இருபத்தைந்து வயதே நிரம்பிய அழகு சிலை சீதல்போரா ஜெயின் மத துறவியாக.......

 
 
 
தேனாம்பேட்டை பார்த்தசாரதி லேன்... 29-ம் நம்பர் வீடு...கடந்த 2 மாதமாக கல்யாண 'களை' கட்டி உள்ளது. மணப்பெண் போலவே விலை உயர்ந்த புடவை, கழுத்து நிறைய நகைகள் அணிந்து வீட்டுக்குள் அங்கும் இங்குமாக வலம் வரும் சீதல் போராவை பர்த்தவர்கள் ஒரு கணம் வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டே இருப்பார்கள்.
 
இருபத்தைந்து வயதே நிரம்பிய அழகு சிலை சீதல்போரா சிரித்தால் சில்லறை நாணயங்கள் சிதறி விழுந்தது போல் கலீரென்று வீடு முழுவதும் கலகல என்றாகி விடுகிறது. உறவினர்கள், நண்பர்கள் என்று வீடு தேடி வருபவர்கள் எல்லாம் சீதலிடம் சிறிது நேரம் பேசி விட்டு வாழ்த்து சொல்லி திரும்புகிறார்கள். ஆனால் வீட்டை விட்டு வெளியே வந்ததும் 'எப்படித்தான் இவளால் இப்படி ஒரு முடிவை எடுக்க முடிந்ததோ?' என்று ஆச்சரியத்துடன் பேசிக் கொள்கிறார்கள். மம்... இதுவும் கடவுள் லீலைதான் என்றபடி அவர்களுக்குள்ளே சமாதானமாகிய படியே செல்கிறார்கள்.அப்படி என்னதான் முடிவெடுத்தாள் சீதல்போரா!
 
இன்னும் 2 வாரத்தில் (நவம்பர்-6) சீதல்போரா ஜெயின் மத துறவியாக மாறி விடுவார். அதற:கு முன் ஆசை ஆசையாய் பெற்ற மகளை... எத்தனையோ கனவுகளுடன் வளர்த்த மகளை... தங்கள் ஆசைப்படி அலங்காரம் செய்து பார்த்து மகிழ்கிறார்கள் பெற்றோரும், உறவினர்களும்.
 
வியாபாரத்தில் கைநிறைய சம்பாதிக்கும் தந்தை அசோக் குமார் போரா, அன்பை பொழியும் தாய் புஷ்பலதா, பாசத்தோடு சுற்றி வரும் தங்கை கோமல், தம்பி குல்தீப் இவர்களையெல்லாம் மறந்து, எல்லா ஆசைகளையும் துறந்து சாமியாராகும் ஆசை சீதலுக்கு எப்படி வந்தது? அவரே விளக்குகிறார்...
 
சின்ன வயதிலேயே நாம் பிறந்த மனித குலத்துக்கு ஏதாவது நல்ல காரியம் செய்யணும் என்ற ஆசை உண்டு. டாக்டராகி சேவை செய்யலாம் என்றுதான் யோசித்தேன். ஆனால் நன்கொடை கொடுத்து டாக்டருக்கு படிக்க எனக்கு விருப்பமில்லை. சென்னை ஹிந்துஸ் தான் என்ஜினீயரிங் கல்லூரியில் சேர்ந்து பி.டெக் படித்தேன். ஆனால் என்னால் எதிலும் முழு திருப்தி கிடைக்கவில்லை.
 
விடுமுறை நாட்களில் மூலக்கடையில் உள்ள என் தாத்தா (அம்மாவின் தந்தை) சம்பத்ராஜ் செல்லாணி வீட்டுக்கு செல்வோம். அப்போது நிறைய ஆன்மீக கதைகளை தாத்தா சொல்வார். அந்த நேரத்தில் ஒருநாள் சென்னைக்கு வந்த குருஜியை சந்தித்து அவரது பேச்சை கேட்டேன்.அதில் ஒருவித ஈர்ப்பு ஏற்பட்டது.
 
எனவே எனக்கு உகந்த வழி ஆன்மீகம்தான் என்று முடிவு செய்தேன். கல்லூரி படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டு ராஜஸ்தானில் ஜெயின் மத கல்வி படிக்க புறப்பட்டேன். தினமும் கல்லூரி முடிந்ததும் வீடு. தம்பி, தங்கையுடன் ஜாலியாக இருப்பது. அம்மாவுடன் பாசத்தோடு உரையாடுவது இவைதான் என் பொழுதுபோக்காக இருந்தது.
 
திடுதிப்பென்று துறவியாக செல்ல படிக்க முடிவு செய்ததும் அம்மா இரவு முழுவதும் அழுதார்கள். அதை பார்த்து நானும் அழுதேன். சாமியார் ஆகலாமா? வேண்டாமா? என்ற தடுமாற்றம் கூட ஏற்பட்டது. அப்போதுதான் என் அம்மா சொன்னார்கள். 'நான் உன்தாய். என் இதயம் வருத்தப்படத்தான் செய்யும். நீ யோசித்து முடிவு செய். நீ தேர்ந்தெடுத்திருப்பது புனிதமான பணி. என்னால் உன் பயணத்தில் தடை ஏற்படக்கூடாது'என்று தைரியம் சொன்னார்கள்.
 
அதன் பிறகுதான் மன வைராக்கியத்தோடு படித்தேன். குருவின் உபதேசமும், ஆன்மீக நெறிமுறைகளும் என்னை பக்குவப்படுத்தியது. 5 ஆண்டுகள் ராஜஸ்தானிலும், 2 ஆண்டுகள் அமெரிக்காவிலும் பயிற்சி முடித்து விட்டேன். பயிற்சியின்போது முழுக்க முழுக்க வெள்ளை சேலை அணிந்திருந்தேன்.
 
நிலையற்ற எந்த பொருளின் மீதும் இப்போது எனக்கு ஆசை இல்லை. இப்போது கூட பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆசைக்காக என்னை வித விதமாக அலங்காரம் செய்து அழகு பார்க்கிறார்கள். ஆனால் எனக்கோ, எப்போது இந்த உடைகளுக்கு விடை கொடுப்போம் என்றுதான் யோசிக்க தோன்றுகிறது.
 
இவ்வாறு அவர் கூறினார்.
 
மனதில் ஓரளவு தைரியத்தை வலுக்கட்டாயமாக வரவழைத்தாலும் மகளை நினைத்து அவ்வப்போது பெருகி வரும் கண்ணீரை துடைத்தபடியே இருக்கும் தாய் புஷ்பலதாவுக்கு ஒரு குட்டி குருவை போலவே சீதல் ஆறுதல் உபதேசம் செய்கிறார்.
 
அம்மா, எதற்கும் டென்சன் ஆகாதே. நீயும் ஒரு ஆத்மா! நானும் ஒரு ஆத்மா! நமக்குள் இடையிலே வந்த சொந்தம் இடையிலே செல்கிறது. எதை நினைத்தும் கலங்காதே. வேறு பிறவியில் கூட வேறு ஏதாவது ஆத்மாவாக நாம் ஒருவேளை சந்திக்கலாம். 'காதற்ற ஊசியும் கடை வழிக்கு வாராதுகாண்' என்ற பட்டினத்தடிகளின் ஞானப் பிழம்பாய் சீதலும், 'பெத்த மனம் பித்து! பிள்ளை மனம் கல்லு' என்ற முதுமொழிக்கேற்ப கண்ணீர் கடலில் தாயும் இருக்கிறார்கள்.
 
உலக ஆசா பாசங்களை துறந்து சொந்த, பந்தங்களை மறந்து சீதல் துறவியாக மாற போவது பற்றி தாய் புஷ்பலதா கூறியதாவது:-
 
உலக ஆசாபாசங்களை துறந்து சொந்த, பந்தங்களை மறந்து சீதல் துறவியாக மாறபோவது பற்றி தாய் புஷ்பலதா கூறியதாவது:-
 
என் மகள் சீதல் படுசுட்டி. பள்ளி கூடத்தில் டான்ஸ், பாட்டு, பேச்சு போட்டி எல்லாவற்றிலும் கலக்குவாள். படிப்பிலும் எப்போதும் முதல் 'ரேங்க்'தான். அவள் இப்படி ஒரு முடிவை மேற்கொள்வாள் என்று நான் கனவிலும் நினைத்தது இல்லை. அவளும் முதலில் டாக்டருக்கு படிக்க ஆசைப்பட்டாள். அது நிறைவேறவில்லை.
 
டாக்டர் மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் செய்து கொடுக்கணும் என்று நான் ஆசை பட்டேன். அதுவும் நடக்கவில்லை. அவள் சாமியார் பயிற்சிக்கு சென்றிருந்தபோது அவள் போட்டோவை பார்த்து பார்த்து அழுவேன். பல நாட்கள் தூங்கவில்லை.
 
மெதுவடை, இட்லி, அப்பளம், மசால் தோசை, கீரைவடை போன்ற  தென்னிந்திய உணவு வகைகளை என் பிள்ளை விரும்பி சாப்பிடுவாள். அந்த உணவுகளை வீட்டில் சமைத்தாலும் அவள் நினைவு வந்து அழுது விடுவேன். அதனால் அந்த உணவுகள் தயாரிப்பதை விட்டு விட்டேன். அவள் நல்ல பாதையை தேர்வு செய்து இருக்கிறாள்.
 
கடவுள் அவளை வழி நடத்துவார். இனி வரும் காலங்களில் ராக்கி கட்டும் நிகழ்ச்சி, திருமண நிகழ்ச்சி என்று பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது எல்லாரது வீட்டிலும் எல்லா பிள்ளைகளும் வந்திருப்பார்கள். ஆனால் அங்கு சீதல் இனி வரப்போவதில்லை. அதை நினைத்தால் இதயம் வலிக்கிறது. அழுகை வருகிறது.
 
இந்த உணர்வு என் நெஞ்சிக்கும்வரை இருந்து கொண்டேயிருக்கும். சீதல் துறவியாக செல்வதற்கு முன்பு அவளது தங்கைக்கு ஒரு டாக்டர்  மாப்பிளை பார்த்து விடலாம்.  மோதிரம் மாற்றும் நிகழ்ச்சியை யாவது  கடைசியாக சீதல் பார்த்து விட்டு செல்ல வேண்டும் என்று துடித்தோம். அதற்காக தீவிரமாக வரன் தேடினோம். ஆனால் அமையவில்லை.
 
இவ்வாறு அவர் கூறினார்

Best Blogger Gadgets

2 கருத்துகள் :

ப.கந்தசாமி சொன்னது…

விதியின் விளையாட்டு. வேறு என்ன சொல்ல?

சிவக்குமார் சொன்னது…

ஜெயின் சாமியார் பயிற்சி அமெரிக்காவில் கொடுக்கிறார்களா ? சாமியாராவதற்குப் பதில் அவர் மருத்துவராகி சேவை செய்திருக்கலாம். எனக்கு வேறொன்றும் சொல்லத் தோன்றவில்லை.

கருத்துரையிடுக