உண்ணாநோன்பு, உபவாசம்,நோன்பு,விரதம் இருக்க முடியாதவர்கள் தெரிந்து கொள்ள.. வழிகள்



உபவாசம், விரதம், நோன்பு (அதாவது உணவு எடுத்துக் கொள்ளாமல் பட்டினி கிடப்பது) என்ற வார்த்தைகளை கேட்டவுடன் இது ஏதோ ஆன்மீகம் தொடர்பானது என்றே முதலில் எண்ணத் தோன்றும். மதங்களில் சொல்லி வைக்கப்பட்ட விடயங்கள் பலவும் அறிவியலோடு தொடர்புடையது என்பது பல இடங்களில் நிரூபிக்கப்பட்டு வருகிறது. உபவாசம் என்ற விரதத்தின் பலன்களை ஆழமாக புரிந்து கொண்ட பிறகு தான் அதன் அத்தியாவசியத்தை ஏகாதசி விரதம், வெள்ளிக்கிழமை விரதம் என்று பல பெயர்களில் அனுசரிக்க கூறியுள்ளார்கள் முன்னோர்கள்.


யோகாசனம், பிராணயாமம் போன்ற பயிற்சிகளை மேற்கொள்பவர்கள் மிக முக்கியமாக செய்ய வேண்டிய ஒன்று உபவாசம். அதாவது உண்ணநோன்பு. எடுத்துக் கொள்ளும் உணவால் உடலில் சேரும் கழிவுகளை உடலை விட்டு முழுவதுமாக நீக்க ஒரு மிகச்சிறந்த உத்தி உண்ணாநோன்பு. அது பற்றி இங்கு பார்க்கலாம்.


உலகில் ஏராளமான மதங்கள் இருக்கின்றன. இந்த மதங்களில் எல்லாம் காணப்படும் ஒரே விடயம் உபவாசம். இது மதம், இனம் இவற்றையெல்லாம் கடந்த ஒரு உன்னத செயல் என்பது இதன் மூலம் புலப்படுகிறது.

நல்ல பலன்

மனிதனாக பிறவி எடுத்தவர்கள் விஞ்ஞானத்தின் அடிப்படையில் வாழ்ந்தாலும் மெய்ஞானத்தை அடைய வேண்டுமென்றால் சில உடல், மனக் கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து ஆக வேண்டும். அதன் ஒரு பகுதி தான் உபவாசம். இருந்தாலும், உபவாசம் என்பது சாதாரண நிலையில் இருப்பவர்களுக்கு கூட நல்ல பல பலன்களை அளிக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.எந்த ஒரு பொருளும் ஓய்வின்றி உழைத்தால் பழுதடைவது இயல்பு. உடலுக்கும், உள்ளத்திற்கும் அவ்வப்போது பூரண ஓய்வு என்பது அவசியம். உண்ட உணவை செரிக்க நேரிடும் சீரண வேலைக்கு, உயிராற்றலின் பெரும் பகுதியை செலவழிக்க நேரிட வேண்டியுள்ளது. தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டே இருக்கும் போது உடலின் உயிராற்றலும் ஓயாது இயங்குகிறது. இதற்கு ஓய்வு கொடுப்பது மிகவும் முக்கியம். பெரும்பாலோருக்கு காலை, மதியம், மாலை, இரவு என்று நான்கு நேரங்களிலும் சாப்பிடாமல் இருக்கவே முடியாது. இந்த வேளைகளை தவிர இடைப்பட்ட நேரங்களில் நொறுக்கு தீனிகளை வேறு உண்பதையும் வழக்கமாக கொண்டிருப்பார்கள். இவர்களின் உடலும் பழுதடையும். கூடவே உள்ளமும் சிக்கலான எண்ணங்களால் குழப்பமடையும் என்கிறார்கள் மெய்ஞானிகள்.

நலிவடையும் உடல்

உடல் நலிவடைய, நோய்வப்பட திருவள்ளுவர் கூறும் ஒரு குறளை பார்க்கலாம்.

"இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
கழிபேரிரை யான்கண் நோய்"

அதாவது, இழிவறிந்து உண்ணல் என்ற சொற்களின் மூலம் வள்ளுவர் உடலை விட்டு வெளியேறாமல் ஏற்கனவே உள்ளிருப்பாகத் தங்கி விஷமாகிக் கொண்டிருக்கிற கழிவாகிய இழிபொருளை குறிப்பிடுகிறார். பூரணமாக வெளியேற்றும் வாய்ப்பை கொடுக்கும் வண்ணம் உடலின் உள்ளுறுப்புகளுக்கு ஓய்வளிக்கும் போது உயிராற்றல் சீரண வேலையில் இருந்து விடுபடுவதால் உடலில் தேங்கியிருக்கும் கழிவுகள் முழுமையாக வெளியேறும் வாய்ப்பு உருவாகிறது. இவ்வாறு ஓய்வு கொடுக்காமல் மேலும், மேலும் உடலுக்கும் உணவை திணிப்பதால் அந்த உணவு உடலுக்கு ஊட்டம் கொடுப்பதற்கு பதிலாக உள்ளிருக்கும் கழிவுடன் மேலும் கழிவு£கி விஷமாக மாறி பின்னர் உடலை பெருநோய்க்கு தள்ளிவிடும் என்பதே இதன் பொருள்.

உடலிற்குள் கழிவுப் பொருளின் அளவு அதிகரித்து வருகிறது என்பதை எப்படி தெரிந்து கொள்ள சில அடையாளக் குறிகள் உண்டு. பசியின்மை, அன்றாடம் உண்ணும் உணவில் சுவையின்மை போன்றவை தொடக்க அறிகுறிகள். அதாவது உண்ட உணவு சீரணிக்கப்படாமல் வயிற்றில் புளிக்க தொடங்கிவிட்டால் நாக்கில் சுவை மழுங்கிவிடும். வயிற்றில் புளிக்க தொடங்கும் உணவால் விஷத்தன்மையுள்ள வாயு கிளம்பி மேல் நோக்கி வரும். அப்படி வரும் வாயுவின் அளவு அதிகரிக்கும் போது அழுத்தம் அதிகமாகி நெஞ்சு கரிப்பது போன்ற உணர்வு தோன்றும். சிலருக்கு குமட்டல், மயக்கம், உடல் முழுவதும் வலி, தலைவலி, சுறுசுறுப்பின்மை, அபான வாயு மிகுந்த துர்நாற்றத்துடன் இருப்பது, தூக்கமின்மை போன்ற அறிகுறிகள் தோன்றும். இத்தனைக்கும் மூலகாரணம், வெளியேற்றப்படாமல் உள்ளே தங்கியிருக்கும் கழிவுப் பொருள்கள் தான்.
பசி எங்கிருந்து வருகிறது?

சிலர் எப்போதும் சரியான நேரத்திற்கு உணவு உட்கொள்ள வேண்டும் என்பார்கள். பசிக்கிறதோ, இல்லையோ நேரம் வந்துவிட்டால் வயிற்றுக்குள் எதையாவது கொட்டி விடுவது சரியானது ஆகுமா? நிச்சயமாக இல்லை. பசி என்றால் நினைவுக்கு வருவது வயிறு. சிலருக்கு பசி என்பது மயக்கமாக தோன்றலாம். சிலருக்கு எரிச்சலாகவும் தோன்றும். இவை எல்லாம் பசியின் சின்னங்கள் என்று நினைத்து விடுபவர்கள் ஏராளம். இந்த அடையாளக்குறிகளை பசி என்று நினைத்து உணவுகளை நிரப்பிக் கொண்டிருந்தால் தற்காலிகமாக அந்த உணர்வுகளிலிருந்து விடுதலை அடைந்தது போல் தோன்றும். ஆனால் உண்மை என்னவென்றால், இவையாவும் நோயின் விதைகள் உடலில் உருவாகிக் கொண்டிருக்கின்றன என்பதன் அடையாளமே.

மனித உடலின் ரத்தம் 75 சதவீதம் காரத்தன்மையும், 25 சதவீதம் அமிலத்தன்மையும் வாய்ந்தது. இந்த நிலை சீராக இருந்தால் உடலில் உபாதைகள் எதுவும் தோன்றாது. அமிலத்தின் தன்மை அதிகமாகும் போது தான் உடலில் நோய்கள் உருவாகின்றன. பசி என்ற உணர்வு உடல் முழுவதும் உணவின் தேவையை உணர்த்தும் ஒரு சூக்குமமான உணர்வாகும். அதாவது உயிராற்றல் ஏற்கனவே உட்கொள்ளப்பட்ட உணவை சீரணித்து முடித்து கழிவுப் பொருட்களை முற்றிலும் வெளியேற்றிய நிலையில் மறுபடி உணவு தேவை என்பதை அறிவுறுத்தும் நிலை. ஆனால் எத்தனை பேருக்கு இப்படி உண்மையான பசி தோன்றுகிறது?

உபவாசத்தை தொடங்குவது எப்படி?

ஒரு முறை உண்ட உணவு முழுவதும் சீரணமடைந்து மறுபடி பசி தோன்றுகின்ற நிலையில் உணவு உண்ணாது தவிர்க்கும் நிலை தான் உபவாசம் என்கிற உண்ணாநோன்பு. அவ்வாறு தோன்றும் பசியை நீர் மட்டும் குடித்து மனக்கட்டுப்பாட்டுடன் ஒரு நாள் கழித்து விட்டால் அதன் பின்னர் பசி என்பது தோன்றாது. அதாவது உண்ணாநோன்பை மேற்கொள்ள தொடங்கி உடலின் கழிவுகள் முழுவதையும் அகற்றிவிடலாம். உடலில் இருக்கும் நோய்களின் அடையாளக்குறிகள் நீங்கும் வரையில் உண்ணாநோன்பை மேற்கொள்ளலாம் என்கிறார்கள் உபவாசத்தில் அனுபவம் உள்ளவர்கள். எவ்வளவு நாட்கள் உண்ணாநோன்பு மேற்கொள்ளலாம் என்பது அவரவர் உடல் நிலையை பொறுத்தது. குறைந்தது 3 நாட்கள் முதல் 10 நாட்கள் வரை உபவாசத்தை நீடிக்கலாம்.

"நோயிலே படுப்பதென்ன கண்ணபெருமானே-நீ
நோன்பிலே உயிர்ப்பதென்ன கண்ணபெருமானே" என்று பாடுகிறான் பாரதி.

அதாவது நோய் வந்த போது நீ சோர்ந்து படுத்துக் கொள்கிறாய். ஆனால் நோன்பிருக்கும் போது உண்ணாதிருந்தும் மிகத்தெம்புடன் உற்சாகமாய் காணப்படுவதன் காரணம் என்ன என்று வியக்கிறான் பாரதி. உண்மையில் உண்ணா நோன்பு இருக்கும் போது உயிராற்றல் உடலில் உள்ள கழிவுப் பொருள்களை எவ்வளவுக்கு முடியுமோ அவ்வளவுக்கு வெளியேற்றி விடுகிறது. இதனால் உடலின் உறுப்புகள் தூய்மையடைகின்றன. அதே நேரத்தில் உடலின் எடையும் குறைகிறது. உண்ணாநோன்பு இருக்கும் போது தொடக்க காலத்தில் உடலின் எடை குறைவது சற்று அதிகமாக இருக்கும். அவ்வாறு குறையும் உடலின் எடை எந்த விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாது. காரணம், அவையெல்லாம் உடலில் வெளியேற்றப்படாமல் தங்கிவிட்ட கழிவுப் பொருட்கள் தான். உண்ணா நோன்பு இருக்கும் நிலையில் உயிராற்றலானது, சீரண வேலையில் இருந்து ஓய்வு பெற்றுக் கொள்வதால் உடலின் உள்ளுறுப்புகளில் உள்ள கழிவுப் பொருள்களை எல்லாம் வெளியேற்றும் பணியை செய்கின்றது. அப்படி சுத்திகரிக்கும் வேலையில் இருக்கும்போது நாம் பூரண ஓய்வு நிலையில் இருப்பது அவசியம். அப்போது உடலில் இருக்கும் நோய்க்கான காரணிகள் அனைத்தும் மறையத் தொடங்கும்.
உண்ணாநோன்பின் போது வயிற்றுப் போக்கு, சளிபிடித்தல், இடுப்பு வலி, முதுகுவலி, மயக்கம், சோர்வு, வாந்தி போன்ற அறிகுறிகள் தோன்றும். ஆனால் இவையெல்லாம் உடலில் ஏற்கனவே வெளியேற்றாமல் தேங்கிவிட்ட கழிவுப் பொருள்களை சுத்திகரிப்பதற்காக உயிராற்றல் மேற்கொள்கின்ற பணிகள் தான். எனவே இவற்றை கண்டு பயம் கொள்ள தேவையில்லை. இந்த நிலையில், எல்லா சீரண உறுப்புகளும் கழிவு உறுப்புகளாக பணி செய்து உணவின் மூலம் ஏற்கனவே உட்கொண்ட மருந்துகள் எல்லாம் வெளியேற்றப்பட்டு விடும். உடல் பூரணமாக சுத்தமடைந்து ஒரு புத்துணர்வு பெறும்.

உபவாசத்தை முடிக்கும் நிலை

உண்ணா நோன்பு இருக்கும் நிலையில் உடலில் சேமித்து சேமித்து வைக்கப்பட்டிருந்த குளுக்கோஸ் போன்ற சர்க்கரைப் பொருட்களை உடல் பயன்படுத்திக் கொள்ளும். இவ்வாறு சேமித்து வைக்கப்பட்டிருந்த பொருட்கள் அனைத்தும் தீர்ந்த பின்னரே பசி என்ற உண்மை நிலை தோன்றும். இந்த நிலையில் உடலில் இருந்து வெளியேறும் சுவாசம் மிகவும் இனிமையாக இருக்கும். கண்கள் பிரகாசமாக இருக்கும். நாக்கு வழவழப்பும், துல்லியமாக சுவையறியும் நிலையில் காணப்படும். நாக்கின் வெண்மைப் படிவம் நீக்கப்பட்டு சிவந்த நிறத்துடனும் இருக்கும். வாயில் உமிழ்நீர் சுரந்து உடல் காற்றில் பறப்பது போன்று இலகுவாக தோன்றும். இந்த நிலையே உபவாசத்தை முடிக்கும் நிலை. 'லங்கணம் பரம அவுசதம்' என்பார்கள். அதாவது, உபவாசம் என்பது உடலுக்கு மிகச்சிறந்த மருந்து என்பதே இதன் பொருள். உண்ணாநோன்பு இருப்பது உடல் நல உயர்வுக்கான உன்னதமான வழி.

முழுமையாக உணவுகளை மறுத்து நீர் மட்டும் அருந்தி உண்ணாநோன்பு இருக்க முடியாதவர்கள் கீழ்க்கண்ட நீராகரங்களுடன் உண்ணாநோன்பை மேற்கொள்ளலாம்.

1. இளநீர், அருகம்புல் சாறு கலந்தோ கலக்காமலோ நாள் ஒன்றுக்கு மூன்று டம்ளர் வீதம் அருந்தி வரலாம்.
2. பழரசச் சாறு புளிப்பு சுவையில்லாமல் இனிப்பாக இருக்கும் பழங்களின் சாறு மூன்று டம்ளர்கள் மட்டும் அருந்தி நோன்பு இருக்கலாம்.
3. நீர் மோர் உப்பு சேர்க்காமல் மூன்று அல்லது நான்கு டம்ளர்கள் ஒரு நாளைக்கு அருந்தி வரலாம்.
4. வாட்டர் மெலன் எனப்படும் தண்ணீர் பழம் மட்டும் அருந்தி நோன்பு இருக்கலாம்.
இப்படி வெறும் நீராகரங்கள் மட்டும் எடுத்துக் கொண்டு 48 நாட்கள் வரை நீர் நோன்பாக எடுக்கலாம். இப்படி செய்வதால் உடலின் நோய்கள் பலவும் இருந்த இடம் தெரியாமல் போகும்.

உண்ணா நோன்பினை யார் வேண்டுமானாலும் மேற்கொள்ளலாம். ஆனால் முடிக்கும் போது மிகக்கவனமாக முடிக்க வேண்டும். சிறுகச்சிறுக பழங்களில் தொடங்கி பின்னர் கீரை அதற்கடுத்து பச்சை காய்கறிகள் பச்சடி என படிப்படியாக திரவத்தில் தொடங்கி திட வடிவிலான உணவுகளை கையாண்டு பின்னர் வழக்கமான உணவு பழக்கத்திற்கு வர வேண்டும்.

இதை தான் ' ஒரு வேளை உண்பான் யோகி, இரு வேளை உண்பான் போகி, முவ்வேளை உண்பான் துரோகி, மேலும் உண்பான் ரோகி'
என்றார்கள். எனவே, உணவை குறைத்து உடலை காக்க தொடங்குவோம் வாருங்கள்!

By...ஆனந்த மயன்

Best Blogger Gadgets

1 கருத்து :

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

விரிவான விளக்கம்...

உண்ணா நோன்பினை முடிக்கும் போது என்ன செய்ய வேண்டும் என்பதை அருமையாக சொல்லி உள்ளீர்கள்...

நிறைய பேர் உடம்பை குறைக்கிறேன் என்று கெடுத்துக் கொள்வது தான் மிச்சம்... அந்தப் பிரச்சனை வேறே ...

கருத்துரையிடுக