குற்றால அருவியின் தற்போதைய நிலை- ஆய்வு


பழைய குற்றாலத்தில் நீர்வீழ்ச்சி பகுதியில், கைப்பிடி இரும்பு கம்பிகள் எல்லாம் கழன்று கிடக்கிறது. அங்குள்ள கழிவறைகள் பராமரிக்கப்படாமல் மோசமான நிலையில் உள்ளன. மின்விளக்குகள் எரியவில்லை. அதிக ஒளியை தரக்கூடிய ராட்சத விளக்குகள் பழுதடைந்து கிடக்கின்றன. பெண்கள் ஆடை மாற்ற அறை வசதிகள் இல்லை.

மெயின் அருவி அருகே கழிவுநீர் ஆற்றில் கலக்கிறது. அதிக வாகனங்கள் வருவதால் முறையான போக்குவரத்து பராமரிக்கப்படவில்லை. குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களால், பொதுமக்களுக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்படுகிறது. டாஸ்மாக் கடைகளில் பார் வசதிகள் இல்லை என்பதால், பொதுஇடங்களில் மக்கள் மது அருந்துகின்றனர்.

இவைகள் உட்பட பல குறைகளை அறிக்கையில் சுட்டிக்காட்டி இருந்தனர்.
இவற்றையெல்லாம் பரிசீலித்த நீதிபதிகள், கிருபாகரன், வைத்தியநாதன் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் நேற்று பிறப்பித்துள்ள இடைக்கால உத்தரவில் கூறியிருப்பதாவது:-

சிவபெருமானுக்கும், பார்வதிக்கும் இமயமலையில் திருமணம் நடந்தபோது, பூமியில் உள்ள அனைவரும் திருமணத்தை பார்க்க அங்கு சென்றதால், வடபகுதி கீழே தாழ்ந்தும், தென்பகுதி மேலே உயர்ந்தும் காணப்பட்டது. இதனால், அதை சரிசெய்ய அகத்திய முனிவரை தென்பகுதிக்கு சிவபெருமான் அனுப்பியதாகவும், அகத்தியர் முனிவர் வந்து அமர்ந்த இடம் குற்றாலம் என்றும், அவர் இங்கு வந்து அமர்ந்ததால், பூமி சமநிலைக்கு வந்தது என்றும் புராணக்கதைகள் கூறுகிறது.

பரிதாபத்துக்குரியது
கங்கைக்கு நிகரான புனித நீர் குற்றால அருவியில் விழுகிறது என்று திருகூடராசப்ப கவிராயர் தன்னுடைய குற்றால குறவஞ்சியில் குறிப்பிட்டுள்ளார். இப்படி வரலாற்று சிறப்புமிக்க, புனித நீர்வீழ்ச்சியான குற்றாலத்தின் தற்போதைய நிலை பரிதாபத்துக்குரியதாக உள்ளது.

குற்றாலத்தில் ஐந்தருவி உள்ளது. இந்த அருவியில் விழும் தண்ணீர் மருத்துவ குணங்கள் கொண்டது. இந்த அருவியில் குளிப்பதால் உடலுக்கு மட்டுமல்ல, மனதுக்கும் புத்துணர்ச்சியை அளிக்கிறது. இதனால், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், இந்த அருவிகளில் குளித்தால், குணமடைந்து விடுவதாகவும் நம்பப்படுகிறது.

விழித்தெழும் நேரம்

ஆனால், இந்த புனித நீர் ஓடும் ஆற்றில் கழிவுநீர் கலக்கச் செய்வது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. மேலும், அருவி நீர் மாசு அடைந்து விடக்கூடாது என்பதற்காக இந்த அருவியில் குளிப்பவர்கள் எண்ணெய், குளியல் சோப்பு, சீயக்காய் ஆகியவை பயன்படுத்த அரசு தடை விதித்து இருந்தும், இந்த பொருட்கள் எல்லாம் அருவிக்கு அருகே தாராளமாக கிடைக்கிறது. இவற்றினால், இந்த புனித நீர் மாசு அடைக்கிறது. நீர் இல்லாமல், மனிதர்கள், விலங்குகள், பறவைகள் என்று எந்த உயிரினங்களும் வாழ முடியாது.

இதைத்தான் ‘நீர் இன்றி அமையாது உலகு’ என்று திருவள்ளுவர் கூறியுள்ளார். ஆனால், வக்கீல்கள் தாக்கல் செய்துள்ள அறிக்கைகளை பார்க்கும்போது, குற்றாலம் மாசு அடைந்து, சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று தெரியவருகிறது. எனவே, நாம் விழித்தெழ வேண்டிய நேரம் வந்துவிட்டது.

ஷாம்பு, சோப்புகளுக்கு தடை
எனவே கீழ்க்கண்ட உத்தரவுகளை அரசு அதிகாரிகள் தீவிரமாக அமல்படுத்த வேண்டும்.

குற்றாலத்தில், எண்ணெய், ஷாம்பு, குளியல் சோப், துணி துவைக்கும் சோப்பு, சீயக்காய், பிளாஸ்டிக் பைகள் மற்றும் பொருட்கள் ஆகியவற்றை பயன்படுத்த தடை விதிக்கிறோம்.

ஷாம்பு, சோப்புகள் உள்ளூர்வாசிகளை தவிர சுற்றுலா பயணிகளுக்கு விற்பனை செய்ய தடை விதிக்கப்படுகிறது.

தடை செய்யப்பட்ட இந்த பொருள்கள் அருவிக்கு அருகே பயன்படுத்துபவர்கள் மீது அபராதம் விதித்து, அந்த பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்யவேண்டும்.

அருவிகளில் குளிக்கும் இடத்தில் கழன்று கிடக்கும் இரும்பு கைப்பிடிகள் அனைத்தையும் சரிசெய்யவேண்டும். இவற்றை அதிகாரிகள் முறையாக பராமரிக்க வேண்டும்.

அருவிகள் முன்பு ராட்சத மின்சார விளக்கு பொருத்தி, இரவு நேரங்களிலும் வெளிச்சத்தை ஏற்படுத்த வேண்டும்.

சுங்கசாவடியில் இருந்து பழைய குற்றாலம் வரை மின் விளக்குகள் இல்லை. எனவே, இங்கு உடனடியாக மின்விளக்குகளை அதிகாரிகள் அமைக்க வேண்டும்.

கழிவுநீர் கலப்பதை தடுக்கவேண்டும்
பராமரிக்கப்படாமல் உள்ள கழிவறைகளை உடனடியாக சரிசெய்யவேண்டும். பெண்கள் ஆடை மாற்றும் அறைகளையும், புதிய கழிவறைகளை கழிவுநீர் தொட்டியுடன் கட்டவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

உத்தரபிரதேசத்தில் திறந்தவெளி கழிவறைக்கு சென்ற சகோதரிகள் கற்பழிக்கப்பட்ட சம்பவம்போல் குற்றங்கள் எதுவும் நடந்திடாமல் தடுப்பதற்காக, முறையான பாதுகாப்பான கழிவறைகள் உடனடியாக கட்ட வேண்டும்.

நீர் வீழ்ச்சியில் இருந்து ஆறாக செல்லும் நீரில், கழிவறையில் இருந்து வெளியேறும் கழிவுநீரை கலக்கச் செய்வதை உடனடியாக அதிகாரிகள் நிறுத்தவேண்டும். அந்த ஆற்றுப்பகுதியில் உள்ள கழிவறையை அங்கிருந்து அகற்றிட வேண்டும்.

மதுக்கடையில் பார் வசதி
சுற்றுலா பயணிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வழங்கவேண்டும். குற்றாலத்தில் தேங்கும் குப்பைகளை அகற்ற பாதிய துப்புரவு தொழிலாளர்களை குற்றால டவுன் பஞ்சாயத்து நிர்வாகம் நியமிக்க வேண்டும்.

டாஸ்மாக் கடைகளில், உடனடியாக பார் வசதிகளை அதிகாரிகள் செய்துகொடுக்க வேண்டும்.

மேலும் குற்றாலத்தில் பொது சாலைகள், பொது இடங்கள் மற்றும் காருக்குள் மது அருந்துவது தடை விதிக்கப்படுகிறது.

மீறி செயல்களில் ஈடுபடுபவர்கள், மீது நடவடிக்கை எடுத்து அபராதத்தை போலீஸ் அதிகாரிகள் விதிக்க வேண்டும். யாராவது மது அருந்தினால் அந்த காட்சியை வீடியோவில் படம் பிடிக்க வேண்டும்.

குடித்துவிட்டு குளிக்க தடை
அருவிக்கு அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை 48 மணி நேரத்துக்குள் அகற்ற வேண்டும். குடிபோதையில் அருவிகளில் குளிப்பதால் நிலை தடுமாறி பலர் கீழே விழுந்து இறக்கின்றனர். எனவே, குடிபோதையில் அருவிகளில் குளிக்க தடை விதிக்கிறோம்.

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை மருத்துவ சோதனையில் ஈடுபடுத்த, நடமாடும் மருத்துவ சோதனை மையத்தை திருநெல்வேலி சுகாதாரத்துறை இணை இயக்குனர் குற்றாலத்தில் உருவாக்க வேண்டும். அதேபோல, குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு உடனடியாக அபராதம் விதிக்க, நடமாடும் நீதிமன்றத்தையும் அங்கு அமைக்க வேண்டும். குற்றாலத்தில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய மருத்துவ மையங்கள் உருவாக்க வேண்டும்.

பொதுமக்களின் கடமை
குற்றாலம் போலீஸ் நிலையத்தில் போலீசாரின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவதால், பாதுகாப்புக்காக அருவிகள் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் சி.சி.டி.வி. கேமராக்களை போலீசார் பொருத்தவேண்டும்.

இந்த உத்தரவுகளை தீவிரமாக அதிகாரிகள் அமல்படுத்துகின்றனரா? என்பதை உறுதி செய்ய திருநெல்வேலி மாவட்ட கலெக்டர், சூப்பிரண்டுகள் திடீர் ஆய்வுகளை குற்றாலத்தில் மேற்கொள்ள வேண்டும்.

அதேநேரம், குற்றாலம் என்ற புனித, சுற்றுலா தலத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது ஒவ்வொரு குடிமக்களின் கடமையாகும். உணவு பண்டங்களை கண்ட இடங்களில் வீசி அசுத்தம் செய்யாமல் பொதுமக்கள் பொறுப்புடன் செயல் படவேண்டும்.

இயற்கை பரிசு
இயற்கை கொடுத்துள்ள இந்த அரிய பரிசை (குற்றாலத்தை) பேணி பாதுகாப்பது பொதுமக்களாகி நம்முடைய கடமையாகும். இந்த வழக்கினை முடித்து வைக்காமல், எதிர்காலத்தில் பிற உத்தரவுகளை பிறப்பிக்கும் விதமாக நிலுவையில் வைக்கின்றோம். ஐகோர்ட்டின் இந்த உத்தரவுகள் அனைத்தையும் தீவிரமாக அமல்படுத்தி, அதுதொடர்பான அறிக்கையை அதிகாரிகள் இந்த கோர்ட்டில் தாக்கல் செய்யவேண்டும்.


Best Blogger Gadgets

2 கருத்துகள் :

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அடுத்த மாதம் வர்றோமுங்க...

நன்றி...

ராஜி சொன்னது…

சட்டம் போட்டு இதைலாம் மாத்த முடியாது. பொது மக்களான நாம்தான் பொறுப்பாய் நடந்துக்கனும்.

கருத்துரையிடுக