பெண்களைத் திட்டாதீர்கள்-பாரதியார்

குடும்பத்தை விடுவோன் கடவுளைத் துறக்க முயற்சி பண்ணுகிறான். குடும்பம் நாகரிகமடையா விட்டால் தேசம் நாகரிகமடையாது. குடும்பத்தில் விடுதலையிராவிடில், தேசத்தில் விடுதலை இராது.

குடும்பத்திலிருந்து பொறுமை என்பதொரு தெய்வீக குணத்தையும், அதனால் விளையும் எண்ணற்ற சக்திகளையும் எய்த விரும்புவோர், தாய், மனைவி முதலிய ஸ்திரீகள் தமக்கு வெறுப்புண்டாகத் தகுந்த வார்த்தை பேசும் போது, வாயை மூடிக் கொண்டு பொறுமையுடன், கேட்டுக் கேட்டுப் பழக வேண்டும். அவ்வாறின்றி ஒரு ஸ்திரீ வாயைத் திறந்த மாத்திரத்திலேயே, அவள் மீது புலிப்பாய்ச்சல் பாயும் ஆண் மக்கள் நாளுக்கு நாள் பொங்கிப் பொங்கித் துயர்பட்டுத் துயர்பட்டு மடிவார்.


தான் ஒரு குற்றஞ் செய்தால், அதைச் சுண்டைக்காய் போலவும், அதே குற்றத்தை மற்றவன் செய்தால், அதைப் பூசணிக்காய் போலவும் நினைக்கிறார்கள். மூடன் தான் செய்த குற்றத்தை மறந்து விடுகிறான். அல்லது பிறருக்குத் தெரியாமல் மறைக்கிறான். அல்லதுபொய்க் காரணங்கள் சொல்லி, அது குற்றமில்லை என்று ருஜுப்படுத்த முயற்சி செய்கிறான். ஜனங்கள் குற்றஞ் செய்யாமல் நீதிக்காரர் பார்த்துக் கொள்ள வேண்டும். நீதிக்காரர் குற்றம் செய்யாமல் ஜனங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும்.

குற்றம் செய்த மனிதனைச் சீர்திருத்தி இனிமேல் அவன் குற்றம் செய்யாதபடி அறிவிலும் ஒழுக்கத்திலும் மேம்பட வழி செய்ய வேண்டும். குற்றத்திற்குக் காரணம் அறியாமை; அதை நீக்கும் வழி சத்சங்கமும்; தைரியமும். பிறர் குற்றங்களை மன்னிக்கும் குணம், குற்றமில்லாதவர்களிடத்திலே தான் காணப்படும்.

Best Blogger Gadgets

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக