மருதையன்
“”பதில் கிடைக்காத கேள்விகள் பல எனக்குள் வாழ்கின்றன தேவதூஷணமாகிவிடும் என்பதால் அவற்றை வெளியிட அஞ்சுகிறேன் ஒருவேளை கடவுள் இருந்தால் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் என் சிந்னைகளை சொர்க்கத்தை நோக்கி எழுப்ப முயல்கிறேன் அங்கோ தண்டிக்கும் வெறுமை அந்தச் சிந்தனைகள் கூரிய கத்திகளாய்த் திரும்ப வந்து என் இதயத்தைக் கிழிக்கின்றன தேவன் என்னை நேசிப்பதாகச் சொல்கிறார்கள் இருப்பினும் எதார்த்தத்தில் இருளும் உணர்ச்சியின்மையும் வெறுமையும் என்னுள் நிறைந்து மேலோங்கியிருப்பதால் எதுவும் என் ஆன்மாவைத் தொடுவதில்லை பரிசுத்த ஆவியின் அழைப்பை ஏற்று குருட்டுத்தனமாக என்னை ஒப்புக்கொடுத்ததன் மூலம் தவறு செய்து விட்டேனோ?”
“”என்னுள் ஓங்கி நிறைந்திருக்கும் வெறுமை காரணமாக நான் பார்க்கிறேன், ஆனால் கவனிப்பதில்லை கேட்கிறேன், ஆனால் காது கொடுப்பதில்லை என் நாக்குதான் அசைகிறது, நான் பேசுவதில்லை.”
“”என்னை நானே எதற்காக வருத்திக் கொள்கிறேன்? தேவன் இல்லையெனும்போது ஆன்மாவும் இருக்க முடியாது ஆன்மா இல்லையென்றால் யேசுவே நீரும் உண்மையல்ல.”
துயரம் ததும்பும் இந்தச் சொற்கள் “அன்னை’ தெரசாவின் இதயத்திலிருந்து கசிந்தவை.
1949இல் கல்கத்தாவில் மிஷனரிஸ் ஆஃப் சாரிட்டி என்ற அமைப்பை அவர் தொடங்கியது முதல் 1997 இல் மரிக்கும் வரையில் இடையறாது அவரது இதயத்தை அரித்துக் கொண்டிருந்த “அவிசுவாசத்தை’ எழுத்து பூர்வமாகவே பதிவு செய்திருக்கிறார் தெரசா. மிஷனரீஸ் ஆஃப் சாரிட்டீஸின் மூத்த உறுப்பனரும், தெரசாவுக்கு “புனிதர்’ பட்டம் வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்னெடுத்து வருபவருமான அருட்தந்தை ப்ரியன் கலோடிஜெக் வெளியிட்டுள்ள “அன்னை தெரசாவா என் ஒளியாய் இரு’ என்ற நூலில் தனது நம்பிக்கையின்மையை வெளியிடும் வண்ணம் தெரசா எழுதிய சுமார் 40 இரகசியக் கடிதங்கள் தொகுக்கப்பட்டிருக்கின்றன.
அதிக முக்கியத்துவமின்றி சில ஆங்கில நாளேடுகளில் மட்டும் தெரசா குறித்த இச்செய்தி வெளியாகியிருக்கிறது. தமிழ் ஊடகங்களில் இது பரவலாக வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இயேசுவுக்கு அடுத்தபடியாக ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையின் மதிக்கத்தக்க குறியீடாகவும், மத நம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்ட மனிதாபிமானத்தின் சின்னமாகவும், ஐஸ்வர்யா ராய் முதல் அமெரிக்க அதிபர் வரை அனைவரும் போற்றிப் பணியும் தெய்வமாகவும் வனைந்து உருவாக்கப்பட்ட தெரசா என்ற திருஉரு, திடீரென்று நொறுங்கிச் சரிவதை ஆளும் வர்க்கங்கள் விரும்பாததில் வியப்பில்லை.
இக்கடிதங்களை ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையே வெளியிட்டிருப்பதால் இதை விசுவாசிகள் யாரும் “நாத்திகர்களின் சதி’ என்று கூறி மறுக்க முடியாது. தனது மரணத்துக்குப் பிறகு இக்கடிதங்களை அழித்துவிட வேண்டுமென்று தெரசா கோரியிருந்ததையும் மீறி இவை வெளியிடப்படக் காரணம் என்னவென்று தெரியவில்லை. சிலுவையின் முன்புறத்தில் இயேசுவையும் பின்புறத்தில் உண்மையையும் அறைந்து வைத்திருக்கும் திருச்சபை, உண்மையின் பால் கொண்ட காதலால் இவற்றை வெளியிட்டிருக்காது என்பதை மட்டும் நாம் நிச்சயமாகக் கூறலாம்.
“”இக்கடிதங்களின் காரணமாகப் “புனிதர்’ பட்டம் பெறும் தகுதியை தெரசா இழக்க மாட்டார்” என்று கூறுகிறது வாடிகன். “”இயேசுவும் கூட சிலுவையில் மரிக்குமுன் தன்னைக் கைவிடப்பட்டவராகவே உணர்ந்தார்….. தெரசாவிடம் நாம் காணும் “விசுவாசம் நிரம்பிய மன உறுதி’ என்பது ஒரு காப்பியச் சிறப்பு மிக்க ஆன்மீக வீரம்” என்கிறார் இந்நூலாசிரியர் கலோடிஜெக்.
ஆன்மீகத் துயரம் என்று கத்தோலிக்க குருமார்களால் வருணிக்கப்படும் தெரசாவின் இந்த உளவியல் வேதனை குறித்து பொருள் முதல்வாதிகளாகிய நாம் மகிழவும் தேவையில்லை, வருந்தவும் தேவையில்லை. தெரசாவிற்குள் “தேவன்’ இறங்கியதெப்படி, வெளியேறியதெப்படி என்பதைப் புரிந்து கொள்வதுதான் நம் அக்கறை.
பின்தங்கிய நாடான அல்பேனியாவின் விவசாயக் குடும்பமொன்றில் பிறந்த தெரசா, பரிதாபத்துக்குரிய கன்னியா ஸ்திரீகளின் கூட்டத்தில் ஒருவராக இந்தியாவிற்கு வருகிறார். 1929 முதல் கல்கத்தாவில் பள்ளி ஆசிரியையாகப் பணியாற்றி வந்த தெரசா, 1946இல் ஓய்வுக்காக டார்ஜிலிங் சென்றபோதுதான் அவரில் அந்த “அற்புதம்’ நிகழ்ந்தது.
“”இயேசு என்முன் தோன்றினார். “நீ திறமைகள் ஏதுமற்ற பலவீனமான பாவி என்பதை நான் அறிவேன். அதனால்தான் என்னுடைய புகழைப் பரப்ப உன்னைப் பயன்படுத்த விரும்புகிறேன். நீ மறுப்பாயா?’ என்று கேட்டார். எனவே எனக்கு இந்த ஆசிரியைப் பணி வேண்டாம். நான் நிராதரவான ஆன்மாக்களுக்கு சேவை செய்ய விரும்புகிறேன்” என்று தனது திருச்சபை மேலிடத்திடம் கோரினார், தெரசா. “ஒரு உண்மையான விசுவாசி’ கைவசம் இருப்பதைக் கண்டுகொண்ட ஆர்ச் பிஷப், வாடிகனின் அனுமதியைத் தெரசாவுக்குப் பெற்றுத் தந்தார். 1948இல் கல்கத்தாவில் தொடங்கியது தெரசாவின் “மிஷனரீஸ் ஆஃப் சாரிட்டி.’
இரண்டே மாதங்களில் தெரசாவின் வெறுமையும் விசுவாசமின்மையும் தொடங்கி விட்டன. துன்பங்களற்ற வசதியான பள்ளி ஆசிரியை வாழ்க்கையை 16 ஆண்டு காலம் வாழ்ந்து விட்டு திடீரென தொழுநோயாளிகள் மற்றும் ஆதரவற்ற ஏழைகளின் “பொந்துக்குள்’ வீழ்ந்ததனால் ஏற்பட்ட அதிர்ச்சியும், இந்தச் சூழலை வலியத் தருவித்துக் கொண்டதனால் தன்மீதே தோன்றியிருக்கக் கூடிய வெறுப்பும் தெரசாவிடம் “விசுவாசமின்மை’ துவங்குவதற்குக் காரணமாக இருந்திருக்கலாம்.
