போராட்ட வீரர் மார்டின் லூதர் கிங்

அமெரிக்காவில் அடிமை முறையையும், நிற வேறுபாட்டையும் ஒழிக்க முதன் முதலாகக் குரல் கொடுத்தவர் ஆபிரகாம் லிங்கன். அதனால் ஒரு பைத்தியக்காரனால் லிங்கன் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அதே போன்று அமெரிக்காவில் கடைப்பிடிக்கப்பட்ட நிறவெறியை எதிர்த்து மீண்டும் ஒருவர் குரல் கொடுத்தார். அவரும் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அவர்தான் மார்டின் லூதர் கிங்.

இவர் 1929-ல் பிறந்தார்.

1954-ல் ‘அலபாமா’ என்ற ஊரில் மதபோதகரானார்.

இங்குதான் எளிய மக்களோடும் கருப்பர் இன மக்களோடும் பழகுகின்ற வாய்ப்பை மாட்டின் லூதர் கிங் பெற்றார்.

அப்போது அமெரிக்காவின் தென் மாநிலங்களில் கருப்பு இன மக்கள் பொது இடங்களில் நடமாடக்கூடாதென்று தடை விதிக்கப்பட்டிருந்தது.

பேருந்துகளிலும், ரயில்களிலும் நீக்ரோ மக்களுக்குத் தனி இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.

வெள்ளையர்களின் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளில் நீக்ரோக்களின் குழந்தைகள் அனுமதிக்கப்படவில்லை.

கல்வி, வேலை வாய்ப்பு போன்றவற்றில் நீக்ரோக்களுக்குச் சம உரிமை மறுக்கப்பட்டது.

தீண்டாமை கடைபிடிக்கப்பட்டது.

அடிமைகளாக நீக்ரோக்கள் நடத்தப்பட்டனர்.

இந்தக் கொடுமைகளிலிருந்து விடுபட நீக்ரோக்கள் முடிவு செய்தனர். அதற்கான தலைவரை அவர்கள் தேடிக் கொண்டிருந்தனர். அந்தப் போராட்ட எழுச்சிக்கு மார்டின் லூதர் கிங் தலைமை ஏற்றார்.

அலபாமாவில் உள்ள மாண்ட்கோமரி என்ற இடத்தில் ஒரு சம்பவம் நடந்தது. கருப்புப் பெண்மணி ஒருத்தி பஸ்ஸில் நீக்ரோக்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் உட்கார மறுத்தாள்.

“வெள்ளையரோடுதான் நான் உட்காருவேன்..இனிமேலும் எங்களை தனிமைப்படுத்தி அவமானப்படுத்துவதை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன்” என்று பிடிவாதமாகப் போராடினாள். அதனால் பஸ்ஸில் சலசலப்பு ஏற்பட்டது.

அவளுக்கு எதிராக பல குரல்களும், ஆதரவாக சில குரல்களும் அங்கே ஒலித்தன. இறுதியில் காவல்துறை அதிகாரிகள் வந்ததும், கருப்பு பெண்ணுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தோர் அமைதியாகிவிட்டனர்.

ஆனால் அந்தப் பெண் தன் நிலையிலிருந்து மாறவில்லை. காவல்துறை அதிகாரிகளுடனும் வாதாடினாள். தனக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் உட்கார முடியாது என்று திடமாக மறுத்தாள். அதனால் அவளைக் கைது செய்த காவல்துறை சிறையில் அடைத்தது.

இந்தச் செய்தி அலபாம்ப் பகுதியில் காட்டுத் தீ போல் பரவியது. இந்தக் கொடுமைக்கு எதிராக மார்டின் லூதர் கிங் கருப்பர் இன மக்களைத் திரட்டினார். எந்தப் பேருந்தும் செல்ல முடியாத அளவிற்கு மார்டின் லூதர் கிங்கும், கருப்பர் இன மக்களும் போராட்டத்தில் குதித்தனர். இறுதியில் பேருந்தில் ஒதுக்கி வைக்கும் சட்டம் நீக்கப்பட்டது. சம உரிமைக்கான போராட்டம் வெற்றி கண்டது.

இந்தப் போராட்டம் அமெரிக்காவில் உள்ள பிற மாநிலங்களுக்கும் பரவியது.

1955-ல் மார்டின் லூதர் கிங் சம உரிமை கேட்டுப் போராடியது. அமெரிக்காவிலிருந்த கருப்பர் இன மக்களுக்கு ஒன்றுபட்டுப் போராட வழி வகுத்தது.

காந்தியடிகளின் போராட்ட வழிமுறைகள் மார்ட்டின் லூதர் கிங்கை பாதித்திருந்தது. அதனால், வன்முறையின்றி அமைதியான வழிமுறைகளில் தமது போராட்டங்களை நடத்தி வந்தார் மார்டின்.

உலகம் முழுவதும் மார்டின் லூதர் கிங் புகழ் பரவியது.

1964-ல் அமைதிக்கான நோபல் பரிசு மார்டின் லூதர் கிங்குக்கு கொடுக்கப்பட்டது.

நீக்ரோ மக்களிடத்தில் மார்டின் லூதர் கிங்கின் செல்வாக்கு அதிகரித்தது.

கருப்பு இன மக்கள் ‘கருப்பு இன மக்களின் காந்தி’ என மார்டின் லூதர்கிங்கை அழைத்தனர்.

அமெரிக்காவின் எந்தப் பகுதியில் கருப்பர் இன மக்களுக்குத் தீங்கு இழைக்கப்பட்டாலும், அங்கு மார்டின் தமது அறப்போராட்டத்தைத் தொடங்கினார்.

வெள்ளையர் மீது பகைமை பாராட்டாமலும், அதே நேரத்தில் கருப்பர் இன மக்களின் நியாயமான போராட்டங்களை விட்டுக் கொடுக்காமலும் மார்ட்டின் லூதர் கிங் போராடினார்.

மாநாடு, பொதுக்கூட்டம், உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் என ஓயாது உழைத்து வந்த மார்டின் லூதர் கிங்கை ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்த போது ஒரு கொலைக்காரன் சுட்டுக் கொன்றான்

Best Blogger Gadgets

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக