சதாவதானி செய்குத்தம்பி பாவலர்

கம்பீரமாக நிற்கிறார் அந்த மனிதர். சுற்றிலும் நூற்றுக் கணக்கான தமிழறிஞர்கள். அவரை நோக்கி கேள்விக் கணை கள் நீள்கின்றன. வந்து விழுகின்ற கேள்விகளுக்கு எல்லாம் சுளீர் பதில்கள் தெறிக்கின்றன அவரிடமிருந்து. தன்னிடம் கேள்வி கேட்ட 100 பேருக்கும் ஒரே மூச்சில் வரிசையாகப் பதில் சொல்லி அசத்த… கூடி நின்ற அறிஞர்கள் கூட்டம் ஆச்சர் யத்தில் திக்குமுக்காடுகிறது. சங்கப் பாடலின் ஏதோ ஒரு வரியைச் சொன்னால் போதும், அதை முழுமையாகப் பாடி முடிப்பார். 1,000 ஆண்டுகளுக்கு முன்னால் ஏதாவது ஓர் ஆண்டு, மாதம், நாள் சொன்னால், அடுத்த நொடி கிழமையைச் சரியாகச் சொல்வார். அவர்தான் செய்குத் தம்பிப் பாவலர். அதிசயிக்கவைக்கும் சாதனைத் தமிழர். அவருக்குத் தபால் தலை வெளியிட்டுக் கௌரவித்திருக்கிறது மத்திய அரசு!

அடுத்தடுத்து பெரிய எண்களை வரிசையாகச் சொன்னால், அவற்றின் கூட்டுத் தொகை, பெருக்குத் தொ¬ககளை உடனே சொல்வது, நிகழ்ச்சியின் இடையே அவ்வப்போது கொடுக்கப்படும் நீரை ருசி பார்த்துவிட்டு, இறுதியில் அது எந்தப் பகுதியில் இருந்து கொண்டுவரப்பட்டது என்று சரியாகச் சொல்வது, நிகழ்ச்சியின் இடையில் தன் மீது வீசப்பட்ட நெல்மணிகள், பட்டாணிகள், கற்கள் எத்தனை என கணக்குச் சொல்வது என இவர் ஆச்சர்யங்களால் நிறைந்தவர். இப்படி எட்டு விஷயங்களை நினைவில் வைத்துச் சொல்வதற்கு அஷ்டாவதானி என்று பெயர். பத்து என்றால் தசாவதானி. இவர் இப்படி 100 விஷயங்களை நினைவில் வைத்து, ஒரே மூச்சில் திரும்பச் சொல்லக் கூடியவர் என்பதால் ‘சதாவதானி’.

செய்குத் தம்பிப் பாவலர் இந்தச் சாதனையை நிகழ்த்தி 100 ஆண்டுகள் முடிந்துவிட்டன. அதைப் போற்றும் விதமாக தமிழக அரசு இவர் எழுதிய நூல்களை நாட்டுடமை ஆக்கி உள்ளது. மத்திய அரசு தபால் தலை வெளியிட்டுப் பெருமை சேர்த்திருக்கிறது. சென்னையில் வசிக்கும் பாவலரின் மகள் பாத்திமா பீவியைச் சந்தித்தேன்.

”கன்னியாகுமரி மாவட்டம் கோட் டார் பக்கத்தில் உள்ள இடலாக்குடிதான் அப்பாவுக்குச் சொந்த ஊர். மலையாள வழியில் பள்ளிப் படிப்பைப் படிச்சாலும், அவருக்குத் தமிழ் மேலதான் காதல். வீட்டு வறுமைக்கு இடையில் திண்ணைப் பள்ளிக்கூடத்துல தமிழ் கத்துக்கிட் டார். 15 வயதிலேயே செய்யுள் எழுதும் அள வுக்கு தமிழில் புலமை. பிறகு மாதம் 60 ரூபாய் சம்பளத்துக்குப் பிழை திருத்தும் வேலை பார்த்துக் கிட்டே சீறாப் புராணத்துக்கு உரை எழுதினார். ‘யதார்த்தவாதி’, ‘இஸ்லாமிய மித்ரன்’னு ரெண்டு பத்திரிகைகளையும் நடத்தியிருக்கிறார்.

அதைத் தொடர்ந்துதான் தசாவதானம், சதாவதானம்னு பல சாதனைகளைச் செய்தார். சென்னை விக்டோரியா ஹாலில் தசாவதானம் செய்தபோது ‘தசாவதானி’ பட்டம் கொடுத்தாங்க. திரு கோட்டாற்று பதிற்றுப் பத்தந்தாதி, கோட்டாற்றுப் பிள்ளைத் தமிழ், அழகப்பக்கோவை, நாகைக் கோவை என ஏராளமான நூல்கள் எழுதியிருக்கிறார். விடுதலைப் போராட்டத்திலும் கலந்துக்கிட்டிருக்கார்.

அந்நிய நாட்டுத் துணிகள் எரிப்புப் போராட்டத்தில் அப்பா பேசும்போது, ‘ஒரு நல்ல மணமகன் கைத்தறி வேட்டிதான் அணிவான். பிணமகனுக்குத்தான் மில்துணி போர்த்துவாங்க. நீங்க மணமகனா, பிணமகனா?’ எனக் கேட்டதும், கூட்டத்தில் மில்துணி அணிந்திருந்தவர்கள் அதைக் கழற்றி எறிந்தார்களாம். ஜீவா, திரு.வி.க. மாதிரி முக்கியமான தலைவர்கள் அப்பாவின் பேச்சுக்கு ரசிகர்களா இருந்திருக்காங்க.

அப்பாவின் நினைவாக இடலாக்குடியில் மணிமண்டபம் கட்டின எம்.ஜி.ஆர்., அங்கே இருக்கும் பள்ளிக்கூடத்துக்கும் அப்பா பேரை வெச்சார். அதே போல கலைஞர், அப்பா எழுதின புத்தகங்களை நாட்டுடைமை ஆக்கியிருக்கார்.” பெருமிதப் புன்னகையுடன் பேசுகிறார் பாத்திமா.

பாவலரின் செய்யுள்களைப் பாடப் புத்த கங்களில் இடம்பெறச் செய்யவேண்டும், விக்டோரியா ஹாலுக்கு பாவலர் பெயர் சூட்ட வேண்டும் என்று கோரிக்கை வைக்கும் குடும்பத்து உறுப்பினர்கள், www.pavalar.blog.com என்ற வலைப்பூ மூலம் அவர் பற்றிய தகவல் களைத் தொகுத்து வருகிறார்கள்!

Saleem.
Posted by முதுவை ஹிதாயத்

“சதாவதானி” செய்குத் தம்பிப் பாவலரின் செந்தமிழ்க் கொடை!

“ஓரும் அவதானம் ஒருநூறும் செய்திந்தப்
பாரில் புகழ்படைத்த பண்டிதன் – சீரிய
செந்தமிழ்ச் செல்வன் செய்குத் தம்பிப் பாவல!”

எனக் கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை பாவலரின் பைந்தமிழ்த் திறன் பற்றிப்
பாடினார்.

*”வாழையடி வாழையென வந்த
திருக்கூட்ட மரபில் யானொருவன் அன்றோ!”*

என்ற
இராமலிங்க அடிகளாரின் வாக்கிற்கு இணங்க

குடும்பம், உறவு, சாதி, சமயம் கடந்த
ஞானியர் பரம்பரையில் தோன்றிய பாவலர்,

நாஞ்சில் நாட்டின் இடலாக்குடி என்னும்
ஊரில் பக்கீர்மீறான் ஆமீனா தம்பதியர்க்கு
மூன்றாம் மகனாக 1874, ஜூலை 31-ல்
பிறந்தார்.

“தொட்டனைத்தூறும் மணற்கேணி,”
என்பதற்கொப்ப அவரின் உள்ளத்தில்
தமிழுணர்வு
ஊற்றெடுத்தது.

சங்கரநாராயண அண்ணாவியார் என்பவரிடம்
முறையாகத் தமிழ் பயின்ற
பாவலர்,
இலக்கண-இலக்கியங்களை கற்றுத் தேர்ந்தார்.

அந்நாளில் இராமலிங்க
அடிகளாரின் அருட்பாவை
ஒரு பிரிவினர் மருட்பா எனக் கூறிவந்தனர்.

இதனை அறிந்த
பாவலர் அருட்பா சார்பில் வாதிடுவதற்கு முன் வந்தார்.

அதற்கான கூட்டம்
சென்னையில் ஏற்பாடாயிற்று.

அக்கூட்டத்தில் தொடக்கமாக,

“சாதிகுலம் சமயமெல்லாம்
தவிர்த்தெனைமேல் ஏற்றித் தனித்ததிரு
வமுதளித்த தணித்
தலைமைப் பொருளே,
ஆதிநடு கடைகாட்டா
அகண்ட பகிரண்ட ஆருயிர்கள் அகம்புறம்
மற்றனைத்து நின்ற
மொழியே,
ஓதியுணர்ந்தவரெல்லாம் எனைக் கேட்க
எனைத்தான் ஓதாமலுணர்ந் துணர்வாம்
உருவுறச்
செய்யுறவே,
ஜோதிமயமாய் விளங்கித்
தனிப்பொதுவில் நடிக்கும்
தூயநடத் தரசேயென் சொல்லு மணிந்தருளே!”

இப்பாடலை முழங்கினார்.

கேட்ட அவையோர் இவருடைய
சமய நல்லிணக்கப் பாங்கை உணர்ந்து
கையொலி எழுப்பி மகிழ்ந்தனர்.

தொடர்ந்து பல அரங்குகளில்
தமது வாதத் திறமையால்
*”அருட்பா அருட்பாவே”* என்று நிறுவினார்.

த.மு.சா. காஜா முகைதீன்

மரபுப் பாவளம் மிக்க பாவலர்
சிலேடை பாடுவதில் சிறப்பாகத் திகழ்ந்தார்.

தமிழறிஞர் ஒருவர் ஒருமுறை,
அவரைச் சிலேடையாகக் கடவுள் வணக்கம் பாடும்படி
வேண்டினார்.

அப்பொழுது,

“சிரமாறுடையான் செழுமா வடியைத்,
திரமா நினைவார் சிரமே பணிவார்,
பரமா தரவா பருகாருருகார்,
வரமா தவமே மலிவார் பொலிவார்.”

என்னும் பாடலைப்பாடி,

-சிரம் ஆறுடையான் -
சிரத்தில் கங்கையாற்றை உடைய சிவபெருமான்,

- சிரம்மாறு உடையான் -
இயல்புக்கு மாறுபட்ட சிரத்தை உடைய கணபதி,

- சிரம் ஆறுடையான் -
ஆறுதலைகளை உடைய முருகன்,

- சிரம் “ஆறு” உடையான் -
திருவரங்கத்தில் தலைப்பாகம் காவிரியாறு ஓட
பள்ளிகொண்ட திருமால்
,
- சிரம் ஆறு உடையான் -
தலையாய நல்வழிகளை உலகிற்குக் காட்டும் அல்லாஹ்

என ஐம்பொருளைச் சிலேடையால் விளக்கினார்.


இக்கவிச் சுவையில்

*”ஒரு நாமம் ஓர்
உருவம் ஒன்றும் இல்லார்க்கு
ஆயிரம் திருநாமம் பாடித் தெள்ளேணம் கொட்டாமோ,”*என்ற

*திருவாசகத் தேனையும்*,

* “ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்”*

என்ற *திருமந்திரச்
சத்தையும்*

பருகத் தந்த பாவலரின் நுட்பம் பாராட்டத்தக்கதன்றோ!


அவருடைய நினைவாற்றல் நினைந்து நினைந்து போற்றத்தக்கது.

ஓட்டுப்போட என்னை அழுத்து


Best Blogger Gadgets

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

படிக்க வந்த நண்பர்களெல்லாம் ஒட்டு போட்டுட்டு போங்களே!!

இந்த இடுகை உங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் வாக்களிக்கவும்.


தமிழ்மணத்தில் ஆதரவு வாக்களிக்க உள்ள கருவிபட்டையில் மேல்நோக்கியுள்ள கைவிரலை சொடுக்கவும்