“”பரிசுத்த ஆவியின் அழைப்பை ஏற்று குருட்டுத்தனமாக என்னை ஒப்புக்கொடுத்ததன் மூலம் தவறு செய்து விட்டேனோ?” என்று பின்னாளில் அவர் எழுதும் கடிதம் அந்த மனக்காயத்தின் ஆழத்தைக் காட்டுகிறது.
தமது விருப்பங்களை வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்ள இயலாமல் திருச்சபைச் சூழலில் நிரப்பப்பட்டிருக்கும் போலி ஒழுக்கப் புகைமூட்டம், தவறுகளை வெளிப்படையாகப் பரிசீலனைக்கு உட்படுத்துவதைத் தந்திரமாகத் தவிர்க்கும் பாவமன்னிப்பு முறை, அம்பலப்படாத தனது சுய ஆளுமையைப் பாதுகாத்துக் கொள்ளும் பதற்றம், நெஞ்சில் ஆழப்பதிய வைக்கப்பட்டிருக்கும் தேவதூஷணம் குறித்த அச்சம், ஊன்றி நிற்பதற்குத் தேவையான விசுவாசமோ, திரும்பச் செல்வதற்கான துணிவோ இல்லாததால் தோன்றக்கூடிய விரக்தி.. இத்தகைய சூழலில் சிக்கிக்கொண்ட ஒரு முதிர்கன்னி இதுதான் 1949இன் தெரசா.
தனது வெறுமை குறித்தும், நம்பிக்கையின்மை குறித்தும் தனக்கு உயர் தகுதியில் உள்ள அருட்தந்தைகளுக்கு தெரசா இடையறாமல் கடிதம் எழுதியிருக்கிறார் எனினும், பரிதாபத்துக்குரிய இந்தப் பெண்மணியை விடுவிக்க திருச்சபை முயலவில்லை. மாறாக, அவரைச் சிலுவையில் அறைவதற்கான ஆணியைத்தான் தயார் செய்தது. 1969இல் கத்தோலிக்க மத வெறியனான மால்கம் மக்கரிட்ஜ் என்ற பிரிட்டிஷ் செய்தியாளர் தெரசாவைப் பற்றிய செய்திப் படம் ஒன்றைத் தயாரித்தார். பி.பி.சி இதனை ஒளிபரப்பியது. இருட்டறையில் விளக்குகள் இல்லாமலேயே ஒரு காட்சி பதிவாகியிருப்பதாகவும், அது தெரசா நிகழ்த்திய அற்புதம் என்றும் கூவினார் மக்கரிட்ஜ். தனது விசுவாசமின்மை குறித்து கடிதங்கள் அனுப்பிக் கொண்டிருந்த தெரசாவும், “தானே அடிக்கடி பரிசுத்த ஆவியுடன் பேசுவதாக’ அந்தப்படத்தில் பேட்டியளித்தார்.
1960களின் பிற்பகுதியில் அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் எழுந்த வியத்நாம் போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் ஏகாதிபத்தியவாதிகளைத் தனிமைப்படுத்தியிருந்தன. மூன்றாம் உலக ஏழைகளுக்கு உதவும் ஒரு கருணை முகத்தை அவர்கள் காட்டவேண்டியிருந்தது. இப்படி உருவாக்கப்பட்டதுதான் தெரசாவின் ஒளிவட்டம். நோபெல் சமாதானப் பரிசு உள்ளிட்ட பரிசுகளை அவர் மீது பொழிந்தது ஏகாதிபத்தியம். தாட்சர், டயானா, ரீகன், பல்வேறு நாடுகளின் பிரதமர்கள், அதிபர்கள்.. என்று தரிசனத்துக்கு வரும் பிரமுகர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. மெலிந்து சுருங்கிய தோற்றமும், வெள்ளைக் கைத்தறி ஆடையும், ஆதரவற்றோர் சேவையும் தெரசாவை மதச்சார்பு கடந்த ஒரு புனிதத் திரு உருவாக ஏகாதிபத்தியங்கள் முன்நிறுத்துவதற்குப் பயன்பட்டன.
ஆனால் உலகமே கொண்டாடிய அவரது சேவையோ, விருதுகளோ, பணிந்து வணங்கிய பல நாட்டு அதிபர்களோ, இவையனைத்தும் வழங்கியிருக்கக் கூடிய மனநிறைவோ தன்னிடம் இல்லை என்கின்றன தெரசாவின் கடிதங்கள். தெரசாவின் இறைநம்பிக்கை ஏன் தகரவேண்டும்? விசுவாசமில்லாத நிலையிலும் அவர் காட்டிய மன உறுதியை வியக்கிறார் கலோடிஜெக். அவருடைய விசுவாசத்தைப் பறித்தது எது? விசுவாசம் தளர்ந்த பின்னரும் அவருடைய மன உறுதியைத் தாங்கி நின்றது எது?
மாபெரும் தத்துவஞானிகளும், விஞ்ஞானிகளும்கூட “கடவுள்’ தோற்றுவிக்கும் இத்தகைய மனத்துயருக்கு ஆட்படுவதுண்டு. அது அறிவுத்தேடல் தோற்றுவிக்கும் மனத்துயர். அத்தகைய அறிவுத்தேடலின் சாயல் கூட தெரசாவின் கடிதங்களில் இல்லை. அவர் அறிவின் சாயல் கூட எஞ்சியிராத வண்ணம் கத்தோலிக்கத் திருச்சபையின் உலைக்களத்தில் உருக்கி அடிக்கப்பட்ட அடிமை.
நீதியற்ற உலகின் நீதியாய், இரக்கமற்ற உலகின் இதயமாய் கடவுளைச் சரணடையும் மக்களின் மத உணர்வு கூட “”கடவுளே உனக்குக் கண்ணில்லையா” என்று குமுறி நம்பிக்கை இழக்கும். தெரசாவைச் சூழ்ந்திருந்த ஏழைகளும் நோயுற்றவர்களும் அநாதைகளும் வடித்த கண்ணீர் “தேவன் இருக்கிறானா’ என்ற கேள்வியை அவருக்குள் எழுப்பவில்லை.
“”ஏழ்மையைச் சகித்துக்கொள்வதும் கிறிஸ்துவின் துயரத்தோடு அதனைப் பகிர்ந்து கொள்வதும் மிகவும் அழகானது. ஏழை மக்களின் துயரம் இந்த உலகுக்கு பெரிதும் உதவுகிறது என்று நான் கருதுகிறேன்” என்று 1981இல் ஒரு பேட்டியில் குறிப்பட்டார் தெரசா. மிஷனரீஸ் ஆஃப் சாரிட்டி அமைப்பின் சகோதரி நிர்மலா இதை மேலும் தெளிவுபடுத்துகிறார், “”ஏழ்மை என்பது இருக்கத்தான் செய்யும். தங்களுடைய ஏழ்மையை சரியான கோணத்தில் ஏழைகள் புரிந்து கொள்ளவேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம்”. வலியால் துடித்துக் கொண்டிருந்த ஒரு புற்றுநோயாளியிடம் தெரசா பேசுவது படமாகப் பதிவாகியிருக்கிறது, “”சிலுவையில் இயேசு துன்புற்றதைப் போல நீ துன்புறுகிறாய். இயேசு உன்னை முத்தமிடுகிறார் என்று நினைக்கிறேன்” என்கிறார் தெரசா. ஆனால், தான் நோய்வாய்ப்படும்போது இயேசுவால் முத்தமிடப்படுவதை தெரசா விரும்பவில்லை. மன உறுத்தல் ஏதுமின்றி அமெரிக்காவில் மருத்துவம் பார்த்துக் கொண்டார்.
தெரசாவின் இல்லத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக உலகெங்கும் ஒரு பொதுக்கருத்து உருவாக்கப்பட்டுள்ளது. இது ஒரு வடிகட்டிய பொய். அங்கே வலியால் துடிப்பவர்களுக்கு வலி நிவாரணி மருந்து கூடத் தரப்படுவதில்லை என்ற உண்மையை பல மருத்துவர்கள் அம்பலப்படுத்தியிருக்கின்றனர். கல்கத்தா இல்லத்தைக் காட்டி தெரசா உலகெங்கும் வசூலித்த பல நூறு கோடி ரூபாய்களில் ஒரு மருத்துவமனை கூட அங்கே கட்டப்படவில்லை. மாறாக, 100க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒயினும் கறியும் புழங்கும் 500 செமினரிகளை அமைத்திருக்கிறார் தெரசா.
