அடால்ப் ஹிட்லர் (1889-1945)

அடால்ப் ஹிட்லர் (1889-1945)

இந்த நூலில் வேண்டா வெறுப்புடன்தான் அடால்ஃப் ஹிட்லரைச் சேர்த்தேன் என்பதை நான் ஒப்புக் கொண்டாக வேண்டும். அவருடைய செல்வாக்கு முற்றிலும் கேடு விளைவிப்பதாகவே இருந்தது. சுமார் 3.5 கோடி மக்களுக்கு மரணத்தை விளைவித்தவர் என்ற ஒரே காரணத்தால் மட்டுமே முக்கியத்துவம் பெற்றுள்ள ஹிட்லரைப் பெருமைப் படுத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்கில்லை. எனினும், மிகப் பெருமளவு எண்ணிக்கையிலான மக்களின் வாழ்க்கையில் கடும் பாதிப்பை ஹிட்லர் ஏற்படுத்தினார் என்ற உண்மையை யாரும் மறுக்க இயலாது.
ஆஸ்திரியாவிலுள்ள பிரானாவ் என்ற நகரில் 1889 ஆம் ஆண்டில் அடால்ஃப் ஹிட்லர் பிறந்தார். இளமையில் ஓர் ஓவியராக முயன்று தோல்வி கண்டார். இந்த இளமைப் பருவத்தில் தான் எப்போதோ இவர் ஒரு தீவிர ஜெர்மன் தேசியவாதியாக மாறினார். முதல் உலகப் போரின்போது இவர் ஜெர்மன் இராணுவத்தில் பணியாற்றி காயமடைந்து, இருமுறை வீரச் செயலுக்கான விருதுகளைப் பெற்றார்.
முதல் உலகப் போரில் ஜெர்மனி தோற்றது கண்டு ஹிட்லர் அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைந்தார். 1819 ஆம் ஆண்டில், தமது 30 ஆம் வயதில், முனீக்கில் ஒரு குட்டி வலதுசாரிக் கட்சியில் சேர்ந்தார். இக்கட்சி தனது பெயரை விரைவிலேயே "தேசியச் சமதரும் ஜெர்மன் தொழிலாளர் கட்சி" (National Socialist German Worker's Party) என்று மாற்றிக் கொண்டது. இக்கட்சியைச் சுருக்கமாக "நாஜிக் கட்சி" என்று அழைத்தனர். இரண்டு ஆண்டுகளில் ஹிட்லர் இக்கட்சியின் எதிர்ப்பில்லாத தலைவர் (Fuehrer) ஆனார்.
ஹிட்லரின் தலைமையில் நாஜிக் கட்சி மிக விரைவாக வலுவடைந்தது. 1923 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இக்கட்சி அரசைக் கவிழ்க்க முயன்றது. இந்த முயற்சியை "முநீனக் பீர் மண்டபப் புரட்சி" (Munich Beer Hall Putsch) என்று அழைப்பர். ஆனால், இப்புரட்சி தோல்வியடைந்தது. ஹிட்லர் கைது செய்யப்பட்டு, அரசுத் துரோகக் குற்றத்திற்காக விசாரணை செய்யப்பட்டு, தண்டிக்கப் பட்டார். எனினும், ஓராண்டுச் சிறைத் தண்டனை அனுபவித்த பிறகு ஹிட்லர் விடுதலையானார்.
1928 ஆம் ஆண்டில் நாஜிக் கட்சி இன்னும் ஒரு சிறிய கட்சியாகவே இருந்தது. அப்போது ஏற்பட்ட பெரும் பொருளாதார மந்தம் (Great Depression) ஜெர்மனியிலிருந்து அரசியல் கட்சிகளிடம் மக்கள் வெறுப்புக் கொள்ளச் செய்தது. அதே சமயம் நாஜிக் கட்சிக்கு மக்களிடம் செல்வாக்குப் படிப்படியாக வளர்ந்தது. 1933 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில், ஹிட்லர் தமது 44 வது வயதில் ஜெர்மனியில் தலைமை அமைச்சர் (Chancellor) ஆனார்.
ஹிட்லர் தலைமை அமைச்சரான பிறகு, அரசு எந்திரத்தை பயன்படுத்தி எதிர்காட்சிகள் அனைத்தையும் ஒழித்துகூ கட்டிவிட்டு, விரைவிலேயே ஒரு சர்வாதிகாரத்தை ஏற்படுத்தினார். குடியியல் உரிமைகளுக்கு, தற்காப்பு உரிமைகளும் படிப்படியாகப் பறிக்கப்பட்டு இந்த சர்வாதிகார ஆட்சி நிறுவப்பட்டதாகக் கருதிவிடலாகாது. குடியியல் உரிமைகள் பறிக்கப்படுவது மிகத் துரிதமாக நடைபெற்றது. விசாரணைகள் நடத்துவது குறித்து நாஜிகள் கவலைப் படவே இல்லை. பெரும்பாலான அரசியல் எதிர்ப்பாளர்கள் அடித்து நொறுக்கப்பட்டனர். அல்லது படுகொலை செய்யப்பட்டனர். அப்படியிருந்தும் இரண்டாம் உலகப் போருக்கு முந்திய ஆண்டுகளில் வேலையில்லாத் திண்டாட்டத்தை ஓரளவுக்குக் குறைத்தார். பொருளாதார மீட்சிக்கும் ஓரளவு வழி வகுத்தார். இதனால், பெரும்பாலான ஜெர்மானியர்கள் ஹிட்லருக்கு ஆதரவளித்தனர்.
ஹிட்லர் இதன் பின்பு இரண்டாம் உலகப் போருக்குக் காரணமாக இருந்த படையெடுப்புகளில் இறங்கினார். சில நிலப்பகுதிகள் போரிடாமலே அவருக்குக் கிடைத்தன. இங்கிலாந்தும், ஃபிரான்சும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தன. அவை யாருடனும் போரிடும் மனப்போக்கில் இல்லை. வர்சேல்ஸ் உடன்படிக்கையை மீறி ஹிட்லர் ஜெர்மன் இராணுவத்தைப் பெருக்கியபோதும், அவருடைய படைகள் ரைன்லாந்தைக் கைப்பற்றி (1936 மார்ச்) அதை வலுப்படுத்தியபோதுமூ, ஆஸ்திரியாவை அவர் வல்லந்தமாகத் தன் வசப்படுத்திக் கொண்டபோதும் (1938 மார்ச்) இங்கிலாந்துமூ, ஃபிரான்சும் அதைக் கண்டு கொள்ளாமலிந்தன. அரண்காப்பு செய்யப்பட்ட செக்கோஸ்லாவாக்கியாவின் எல்லைப் பகுதியாகிய சூடட்டன்லாந்தை ஹிட்லர் இணைத்துக் கொண்ட போது கூட (1938 செப்டம்பர்) இந்த நாடுகள் அந்த இணைப்புக்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. ஹிட்லருடன் சமரசம் செய்து கொள்வதற்காக பிரிட்டனும், ஃபிரான்சும் "முனீக் ஒப்பந்தம்" என்ற பன்னாட்டு உடன்படிக்கையில் கையெழுத்திட்டன. இந்த உடன்படிக்கையின்படி, சூடட்டன்லாந்தை ஹிட்லர் கைப்பற்றிக் கொண்டதை இவ்விருநாடுகள் ஏற்றுக் கொண்டன. செக்கோல்லா வாக்கிய செயலற்று நின்றது. இந்த உடன்படிக்கை கையெழுத்தான சில மாதங்களுக்குப் பிறகு செக்கோஸ்லாவாக்கியாவின் மற்ற பகுதி முழுவதையும் ஹிட்லர் கைப்பற்றிக் கொண்டார். ஒவ்வொரு கட்டத்திலும் ஹிட்லர் மிகத் தந்திரமான வாதங்களைக் கூறினார். தம்முடைய நடவடிக்கைகளுக்குத் தடங்கல் விளைவிப்பவர்களுடன் போரிடப் போவதாக மிரட்டினார். ஒவ்வொரு கட்டத்திலுமூ அவருடைய மிரட்டல்களுக்கு மேலைநாட்டு மக்களாட்சிகள் கோழைத்தனமாக அடிபணிந்தன.
எனினும் போலந்து நாடு ஹிட்லரின் அடுத்தத் தாக்குதலுக்கு இலக்கானபோது, இங்கிலாந்தும், ஃபிரான்சும் போலந்தைப் பாதுகாக்க உறுதி பூண்டன. ஹிட்லர் முதலில் ரஷியச் சர்வாதிகாரி ஸ்டாலினுடன் ஓர் "ஆக்கிரமிப்பு தவிர்ப்பு" ஒப்பந்தம் செய்து கொண்டார். (உண்மையில் இது ஓர் ஆக்கிரமிப்புக் கூட்டணி ஒப்பந்தமேயாகும். இந்த ஒப்பந்தப்படி, போலந்து நாட்டைத் தங்களுக்குள் பங்கு போட்டுக் கொள்ள இரு சசர்வாதிகாரிகளும் இரகசிய உடன்பாடு செய்து கொண்டனர்) இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஹிட்லர் முதலில் தமக்கு தற்காப்புத் தேடிக் கொண்டார். இந்த ஒப்பந்தம் ஏற்பட்ட ஒன்பது நாட்களுக்குப் பிறகு போலந்தை ஹிட்லர் தாக்கினார்.
அதற்கு 16 நாட்களுக்குப் பின்பு சோவியத் ரஷியாவும் போலந்து மீது படையெடுத்தது- ஜெர்மனி மீது இங்கிலாந்துமூ, ஃபிரான்சும் போர்ப் பிரகடனம் செய்த போதிலும், போலந்து விரைவிலேயே தோற்கடிக்கப்பட்டது.
ஹிட்லருக்குப் பெருதூத வெற்றிகள் கிடைத்து 1940 ஆம் ஆண்டில் ஆகும். அந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஹிட்லரின் இராணுவம் டென்மார்க்கையும், நார்வேயையும் விழுங்கியது. மே மாதத்தில், ஹாலந்து, பெல்ஜியம், வக்சம்பர்க் ஆகிய நாடுகள் அதன் வசமாயின. ஜூன் மாதத்தில் ஃபிரான்ஸ் சமரசம் செய்து கொண்டு சரணடைந்தது- அதே ஆண்டின் பிற்பகுதியில் பிரிட்டன் மீது ஜெர்மனி தொடர்ச்சியான விமானத் தாக்குதல்களைத் தொகுத்தது. "பிரிட்டன் சண்டை" (Battle of Britain) எனப் பெயர் பெற்ற இந்தப் போரைப் பிரிட்டன் அஞ்சா நெஞ்சுடன் எதிர்த்துபூ சமாளித்தது. அதன் பின் இங்கிலாந்து மீது ஒரு பெரும் படையெடுப்பைத் தொடுக்க ஹிட்லர் இயலாமலே போயிற்று.
1941 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கிரீசையும் யூகோஸ்லாவியாவையும் ஹிட்லரின் படைகள் வெற்றி கொண்டன. ரஷியாவுடன் செய்து கொண்ட "ஆக்கிரமிப்பு தவிர்ப்பு " ஒப்பந்தத்தை ஹிட்லர் கிழித்தெறிந்து விட்டு ரஷியாவையும் தாக்கினார். சோவியத் ரஷியாவின் பெருமளவுப் பகுதியை ஹிட்லரின் இராணுவம் கைப்பற்றியது. ஆனால், குளிர்காலம் தொடங்குவதற்கு முன்னர் ரஷியப் படைகளை முற்றிலுமாகத் தோற்கடிக்க ஹிட்லரின் இராணுவத்தால் முடியவில்லை. ஹிட்லர் இப்போது இங்கிலாந்து, ரஷியா ஆகிய இரு நாடுகளுடன் ஒரே சமயத்தில் போர் புரிந்து கொண்டே 1941 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் அமெரிக்காவுக்குச் சொந்தமான "முத்துத் துறைமுகம்" (Peart Harbour) என்னும் கடற்படைத் தளத்தை ஜப்பானியர் தாக்கிய சில நாட்களுக்குப் பிறகு அமெரிக்க மீது போர்ப் பிரகடனம் செய்தார்.
1942 ஆம் ஆண்டு மத்தியில், உலக வரலாற்றில் எந்த ஒரு நாடும், எந்த ஒரு சமயத்திலும் ஆதிக்கம் செலுத்தியிராத மிகப் பெருமளவு ஐரோப்பியப் பகுதி ஜெர்மனியின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. இது தவிர வட ஆஃப்ரிக்கா முழுவதிலுமூ அது ஆட்சி செலுத்தியது. 1942 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், எகிப்தில் நடந்த எல் அலமைன் போரிலும், ரஷியாவில் ஸ்டாலின் கிராடுப் போரிலும் ஜெர்மனி தோல்வியடைந்தது. —4ர்மனிக்கு ஏற்பட்ட தோல்விகள், உலகப் போரில் ஒரு திருப்பு முனையாக அமைந்தன. இத்தோல்விகளுக்குப் பிறகு ஜெர்மன் இராணுவத்தின் வெற்றி வாய்ப்புக்கள் படிப்படியாகச் சரியலாயின. ஜெர்மனியின் இறுதித் தோல்வி உறுதியாயிற்று. எனினும், ஹிட்லர் சரணடையத் தயாராக இல்லை. ஸ்டாலின்கிராடுத் தோல்விக்குப் பறிகு ஜெர்மன் படைகளுக்குப் பயங்கரமான சேதங்கள் ஏற்பட்ட போதிலும், மேலும் ஈராண்டுகள் ஜெர்மனி தொடர்நத் சண்டையை நீடித்தது. 1945 ஆம் ஆண்டு வசந்த காலத்தில் கசப்பான முடிவு ஏற்பட்டது. ஏப்ரல் 30 ஆம் தேதியன்று பெர்லினின் ஹிட்லர் தற்கொலை செய்து கொண்டார். அதற்கு ஏழு நாட்களுக்குப் பிறகு, ஜெர்மனி சரணடைந்தது.
ஹிட்லர் அதிகாரத்திலிருந்த ஆண்டுகளில் வரலாறு கண்டிராத கொடிய இனப்படுகொலைக் கொள்கையைக் கையாண்டார். அவர் கொடூரமான இனவெறியராக இருந்தார். முகூகியமாக, யூதர்களிடம் தீவிரமான பகையுணர்வுடன் நடந்து கொண்டார். உலகிலுள்ள யூதர் ஒவ்வொருவரையும் கொல்வதே தமது குறிக்கோள் என்று பகிரங்கமாக அறிவித்தார். அவரது ஆட்சியின்போது, பெரிய நச்சுவாயு அறைகளைக் கொண்ட ஏராளமான படுகொலை முகாம்களை நாஜிகள் ஏற்படுத்தினர். ஹிட்லர் கைப்பற்றிய நாடுகளிலிருந்து கூட ஏராளமான ஆண்களையும், பெண்களையும், குழந்தைகளையும் பிடித்து, இந்த நச்சுவாயு அறைகளில் அடைத்துக் கொள்வதற்காக மாட்டு உந்துகளில் அனுப்பி வைத்தனர். சில ஆண்டுகளிலேயே இந்த முறையில் 60,00,000 யூதர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
ஹிட்லர் பலி வாங்கியது யூதர்களை மட்டுமன்று, அவரது ஆட்சிக் காலத்தின்போது கண்க்கற்ற ரஷியர்களும், நாடோடிகளும்கூடப் படுகொலை செய்யப் பட்டனர். இவர்கள் தவிர தாழ்ந்த இனத்தவர் என்றோ, அரசுக்கு எதிரிகள் என்றோ கருதப்பட்ட ஏராளமானோரும் கொல்லப்பட்டனர். இந்தப் படுகொலைகள் வெறும் ஆத்திர உணர்ச்சியாலோ, போரில் ஏற்பட்ட மனக் குமுறலினாலோ செய்யப்பட்டவை என எண்ணிவிடலாகாது. ஹிட்லரின் மரணமுகாம்கள் பெரிய வாணிக நிறுவனங்களைப் போன்று, கவனமாகத் திட்டமிட்டு அமைக்கப்பட்டன. கொலை செய்யப்படுபவர்களின் விவரங்கள் பதிவேடுகளில் குறித்து வைக்கப்பட்டன. ஒவ்வொரு முகாம்களிலும் இத்தனை பேர் கொல்லப்பட வேண்டும் என்று இலக்குகள் நிருணயிக்கப்பட்டன. கொலையுண்டவர்களின் உடல்கள் சோதனையிடப்பட்டு அவற்றின் தங்கப்பற்களும், திருமண மோதிரங்களும் கொள்ளையிடப்பட்டன. பலியானவர்களில் பலருடைய உடல்கள் சோப்பு தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டன. இந்தப் படுகொலைத் திட்டத்தைச் செயற்படுத்துவதில் ஹிட்லர் எத்துணை தீவிரம் காட்டினார் என்பதற்கு ஒரு சான்று கூறலாம். போரின் இறுதி நாட்களில் ஜெர்மனியில் உள்நாட்டுப் பயன்பாட்டுக்கும், இராணுவத்தின் பயன் பாட்டுக்கும் எரிபொருள் பற்றாக்குறையாக இருந்தபோதிலும், மரண முகாம்களுக்கு ஆட்களை மாட்டு உந்துகளில் கொண்டு செல்வது தடங்கலின்றி நடைபெற்றுக் கொண்டிருக்க வேண்டும் என்று ஹிட்லர் ஆணையிட்டிருந்தார்.
பல காரணங்களுக்காக, ஹிட்லரின் புகழ் நீடிக்கும் எனத் தோன்றுகிறது. முதலாவதாக, உலக வரலாற்றிலே மிகக் கொடிய மனிதராக ஹிட்லர் கருதப்படுகிறார். ஹிட்லரின் கொடுஞ்செயல்களுடன் ஒப்பிடும்போது, ரோமப் பேரரசன் நீரோ, ரலிகுலா போன்ற கொடியவர்களின் கொடுமை மிக அற்பமானதேயாகும். எனினும், அவர்கள் கொடுமையல் சின்னங்களாக 20 நூற்றாண்டுகளாக நினைவு கூறப்படுகிறார்கள். அப்படியானால், உலக வரலாற்றில் மகாக் கொடியவனாக ஒருமனதாக் கருதப்படும் ஹிட்லர் மேலும் பலப்பல நூற்றாண்டுகள்வரை பெயர் பெற்றிருப்பார் என்று ஊகிக்கலாம். உலகின் மிகப் பெரிய போராகிய இரண்டாம் உலகப் போர் மூள்வதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் என்ற முறையிலும் ஹிட்லரின் பெயர் நிலை பெற்றிருக்கும். இன்று அணு ஆயுதங்கள் தயாரிக்கப் பட்டு வருவதால் எதிர்காலத்தில் இரண்டாம் உலகப் போரைப் போன்ற பேரளவுப் போர்கள் மூள்வதற்குப் பெரும்பாலும் வாய்ப்பில்லை. எனவே, இப்போதிருந்து ஈராயிரம் அல்லது மூவாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னருங்கூட உலக வரலாற்றில் மிகப் பெரிய நிகழ்ச்சியாக இரண்டாம் உலகப் போர்தான் கருதப்படும்.

ஹிட்லரின் வரலாறு முழுவதுமே நம்பமுடியாததாகவும், சுவையானதாகவும் அமைந்திருக்கிறது. இந்தக் காரணத்தினாலும், ஹிட்லரின் புகழ் நீடிக்கும். ஹிட்லர் ஓர் அயல்நாட்டினர் (அவர் பிறந்தது ஆஸ்திரியாவில், ஜெர்மனியில் அன்று). அவருக்கு அரசியல் அனுபவமோ, பணபலமோ, அரசியல் தொடர்புகளோ இருக்கவில்லை. அப்படியிருந்தும், பதினான்கே ஆண்டுகளுக்குள் அவர் ஒரு பெரிய உலக வல்லரசின் தலைவராக ஆனார் என்றால் அது உண்மையிலேயே வியப்பளிக்கிறது. ஹிட்லர் வியக்கத் தக்க நாவன்மை பெற்றிருந்தார். உலக வரலாற்றிலே மிகச் சிறந்த நாவன்மை வாய்ந்தவராக ஹிட்லரைக் கருதலாம். அந்த நாவன்மையின் துணையால்தான் அவர் தம் வழியில் மக்களைச் செயல்படத் தூண்டினார். இறுதியாக அதிகாரத்தைப் பிடித்ததுமூ அந்த கதிகாரத்தை அவர் கொடூரமான வழிகளுக்குப் பயன்படுத்தினார். இதனை அத்துணை விரைவில் மறந்துவிட முடியாது.
உலக வரலாற்றில் ஹிட்லரைப் போல் தமது சொந்தத் தலைமுறையினர் மீது பெரும்பாதிப்பை ஏற்படுத்தியவர் வேறு எவரும் இல்லை. அவரது தூண்டுதலினால் ஏற்பட்ட உலகப் போரிலும் நாஜி மரண முகாம்களிலும் கோடிக்கணக்கான மக்கள் பலியானது ஒருபுறமிருக்க, போரின் விளைவாக பலகோடி மக்கள் வீடிழந்தார்கள் அல்லது அவர்களது வாழ்க்கை சீர் குலைந்து போயிற்று.
ஹிட்லரின் செல்வாக்கு பற்றிய எந்த ஒரு மதிப்பீடும் வேறு இரு அம்சங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும். முதலாவதாக, ஹிட்லருடைய தலைமையின் கீழ் நடந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் அவர் தோன்றியிராதிருந்தால், நிகழ்ந்திருக்கவே செய்யாது. (இந்த வகையில், சார்லஸ் டார்வின், சைமன் பொலீவார் ஆகியோரிடமிருந்து அவர் முற்றிலும் வேறுபடுகிறார்) ஜெர்மனியிலும், ஐரோப்பாவிலும் நிலவிய நிலைமை ஹிட்லருக்கு சாதகமாக அமைந்தது என்பது உண்மைதான். எடுத்துக்காட்டாக, அவரது இராணுவ வெறியூட்டும் முழுக்கங்களும், யூதர் எதிர்ப்பு உரைகளும் கேட்போரைப் பிணித்தன. எனினும், ஹிட்லர் செயற்படுத்திய தீவிரமான கொள்கைகளைத் தங்கள் அரசு பின்பற்றியிருக்க வேண்டுமென 1920களிலோ, 1930களிலோ பெரும்பாலான ஜெர்மானியர்கள் விரும்பினார்கள் என்று கருதுவதற்கு ஆதாரம் ஏதுமில்லை. ஹிட்லர் செய்ததை மற்ற ஜெர்மன் தலைவர்களும் செய்திருப்பார்கள் என்று கருதுவதற்கும் இடமில்லை. ஹிட்லர் காலத்து நிகழ்ச்சிகளை, புற நோக்கர்கள் எவரும் ஏறத்தாழக்கூட ஊகித்துக் கூறியதில்லை.

இரண்டாவதாக நாசி இயக்கம் முழுவதிலுமே தனியொரு மனிதரே ஆதிக்கம் செலுத்தினார். பொதுவுடைமையின் எழுச்சியில் மார்க்ஸ், லெனின், ஸ்டாலின் ஆகியோரும் வேறு பல தலைவர்களும் பெரும் பங்கு கொண்டார்கள். ஆனால், ஹிட்லருக்கு முன்பும், அவருக்குப் பின்பும் நாஜி சமதருமத்தற்குத் தனிச் சிறப்பு வாய்ந்த தலைவர் எவரும் கிடைக்கவில்லை. ஹிட்லர்தான் நாஜிகளை அதிகார பீடத்தில் ஏற்றி வைத்தார். நாஜிகள் ஆட்சியில் நீடித்த காலம் முழுவதிலும் தலைமைப் பதவியைத் தாமே வைத்துக் கொண்டிருந்தார். ஹிட்லர் இறந்ததும், அவருடைய நாஜிக் கட்சியும் அது தலைமை ஏற்றிருந்த அரசும் மாண்டு மடிந்தன.
ஆனால், ஹிட்லருடைய செல்வாக்கு அவரது தலைமுறையின் மீது மிகப் பெருமளவில் விளைவுகளை ஏற்படுத்தியிருந்த போதிலும், எதிர்காலத்தின் போது அவரது செயல்களின் விளைவுகள் மிகக் குறைவாகவே இருக்கும் எனத் தோன்றுகிறது. ஹிட்லர் தமது குறிக்கோள்களில் ஒன்றைக் கூட அடையாமல் படுதோல்வியடைந்தார். பிந்திய தலைமுறையினர் மீது அவரது செயல்களின் விளைவு ஏதேனும் இருக்குமானால், அது அவர் கருதியதற்கு நேர்மாறானதாகவே இருக்கும் எனலாம். ஜெர்மனியின் ஆதிக்கத்தையும் நிலப்பரப்பையும் விரிவுப்படுத்த ஹிட்லர் விரும்பினார். அவர் பெருமளவு நிலப்பகுதிகளை வெற்றி கண்ட போதிலும், அந்த வெற்றிகள் அனைத்தையும் அற்ப ஆயுளில் முடிந்தன. இன்று கிழக்கு ஜெர்மனியும், மேற்கு ஜெர்மனியும் ஒருங்கிணைந்தால் கூட, ஹிட்லர் ஆட்சியைப் பிடித்தபோது ஜெர்மன் குடியரசில் அடங்கியிருந்த நிலப்பரப்பைவிடக் குறைவான நிலப்பகுதியே அடங்கியிருக்கும். உலகிலிருந்து யூதர்களை அடியோடு அழித்து விட வேண்டும் என்று ஹிட்லர் வெறிகொண்டு அலைந்தார். ஆயினும் அவர் பதவி ஏற்ற பின்பு 15 ஆண்டுகளிலேயே 2,000 ஆண்டுகளில் இல்லாத வகையில், முதன் முதலாகச் சுதந்திரமான யூத நாடு அமைந்தது. பொதுவுடைமையையும், ரஷியாவையும் ஹிட்லர் கடுமையாக வெறுத்தார். எனினும், அவர் இறந்தபோது ஓரளவுக்கு அவர் தொடங்கிய உலகப் போரின் விளைவாக, கிழக்கு ஐரோப்பாவின் பெரும்பகுதி மீது ரஷியர்கள் தங்கள் கட்டுப்பாட்டை விரிவுப்படுத்தினார்கள். உலகெங்கும் பொதுவுடமையின் செல்வாக்கு பெருமளவுக்குப் பெருகிறது. ஹிட்லர் மக்களாட்சியை இழிவாகக் கருதினார். ஜெர்மனியில் மட்டுமின்றி, மற்ற நாடுகளிலும் மக்களாட்சியை அடியோடு ஒழித்துவிட எண்ணினார். ஆனால், இன்று மேற்கு ஜெர்மனியில் மக்களாட்சி சிறப்பாக செயற்பட்டு வருகிறது. ஹிட்லர் காலத்துத் தலைமுறையைச் சார்ந்த ஜெர்மானியர்களைவிட இன்றைய ஜெர்மானியர்கள் சர்வாதிகார ஆட்சியைக் கடுமையாக வெறுக்கிறார்கள்.
ஹிட்லர் தாம் வாழ்ந்த காலத்தில் அளவற்ற செல்வாக்கினைச் செலுத்தியதாலும், வருங்காலத் தலைமுறையின் மீது அவருக்கு எவ்வித செல்வாக்கும் இல்லாமற் போனதாலும் ஏற்பட்ட விசித்திரமான கூட்டிணைவின் காரணமாக விளைந்ததென்ன? ஹிட்லர் தம் காலத்தில் மிகப்பெரிய செல்வாக்கைக் கொண்டிருந்தார். அதற்காக, இந்தப் பட்டியலில் அவருக்கு உயர்ந்த இடம் அளிக்கப்பட வேண்டும். ஆனால், ஷி-ஹூவாங்-தை, அகஸ்டஸ் சீசர், ஜெங்கிஸ்கான் போன்றோரின் செல்வாக்கு அவர்களுக்குப் பின் பல நூற்றாண்டுகள் நீடித்தமையால், ஹிட்லருக்கு நிச்சயமாக அவர்களுக்கு பின்னரே இடமளிக்க வேண்டும். ஹிட்லருக்கு நெருக்கமானவர்களாக நெப்போலியனையும், மகா அலெக்சாந்தரையும் கூறலாம். ஒரு குறுகிய காலத்தில் இவ்விருவரையும் விட மிகப் பெருமளவில் ஹிட்லர் உலக அமைதியைச் சீர்குலைத்தார். அந்த இருவரின் செல்வாக்கு நீண்டகாலம் நீடித்ததன் காரணமாக, அவர்களுக்குச் சற்றுப் பின்னால் ஹிட்லருக்கு இடமளிக்கப்பட்டிருக்கிறது.

By,
TamilReader

Best Blogger Gadgets

1 கருத்து :

ராஜ நடராஜன் சொன்னது…

சரித்திர தகவல்களை அழகாக தொடுத்திருக்கிறீர்கள்.

கருத்துரையிடுக