நாகர்கோவில் ’பூமேடை’ ராமையா


பூமேடை ராமையா:’பூமேடை’ எஸ். ராமையா (1924-1996) நாகர்கோயிலில் வாழ்ந்த இந்திய சுதந்திரப்போராட்ட வீரர். குமரி மாவட்டத்தை தமிழகத்துடன் இணைக்கும் போராட்டத்திலும் பங்கேற்றார். கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்ட அரசியல் போராளி
வாழ்க்கை

பூமேடை ராமையா 1924 ல் நாகர்கோயிலை அடுத்த கொட்டாரம் என்ற ஊரில் பிறந்தார். சிறுவயதிலேயே இந்திய சுதந்திரப்போராட்டத்தில் கலந்துகொண்டார். இருமுறை சிறைச்சென்றிருக்கிறார். 1953ல் குமரிமாவட்டத்தை தமிழகத்துடன் சேர்க்கும் போராட்டத்திலும் பங்குபெற்றார்.

கடைசிவரை கட்சி அரசியலுக்கும் அதிகார அரசியலுக்கும் அப்பாற்பட்டவராக விளங்கினார். எந்த அமைப்புடனும் சமரசம் செய்துகொள்ளாமல் போராடினார். ஆகவே அவர் தனிமனிதராகவே இருந்தார். நாகர்கோயிலிலும் கொட்டாரத்திலும் சொத்துக்கள் வைத்திருந்த ராமையா அவற்றை அரசியல் செயல்பாடுகளில் இழந்தார். வறுமையுற்று 1996ல் காலமானார்

ராமையா வள்ளலாரிடம் ஈடுபாடு கொண்டிருந்தார். வள்ளலாரின் ஜோதி வழிபாட்டை பின்பற்றியவர். வேறு மதநம்பிக்கைகள் இருந்ததில்லை. பூமேடை என்பது அவர் தனக்குச் சூட்டிக்கொண்ட புனைபெயர். தன் கொள்கைகளை பிரச்சாரம் செய்ய ‘மெய்முரசு’ என்ற சிறு இதழை நடத்திவந்தார்
பங்களிப்பு

பூமேடை ராமையா ஒரு தனிநபர் போராளி. தொடர்ச்சியாக நாகர்கோயிலில் அதிகார வர்க்கத்தின் ஊழல், பொறுப்பின்மை, கட்சி அரசியலின் கீழ்மைகள் ஆகியவற்றை பிரச்சராம் செய்துகொண்டே இருந்தார். அதற்கு அவர் கையாண்ட வழிமுறை தனிநபர் பொதுக்கூட்டம். அவரே சொந்த செலவில் சுவரொட்டிகள் அச்சிட்டு நகரெங்கும் ஒட்டுவார். அவரே தன் பழைய சைக்கிளில் ஒரு சிறிய கள்ளிப்பெட்டி மேஜை, சிறிய ஒலிப்பெருக்கி கருவி , எரிவாயுவிளக்கு ஆகியவற்றுடன் நாகர்கோயிலில் உள்ள நகர்மன்ற திடல், அசிசி வளாக மைதானம், வஞ்சியாதித்தன் புதுத்தெரு, வடிவீஸ்வரம் தெரு போன்ற இடங்களுக்கு மாலை ஆறு மணியளவில் வருவார். சுமார் ஒருமணிநேரம் பேசுவார்.

பூமேடை ராமையாவின் பேச்சு நக்கலும் கிண்டலும் கோபமும் கலந்ததாக இருக்கும். திருக்குறளில் இருந்தும், வள்ளலாரின் படைப்புகளில் இருந்தும் நிறைய மேற்கோள்கள் காட்டுவார். தனிப்பட்டமுறையில் எவரையும் தாக்க மாட்டார். ஆபாசமோ விரசமோ இருக்காது. அவருக்கென்று ஒரு கூட்டம் எப்போதும் இருந்தது. சுமார் இருநூறு பேர் வரை அவர் கூட்டங்களுக்கு வருவதுண்டு.

ராமையா பொதுவாக அரசியல்வாதிகளால் ஒரு வகையான கோமாளியாகவே சித்தரிக்கப்பட்டார். காந்தி தொப்பியுடன் கதர் அணிந்து அவர் நடமாடுவதே கிண்டலுக்குரியதாக காட்டப்பட்டது. அவருக்கு எவருமே பொறுப்பாக பதில் அளித்ததில்லை. அவர் அதற்காக கவலைப்பட்டதும் இல்லை. நாற்பது ஆண்டுகள் வருடத்திற்கு நூறு கூட்டம் வீதம் போட்டிருக்கிறார்.

அவர் புறக்கணிக்கப்பட்டாலும் அவரது கூட்டங்களால் பல ஊழல்கள் வெளியே கொண்டுவரப்பட்டன. நாகர்கோயில் கடை ஊழியர்கள் சங்கம் அமைப்பதற்கும், நாகர்கோயில் துப்புரவு ஊழியர்களின் சங்கச் செயல்பாடுகளுக்கும் அவர் பெரிதும் காரணமாக அமைந்தார். அவர் நாகர்கோயிலின் மனசாட்சி என்ற எண்ணம் அவர் மறைந்த பின்னரே உருவாகியது. பூமேடை எவராலும் கௌரவிக்கப்படாமல், எவராலும் மதிக்கவும் படாமல் மறைந்தார்...அருமையான ஒரு அனுபவத்தை தகவல் உதவி : கிணற்றுத்தவளை தலைப்பு இப்படி…
-----------------------------------

பூமேடை முழங்குகிறார்!!


திடீரென்று நாகர்கோவில் நகர் முழுவதும் சிறிய சுவரொட்டி ஆண்கள் அவசரத்துக்கு ஒதுங்கும் முடுக்குகளில் ஓட்டப்பட்டிருக்கும். வேறு எந்த அலங்காரமும் அந்த சுவரொட்டியில் இருக்காது.


பூமேடையின் பெயர் பூமேடை ராமையா பிள்ளை. கதர் சட்டை, கதர் வேட்டி, கதர் காந்தித்தொப்பி, அவரை விடவும் வயதான சைக்கிள். இதுதான் பூமேடையின் அடையாளம். சைக்கிளை முக்கால்வாசி நேரம் தள்ளிக்கொண்டுதான் போவார். சுதந்திரப்போராட்டத் தியாகி.
மற்றபடி குடும்பம், தொழில் பற்றி வேறு தகவல்கள் இல்லை. வாழ்ந்து கெட்ட குடும்பம் என்று கேள்வி.

ஒவ்வொரு வியாழக்கிழமை அன்றும்,நாகர்கோவில் நகரசபைத் திடலிலோ, அசிசி வளாகத்திலோ அவரது பொதுக்கூட்டம் நடைபெறும். அவரது பொதுக்கூட்டங்கள் பற்றி சுவரொட்டி அச்சடிக்க யாராவது பொருளுதவி செய்ய முன்வருவார்கள். சுவரொட்டிகளை தனது சைக்கிளில் பின்னால் வைத்துக்கொண்டு, ஒரு வாளியில் ஒட்டுப்பசையை தொங்க விட்டுக்கொண்டு பூமேடை தானே ஊர் முழுக்கப்போய் முக்கியமான இடங்களில் ஒட்டுவார்.


பெரும்பாலும் அதிக ஆள் நடமாட்டம் இல்லாத சந்துகளில் உள்ள சுவர்களில் அவரது சுவரொட்டிகளை அதிகம் ஒட்டுவார். ஏன் என்று கேட்டால்,
’மெயின் ரோட்டிலே ஒட்டினா எவன் பார்க்கான்? நான் என்ன சினிமாப் போஸ்டரா ஒட்டுகேன்? முடுக்குலே ஒட்டுனேமுண்ணா ஒண்ணுக்கு இருக்கப்போறவன் பாப்பான்,’ என்று விளக்கம் அளிப்பார். அவர் சொல்லுவதில் ஒரு நியாயம் இருக்கும். அவரது கூட்டங்களுக்குப் பெண்கள் வருவதில்லை. எனவே ஆண்கள் தேடிப்போகும் மறைவிடங்களில் அவர் சுவரொட்டிகளை ஒட்டுவதில் ஒரு ‘லாஜிக்’ இருக்கும்.

ஒவ்வொரு பொதுக்கூட்டத்துக்கும் ஒரு தலைப்பு இருக்கும்.
'திடீர்' கசையடி விழா!
'திடீர்' எதிரடி அதிரடி விழா!
இப்படி…

* * * * *

ஆறு மணிக்குப் பொதுக்கூட்டம் என்றால், ஐந்தரை மணி வரைக்கும் அங்கே ஒரு அரசியல் கூட்டம் நடப்பதற்கான சுவடே தென்படாது. வயதாவனவர்களும், அசிசி டாக்ஸி டிரைவர்களும் ஒன்றிரண்டு பேர் ஆங்காங்கே வசதியான இடம் பிடித்து அமர்ந்து பொக்கை வாயை திறந்து காத்திருப்பர்.

ஐந்தரை மணிக்கு சைக்கிளில் ஒரு மரமேஜை, ஒரு ஒலிபெருக்கி,ஒரு மைக் இன்னும் சில சில்லறை வஸ்துக்களோடு, மொடமொடவென்று கஞ்சி போட்டுத் தோய்த்த, தும்பைப்பூ போன்ற கதர் சட்டை, கதர் வேட்டி, கதர் காந்தித் தொப்பியோடு பூமேடை வருவார்.

நாகர்கோவில் நகரசபைத் திடல் பக்கத்திலிருந்த ஒரு கட்சி அலுவலகத்திலிருந்து அவரது பொதுக்கூட்டத்துக்கு மின் இணைப்பு தானமாக வழங்கப்படும்.( அதே கட்சியையும் அவர் தனது விமர்சனத்தில் விட்டு வைக்க மாட்டார் என்பது வேறு விஷயம்)

கூடியிருக்கும் மிகச்சிறிய கூட்டத்தினரில் ஒருவர் கூட அவருக்கு உதவியாக எதையும் செய்யாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பார்கள். அதையெல்லாம் சற்றும் எதிர்பார்க்காத பூமேடை, ஆறு மணிக்குள்ளே தான் கொண்டு வந்த மேஜையை மேடையாக்கி, அதன் மீது ஏறி தானே ’ஹலோ, மைக் டெஸ்டிங்..ஒன்..டூ..த்ரீ..,’என்று பரிசோதித்து விட்டு, இறைவணக்கத்தைத் தானே பாடுவார்.

இறைவணக்கத்தைப் பாடி முடித்து விட்டு, இரண்டாவது பாட்டைப் பாட ஆரம்பித்ததும் தான் கூட்டத்துக்கு சற்றே சுவாரசியம் தட்டும்.

"ஆளைப் பாருங்க..ஐயா..ஆளைப் பாருங்க
நாளை அடையாளம் நல்லாத் தெரியணும்
ஆளைப் பாருங்க..ஐயா..ஆளைப்பாருங்க!"

இது பல்லவி! சரணத்துக்கு வருவார் அடுத்து..!

"டெல்லியிலே குதிரை மண்ணை அள்ளித் திங்குது!"

அது வரைக்கும் கட்சி அலுவலக வாசலில் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த அந்தக் கட்சித் தொண்டர்கள், சிரித்துக்கொண்டே உள்ளே போய் விடுவார்கள். கூட்டத்தினர் கைதட்டி ஆரவாரம் செய்வார்கள்; அவர்களுக்குப் புரிந்து விட்டது, இன்று பூமேடை என்ன விஷயம் பற்றிப் பேசப்போகிறார் என்று!

சின்னச் சின்னத் தாள்துண்டுகளில் எதையெதையோ குறித்து வைத்துக்கொண்டு ஒரு மணி நேரம் கோர்வையாகப் பேசுவார் பூமேடை. யாரையும் தனிப்பட்ட முறையிலோ, தரக்குறைவான வார்த்தைகளை உபயோகப்படுத்தியோ தாக்காமல், சொல்ல வந்ததை, ஒரு விதமான நக்கலோடு, நகைச்சுவை இழையோட, கூட்டத்தினரை வயிறு குலுங்க சிரிக்க வைத்தபடி பேசுவார்.

ஆரம்பத்தில் இருபது, இருபத்தைந்து பேர்களாக இருந்த கூட்டம் போகப்போக நூறு, நூற்றைம்பதைத் தாண்டும். கூட்டம் கூடினாலும் சரி, குறைந்தாலும் சரி, பூமேடையின் உற்சாகம் மட்டும் சற்றும் குறையாது. சரியாக ஏழு மணிக்கெல்லாம் பேசி முடித்து விட்டு, கூட்டத்தினரின் கேள்விகளுக்குப் பதில் அளிப்பார். சில சமயங்களில் கேள்விகளை சீட்டில் எழுதி அனுப்புவோரும் உண்டு. எசகு பிசகாக எதையாவது கேட்டால், எரிந்து விழுவார். தேசீய கீதத்தோடு கூட்டம் இனிதே நிறைவுறும்.

கூட்டம் கலைந்து போகவும், பூமேடை தனது தடவாளங்களை மீண்டும் சேகரித்துக்கொண்டு, தனது சைக்கிளில் வைத்துக் கட்டி முடித்துக்கொண்டு, ஆள் அரவமற்ற நகர்சபைத் திடலிலிருந்து தனியாளாக, சைக்கிளை மிதித்துக்கொண்டு பாலமோர் ரோட்டுக்கு வந்து போக்குவரத்தில் காணாமல் போய் விடுவார்.

* * * * *
நகரசபைத் தேர்தலில் இருந்து நாடாளுமன்றத் தேர்தல் வரைக்கும் ஒன்று விடாமல் சுயேச்சையாகப் போட்டியிடுவார். அவருக்காக யாராவது டெபாசிட் கட்ட உதவுவார்கள்., அவரது தேர்தல் பிரச்சாரம் வினோதமாக இருக்கும்.

தனது நிரந்தர வாகனமான சைக்கிளில் உட்கார்ந்து கொள்வார். அவரது சின்னம் ’யானை’. தனது வாயில் ஒரு விசிலை ஊதிக்கொண்டே சைக்கிளை நாகர்கோவிலின் சந்து பொந்துகளெல்லாம் போவார்; ஒரு கையில் பொம்மை யானை ஒன்றை வைத்துக்கொண்டு, ஒரு கையால் சைக்கிளை ஓட்டிக்கொண்டே தெருவின் இரண்டு பக்கங்களிலும் தனது சின்னத்தை மாற்றி மாற்றிக் காட்டிக்கொண்டே போவார்.

சிறுவர்கள், தங்களது விளையாட்டுகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்து விட்டு அவரது சைக்கிள் தெருவை விட்டுப் போகும்வரைக்கும் அவரைப் பின்தொடர்ந்து ஆரவாரத்துடன் செல்வார்கள். அவர் சற்றும் அசராமல், கோபப்படாமல், கர்மமே கண்ணாகத் தனது பிரச்சாரத்தைத் தொடர்ந்து மேற்கொள்வார்.

தேர்தல் முடிந்தது. இந்த தேர்தலில் பூமேடை வாங்கியது, 535 ஓட்டுகள். எந்தத் தேர்தலிலும் பூமேடை டெபாசிட்டைக் திரும்பப் பெற்றதில்லை. அவருக்கு அந்த கவலை இருந்ததாக தெரியவில்லை.

தேர்தல் முடிவு தெரிந்த அடுத்த புதன், நகரெங்கும் புதிய சுவரொட்டி தோன்றும். கூடுதல் பின்குறிப்புடன்.வியாழன் மாலை ஆறு மணிக்கு பூமேடை எதுவும் நடக்காதது போல். வழக்கம்போல் தான் கொண்டு வந்த மேஜையை மேடையாக்கி, அதன் மீது ஏறி இறைவணக்கத்தை முடித்து இரண்டாவது பாட்டைப் பாட ஆரம்பித்ததும் கூட்டத்தினர் கைதட்டி ஆரவாரம் செய்வர். பூமேடை தளராமல் முழங்கும்.

* * * * *
தகவல் உதவி : கிணற்றுத்தவளை

ஓட்டுப்போட என்னை அழுத்து


Best Blogger Gadgets

2 கருத்துகள் :

நாஞ்சில் வேணு சொன்னது…

பூமேடை ராமையா பிள்ளை பற்றிய நினைவை புதுப்பித்தமைக்கு மிக்க நன்றி. நானும் நாகர்கோவில் காரன் தான். நீங்கள் இதுலே குறிப்பிட்ட கிணற்றுத்தவளையும் நான் தான். (யாரோ ஒரு புண்ணியவான் அதை அபேஸ் பண்ணிட்டாங்க..!)

*VELMAHESH* சொன்னது…

oho

கருத்துரையிடுக

படிக்க வந்த நண்பர்களெல்லாம் ஒட்டு போட்டுட்டு போங்களே!!

இந்த இடுகை உங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் வாக்களிக்கவும்.


தமிழ்மணத்தில் ஆதரவு வாக்களிக்க உள்ள கருவிபட்டையில் மேல்நோக்கியுள்ள கைவிரலை சொடுக்கவும்