- என்.வி.சுப்பராமன்
பசு வதைத் தடுப்புச் சட்டம் தேவையா தேவையற்றதா? 'மிகவும் தேவை' என்பவர் ஒரு சாரார். 'தேவையற்றது' என்பவர் மற்றொரு சாரார். இதைப்பற்றிச் சிறிதும் சிந்தனை செய்யாதார் பிறிதொரு சாரார். மனிதாபிமான (உயிராபிமான) அடிப்படையில் தேவை. பொருளாதார அடிப்படையில் தேவை இல்லை. பசு மாத்திரம் என்ன புண்ணியம் செய்தது? மற்ற உயிர்கள் என்ன பாவம் செய்தன? உயிர்க்கொலை கூடாதென்றால் பசுவதைக்கு மாத்திரம் ஏன் தடை? மற்ற மிருகங்கள், பறவைகள் வதைக்கும் தடை வேண்டாமா? இத்தகு தடைகள் ஒரு பிரிவு மக்கள் நலத்திற்கு எதிரானது. எனவே சட்டம் கூடாது. விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் தவறில்லை. இவ்வாறெல்லாம் வாதங்களும், விவாதங்களும் நடக்கின்ற இந்நாட்களில், வள்ளுவர் அறிவுறுத்திய கொல்லாமையும், புலால் உண்ணாமையும் அரசியலாக்கப் படுகிறதோ என்பது நல்லோர்களின் சந்தேகம்.
கற்கால மனிதனும், முற்கால மனிதனும், நாகரிகம் காணாத நாட்களில் கிடைத்ததை உண்டு காலம் கடத்தினான். இலையையும் காயையும், வேரையும், பழத்தையும், பறவையையும், மிருகத்தினையும் கொன்று, தின்று பசியாறினான். உடல் வளர்த்தான், உயிர் காத்தான். மனிதனைக் கொன்று உணவாகக் கொண்ட மனிதனையும் இந்த உலகம் கண்டிருக்கிறது. உலகின் ஏதோ ஒரு பகுதியில் இப்போதும் இப்பழக்கம் இருப்பதாகத் தெரிகிறது. ஊர்வன, நடப்பன, பறப்பன, நீந்துவன என எந்த உயிரினத்தையும் மனிதன் ஒதுக்கிவிடவில்லை. அவன் உணவிலிருந்து, உணவுப் பழக்கத்திலிருந்து மனிதனை மாத்திரம் ஏன் ஒதுக்கிவைத்தான்? யானையையும், சிங்கத்தையும், புலியையும், கரடியையும் ஏன் கொன்று சாப்பிடுவதில்லை? இவையெல்லாம் தன்னைவிட வலிமை வாய்ந்தவை என்பதும், இவற்றைக் கொல்லும் வலிமை நமக்கில்லை என்ற அச்சத்தின் விளைவுகளும்தானே? பாவம்! பசுவும், ஆடும், கோழியும், மீனும் தன்னைக் காத்துக் கொள்ளும் வலிமை இல்லாத காரணத்தால் ஆயிரக்கணக்கில் ஒவ்வொரு நாளும் கொல்லப்பட்டு மனிதனுக்கு உணவாகின்றன. "வலியார் முன் தன்னை நினைக்க, தான் தன்னிற் மெலியார்மேல் செல்லுமிடத்து" என்ற வள்ளுவன் வாக்கினை மனிதன் ஏன் மறந்தான்?
கொல்லாமை, புலால் உண்ணாமை ஆகியவற்றில் நமது சான்றோர் சிந்தனை என்ன என்பதைச் சற்று சிந்தித்துப் பார்ப்போம். அண்ணல் காந்தி அடிகள் "ப்ளீ பார் வெஜிடேரியனிசம்" என்ற ஒரு புத்தகத்தையே எழுதினார். புலால் மறுக்க வேண்டிய காரணங்களைத் தெள்ளத் தெளிவாக வழங்கினார். அதில் வள்ளுவருடைய அருள் உடைமை, கொல்லாமை, புலால் மறுத்தல் ஆகிய கருத்துக்கள் இழையோடக் காணலாம். வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடிய வடலூர் வள்ளலார் இராமலிங்க அடிகளார் நிறுவிய ஜீவகாருண்ய இயக்கத்தின் அடிப்படைத் தத்துவங்கள், பிற உயிர்களைக் கொல்லாமையும், கொன்று கிடைத்த புலாலை மறுத்தலுமே அல்லவா? சமண மதத்தைச் சார்ந்த பெருமக்கள் இன்றும் கதிரவன் மறைவிற்குப் பின்னர் உணவு எடுத்துக் கொள்ளாமைக்குக் காரணம், இரவில் சாப்பிடும் பொழுது தவறியும் பறக்கும் பூச்சிகள் உணவில் விழுந்து இறந்து விடக்கூடாது என்னும் அருள் தன்மை அல்லவா?
கொல்லாமைக்கும், புலால் மறுத்தலுக்கும் வித்தாக அமைந்தது அருளுடைமை எனும் நற்குணமே ஆகும். அதாவது ஜீவ காருண்யமே ஆகும். "நல்லாற்றானாடி அருள் வாழ்க, பல்லாற்றற்றேற்றினும் அஃதே துணை" என்பது வள்ளுவர் வாக்கு. அதாவது, எல்லா மார்க்கங்களும் ஜீவகாருண்யத்தைத்தான் போதிக்கின்றன. ஆகையால் நல்ல முறையில் ஆராய்ந்து கருணை வாழ்வைக் கடைப் பிடிக்க வேண்டும். பல மார்க்கங்களையும் ஆராய்ந்தால் அந்தக் கருணை வாழ்க்கைதான் துணையாகக் கூடியது என்று உரை வகுத்தார் நாமக்கல் கவிஞர்.
புலால் உண்பவர்கள் உடல் வலிமை உள்ளவர்கள். எனவே உடல் வலிமை பெற மாமிச உணவு இன்றியமையாதது என ஒரு சாரார் கருத்து. இதனை மருத்துவர்களும், அறிவியல் வல்லுனர்களும் ஏற்பதில்லை. வள்ளுவப் பெருந்தகை இதை அறிந்தே "உண்ணாமையுள்ள துயிர்நிலை ஊனுண்ண வண்ணாத்தல் செய்யாதளறு" என்றார். அதாவது, ஊனைத்தின்பது அருளுக்கு மட்டுமல்ல, அறிவுக்கும் பொருந்தாது. மனிதனுடைய உயிர் வாழ்க்கைக்கு அவசியமான எல்லாச் சத்துப் பொருட்களும் புலால் உண்ணாமலேயே கிடைக்கின்றன. பின் ஏன் ஊனுண்ண வேண்டும்? மேலும் உயிர் போன பிணத்தை உட்கொள்ள மனிதன் வாய் திறப்பதேன்?
ஓர் ஆடோ, கோழியோ கொல்லப்படும் பொழுது, அவை அனுபவிக்கும் இன்னல்கள் எத்தனை? பாவம், வாயற்ற பிராணிகள், இயலாமை காரணமாக, மனிதன் கொடுவாள் கொண்டு வெட்டும் பொழுது ஓலமிடும் சத்தம் அருள் உள்ளம் படைத்தோருக்கு எத்தனை வேதனையை ஏற்படுத்துகிறது? மனிதனைப் போன்று அந்த உயிர்களுக்கும், வேதனை, வலி, மகிழ்ச்சி, பசி, தூக்கம், பயம் போன்ற எல்லா உணர்வுகளும் உண்டு. இறைவன் படைப்பில் எல்லா உயிர்களும் ஒன்றுதானே? எனவே, அந்தப் பறவையையும், மிருகத்தையும் கொன்று தின்னும் உரிமையை மனிதனுக்கு யார் வழங்கியது? மனிதன் வலிமை படைத்தவன் என்ற ஒரே காரணத்தினால் அந்த உரிமை அவனாகவே அபகரித்துக் கொண்டதல்லவா? அதை எப்படி, யார் நியாயப்படுத்த முடியும்?
கோயில்களில், இடைச்செருகலாக, இறைவன் படைத்த ஆட்டையும், கோழியையும் அவனுக்கே பலியிடும் வழக்கம் ஏற்பட்டது ஒரு கொடுமை. அத்தீய வழக்கத்தை அருளுடைமை படைத்தவரெல்லாம் முயன்று, சமுதாயத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தி, ஒரு முடிவிற்குக் கொண்டு வர வேண்டியது இன்றியமையாதது. அப்பணி இறைப் பணியாகும். கண்ணில் தெரியும் காட்சியிலெல்லாம் கடவுள் தெரிகின்றான். ஆட்டிலும், மாட்டிலும், காக்கையிலும், குருவியிலும் கடவுள் இருக்கின்றான். அவற்றைக் கொல்லுதல் அருளுடைமை ஆகாது. எல்லா உயிர்களும் இன்புற்று வாழ அனைவரும் பாடுபடுவோம்!
வடலூர் வள்ளலார் இராமலிங்க அடிகளார்:--------
உயிர்க்கொலை செய்வோர்க்க உபகாரஞ் செய்தேனோ!.
இயேசு:
கொலை செய்யாதிருப்பாயாக,
அய்யா வைகுண்டர் அருளியது
பசுவை அடைத்துப் பட்டினிகள் போடாதே....
&
விலைகொடுத்து உயிரை காப்பாற்றுதல்....
நபிகள் நாயகம் :
படைப்புகள் அனைத்தும் இறைவனின் குடும்பமாகும். அவற்றை நேசிப்பவனே இறைவனை நேசிப்பவனாவான் - நபிகள் நாயகம் (ஸல்) - நூல்: பைஹகி









