நான் யார்? - ரமண மகரிஷி

உண்மையில், 'நான் யார்?' என்னும் விசாரணையின் பொருள் 'அகந்தையாகிற நான் எனும் எண்ணத்தின் தோற்றுவாய் எது?' என்பதை அறிவதற்கான முயற்சியே ஆகும். 'நான் இந்த உடல் அல்ல' போன்ற பிற எண்ணங்களுக்கு மனத்தில் இடமளிக்கக் கூடாது. 'நான்' என்பதன் மூலத்தை நாடுவது, மற்ற எண்ணங்கள் யாவற்றையும் களைந்தெறிவதற்கான வழிமுறைக்கு சாதகமாக அமைகிறது. வேறெந்த எண்ணங்களுக்கும் நீங்கள் வாய்ப்பளிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

மாறாக, நான் எனும் எண்ணத்தின் பிறப்பிடத்தைக் கண்டுபிடிக்கும் ஒரே நோக்கத்தில் மனதைக் குவித்து நிலைநிறுத்த வேண்டும். எவ்வாறென்றால், வேறு எந்த எண்ணம் தலை தூக்கினாலும் 'அவ்வெண்ணம் யாருக்கு எழுகிறது?' என்று கேட்டுக்கொள்ள வேண்டும். 'வேறு யாருக்கு? எனக்கேதான்!' என்று அதற்கு விடை கிடைத்தால் நீங்கள் அடிப்படையான விசாரத்தைத் தொடர வேண்டும். அதாவது, "இந்த 'எனக்கு' எனும் 'நான்' யார்?, அதன் பிறப்பிடம் எது? என்ற விசாரத்தைத் விடாப்பிடியாய்ப் பற்ற வேண்டும்.

'நான்' யாரென்று எப்படித் தேடித் தெரிந்துகொள்வது?

ரமணர்: நம்மையே நாம் கேட்டுக்கொள்ள வேண்டும். முதன் முதலாக, இந்த உடலும் அதன் இயக்கங்களும் (அன்னமயகோசம்) நாமல்ல என்று அறிகிறோம். இன்னும் ஆழ்ந்து விசாரிக்கும் போது மனமும் அதன் விருத்தி பேதங்களும் (மனோமயகோசம்) நாமல்ல என்று உணர்கிறோம். அடுத்தபடி எண்ண விருத்திகள் எங்கிருந்து கிளம்புகின்றன என்று கவனிக்க வேண்டும். விருத்திகள் தாமாகவே கிளம்பிக் கொண்டிருக்கின்றன - ஒன்று, மேலோட்டமான சாதாரண நினைவுகளாகவே, அல்லது ஆலோசிப்பவைகளாகவே எழுகின்றன. அவை புத்தியிலேயே இயங்குகின்றன. அவற்றை புத்திப்பூர்வமாக உணர்வது யார்?

எண்ணங்களின் இருப்பும், அவற்றின் தெளிவான விவரங்களும் இயக்கமும், 'நான்' எனும் தனி ஜீவனுக்கே தெரிகின்றன. இவ்வாறு எண்ணங்களின் இருப்பையும் தொடர்பையும் உணர்வது எதுவோ அதுவே ஜீவவியக்தி அல்லது 'நான்' எனும் அகங்காரம் (அகந்தை), புத்தி (விஞ்ஞானமய கோசம்) என்பது அகந்தையின் உபாதியே (செருகுவதற்குரிய கவச உறை மட்டுமே) அன்றி அதுவே அகந்தை ஆகாது. இந்த அகந்தை, அதாவது 'நான்', என்பது என்ன? அது எங்கிருந்து கிளம்புகிறது? கனவிலும் நனவிலும் அதே 'நான்' உடன் தொடர்கிறது. கனவைப் பற்றி நனவில் இப்போது விசாரிக்க வேண்டியது ஒன்றும் இல்லை.

விழிப்பு நிலையில் இப்போதுள்ள 'நான்' யார்? 'நான்' தூக்கத்திலிருந்து வெளிப்பட்டவன் எனின், தூங்கும் போது அறியாமை இருளில் 'நான்' அழுந்திக் கிடந்தேன் என்று விழித்தபின் தெரிகிறது. வேத சாஸ்திரங்களும் ஞானியரும் ஐயமறக் கூறும் ஆன்ம சொரூபம் அந்த அழுந்திடக் கிடந்த அகந்தையாகிய 'நான்' ஆக இருக்க முடியாது. தூக்கத்தைக் கடந்து இருப்பதும், தூக்கத்தின்போது கனவிலும், பின்னர் நனவிலும் அந்த நிலைகளின் குணங்கள் அறவே இல்லாமல் இருந்து வருவது எதுவோ அதுவே யதார்த்தமான நான்.

அவஸ்தாதிரயத்தின் (துயில், கனவு, நனவு ஆகிய மூன்று நிலைகளின்) சாட்சியாய் (சான்றாய், நேர்காட்சியாளனாய்), அதிஷ்டானமாய் (உறைவிடமாய்), குணங்குறியற்று இருப்பது எதுவோ அதுவே 'நான்' எனும் ஆன்ம சொரூபம், என்று இவ்வாறு அகமுக விசாரணையால் அனுபவத்துத் தெரிந்துகொள்ள வேண்டும்.

பஞ்ச கோசங்களையும் கடந்து நிற்பது ஆத்ம சொரூபம். ஆநாத்ம (ஆன்மா இல்லாத) தத்துவங்களை 'நானல்ல, நானல்ல' என்று ஒதுக்கித் தள்ளிய பிறகு அங்கே விளங்குவது தய சத்-சித்-ஆனந்த சொரூபமாம் ஆத்மாவே.

பஞ்ச கோசங்களாவன: அன்னமயம் (உடல்), பிராணமயம் (ஐம்பொறிகளும் பிராணனும்), மனோமயம் (ஐம்புலன்களும் மனமும்), விஞ்ஞானமயம் (ஞானேந்திரியமும் புத்தியும்) மற்றும் ஆனந்தமயம் (மாண்டூக்ய உபநிஷத்தில் கூறப்படும் ஆழ்ந்த உறக்க நிலை).

Best Blogger Gadgets

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக