மா சிவகுமார்

இது வரை பெண்களுக்கு தனி பத்திரிகை, தனி பிரிவு மற்றும் அவர்கள் பிரச்சனை பற்றி பல பத்திரிகைகள் பிரசுரித்து வந்துள்ளன / வருகின்றன. ஆனால் ஆண்களுக்காக பிரத்யேகமாக ஒரு பகுதி என பெரிய அளவில் இது வரை வந்ததில்லை. அந்த பெரிய குறையை நிவர்த்தி செய்யவே இந்த புதிய பகுதி.
"இது ஆம்பளைங்க சமாச்சாரம்" எழுதுபவர் திரு. மா சிவகுமார் அவர்கள்.
இதோ இந்த வார சமாச்சாரம் ...
நல்ல வேர்த்து விறு விறுத்து குளிரூட்டப்பட்ட ஒரு அறைக்குள் நுழைந்த நம்முடைய உடலின் வாடை நமக்கே எட்டி விடும். மின்சாரம் நின்று போய், 40 டிகிரி வெயில் அடிக்கும் போது வேர்வையாக ஊற்றும் போது உடலில் நறுமணம் கமழ்கிறதா? உடல் அழுக்கைப் போக்க சோப்பு தேய்த்து குளிக்கிறோம், பல்லில் படியும் அழுக்கைப் போக்க பல் துலக்குகிறோம். எவ்வளவுதான் கவனமாக காலையில் இந்த இரண்டையும் செய்து, சோப்புகளை மாற்றி மாற்றி முயன்றாலும் மாலை வரை துர்நாற்றத்தை தூர வைப்பது சிரமமாகப் போய் விடுகிறது. என்னுடைய அனுபவத்தில் இந்தத் தொல்லைகளை எப்படி ஒழித்தேன் என்பதைப் பகிர்ந்து கொள்கிறேன். பொருத்தமான இடங்களில் கொடுக்கப்பட்ட சுட்டிகளைப் பின் தொடர்ந்து மேல் விபரங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்.
வழக்கமாக பல்லுக்கும் தோலுக்கும் செய்யும் சேவைகளுடன் கூடவே இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். வயிற்றில் என்ன இருக்கிறதோ அவையும் இந்த இரண்டையும் பாதிக்கின்றன. ஆங்கிலத்தில் வாய் துர்நாற்றத்தை bad breath (மோசமான சுவாசம்) என்று குறிப்பிடுகிறார்கள். வயிற்றில் கழிவுகள் மக்கிப் போயிருந்தால் (கந்தகப் பொருட்கள்) அதைத் தொட்டு காற்று வாய் வழியாக வரும்போது அந்த நாற்றத்தையும் எடுத்து வருகிறது. உடலெங்கும் சுற்றி வரும் ரத்தத்தில் கழிவுகள் கலந்தால் வேர்வையில் துர்நாற்றம் புகுந்து மேல்தோலுக்கும், வாய்க்கும் வந்து விடுகிறது.
உடலுக்கு வாசநீக்கிகள் (deodarant), வாய்க்கு வாய்மணமூட்டிகள் (mouth fresheners) பயன்படுத்தினாலும் அவற்றின் தாக்கம் மேலோட்டமாகவே இருப்பதால் உள்ளே இருந்து வரும் இயல்பான நாற்றத்தை கட்டுப்படுத்துவது முடியவில்லை.
- காலையில் வெறும் வயிற்றில் இரண்டு மூன்று தம்ளர் இளஞ்சூடான நீர் குடிப்பதன் மூலம் வேலைக்குக் கிளம்பும் முன் வயிற்றுக் கழிவுகளை ஓரிரு முறைகளில் முற்றிலும் வெளியேற்றி விடலாம். காலையில் எழுவதற்கும் வேலைக்கு கிளம்புவதற்கும் இரண்டு மூன்று மணி நேரமாவது இருந்தால்தான் இது சாத்தியம். இல்லையென்றால் திண்டாட்டம்தான். முடிந்தால் நன்றாக வியர்க்கும் வரை உடற்பயிற்சி செய்வதும் நல்லது.
- அழுக்கான சட்டை, பேன்ட் போட்டாலும் உள்ளாடைகள், காலுறைகளை இரண்டாவது நாள் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக காலுறைகளை ஒரு நாள் அணிந்த பிறகு துவைத்து விட வேண்டும்.
- தினமும் ஷூஸ் அணியும் வழக்கம் இருந்தால், குறைந்தது இரண்டு சோடி காலணிகளை பயன்படுத்த வேண்டும். ஒரே காலணியை ஆறு நாளும் தொடர்ந்து அணிந்தால், காலணி உறிந்து கொள்ளும் வியர்வை முற்றிலும் வெளியேற இடைவெளி இல்லாமல் துர்நாற்றம் உருவாக ஆரம்பிப்பதோடு காலணியும் சீக்கிரம் கெட்டுப் போய் விடும்.
- சாப்பிட்ட பிறகு நன்றாகக் கொப்பளித்து விடும் நமது நல்ல பழக்கம் பல் ஆரோக்கியத்துக்கு பெரிதும் உதவுகிறது. முடிந்த வரை சாப்பாட்டு வேளையைத் தள்ளிப் போட்டு வெறும் வயிற்றோடு இருப்பதைத் தவிர்க்க வேண்டும். மதியம் சாப்பிடவில்லை என்றால் நான்கு மணிக்கெல்லாம் வயிற்றின் உள்வாசனைகள் எல்லாம் வாய் வழியே வெளிவர ஆரம்பித்து விடுகின்றன.
- நாள் முழுவதுமே சரியான இடைவெளிகளில் போதுமான தண்ணீர் குடிப்பது வாயில் சேரும் நுண்கிருமிகளை அகற்றி வயிற்றையும் ஈரப்பதமாக வைத்திருக்க உதவும். வறண்ட வாயும், வெறும் வயிறும் நாற்றத்தை உருவாக்கக் காரணமாகி விடுகின்றன.
- விவகாரமான உணவு வகைகள் (பூண்டு, மாமிச உணவு, வெங்காயம், பாலாடைக்கட்டி போன்றவை) செரிக்கும் போது கந்தகப் பொருட்கள் உருவாவது அதிகமாக இருப்பதால், அத்தகைய நாட்களில் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
வாய் துர் நாற்றத்திற்கு எவ்வாறு சிகிச்சை அளிப்பது?
1. நாக்கை சுத்தம் செய்வது மிகவும் முதன்மையானதும் அவசியமானதுமாகும். நாக்கின் முன் பாதி சாப்பிடும் போதும், பேசும் போதும் அடிக்கடி வாயின் மேல்புறத்தில் (Hard palate) உராய்வதால் இயற்கையாகவே சுத்தமாகிறது. ஆனால் நாக்கின் பின் பகுதி மிருதுவான Soft palate ல் உராய்வதால் போதுமான அளவில் சுத்தமாவதில்லை. வாயில் உற்பத்தியாகும் கிருமிகளையும், கந்தக காம்பௌன்ட் கழிவுகளையும் நீக்கக் கூடிய குளோரின் டை ஆக்ஸைடு அல்லது Cetylpyridinium குளோரைடு கலந்த பற்பசையைப் பயன்படுத்த வேண்டும். Tooth brush மற்றும் பிளாஸ்டிக் ஸ்பூன் அல்லது Tooth scaraper உபயோகித்து நாக்கின் பின்பகுதியையும், பற்களையும் சுத்தம் செய்ய வேண்டும்.
2. முறையான இடைவெளியில் பல் மருத்துவரிடம் ஈறு பரிசோதனையும், பற்களை சுத்தம் செய்வதும் மிக அவசியம். பற்களின் நிலைமையும், ஈறு நன்றாக வீக்கமின்றி இருக்கிறதா என்பதையும் பல் மருத்துவரிடம் முறையாக பரிசோதித்துக் கொள்ள வேண்டும். பற்களில் காரை படிந்தும், எலும்பு தேய்ந்து பற்குழிகள் ஏற்பட்டிருந்தாலும் தகுந்த சிகிட்சை அளித்து பற்களைக் காப்பாற்றி, துர் நாற்றத்தையும் தவிர்க்க உதவுவார்.
3. புரதச்சத்துள்ள ஆகாரத்தை குறைத்தும், அதே நேரத்தில் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துள்ள உணவைச் சாப்பிட்டு வந்தால், வாயில் நுண் கிருமிகள் வளர வாய்ப்பிருக்காது. இத்துடன் புரதச் சத்துள்ள உணவைச் சாப்பிட்ட போது முறையாக நாக்கின் பின் பகுதியை சுரண்டி வழித்தும், பற்களுக்கு இடையில் சிக்கியுள்ள புரத உணவுத் துகள்களை Floss உபயோகித்து நீக்கியும், வாய் கொப்பளிக்கும் கிருமி நாசினி மருந்து (Chlorhexidine, Povidone 2% Gargle) திரவத்தால் வாய் கொப்பளித்தும் வாய் துர் நாற்றத்தைப் போக்கலாம்
4. வாயில் எப்பொழுதும் ஈரப்பதம் இருக்குமாறும் பார்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக இரவில் தூங்கும் போது உமிழ் நீர் சுரப்பது குறைந்து, தூங்கி எழும் போது காலையிலும், நீண்ட நேரம் பேசினாலும், பேசிய பின்னும் ஈரப்பதமின்றி வாய் உலர்ந்து விடும். வாயில் ஈரப்பதம் இல்லையென்றால் துர் நாற்றம் வீசும். இதை தவிர்க்க தினமும் நிறைய நீர் குடிக்க வேண்டும். இது உமிழ் நீர் சுரக்க உதவி, வாய் ஈரப்பதத்துடன் இருக்கும். அடிக்கடி நல்ல நீர் கொண்டு வாய் கொப்பளிப்பதால் ஈரப்பதத்துடன், வாயிலுள்ள கிருமிகளையும் அதன் கழிவுகளையும் அகற்றலாம். சர்க்கரையில்லாத மிட்டாய்கள் சுவைப்பதாலும் வாயிலுள்ள ஈரப்பதத்தை அதிகமாக்கி துர் நாற்றத்தை போக்கலாம்.
5. கிருமி நாசினியாக வாய் கொப்பளிக்கும் மருந்தையும் (Mouth wash) பயன்படுத்த வேண்டும். வாய் கொப்பளிக்கும் மருந்து 1. நுண் கிருமிகளை அழிக்கும் தன்மையது, 2. வாய் நாற்றம் தரும் கந்தக கூட்டுப் பொருட்களை சமன் செய்வது என இரண்டு வகைப்படும். Listerine, Cetylpyridinium Chloride mouth wash ஆகிய இரண்டும் நுண் கிருமிகளை அழிக்கும் தன்மையுடையது. Zinc ions உள்ள Mouth wash வாயில் நுண் கிருமிகளால் உற்பத்தியாகும் கந்தகம் கலந்த கழிவுப் பொருட்களை சமன் படுத்தும் தன்மையுடையது. இரண்டு தன்மையும் உடைய Chlorine dioxide அல்லது Sodium chlorite கலந்த Mouth wash ம் உபயோகிக்கலாம்.
சில பற்கள் அல்லது முழுவதும் (Full denture) பல் கட்டியிருந்தால், சாப்பிட்ட பின் ஒவ்வொரு முறையும் அவைகளையும் கழற்றி நன்றாக கழுவிய பின் வாயைக் கொப்பளிக்க வேண்டும். இரவில் தூங்கும் போது பல் செட்டை கழற்றி, பற்பசை கொண்டு பிரஷ்சால் செட்டின் உட்புறமும் வெளியிலும் தேய்த்து தனியாக ஒரு கப்பில் வைத்து விட வேண்டும். பல் செட்டில் இயற்கையாகவே நுண் துளைகள் இருக்கும். எனவே துளைகளுக்குள் சென்று சுத்தம் செய்யக் கூடிய கிருமி நாசினி யை உபயோகித்து இரண்டு வேளையும் பல் செட்டை சுத்தம் செய்ய வேண்டும்.
மேற் கூறிய எல்லா முறைகளையும் பின் பற்றினால்தான் வாய் துர் நாற்றத்தை முழுமையாக நீக்கலாம்.
Best Blogger Gadgets
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக