பிச்சை கேட்கும் சிறுவர்களுக்கு கல்வித் தானம் கிடைக்க சமூக அக்கறை மிக்க ..... யாராவது இருந்தால் ....................


அபி, அர்ச்சனா, அசின், அணு, அருண் என அகர வரிசையில் படு நாகரீகமாகன பெயர்களைக் கொண்டிருந்த அப் பிள்ளைகள், வீடு வீடாகச் சென்று சாப்பாடு கேட்டு வாங்கிச் சாப்பிடுகிறார்கள்.
பின் யார்வீட்டிலாவது டி.வி. பாரக்கிறார்கள். பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகளை ஏக்கத்துடன் பார்த்தபடி நிற்கிறார்கள்.

இந்த குழந்தைகளுக்கு அந்த கிராம மக்கள் அன்போடு உணவளிக்கின்றனர். மாலையில் பள்ளிப் பிள்ளைகள் யாராவது பேச்சுக்கொடுத்து விளையாடினால், பிள்ளைப்பராயக் குதுகலத்துடன் துள்ளி விளையாடுகிறார்கள். ஆனாலும் குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமல் வீட்டு கதவைத் தட்டி உணவு யாசகம் கேட்பது நெஞ்சைப் பிசைவதாகவே இருந்தது.


யார் இவர்கள்..?

சேலம் மாவட்டம் தாண்டவராயபுரம் கிராமத்தில் கடந்த ஒருமாத காலமாக குறி சொல்லி பிழைப்பு நடத்திவரும் நரிக்குறவர் இனத்தை சேர்ந்த சுப்ரமணியன் பிள்ளைகளிவர்கள். சுப்ரமணியனும், அவர் மனைவி வள்ளியும், பகல் முழுவதும் தெருத்தெருவாக சென்று குறி சொல்லியும், கைரேகை ஜோதிடம் பார்த்தும் தொழில் நடத்தி வருகிறார்கள்.
மாலையில் தற்காலிமாகத் தங்கியிருக்கும் முருகன் கோவில் மண்டபத்தினருகே அன்றைய வருமானத்தில் சமைக்கும் உணவோடு பிள்ளைகள் வீடுகளில் யாசகம் பெற்ற உணவினையும் சேர்த்து பகிர்துண்டபின் கோவில் மண்டபத்திலேயே உறங்கிவிடுகிறார்கள்.

ஊர் ஊராகச்சென்று ஜோசியம் சொல்லும் சுப்ரமணியத்திற்கு தன் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து எந்தக் கணிப்பும் இருப்பதாகத் தெரியவில்லை. அவரிடமே கேட்டோம்; 'ஒரு கீரி கிடைச்சுது அதைக் குழம்பு வைக்கிறேன்... ' எனச் சமையலில் அக்கறை காட்டியவாறே எங்கள் பக்கம் திரும்பிப் பேச்சுக் கொடுத்தார்.

" கொல்லிமலைப் பக்கத்தில் இருக்கிற தொட்டியம் என் சொந்த ஊர். எங்கள் இனத்திலேயே என்னிடம் மட்டும்தான் ரேசன் கார்டு, வாக்காளர் அட்டை எல்லாமே உள்ளது. ஆனால் இப்போது அவற்றுக்கு எந்தப் பிரயோஜனம் இல்லாமல் போய்விட்டது. தொட்டியத்தில் நான் மூன்று வீடு கட்டினேன். என் உடன் பிறந்த சகோதரர்களுக்கு நம்பிக்கையாக வீட்டை எழுதி வைத்தேன், கடைசியில் அனைத்தையும் இழந்து, கடனாளி ஆகி நடுத்தெருவுக்கு வந்து விட்டேன். எங்கள் இனத்தில் உறவினர் அல்லாத மற்றவர்கள் கூட உதவ முன்வருவார்கள். ஆனால் என் தம்பிகள் எனக்கு உதவ முன் வரவில்லை. அதனால் எனக்கு அந்த ஊரில் இருக்க பிடிக்காமல் ஊர் ஊராகச் சென்று குறி சொல்லி, கைரேகை ஜோதிடம் பார்த்து கடந்த 5 வருடங்களாக பிழைப்பு நடத்தி வருகிறேன்" என்றார் சுப்ரமணியன்.

'பெண் குழந்தைகளை பள்ளிக்கும் அனுப்பாமல், இப்படி வீடு வீடாக சென்று பிச்சை எடுக்க விடுகிறீர்களே, உங்களுக்கு மனம் ஒப்புகிறதா என்று கேட்டால் "திருடக் கூடாது, பொய் சொல்லக் கூடாது. கேட்டு வாங்கி சாப்பிடுறதில் தப்பு ஒன்றும் இல்லையே" என்கிறார். மேலும் தொடர்ந்து பேசுகையில் "எங்கள் இனத்தில் எதற்கும் கூச்சப் படக்கூடாது. என் பிள்ளைகள் புத்தி சாலிகள், கூச்சப்பட மாட்டார்கள். என் பெரிய பெண் அபி ஒன்றாம் வகுப்பு வரை படித்து விட்டே ரொம்ப யூகமாக இருக்கிறாள். எங்கள் ஜாதியில் பெண் குழந்தைகள் படிக்க வைத்து ஒன்றும் ஆகப் போவதில்லை. ஆனால் நல்ல யூகம் கிடைக்க ஒரு ஐந்தாம் வகுப்பு வரையாவது படிக்க வைக்க ஆசைப் படுகிறேன். யாராவது இருக்க இடம் கொடுத்து, உதவி செய்து குழந்தைகளையும் பள்ளியில் சேர்த்து விட்டால் நான் பிறந்த பிறப்பு அர்த்தம் உள்ளதாக இருக்கும் " எனச் சொல்லி ஆதங்கப்படுகிறார்.

பேசிக் கொண்டிருக்கையிலேயே மழை வந்துவிட, பூட்டிய கோயிலின் வராண்டாவிலும் தங்க முடியாமல், பக்கத்திலுள்ள ஒரு பெரிய வீட்டின் பந்தல் போட்ட திண்ணையில், தங்கள் மூட்டை முடிச்சுகளுடன் ஒதுங்கினார்கள். ஓதுங்கிய அப்பெண் குழந்தைகளின் கண்களில் கன நேரம் ஒரு மிரட்சி எட்டிப் பார்த்தது.

கிடுகிடுவென்று வளர்ந்து வரும் பெண் குழந்தைகளை வெறும் குறி சொல்லி காப்பாற்றி விடுவாரா சுப்ரமணியன்? என எண்ணியதை அவரிடமே கேட்டோம்.

" எங்கள் ஜாதியில் பெண் குழந்தைகளை கட்டிக் கொடுப்பது அப்படி ஒன்றும் சிரமம் இல்லை. பவுன் போடவேண்டிய அவசியம் இல்லை. வளர்த்து ஆளாக்க வேண்டியது மட்டும்தான் எங்கள் வேலை " எனச் சாதாரணமாகச் சொல்லிவிட்டு தூக்கத்திற்குத் தயாரானார் சுப்ரமணியன்.

வசதிகளும் நவீனங்களும் கொண்டு வளர்ந்து வரும் சமுதாயத்தின், நடைமுறை வாழ்வில் இப்படியும் பல குழந்தைகளின் வாழ்நிலை அவலமாகவே இருக்கிறது. அப்படியாயின் எமது சமூகத்தின் வளர்ச்சி நாட்டின் வளர்ச்சி...?
"'இப்பதிவினை வாசிக்கும்  சமூக அக்கறை மிக்க வாசகர்கள் யாராவது அப்பகுதியில் இருந்தால்,  யாசகம் கேட்கும் அந்தச் சிறுவர்களுக்கு கல்வித் தானம் கிடைக்க வகை செய்தால், வாழ்வு சிறக்கும். அச்சிறுவர்களின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்."


Thanks to .
- 4தமிழ்மீடியாவுகாக எழில்செல்வி படங்கள் : எழில்சூர்யா

Best Blogger Gadgets

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக