''காமராஜர் யாரு தெரியுமா..?'' ''விஜய் தெரியுமா..?''


ஐ.ஏ.எஸ். அதிகாரிகளில் இந்தியாவிலேயே முதன் முதலில் தனது சொத்துக்கணக்கை பகிரங்கமாக வெளியிட்டவர், நாமக்கல் மாவட்ட கலெக்டரான சகாயம்தான்! 'எளிமையானவர், மக்கள் எளிதில் சந்திக்கக் கூடியவர்' என்று சொல்லப்படும் சகாயத்தை சந்திக்க நாமக்கல் சென்றிருந்தோம்.

''அதிகாரிங்க யாருக்கும் தகவல் சொல்லாம சர்ப்ரைஸா சில இடங்களுக்கு நீங்க விசிட் போனா நல்லா இருக்குமே சார்...'' என்று நாம் சொல்ல... சற்றே யோசித்தவர்... ''அவ்வப்போது செய்வதுதான். வாங்களேன், இப்பவும் போய்ப் பார்க்கலாம்!'' என்று தயாரானார். அடுத்த சில நிமிடங்களில் கலெக்டர் சகாயம், அவரது உதவியாளர் மாதேஸ்வரனுடன் கார் கிளம்பியது. நாமும்தான் இலவச இணைப்பாக! ''எங்கே முதல்ல போகலாம்..? நீங்களே சொல்லுங்க...'' என்று கலெக்டர் கேட்டதும், நமக்கிருந்த சில தகவல் அடிப்படையில் ராசிபுரம் செல்லும் ரூட்டில் போகச் சொன்னோம்.

வழியில் 85.குமாரபாளையம் என்ற ஒரு குக்கிராமத்தில் வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் வேலை நடந்து கொண்டிருந்தது. அங்கு காரை நிறுத்தச் சொல்லி இறங்கிய கலெக்டர், வேலை செய்தவர்களிடம், ''நான்தான் உங்க மாவட்டத்தோட கலெக்டர் சகாயம். உங்களுக்கு இங்க கூலியெல்லாம் சரியா கொடுக்குறாங்களா..?'' என்று விசாரித்தார். ''அதெல்லாம் சரியா கொடுத்துடுறாங்க சாமி... ரேஷன் கடையில அரிசி, பருப்புதான் சரியா கிடைக்கலை!'' என்று வயதான பாட்டி ஒருவர் சொல்ல... அவரிடம், ''ஏம்மா... இந்த வயசுல நீ எதுக்கு வேலைக்கு வர்ற..? உன் பசங்க எல்லாம் என்ன பண்றாங்க..?'' என்று பரிவோடு விசாரித்தார்.

''மூணு பசங்க சாமி... வயசான காலத்துல யாரும் கண்டுக்க மாட்டேங்குறாங்க. இப்படி ஏதாவது வேலைக்கு வந்து நாலு காசு சம்பாதிச்சாதான் கஞ்சி குடிக்க முடியும்!'' என்று பாட்டி புலம்ப... ''பெத்தவங்களைக் கண்டுக்காமத் தவிக்கவிடுற பசங்களை ஜெயில்ல போடுறதுக்குக்கூட இப்போ சட்டம் இருக்கு. உன் பசங்களை ஜெயிலுக்கு அனுப்பிட லாமா, சொல்லுங்க...'' என்றார். பதறிப்போன பாட்டி, ''வேணாம் சாமி... அவனுங்க நல்லபடியா பொழைக்கட்டும். இருக்குற வரைக்கும் ஏதோ உழைச்சு, கஞ்சியோ கூழோ குடிச்சுக்கிறேன்! ரேஷன் கடையில அரிசி, பருப்பு மட்டும் போடச் சொல்லுங்க, போதும்!'' என்று கேட்டுக் கொண்டார்.

செல்போனை எடுத்த சகாயம், மாவட்ட வட்ட வழங்கல் அதிகாரிக்கு போனை போட்டார். ''ராசிபுரம் பக்கத்துல 85.குமாரபாளையம்ங்குற கிராமத்துல ரேஷன் பொருள் எதுவும் சரியா கிடைக்கிறதில்லையாமே! நீங்க உடனே அந்தக் கிராமத்துக்குப் போய் அங்கே என்ன நடக்குதுன்னு வாட்ச் பண்ணி சாயந்திரத்துக்குள் ரிப்போர்ட் கொடுங்க!'' என்று உத்தரவிட்டவர், அங்கிருந்த பதிவேட்டை சரிபார்த்துவிட்டுக் கிளம்பினார்.

வழியில் ஒரு பிரிவு ரோடு வர, அந்த வழியில் காரை விடச் சொன்னார் கலெக்டர். 'ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பொ.கல்பாளையம்' என ஒரு போர்டு தெரிய, அந்த ஸ்கூலுக்கு போனார். கலெக்டரின் காரைப் பார்த்ததும் பள்ளியின் தலைமையாசிரியர் மிரண்டு விட்டார்!


''எல்லோரும் போய் அவங்கவங்க வேலையைப் பாருங்க...'' என்று சொல்லிவிட்டு, 6-ம் வகுப்புக்குள் நுழைந்தார் சகாயம். ஒரு மாணவனை எழுப்பி ஆங்கிலப் புத்தகத்தில் ஒரு பத்தியை வாசிக்கச் சொன்னார். அந்த மாணவன் தடுமாற... அடுத்த மாணவனை படிக்கச் சொன்னார். அவனும் தடுமாறினான். ''இந்த வகுப்புக்கு இங்கிலீஷ் எடுக்குற டீச்சரை வரச் சொல்லுங்க!'' என்று சொல்லியனுப்ப... ஆங்கில ஆசிரியர் பயந்தபடியே வந்து நின்றார். ''உங்களுக்குக் கல்யாணம் ஆகிடுச்சா சார்..? எத்தனை குழந்தைங்க..?'' என்று கலெக்டர் கேட்க, ''ஆகிடுச்சு சார்... ரெண்டு குழந்தைங்க..'' என்று சொன்னார். ''எங்க படிக்கிறாங்க..?'' என்று கலெக்டர் கேட்க, ஒரு தனியார் பள்ளியின் பெயரைச்சொன்னார்.

''நீங்க இப்படி பாடம் சொல்லிக் கொடுத்தா... நாளைக்கு இந்தக் குழந்தைங்க படிச்சுட்டு வரும்போது, டவுன்ல படிச்சு வர்ற உங்க குழந்தைங் களோட எப்படி போட்டி போட முடியும், சொல்லுங்க..? கொஞ்சமாவது அக்கறையோட சொல்லிக் கொடுங்க சார். மறுபடியும் எப்ப வேணும்னாலும் ஸ்கூலுக்கு வருவேன். அப்போ இவங்க ஆங்கி லத்தை தெளிவா படிக்கணும். இல்லைன்னா, உங்க மேல நடவடிக்கை எடுக்கவேண்டியிருக்கும்!'' என எச்சரித் தார்.
அடுத்து மூன்றாம் வகுப்புக்குள் நுழைந்தவர், அங்கிருந்த குழந்தைகளைப் பார்த்து, ''சுபாஷ் சந்திரபோஸ் யாருன்னு சொல்லுங்க பார்க்கலாம்...'' என்று கேட்க... யாருக்குமே தெரியவில்லை. ''காமராஜர் யாரு தெரியுமா..?'' என்று அடுத்த கேள்வியை வீச... அதற்கும் ம்ஹ¨ம்! ''விஜய் தெரியுமா..?'' என்று கேட்டதுதான் தாமதம்... ஒரு பையன் எழுந்து, ''சார், விஜய் சினிமாவுல நடிக்கிறாரு. இப்போ 'வேட்டைக்காரன்'ல நடிச்சிருக்காரு!'' என்று சொல்லவும், கலெக்டர் சிரித்து விட்டார். அந்த வகுப்பு ஆசிரியரைக் கூப்பிட்டு, ''கிளாஸ் ரூம்ல தலைவர்களோட படங்களை மாட்டி வையுங்க. 'அவங்க யாரு..? என்னவெல்லாம் செஞ்சாங்க'ன்னு சொல்லிக் கொடுங்க. அவங்கதானே நம்ம நாட்டின் நிஜமான ஹீரோக்கள்!'' என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார்.

அடுத்து, ராசிபுரம் நோக்கி கார் பறந்தது. புது பஸ் ஸ்டாண்டுக்கு அருகில் ஒன்வேயில் கார் போகும்போது, எதிரில் தனியார் பேருந்து ஒன்று அதிவேகத்தில் வந்தது. காரை நிறுத்தச் சொல்லி அந்த பேருந்தை வழிமறித்தார் கலெக்டர். பஸ்ஸுக்குள் ஏறிய கலெக்டர், ''நோ என்ட்ரியில எதுக்கு தம்பி இவ்வளவு வேகமா ஓட்டிக்கிட்டு வர்ற..? எதிர்ல வர்றவங்க கதி என்னாகுறது? உன் டிரைவிங் லைசென்ஸை எடு..?'' என்று கலெக்டர் கேட்கவும், ஆடிப்போனார் பஸ் டிரைவர்.
''சார் லேட்டாயிடுச்சு. அதான் வந்துட்டேன். மன்னிச் சிடுங்க சார்... டிரைவிங் லைசென்ஸ் வீட்டுல இருக்கு...'' என்று மென்று முழுங்கினார். போனை எடுத்த கலெக்டர், வட்டார போக்குவரத்து அலுவலரை கூப்பிட்டார். அடுத்த பத்து நிமிடத்தில் அவர் வந்து சேர, ''இந்த பஸ் ஓவர் ஸ்பீடு. நோ என்ட்ரியில வந்திருக்கு. இவருகிட்ட லைசென்ஸ் இல்ல. உடனே ஃபைன் போடுங்க...'' என்று உத்தரவு போட்டார்.
ரவுண்ட்-அப்பை முடித்துக்கொண்டு கிளம்பும்போது கலெக்டர் நம்மிடம், ''பொது மக்களோட குறைகளை தீர்த்துவைக்கத்தான் நான் இங்கே இருக்கேன். என்னை எந்த நேரத்திலும் மக்கள் சந்திக்கலாம். நேர்ல வரணுங்குற அவசியம்கூட இல்ல. என் னோட செல் நம்பருக்கு (9444163000) ஒரு போனோ மெஸேஜோ போதும். கண்டிப்பா நடவடிக்கை எடுப்பேன்!'' என்று சொல்லி நமக்கு விடை கொடுத்தார்.
அயராமல் உழைத்துக்கொண்டே இருக்கும் முதல்வருக்கு ஈடுகொடுக்க, இப்படி அயராமல் ஓடி நேரில் மக்களைச் சந்திக்க இன்னும் நிறைய அதிகாரிகள் முன்வர வேண்டும்.
- கே.ராஜாதிருவேங்கடம்
படங்கள்: எம்.விஜயகுமார்

________________________
நன்றி ஜூனியர் விகடன்

ஓட்டுப்போட என்னை அழுத்து


Best Blogger Gadgets

2 கருத்துகள் :

பெயரில்லா சொன்னது…

''நீங்க இப்படி பாடம் சொல்லிக் கொடுத்தா... நாளைக்கு இந்தக் குழந்தைங்க படிச்சுட்டு வரும்போது, டவுன்ல படிச்சு வர்ற உங்க குழந்தைங் களோட எப்படி போட்டி போட முடியும், சொல்லுங்க..? கொஞ்சமாவது அக்கறையோட சொல்லிக் கொடுங்க சார். மறுபடியும் எப்ப வேணும்னாலும் ஸ்கூலுக்கு வருவேன்.

வடுவூர் குமார் சொன்னது…

அந்த‌ க‌லெக்ட‌ரை இப்ப‌டியே வேலை செய்ய‌விட‌னும்.ம‌ன‌தார‌ வாழ்த்துக்க‌ள் அவ‌ருக்கு.

கருத்துரையிடுக

படிக்க வந்த நண்பர்களெல்லாம் ஒட்டு போட்டுட்டு போங்களே!!

இந்த இடுகை உங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் வாக்களிக்கவும்.


தமிழ்மணத்தில் ஆதரவு வாக்களிக்க உள்ள கருவிபட்டையில் மேல்நோக்கியுள்ள கைவிரலை சொடுக்கவும்