வேலை பற்றிய மயக்கம் - அன்னை

கலக்கம், அவசரம், சஞ்சலம் இவை நம்மை ஒருவித நன்மைக்கும் இட்டுச்செல்வதில்லை. பொங்கும் நுரையானது வீணாக பெருஞ்சத்தம் போட்டுவிட்டுச் சிறிது நேரத்திற்குள் அப்படியே அடங்கிவிடுவதைப் போல இருப்பன இவை.

சாதாரண மனிதர்கள் சதாகாலமும் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டு இசிப்பு நோய் கொண்டவர்களைப் போலத் தெறிக்கத் தெறிக்க வேலை செய்தாலொழிய தாங்கள் வேலை செய்வதாகவே அவர்களுக்குத் தோன்றுவதில்லை. பெயரளவில் மட்டுமே வேலையாயுள்ள இவர்களின் இயக்கங்கள் எதையாகிலும் மாற்றுகிறது என்று எண்ணுவது மதிமயக்கமேயாகும்.

ஒரு கோப்பைத் தண்ணீரை எடுத்துக்கொண்டு அதைக் கலக்குவதைப் போலத்தான் இது. தண்ணீர் அசைகிறதுதான், ஆனால் அதை நீ என்னதான் கலக்கினாலும் அரு ஒரு சிறிதும் மாறுதலடைவதில்லை. வேலை சம்பந்தமாகவுள்ள இந்த மயக்கம் மாறுதலடைவதில்லை. வேலை சம்பந்தமாகவுள்ள இந்த மயக்கம் மனித சுபாவத்தின் பெருமயக்கங்களில் ஒன்று... இது முன்னேற்றத்திற்குத் தடையாயிருக்கிறது.

ஏனெனில், இது எப்போதும் எதாவதொரு பரபரப்பான இயக்கத்தில் விரைந்து செல்லும் அவசியத்தை உணக்கு உண்டாக்குகிறது. இதெல்லாம் மதிமயக்கமென்றும், வீணென்றும், எதையும் மாற்றக் கூடியதல்ல என்றும் நீ காண்பாயானால் எவ்வளவு நன்றாயிருக்கும்! இதனால் எங்கேயும் எதையும் சாதிக்க முடியாது. இவ்வாறு அவசரத்துடனும் இரைச்சலுடனும் வேலை செய்கிறவர்கள், தங்களது களிப்பிற்காக இவர்களை இஷ்டப்படி கூத்தாடச் செய்யும் சக்திகளின் கருவிகளேயாவர். இச்சக்திகளுங்கூட உயர்ந்த ரகமானவை அல்ல.

உலகில் சாதிக்கப்பட்டுள்ள யாவும் செயலுக்குப் புறம்பாக மோனத்தில் நிற்கக்கூடிய வெகுசிலராலேயே சாதிக்கப்பட்டிருக்கின்றன. அவர்களே தெய்வ சக்தியின் கருவிகள். அவர்களே செயல்திறன் படைத்த இறைவனின் ஆட்கள், உணர்வுள்ள கருவிகள், அவர்களே உலகை மாற்றும் சக்திகளை கீழிறங்கும்படி செய்கின்றனர். அவ்விதமாகத்தான் காரியங்களைச் சாதிக்க முடியும், அமைதியற்ற செயலினாலல்ல.

உலகம் சாந்தியிலும், மோனத்திலும், அமைதியிலும் உருவாக்கப்பட்டது. ஏதாவதொன்றை உண்மையாக உருவாக்க வேண்டியதிருக்கும் போதெல்லாம் அதைச் சாந்தியிலும், மோனத்திலும், அமைதியிலுமே உருவாக்க வேண்டும். உலகத்திற்கு ஏதாகிலும் ஒன்றைச் செய்வதன் பொருட்டு காலை முதல் மாலை வரை ஓடித்திரிந்து பலவிதமான பயனற்ற வேலைகளில் ஈடுபட்டு உழைக்க வேண்டும் என்று எண்ணுவது மடமையேயாகும்.

Best Blogger Gadgets

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக