ஏங்கல்ஸ் ராஜா, M.B.A (AGE. 27), விவசாயி

தாவரங்களை உருவாக்கி, தானியங்களை உணவாக்கி, உலகத்தின் பசி தீர்க்கும் விவசாயம், மனித குலத்தின் ஆதித் தொழில். இன்று யாவராலும் கைவிடப்பட்டதுவும் அதுவே!


"இந்த மண்ணும், பயிறும், சேறும், வெள்ளா மையும், விளைச்சலும், அறுப்பும், நடவும்தான் என் வாழ்க்கை. மண்ணில் கால்படாத எந்த வேலையும் மனசுக்குப் பிடிக்கிறதில்லை. படிச்சவங்க விவசாயம் செய்யக் கூடாதுன்னு சட்டம் எதுவும் இல்லையே!" - மென்மையான சொற்களால் பேசுகிறார் ஏங்கெல்ஸ் ராஜா. இளைய தலைமுறை விவசாயத்தைக் கைகழுவி விட்டு நகரங்கள் நோக்கி இடம்பெயர்ந்துகொண்டு இருக்க, எம்.பி.ஏ., படித்த இந்த 27 வயது இளைஞர் விவசாயத்துக்காகத் தன்னை அர்ப்பணித்திருக்கிறார். மாநிலம் முழுவதும் இயற்கை விவசாயம் குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதில் தீவிரம் காட்டும் இவர், இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வாரால் 'எனக்குப் பிறகு இவர்தான்' என்று அடையாளம் காட்டப் பட்டவர்!
"பட்டுக்கோட்டை பக்கம் பிச்சினிக்காடுதான் என் சொந்தக் கிராமம். தினந்தந்தியில் மேட்டூர் அணை நீர் மட்டம் பார்ப்பதையும், குறுவைக் கும் தாழடிக்கும் என்ன ரக நெல் போடலாம் என்று பேசுவதையும் தாண்டி, எங்கள் மக்க ளுக்கு வேறு ஒன்றும் தெரியாது. ஐந்து வயதில் பக்கத்து ஊரில் இருந்த தாத்தா-பாட்டி வீட்டுக்கு அனுப்பப்பட்ட நான், அங்கிருந்துதான் 5-ம் வகுப்பு வரை படித்தேன். பள்ளிக்கூடம் போவதே பிடிக்காது. தாத்தாவுடன் வயலுக்குப் போவதும், சேற்றில் இறங்கி விளையாடி வேலை பார்ப்பதும் மனதுக்கு நெருக்கமானதாக இருந்தது. அதிகாலைக் குளிர் வீசும் கருக்கலில் எழுந்து வயலுக்குத் தண்ணீர் பாய்ச்சுவதும், அறுப்பு நேரத்தில் காண்டக்காய் விளக்குடன் களத்தில் நெற்கட்டுக்களுக்குக் காவல் இருப் பதுமாக தாத்தாதான் என் விவசாய குரு. ஏழு வயதிலேயே தன்னந்தனியாக ரெட்டை மாட்டு வண்டி ஓட்டுவேன்.

'பையன் இப்படியே இருந்தால் வீணாப்போவான்' என்று நினைத்த அப்பா, என்னைத் திரும்பவும் ஊருக்கு அழைத்துச் சென்று பட்டுக்கோட்டைப் பள்ளியில் சேர்த்துவிட்டார். அங்கு 9-ம் வகுப்பில் ஃபெயில். எங்கள் ஊர், கம்யூனிஸ்ட்டுகள் அதிகம் உள்ள ஊர். என் அப்பா லெனினும் கம்யூனிஸ்ட் இயக்கத்தில்தான் இருந்தார். அதனால்தான் எனக்கு ஏங்கெல்ஸ் ராஜா எனப் பெயர் வைத்தார். 9-ம் வகுப்பில் ஃபெயில் ஆனவுடன் 'பள்ளிக்கூடத் தொல்லைவிட்டது' என நினைத்து, ஊரில் நடந்த கம்யூனிஸ வகுப்புகளுக்குப் போகத் தொடங்கினேன். முதலாளிகள், தொழிலாளர்கள், உழைப்புச் சுரண்டல், உலகப் பொருளாதாரம் என ஏதோ ஒன்று எனக்கு மசமசப்பாகப்புரிய ஆரம்பித்தது.வீட்டில் படிக்கச் சொல்லி தொந்தரவு செய்யவே, பத்தாம் வகுப்பை பிரைவேட்டாக எழுதினேன். மார்ச், அக்டோபர், மார்ச் என மாறிமாறி அட் டெம்ப்ட்டுகள், அத்தனையிலும் ஃபெயில். நான் காவது முறையாக எழுதி 187 மார்க் எடுத்து 10-ம் வகுப்பை பாஸ் செய்தேன். மறுபடியும் ப்ளஸ் டூ-வில் கணக்கில் ஃபெயில். அதையும் எழுதிப் பாஸ் ஆனபோது 'நான் காலேஜுக்கு எல்லாம் போக மாட்டேன்' என்றேன் முடிவாக. ஆனால், சொந்தக்காரர்களை எல்லாம் அழைத்து ஒருபஞ் சாயத்தே நடத்தி, என்னை கோயம்புத்தூர் கல்லூரி ஒன்றில் பிசினஸ் மேனேஜ்மென்ட் சேர்த்துவிட்டனர்.


முதல் நாளே ஒரு பேராசிரியை என்னை 10 நிமிடங்களுக்குத் திட்டினார். அவர் பேசிய இங்கிலீஷில் ஒரு வார்த்தையும் எனக்கு விளங்கவில்லை. திட்டி முடித்ததும், 'எனக்குப் புரியலை' என்றேன். நான் கிண்டல் பண்ணுவதாக நினைத்தவர், கோபமாக வெளியேறினார். அன்று முதல் கடைசி பெஞ்ச்தான் என் இருப்பிடம். கடைசி வருடம் கேம்பஸ் இன்டர்வியூவுக்காகப் பல நிறுவனங்கள் கல்லூரிக்கு வந்தன. 'நீ என்னவாகப் போறே?' என்று கேட்டார்கள் ஒவ்வொருவரிடமும். அமெரிக்கக் கனவு முதல் பெரிய நிறுவனங்களின் உயர் பதவிகள் வரை பலரும் பலவற்றைச் சொன்னார்கள்.

நான் கொஞ்சமும் தயங்காமல் 'விவசாயம் செய்யப்போறேன். விவசாயத்தோடு சேர்த்து ஆட்டுப் பண்ணையும், மீன் பண்ணையும் வைக்கப்போறேன்' என்றதும் அறை எங்கும் சிரிப்பு. நான் கொஞ்சம் தாழ்வுணர்ச்சிஅடைந்த போது, எனக்காக ஒரே ஒரு குரல் ஒலித்தது. ஹெச்.ஓ.டி. சந்தியா மேடம், 'அவன் சொன்னதில் என்ன தப்பு? அவன் தன் விருப்பத் தைச் சொல்றான். இதுக்கு ஏன் சிரிக்கிறீங்க?' என்று கறாராகக் கேட்டவர், 'ஒரு மாணவனை அவமானப்படுத்திவிட்டீர்கள்' என்று சொல்லி அந்த இன்டர்வியூ போர்டையே திருப்பி அனுப்பினார். நான் அவமானப்பட்டு கூனிக் குறுகி நின்ற சமயத்தில் எனக்காக ஒலித்த ஒரே குரல் சந்தியா மேடத்தினுடையது.

பிறகு, காரைக்குடி அழகப்பாவில் எம்.பி.ஏ., முடித்ததும் நேராக ஊருக்குப் போய் விவசாயம் செய்யத் தொடங்கினேன். என் அப்பா இயற்கை விவசாயம் செய்ய, அதைக் கிண்டல் அடித்துவிட்டு நான் ரசாயன உரங்களைக்கொண்டு வெள்ளாமை பார்த்தேன். இரண்டு பேருக்கும் முட்டலும் மோதலுமாகப் போய்க்கொண்டு இருந்த சமயத் தில்தான் தமிழகத்தை சுனாமி தாக்கியது. உயிரிழப்புகள், அதை ஒட்டிய நிவாரணப் பணிகள் எல்லாம் நடந்துகொண்டு இருக்க,கடற் கரையை ஒட்டிய விவசாய நிலங்கள் கடுமையாகப் பாதிக்கப் பட்டன.

சீறி வந்த சுனாமி, உப்புச் சகதியை வயலில் குவித்துச் சென்றுவிட, விவசாயமே செய்ய முடியாத நிலைமை. வயல்கள் மட்டுமின்றி, ஆயிரக்கணக்கான குளம், குட்டைகளும் முழுவதுமாகப் பாதிக்கப் பட்டன. இவற்றைச் சீர்செய்யும் நோக்கத்துடன் நம்மாழ்வார் வேலை பார்க்கத் தொடங்கினார். என் அப்பாவுக்கு நம்மாழ்வாருடன் பழக்கம் இருந்ததால், என்னை நாகப்பட்டினத்துக்கு அனுப்பிவைத்தார். நரை தாடியும், ஒல்லியான தேகமுமாக இருந்த நம்மாழ்வாருடன் பழக ஆரம்பித்தேன்.

வேதாரணயம் தொடங்கி சீர்காழி வரைக்கும் 28 கிராமங்களைச் சேர்ந்த 5,500 ஏக்கர் நிலங்கள் பாதிக்கப்பட்டு இருந்தன. 10 ஆயிரத்துக்கும் அதிகமான சிறிய விவசாயக் குட்டைகள் கடல் சகதியால் மூடப்பட்டு இருந்தன. ஒவ்வொரு கிராமமாகத் தங்கி, அத்தனை நிலங்களையும் விவசாயத்துக்கு உகந்ததாக மாற்றினோம். மறுபடியும் ஒரு கடல் சீற்றம் வந்தால்கூட பாதிப்பு ஏற்படாதவாறு பனை மரங்களை நட்டு தடுப்புகளை ஏற்படுத்தினோம். 2 வருடங்கள் 20 பேர் இந்த வேலையைச் செய்து முடித்தபோது, 'ஏங்கெல்ஸை என்கிட்ட தந்துடுங்க' என்று என் பெற்றோரிடம் கேட்டு வந்தார் நம்மாழ்வார். இப்போது அவர்தான் எனக்கு ஞானத் தந்தை.

கரூர் பக்கத்தில் கடவூரில் காலம் காலமாக விவசாயமே செய்யப் படாத 35 ஏக்கர் பாறை நிலத்தை வாங்கிச் செம்மைப்படுத்தி விவசாயம் செய்யத் தொடங்கி இருக்கிறோம். இதன் வெற்றி, அந்தப் பகுதியின் ஆயிரக்கணக்கான ஏக்கர் தரிசு நிலங்களை விவசாயப் பூமியாக மாற்றும்!
தமிழர்களின் பாரம்பரிய நெல் வகைகள் பழங்காலத்தில் நூற்றுக்கும் மேல் இருந்து, அவை பெரும்பாலும் அழிந்து போய்விட்டன. அவற்றைச் சேகரித்துப் பயிரிட்டுப் பரவலாக்கும் பணியைச் செய்கிறோம்.

படித்தவர்கள் விவசாய வேலைகளுக்கு வருவது இல்லை என்பதை ஒரு குற்றச் சாட்டாகவே நாம் சொல்கிறோம். ஆனால், விவசாயத்தை விரும்பிச்செய்வ தற்குரிய சூழல் இங்கு இல்லை. செலவு குறைந்த பாரம்பரிய இயற்கை விவசா யத்தை ஊக்குவிக்க வேண்டிய அரசுகள், பன்னாட்டு உர நிறுவனங்களின் கமிஷன் களுக்காக ஒவ்வொரு வருடமும் உர இறக்குமதியை அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. நமது நிலம் ரசாயன உரங்களால் விஷமேற்றப்பட்டு இருக்கிறது. நம் பாட்டனும், முப்பாட்டனும் செய்த விவசாயத்தை இந்த சமீப காலஎதிரிகளுக்குப் பயந்து ஏன் கைவிட வேண்டும்? இந்த எதிரிகளை விரட்ட, படித்த இளைஞர்கள் பெருமளவுக்கு விவசாயத்தை நோக்கி வர வேண்டும். அவர்கள் அத்தனை பேருடனும் கை குலுக்க நான் என் இரு கரங்களையும் தயாராகவைத்திருக்கிறேன்!"

ஏங்கெல்ஸ் ராஜா அலைபேசி எண் : 94421-21473

நன்றி : இளமை விகடன்

ஓட்டுப்போட என்னை அழுத்து


Best Blogger Gadgets

3 கருத்துகள் :

பெயரில்லா சொன்னது…

படித்தவர்கள் விவசாய வேலைகளுக்கு வருவது இல்லை என்பதை ஒரு குற்றச் சாட்டாகவே நாம் சொல்கிறோம். ஆனால், விவசாயத்தை விரும்பிச்செய்வ தற்குரிய சூழல் இங்கு இல்லை. செலவு குறைந்த பாரம்பரிய இயற்கை விவசா யத்தை ஊக்குவிக்க வேண்டிய அரசுகள், பன்னாட்டு உர நிறுவனங்களின் கமிஷன் களுக்காக ஒவ்வொரு வருடமும் உர இறக்குமதியை அதிகரித்துக்கொண்டே செல்கின்றன.

வடுவூர் குமார் சொன்னது…

என‌க்கும் விவ‌சாய‌த்தில் ஆர்வ‌ம் தான் ஆனால் கால‌ம் க‌ட‌ந்துவிட்ட‌து.ஆர்வ‌ம் என்ப‌தால் ப‌திவு க‌டைசி வ‌ரை ப‌டித்தேன்.
நாக‌ப்ப‌ட்டிண‌த்தில் (நில‌ சீர்திருத்த‌ம்) செய்த‌ முறை ப‌ற்றி ஒரு ப‌திவில் சொல்லுங்க‌ளேன்.

sandhiya சொன்னது…

hai mr.raja

I like your enthusiasm. I am in Chennai and worked as web developer and SEO Analysis. In chennai i can't see human. they are act like a machine. They required only output. When i saw your profile i feel " i am live in human society " thank you for made opportunity to read about you. Its give me a confidence to live. Because here everyone consider money money money. They won't bother about anyone. I am searching human. I have anger with human because i believe human is cancer of the earth.

bye
all the best for your approach in nature way.
Keep going.

I became very happy read about you
sandhiya.

கருத்துரையிடுக

படிக்க வந்த நண்பர்களெல்லாம் ஒட்டு போட்டுட்டு போங்களே!!

இந்த இடுகை உங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் வாக்களிக்கவும்.


தமிழ்மணத்தில் ஆதரவு வாக்களிக்க உள்ள கருவிபட்டையில் மேல்நோக்கியுள்ள கைவிரலை சொடுக்கவும்