.


பொதுவாக‌ உங்க‌ள் மக‌ளைப்ப‌ற்றி நீங்க‌ள் பெருமைப்ப‌டுவ‌து எதில்? என்று கேட்க,"எதிலும் உண்மையாக இருப்பாள். எல்லோரிடமும் அன்பாக இருப்பாள். வீட்டில் நான் எதாவது சிறு தவறு செய்தாலும் தைரியமாக உடனே என்னை திருத்துவாள்," என்று சொல்லி காவியாவை பார‌தியின் புதுமைப்பெண்ணாக‌ ந‌ம் க‌ண்முன் கொண்டுவ‌ந்து நிறுத்தினார்.


உங்க‌ள் ம‌க‌ளுட‌ன் முத‌ல்வ‌ர் ம‌ற்றும் க‌னிமொழி எம்.பியைச் ச‌ந்திக்க‌ நேர்ந்த‌ நிக‌ழ்வு குறித்து....என்ற கேள்விக்கு,"திருக்குறளைப் படித்த காரணத்தினால் தான் அவரை நேரில் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. என் மகள் மூலம் எனக்கு கிடைத்த ஓர் அரிய வாய்ப்பு...." என்று மகளின் பெருமை கண்க‌ளில் மின்ன‌லிட‌ச் சொன்னார், காவியாவின் அப்பா பன்னீர்செல்வம்!


சுப்ரபாதம்,கந்தசஷ்டி கவசம், திருப்புகழ், திருப்பாவை மற்றும் பல பக்திப்பாடல்களையும் சுலோகங்களையும் அடிபிறழாது சொல்லுவதில் வல்லவராக இருக்கிறார் காவ்யா. திருக்குறளில் புலால் மறுத்தல் அதிகாரத்தை என்றைக்கு படித்தறிந்தாரோ அன்று முதல் புலால் உண்பதையே அடியோடு நிறுத்திவிட்டார் என்பது கூடுதல் தகவல்.


காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள காவியா விரைந்து உட‌ல் நல‌ம்பெற‌வும் அமெரிக்காவில் அமெரிக்கையாக‌ ஆங்கில‌த்தில் திருக்குற‌ளை விரைவில் ப‌ர‌ப்ப‌வும் வாழ்த்தி விடைபெற்றோம்.

பாரம்பரியம் காக்கும் அமெரிக்க கிராமம்

POSTED BY,
ஆல்பர்ட், விஸ்கான்சின், அமெரிக்கா.




நம் தாத்தாவின் தாத்தா வாழ்ந்த காலங்களைப் பற்றிக் கண்டவர்கள் இல்லை. அவர் வாழ்ந்த காலம், இடம், சூழல் இவற்றையெல்லாம் வரலாறுகளை வாசித்து மனக் கண்ணில் ஓடவிட்டுப்பார்த்துக் கொள்ளத்தான் முடியும். ஆனால் 1800களில் இருந்த அமெரிக்கக் கிராமம் ஒன்று இன்னும் அப்படியே பராமரிக்கப்படுகிறது என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா! வாருங்கள் அந்த அற்புதக் கிராமத்தை ஒரு ரவுண்டு அடித்து வருவோம்!


நிகழ்கால வரலாறு.....


சற்றே கண்களை மூடி உங்கள் கற்பனைச் சிறகை விரியுங்கள். இப்போது....நீங்கள்... கடவுச் சீட்டு இன்றி அமெரிக்காவில் மின்னசோட்டா மாநிலத்தின் மினியாபொலிஸ் நகரில் சாக்கோபி பகுதிக்கு வந்திருக்கிறீர்கள். உங்கள் பாதங்கள் தரையிறங்கிப் படர்ந்த காலம் மட்டும் சற்றே பின்னோக்கி ....



19ம் நூற்றாண்டு...


அடர்ந்த காடுகளும் மலைகளும் சூழ்ந்த பசுமைச் செழிப்பில் ஊறித் திளைத்திருந்த மின்ன சோட்டா நதிக்கரையில் செக், டானிஷ், பிரெஞ்ச், ஜெர்மன், ஐரிஸ், நார்வே மற்றும் ஸ்காண்டிநேவியன், ஆங்கிலேயர் என பன்னாட்டு மனிதர்களும் கூட்டுக் கலவையாக வந்து குவிந்து வாழத்துவங்கிய இடம் "மர்பி கிராமம்". அன்றைய அமெரிக்க அதிபர் போல்க், டகோட்டா இண்டியன் (இந்தியர் அல்ல) ஏஜெண்டாக மேஜர் மர்பி என்பவரை நியமித்தார்.



"மேஜர் மர்பி" காலுன்றிய இடம்தான் மர்பி கிராமமாக பின்னர் மாறியது. 88 ஏக்கர் பரப்பளவில் மர்பி கிராமம் அமைந்துள்ளது. இன்றைக்கு அமெரிக்காவில் எந்தக் கிராமமும் கிராமம் போல் இருக்காது. கிராமியத்தனம் இம்மி கூடத் தெரியாது. ஆனால் மர்பி கிராமம் 1800களின் மண் சாலையோடு இன்றைய நாகரிக நிழல் படியாமல் அரிக்கேன் விளக்கு வெளிச்சங்களில் "பாரதிராஜாவின்" கிராமத்து மண் வாசனையோடு இருந்திருப்பதை அறியமுடிகிறது. அவர்கள் வாழ்ந்த கிராமம், கடைத்தெரு, பள்ளி, கோவில், கடைகள், கிராம அதிகாரி அலுவலகம்,

வங்கி, அச்சுக்கூடம், கிட்டங்கி, கொல்லன் பட்டறை, காவல் நிலையம், உணவு விடுதி, ஒயின் கடை, கேளிக்கை விடுதி, பண்ணை வீடுகள், நீதிமன்றம் என 1800களை அப்படியே நம் கண் முன் நிறுத்தியிருக்கிறார்கள்.


அன்றைய அமெரிக்கக் கிராமத்தை இன்றைய இந்திய சிறு நகரத்திற்கு ஒப்பிடலாம்; 'மியூசியம்'

என்கிற சடங்குத்தனமின்றி சற்று வித்தியாசமாக ஒரு குளிர்காலத்தில் வீட்டைக்கதகதப்பாய் வைத்துக்கொள்ள‌ வெப்பம்தரும் கருவி!




ஊரையே வளைத்து மரப்பலகை வேலியிட்டு பாதுகாத்து இருக்கிறார்கள். கடந்த காலத்தை நிகழ்காலமாக... ஒரு கற்பனை கலவாத நிஜமாகக் காண வைத்திருப்பது பாராட்டுதற்குரியது.


அது மட்டுமல்ல அந்தக் கால கட்டத்தில் வாழ்ந்தவர்களைப்போல உடைகளில், நடைகளில், பச்சை ஆங்கிலத்தில் (அது என்ன பச்சை ஆங்கிலம் என்கிறீர்களா? நாம் பச்சைத் தமிழ் என்று சொல்வதில்லையா? அது போலத்தான்) பேசிக்கொண்டு அந்தக் கிராமம் முழுக்க "செட்அப் மனிதர்கள்"



சலவைத் தொழிலாளி குடும்பம் தச்சர் பொற்கொல்லர் வலம் வருவதோடு, கிராம நிர்வாகம், அன்றாட நடவடிக்கைகள் என்று அசலாக நடமாட விட்டிருப்பது சூப்பரோ சூப்பர்!




மினியாபொலிஸ் டௌன்டவுணிலிருந்து 35 நிமிடப் பயணம் சாக்கோபி. இரண்டாள் உயரத்துக்கு நடப்பட்ட மரவேலி; மரவேலிக்கு அந்தப் பக்கம் என்ன நடக்கிறது? நீங்கள் பார்க்க வேண்டாமா? என்ற கேள்வியோடு மரச் சுவர் ஏறி எட்டிப் பார்க்கிற ஒரு குடும்பச் சுவரொட்டி பெரிதாக கண்களில் படுகிறது. நபருக்கு நுழைவுக் கட்டணம் எட்டரை டாலர். நுழைவுச் சீட்டை நெற்றியில் ஒட்டாத குறையாக ஸ்டிக்கரைப் போல சட்டையில் ஒட்டி விடுகிறார்கள்.


உள் பக்கம் நுழைந்தால் நீநீநீநீளமான ரெட்டைக் குதிரை பூட்டப்பட்ட சாரட் வண்டி தயாராக நிற்கிறது. குதிரை என்றால் அரேபியக் குதிரைகள் என்பார்களே அந்தக் குதிரைகளை எல்லாம் மிஞ்சும் ஜாம்பவான் குதிரைகள்; ஐம்பது பேர்களுக்கு மேல் தாராளமாகப் பயணிக்கலாம். ஐந்து நிமிடத்தில் குதிரை வண்டி "ஹவுஸ் ஃபுல்" ஆகி விடுகிறது. மூன்று பர்லாங் தூரம் பயணம். காட்டுக்குள் செல்வது போல இருக்கிறது.




கிராமத்தைச் சுற்றிவரும் ஜட்கா வண்டிகள்!



திடீரென்று ஒரு படு சுறுசுறுப்பான கிராமம். வண்டியிலிருந்து கீழே இறங்கினால் முதலில் தென்படுவது கொல்லன் பட்டறை. பட்டறையில் வேலை நடந்து கொண்டிருக்கிறது. விவசாயிகள் தங்கள் உழவுக் கருவிகளை கூர்படுத்தி வாங்குவதும், பட்டறையில் இருப்பதைப் பேரம் பேசி வாங்குவதும், பட்டறைக்காரரின் மனைவி அவ்வப்போது "சாப்பிடாமல் கூட என்னங்க வேலை பாக்குறீங்க?" என்ற கொஞ்சல், அதட்டல் எல்லாம் அவர்களின் மாமூல் வாழ்க்கையை வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொண்டிருந்தது.


பெரிய பண்ணை...




அடுத்து "பெரியபண்ணை" வீடு. விவசாயத்துக்கு வேண்டிய இடுபொருட்களிலிருந்து, குளிர் காலத்தில் கால்நடைகளுக்கு வேண்டிய தீவன சேமிப்புக் கிடங்கு, தானிய சேமிப்புக் கிடங்கு, கால்நடைகள் ஓய்வுக் கூடம், உழவு, களையெடுப்பு, கதிரறுப்பு இத்யாதிகள்... இத்யாதிகள் என இயந்திரங்களின் அணிவகுப்பு.


அந்தக் காலகட்ட மிட்டாமிராசுகள் வாழ்ந்த பண்ணை வீட்டு வசதிகள் ஒரு கணம் வியப்பிலாழ்த்தியது; இந்த வசதிகள் இன்றைக்குக்கூட இந்தியக் கிராமங்களில் வாழ்கிற "பெரிய பண்ணையம்" களில் இருக்கிறதா என்பது சந்தேகமே! அடுத்தடுத்து சின்னதும் பெரிதுமான வீடுகள்; எதிர்ப்புறம் 'எலிமெண்டரி ஸ்கூல்' என்ற பலகை தொங்குகிறது. கதவில்

லஞ்ச் டயம் என்ற அறிவிப்பு காணப்படுகிறது.

ஆரம்பப்பள்ளி, ஆசிரியை.....!

வரிசை வரிசையாக இருக்கிற வீடுகளைக் கடந்து நடந்தால் கடைத்தெரு.


குறுக்கும் நெடுக்குமாக குதிரைகளில் போகிறவர்கள், வருகிறவர்கள். ஒரு சலூன். சலூன் என்பது அந்தக் கிராமத்தின் கேளிக்கை விடுதியாகும். ஆண், பெண் பேதமின்றி புகை பிடித்துக் கொண்டும், மது அருந்திக் கொண்டும், சீட்டு விளையாடிக் கொண்டும், சந்தோஷங்களில் சஞ்சரித்துக் கொண்டிருந்தனர்.


ஓடிவா..ஓடிவா கிளாஸ் ஒரு டாலர் என்று கூவி விற்காமல் அந்த விடுதியின் நடு நாயகமாக ஒரு பெண் "ரூட் பீர்" எனப்படும் மது பானத்தை கண்ணாடி தம்ளர்களில் அளந்து விற்றுக் கொண்டிருந்தார்.


இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தபோது, "ஜோஸ்யம் பாக்கலையோ ஜோஸ்யம்" என்ற பெண் குரல் கேட்டு குரல் வந்த திசைக்கு நம் பார்வை திரும்பியது. "ஜோஸ்யம் பாக்கலையோ... ஜோஸ்யம்...






கை ரேகை பாக்கலையோ கை ரேகை..." என்ற சத்தம் கேட்டுத் திடுக்கிட்டுப் போய்த் திரும்பிப் பார்த்தால்... பின்னே நம்ம ஊரா இருந்தால் திரும்பிக்கூட பார்க்க மாட்டோம். சத்தம் கேட்ட இடம் அமெரிக்காவாச்சே!?



"இவ்விடம் கைரேகை பார்க்கப்படும்" என்ற போர்டு தொங்கிக் கொண்டிருக்க சிலருக்கு கைரேகை பார்த்துச் சொல்லிக் கொண்டிருந்தார் ஒரு அமெரிக்க நங்கை. கையில் ஒரு சிறு குச்சியை வைத்துக் கொண்டு நம்மூர் ஜக்கம்மா ஸ்டைலில் அவர்களின் எதிர்காலத்தை விலாவாரியாக ஒரு ராகத்தோடு சொல்லிக் கொண்டிருந்தார். அமெரிக்க நங்கையிடம் நம்ம ஊர் பொடிசு ஒன்று கையை நீட்டிக்கொண்டு அமர்ந்திருந்த காட்சி மின்னியது.




நம் கையிலிருந்த காமிராவில் அதைக் கிளிக்கிக் கொண்டு நிமிர்ந்த போது டமால், டுமீல் என துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டு பயந்தே போனோம். கால்கள் ஓட்டப் பந்தய வேகத்தில் ஓடுவதற்குத் தயாரான போது, அருகிலிருந்த அமெரிக்கர் நம்மை நிறுத்தி விபரம் சொன்னார். அப்புறம்தான் சத்தம் கேட்ட திசைக்கு நகர்ந்தோம்.


நிழல் நிஜங்கள்...




கெளபாய் குள்ளர்கள் அங்கிருந்த வங்கியின் காவலாளியை சரமாரியாக சுட்டுக் கொன்றுவிட்டு குதிரைகளில் விரைந்து கொண்டிருந்தனர். விசாரித்ததில் இதே சம்பவம் 1817ம் ஆண்டு நடந்ததாகவும் அதை நிஜம் போல் நடித்துக் காட்டுவதாகவும் ஒரு மணிநேர இடைவேளைக்குப் பிறகு டவுன்ஹாலில் கோர்ட் விசாரணை இருப்பதாகவும் சொன்னார்கள்.




டவுன்ஹால் எனப்படும் கிராம நிர்வாக அலுவலகத்தில் எட்டிப் பார்த்தால் விசாரணை நடந்து கொண்டிருந்தது. காரசாரமாக நடந்த வக்கீல்களின் விவாதத்தைப் பொறுமையாக நீதிபதி 'ஐசக் அட் வாட்டர்' செவி மடுத்துக் கொண்டிருந்தார். கடைசியில் வங்கிக்காவலாளியை சுட்டுக் கொன்று கொள்ளையடித்த குற்றத்திற்காக சம்பந்தப்பட்ட இரண்டு கெளபாய் குள்ளர்களையும் தூக்கிலிடும்படி உத்திரவிட்டார்.


குற்றவாளிகளைக் காவலர்களும் ஷெரீப்பும் ஒரு மரத்தில் தூக்கிலிட அழைத்து வந்தனர். தூக்கிலிடுவதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தபோது மின்னல் வேகத்தில் வந்த கெளபாய் குள்ளர்கள் கூட்டம், படபடவென்று காக்கை குருவிகளைச் சுடுவது போல மற்றவர்களைச் சுட்டுத்தள்ளிவிட்டு கைதிகளை அபேஸ் பண்ணி மறைந்தனர். சினிமா சூட்டிங் பார்ப்பது போல ஆயிரக் கணக்கானோர் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தனர்.




இதேபோல 1800களில் நடந்த சம்பவங்களை ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நேரங்களில் நடித்துக் காட்டுகின்றனர். சம்பவங்களை மேடையில் நடித்துக் காட்டுவதைவிட கிராமியச் சூழலில் செயற்கைத் தனம் தெரியாமல் இயல்பாக நடப்பதாகவே செய்து காட்டுவது19ம் நூற்றாண்டின் நிழலை நிஜமாகத் தரிசிக்க முடிகிறது.


வேட்டையில் கிடைத்ததை திறந்தவெளியில் அடுப்பு மூட்டி சமைத்துச் சாப்பிடுகிற ஐரிஷ் குடும்பத்தைக் காணமுடிகிறது.


குதிரைகளுக்கு லாடம் அடிக்க வந்தவர்கள், விதவிதமான பிராணிகளின் தோல்களை பேரம் பேசி வாங்குபவர்கள், விற்பவர்கள், கைத்துப்பாக்கியிலிருந்து வேட்டைத் துப்பாக்கி வரை ரகம் ரகமாக விற்கும் பிரெஞ்சுக் கடைக்காரர், ஊசிமணி, பாசிமணி விற்கும் காட்டுவாசிகளான அமெரிக்க இண்டியன்கள் என அந்தக் கிராமம் சுறுசுறுப்புக் காட்டியிருந்ததை அறிய முடிகிறது.



கூடை முடையும் சிறுசுகள்...!








கிராமத் தெருக்களில் ஆங்காங்கே சிற்றுண்டிவிடுதி, உணவு

விடுதிகளெனப் பூத்திருக்க கலவையான ஜனங்கள் ஆக்கிரமித்திருந்தனர்.


மதுரை மணம்...




அந்தக் காலத்து வீடுகள் சிலவற்றை ஒரு சின்ன விசிட் அடித்ததில் அவர்களின் வாழ்க்கை வசந்தப்பொழுதுகளில் சொகுசாக இருந்ததை அறிய முடிகிறது. ஹால், கிச்சன், டைனிங், ஸ்டோர், பெட், பாத் என சகலகலா வசதிகள் வீடுகளில் உள்ளன. வீட்டைச் சுற்றி

அல்லது ஒரு பகுதியில் வீட்டுக்குத் தேவையான தக்காளி, காரட், பீன்ஸ், உருளை, கோஸ் என பயிரிட்டிருந்தததைப் பார்க்க முடிந்தது.



வீட்டின் உட்புறம் கைவேலைப்பாடுகள் நிறைந்த பொருட்களாலும், புராதனப் பொருட்களாலும் வெகுநேர்த்தியாக வடிவமைக்கப் பட்டிருக்கிறது. சுவர்களில் வண்ணச் சித்திரங்கள் கலை

நயத்தோடு காட்சி அளிக்கிறது. வண்ண வண்ணப் பூச்செடிகள் ஜாடிகளில் ஆங்காங்கே அலங்காரமாய் வீற்றிருக்கின்றன.



அந்தக்கால கைராட்டையில் நூல்நூற்கும் பெண்!





அன்றைய சாதாரண அமெரிக்கக் கிராம வீட்டில் நவீன தையல் இயந்திரம் இருந்தது. குளிர்காலத்தில் கதகதப்புக்கு கம்பளி நெசவு செய்யும் கைத்தறிக் கூடத்தை வீட்டின்

முற்றத்தில் வைத்திருந்திருக்கிறார்கள். டடக்...டடக் என்று பெண்கள் தறி ஓட்டிக் கொண்டிருந்தார்கள். அந்தத் தறி ஒலி மதுரை செளராஷ்டிரத் தெரு ஒன்றில்

நுழைந்து விட்ட உணர்வை ஏற்படுத்தியது.


சுத்திச் சுத்தி வந்தீக...




வருடத்தில் குறிப்பிட்ட சில மாதங்களில் மட்டும் இந்த "மர்பி கிராமம்" உயிர் பெற்று எழுகிறது. மற்ற நாட்களில் அவர்கள் வாழ்ந்த இடம், வீடு, தோட்டம், பள்ளி, சர்ச் என எல்லாம் நினைவிடங்களாகக் காட்சி அளிக்கிறது; தனியார் நிறுவனப் பராமரிப்பில் உள்ள இந்த

மர்பி கிராமத்தில் பெரும்பாலான வீடுகளில் நிரந்தரமாக குடும்பங்களைச் சம்பளம் கொடுத்துக் குடியமர்த்தியுள்ளார்கள்.


அவர்கள் வேலை 19ம் நூற்றாண்டு மனிதர்களாக வாழ்க்கை நடத்துவது மட்டும்தான். அவ்வப்போது சில சம்பவங்களை இயல்பாக நடித்துக் காட்ட மட்டும் தன்னார்வத் தொண்டர்களுக்குத் தினசரி சம்பளம் கொடுத்து ஏற்பாடு செய்கிறார்கள். கிராமமே ஒரு

நாடக மேடையாகவும் அங்கு வாழும் மக்கள் எல்லாம் நடிகர்கள் என்பதை ஏனோ நம் மனம் நம்ப மறுக்கிறது.


"OLD IS GOLD" இல்லையா?



அமெரிக்காவில் இதுபோன்ற பாரம்பரியக் கிராமங்கள் மாநிலம் தவறாமல் அங்கங்கே அமைந்துள்ளது. இதையெல்லாம் பார்த்த போது, நம் தாய்த் தமிழகத்திலும் அந்தந்த மாவட்டத்துக்கு என்று ஒரு மண்வாசனை உள்ளது. ஆயிரம் ரெண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் நம் கிராமங்கள் எப்படி இருந்தது என்று அந்தந்த மாவட்டத் தலைநகரில் ஒரு செயற்கை கிராமத்தை அமைத்து இப்படி அந்தக் காலங்களை நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்தும் வகையில் ஆவன செய்தால் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு நம்ம ஊரின் வரலாற்றை கண்முன் நிறுத்த‌ பெரும் வாய்ப்பாக அமையும். உதாரணத்துக்கு தஞ்சையில் சோழ ராஜ்யம்,மதுரையில் பாண்டிய ராஜ்யம்,கோவையில் சேர ராஜ்யம் போன்று பிரம்மாண்ட காட்சியகங்களைஅமைத்து சேர சோழ பாண்டியமன்னர்களை உலாவரச்செய்யலாம். புறாவுக்காக தன் தசையறிந்துகொடுத்த‌ மன்னனை உயிர்ப்பிக்கலாம். வாடிய முல்லைக்கொடிக்குத் தேர் கொடுத்த பாரியை வலம்வரச் செய்யலாம்!

கற்பனை செய்யும்போதே நெஞ்சம் இனிக்கிறதே!