இந்த இரக்கமின்மை அவரது தனிப்பட்ட குணாதிசயம் அல்ல. இதுவே ஒரு சித்தாந்தமாக, மதக் கோட்பாடாக அவர் சிந்தனையில் பதிந்திருக்கிறது. இத்தகைய சிந்தனையின் மீதான விசுவாசமின்மை எதையும் அவரது கடிதங்கள் எழுப்பவில்லை என்பதும் கவனத்துக்குரியது.
தெரசாவை அம்பலப்படுத்தும் “நரகத்தின் தேவதை’ என்ற செய்திப்படத்தைத் தயாரித்த கிறிஸ்டோபர் ஹிட்சென்ஸ் கூறுகிறார்: “”தெரசா ஒரு வெகுளி என்றோ புத்திசாலி என்றோ நான் நினைக்கவில்லை. சிக்கலான மனப்பாங்கும் அவருக்குக் கிடையாது. ஆனால் ஒரு வகையான சூழ்ச்சித் தன்மை அவரிடம் இருந்தது. அவர் கத்தோலிக்க வெறி பிடித்த ஒரு கடுங்கோட்பாட்டுவாதி, ஒரு மோசடிப் பேர்வழியும் கூட” என்கிறார். தெரசாவின் மீது மதிப்புக் கொண்டவர்கள் இதனைப் படித்ததும் ஆத்திரப் படலாம். ஆனால் இக்கூற்று ஆதாரமற்றதல்ல.
ஹெய்தி நாட்டின் சர்வாதிகாரியும், அமெரிக்கக் கைக்கூலியுமான டுவாலியரை “”அற்புதமானவர். ஏழைகள் என்னமாய் அவரை நேசிக்கிறார்கள்” என்று வியந்தார் தெரசா. போபால் விஷவாயுப் படுகொலையால் பாதிக்கப்பட்ட மக்களிடம் “”இது ஒரு விபத்தாக இருக்கலாம். மன்னித்து விடுங்கள்” என்று உபதேசித்தார். பங்குச் சந்தை மோசடி மூலம் அமெரிக்க சிறுமுதலீட்டாளர்களிடமிருந்து 250 மில்லியன் டாலர் பணத்தைச் சூறையாடிய கீட்டிங் என்பவனிடமிருந்து நன்கொடை வாங்கினார் தெரசா. “”பாவப்பட்ட மக்களிடம் திருடிய பணம் தன்னிடம் தரப்பட்டால் கிறிஸ்து என்ன செய்திருப்பாரோ அதைச் செய்யுங்கள். பணத்தை மக்களிடம் திருப்பிவிடுங்கள்” என்று அமெரிக்காவிலிருந்து தெரசாவுக்குக் கடிதம் எழுதினார் அரசு வக்கீல். தெரசா பதிலளிக்கவில்லை. மாறாக, “”கீட்டிங்கின் தண்டனையை ரத்து செய்யுங்கள்” என்று நீதிபதிக்குக் கடிதமெழுதினார் தெரசா. பெண்களுக்கு மணவிலக்கு உரிமை இல்லாத அயர்லாந்தில் அது தொடர்பான வாக்கெடுப்பு நடந்தபோது “”மணவிலக்குக்கு ஆதரவாக வாக்களிப்பவர்களுக்கு தேவனிடம் மன்னிப்பே கிடையாது” என்று பிரச்சாரம் செய்தார்; அடுத்த 2 மாதங்களில் டயானாவின் மணவிலக்கை ஆதரித்து கருத்து வெளியிட்டார்.
அரசியல் அறிவற்ற பரிதாபத்துக்குரிய ஒரு கன்னியாஸ்திரீயாக தோற்றம் தந்தாலும், திருச்சபையின் ஆதரவு பெற்ற கொடுங்கோலர்களின் பக்கம்தான் தெரசா எப்போதுமே நின்றார். போராடும் மக்களின் பக்கம் தவறிக்கூட அவர் நின்றதில்லை. அறமோ நேர்மையோ இல்லாத இந்த நடவடிக்கைகள் அவரது விசுவாசிகளையே துணுக்குறச் செய்தன. ஆனால் இவையெதுவும் தெரசாவிடம் மனப்போராட்டத்தைக் கூடத் தோற்றுவிக்கவில்லை.
தெரசாவின் இதயத்தில் தேவன் இல்லையேயொழிய, ஏகாதிபத்தியங்களின் கைக்கருவியான “திருச்சபை’ உறுதியாகவே அமர்ந்திருந்தது. எனவே, திருச்சபையின் ஊழல்கள், ஒழுக்கக் கேடுகள், அறம் வழுவிய செயல்கள் எதுவும் அவருடைய இந்த ஆன்மீக நெருக்கடிக்குக் காரணமாக அமையவில்லை. பிழைப்பதற்குரிய தொழிலாக தேவ ஊழியத்தைத் தெரிவு செய்து கொண்டிருக்கும் விசுவாசமற்ற பாதிரியார்களிடமிருந்து இந்த விசயத்தில் தெரசா எந்த வகையிலும் வேறுபட்டவராக இல்லை.
தனக்கே விசுவாசமில்லாத ஒன்றின்மீது மற்றவர்களை விசுவாசம் கொள்ளச் செய்யும் மோசடியில் தெரசாவும் ஈடுபட்டிருக்கிறார். தான் இறந்த பிறகும் தன்னிடம் நிலவிய விசுவாசமின்மையை வெளியிட வேண்டாமென்ற அவரது கோரிக்கை, அவரது சிந்தனையில் ஊறியிருந்த கூச்சமற்ற போலித்தனத்தையே காட்டுகிறது.
ஆதரவற்றவர்கள் மீது அன்பு காட்டுவதற்காக அவர் தொடங்கிய சேவையே அவரது இதயத்திலிருந்து அன்பை உறிஞ்சி எடுத்துவிட்டது. ஏழ்மையை உற்பத்தி செய்யும் சமூக அமைப்பை ஒழிக்கத் துடிப்பவர்களிடம் மட்டுமே ஏழைகள் மீதான அன்பு இடையறாமல் சுரக்க முடியும். ஏழ்மையின் துயரத்தில் கிறிஸ்துவைக் காண்பவர்களால் ஏழைகளை நேசிக்க முடியாது.
கிறிஸ்துவை நேசிக்கும் பொருட்டுத்தான் தெரசா ஏழைகளை நேசித்தார். எந்த அளவுக்கு ஏழ்மையும் துயரமும் அவருக்கு உணர்ச்சியற்றவையாக ஆகத்தொடங்கினவோ, அதே அளவுக்கு கிறிஸ்துவும் அவருக்கு உணர்ச்சியற்றவரானார். ஆனால், “”விசுவாசத்தை இழக்க இழக்க, மேலும் தீவிரமான விசுவாசியாகத் தன்னை அவர் காட்டிக்கொண்டார். தன்னைக் குணமாக்கிக் கொள்ள தெரசா செய்த இந்த முயற்சி, தனக்குத் தானே அவர் வெட்டிக் கொண்ட படுகுழியை மேலும் ஆழப்படுத்தியிருக்கும்” என்கிறார் ஹிட்சென்ஸ்.
தன்னில் கிறிஸ்து இறங்கியதாக கருதிக்கொண்ட அந்த மாயக்காட்சி (Hallucination) அனுபவம் இன்னொரு முறை நிகழுமென்று தெரசா எதிர்பார்த்திருக்கக் கூடும். ஆனால் 1946இல் இருந்தது போல “திறமைகள் ஏதுமற்ற பரிதாபத்துக்குரிய முதிர்கன்னியாய்’ தெரசா இல்லையே! நிர்வாகம், நன்கொடை, விருதுகள், விமானப்பயணங்கள், தொலைக்காட்சிக் காமெராக்கள், பிரமுகர்களுடனான சந்திப்புகள் என அவரது வாழ்க்கை விரிந்து விட்டது. பொய்மை, இரட்டை வேடம், நேர்மையின்மை, அநீதியை அரவணைத்தல் என எல்லாத் தீமைகளும் அவர் இயல்பில் சேர்ந்து விட்டன.
எனினும், தெரசாவுக்குள் மிச்சமிருந்த அந்த அல்பேனிய முட்டாள் பெண் அவ்வப்போது விழித்துக் கொண்டு ஏசுவைத் தேடியிருக்கிறாள். ஆனால், தேவனைக் கதறி அழைக்கத் தேவைப்படும் கையறு நிலை தெரசாவின் வாழ்க்கையிலிருந்து அகன்று விட்டது. எவ்வளவு முயன்றும் அந்த மாயக்காட்சியை இன்னொருமுறை அவரால் தன்னில் தருவிக்க முடியவில்லை.
Best Blogger Gadgets
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக