* அணுக்களிடையே இணைக்கும் சக்தி இருப்பதால்தான், உலகம்
பொடிப்பொடியாக உதிர்ந்துவிடாமல் இருப்பதாக விஞ்ஞானிகள்
கூறுகிறார்கள். அது போலவே, உயிர்களிடத்தும் அன்பு என்னும்
இணைக்கும் சக்தி இருக்க வேண்டும். அன்பு உள்ள இடத்திலேயே,
உயிர் இருக்கிறது. பகைமை அழிவையே தருகிறது. மனித ஜாதி
அழியாமல் ஜீவித்துக் கொண்டிருப்பதற்குக் காரணம், இணைக்கும்
சக்தியே. இது பிரிக்கும் சக்தியை விடப் பெரியது.
* உண்மை இன்றேல் அன்பும் இல்லை. உண்மை இல்லாமல் பாசம்
இருக்கலாம். உதாரணம், பிறர் கெடத் தான் வாழும் தேசபக்தி.
உண்மை இல்லாமல் மோகம் இருக்கலாம். எடுத்துக்காட்டு, ஓர்
இளம் பெண்ணிடம் ஒரு வாலிபன் கொள்ளும் காதல். உண்மை
இல்லாமல் வாஞ்சை இருக்கலாம். உதாரணமாக, பெற்றோர்
பிள்ளைகளிடம் காட்டும் அன்பு மிருகத்தன்மைக்கு
அப்பாற்பட்டது. அது ஒரு போதும் பாரபட்சமாய் இருக்காது.
உலகத்தை தாங்கி நிற்பது அன்பு ஒன்றே என்பது என் திடமான
நம்பிக்கை. அன்புள்ள இடமே வாழ்வுள்ள இடம். அன்பில்லா
வாழ்வு மரணமே.
* அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் மீது தனக்கு அன்பு
இருக்கிறது என்பதை அவர்கள் நன்கு உணரும்படி ஒருவர் செய்ய
வேண்டும். தான் கூறும் முடிவு சரியானதாகவே இருக்கும் என்ற
நம்பிக்கை அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுக்கு ஏற்பட
வேண்டும். அதோடு தன்னுடைய முடிவை அவர்கள் ஏற்றுக்கொள்ளவோ,
அமலாக்கவோ இல்லையானால், அதனால் தனக்கு எந்தவிதமான
மனக்கஷ்டமும் ஏற்படாது என்பதும், நிச்சயமாக இருக்க
வேண்டும். இப்படியெல்லாம் இருந்தால்தான் குற்றம் குறைகளைக்
கூறிக் கடுமையாகக் கண்டிக்கும் உரிமையை ஒருவர்
பெற்றவராவார்.
அமைதி தரும் உண்ணாவிரதம்
* உண்ணாவிரதம் என்பது இன்று நேற்று உண்டான சாதனமன்று.
ஆதிபுருஷன் என கருதப்படும் ஆதாம் காலத்திலிருந்தே
அனுஷ்டிக்கப்பட்டு வருவது. அது தன்னைத் தானே
தூய்மைப்படுத்திக் கொள்வதற்கு பயன்பட்டிருக்கிறது. நல்ல
லட்சியங்களோ, தீய லட்சியங்களோ அவைகளை அடைவதற்கு
பயன்பட்டிருக்கிறது.
* உண்ணாவிரதம் என்பது அகிம்சை என்னும் ஆயுத சாலையில்
உள்ள ஆயுதங்களில் மிகவும் வலிமை வாய்ந்த ஆயுதமாகும். அதை
வெகு சிலரே உபயோகிக்க முடியும் என்பதால் அதை உபயோகிக்கவே
கூடாது என்று ஆட்சேபிக்க முடியாது.
* உண்ணாவிரதமெனும் ஆயுதத்தை உபயோகிப்பதற்குச் சரீரபலம்
மட்டும் போதாது. சத்தியாக்கிரக கடவுளிடத்தில் அசாத்திய
நம்பிக்கை தேவைப்படும்.
* நான் அனுஷ்டித்த உண்ணாவிரதங்களில் எதுவும் பலன்
தராமல் போனதாக எனக்கு ஞாபகமில்லை. அப்படி நான் உண்ணாவிரதம்
அனுஷ்டித்த காலத்திலெல்லாம் அதிக உன்னதமான அமைதியும்,
அளவற்ற ஆனந்தமுமே அடைந்தேன்.
* அதிக பலனுள்ள சில மருந்துகளைப் போல உண்ணாவிரதமும்
அபூர்வமான சந்தர்ப்பங்களிலும், அதில் திறமையுடைவர்களின்
மேற்பார்வையிலும் தான் உபயோகிக்கக் கூடியதாகும்.
* உண்ணாவிரதத்தை உபயோகிக்கும் வித்தையில் திறமை உள்ளவன்
உபயோகித்தாலன்றி அது பலாத்காரமாகவே ஆகிவிடக்கூடும்.
* ஆண்டவன் அருளால் ஏற்படாத உண்ணாவிரதங்கள் அனைத்தும்
பயனற்ற வெறும் பட்டினியைவிடக் கூடக் கேவலமானதே ஆகும்.
* உண்ணாவிரதத்தால் ஏதேனும் நன்மை ஏற்படக்
கூடியதாயிருந்தாலும், அடிக்கடி நிகழ்த்தி வந்தால் எந்த
நன்மையும் ஏற்படாமல் போகும். இறுதியில் ஏளனமே
மிச்சமாகும்.
வார்த்தைகளற்ற இருதயம் வேண்டும்
பிரார்த்தனை மனிதனுடைய வாழ்க்கையின் உயிர்நாடியாகும்.
கடவுளை வேண்டிக் கொள்வதே பிரார்த்தனை. அல்லது பரந்த
அர்த்தத்தில் உள்ளுக்குள் இறைவனுடன் தொடர்பு கொள்வதும்
பிரார்த்தனையே. எப்படியிருந்தாலும் பலன் ஒன்றுதான்.
வேண்டிக் கொள்வதாக இருந்தால்கூட, ஆன்மாவைத்
தூய்மைப்படுத்தும் படியும், அதைச் சூழ்ந்துகொண்டுள்ள
அறியாமையையும், இருட்படலங்களையும் போக்கும்படியும்
வேண்டிக் கொள்வதாகவே இருக்க வேண்டும். தன்னிடமுள்ள
தெய்வீகத் தன்மை விழிப்படைய வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவன்,
பிரார்த்தனையின் உதவியை நாடித்தான் தீரவேண்டும். வெறும்
சொற்களின் அலங்காரமோ அல்லது காதுகளுக்குப் பயிற்சி
அளிப்பதோ பிரார்த்தனை அல்ல. அர்த்தமற்ற சூத்திரத்தைத்
திரும்பத் திரும்பக் கூறுவதும் பிரார்த்தனை அல்ல.
ராமநாமத்தை எத்தனை தடவைகள் திரும்பத் திரும்பக்
கூறினாலும் அது ஆன்மாவைக் கிளறவில்லையாயின், அது
வீணேயாகும். இருதயமற்ற வார்த்தைகளைக் காட்டிலும்,
வார்த்தைகளற்ற இருதயமே பிரார்த்தனைக்குச் சிறந்தது.
பசியுள்ள மனிதன் நல்ல உணவை மனதார ருசிப்பதுபோல, பசியுள்ள
ஆன்மா மனமார்ந்த பிரார்த்தனையை ருசித்து அனுபவிக்கும்.
பிரார்த்தனையின் மந்திர சக்தியை அனுபவித்தவன்
சேர்ந்தாற்போல் நாட்கணக்கில் உணவின்றி வாழமுடியும். ஆனால்,
பிரார்த்தனையின்றி ஒரு விநாடி கூட வாழமுடியாது. ஏனெனில்
பிரார்த்தனையின்றேல், உள்ளத்தில் அமைதி இருக்க முடியாது.
எனது அனுபவத்தையும், எனது சகாக்களின் அனுபவத்தையுமே
இப்போது நான் கூறியுள்ளேன்.
Best Blogger Gadgets
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக