அண்ணல் காந்தி அடிகள் விதைத்த ஒருமைப்பாட்டுச் சிந்தனை

நம்பிக்கை,​​ அர்ப்பணிப்பு உணர்வு ஆகிய கொள்கைகளின் அடிப்படையில் புதிய இந்தியா உருவாக்கப்பட வேண்டுமென்று எண்ணிய சமுதாயச் சிற்பி அண்ணல் காந்தியடிகள்.

அண்ணல் காந்தி அடிகள் தன் வாழ்நாளில் குறிப்பிட்டுக் காட்டிய மாநில ஒற்றுமை,​​ அதனால் உண்டாகும் வலிமையான பாரதம் ஆகிய கொள்கைகள் இன்றளவுக்கும் இந்தியாவுக்குப் பொருத்தமுடைய கொள்கைகளே.​ இத்தகைய ஒற்றுமை உணர்வை இந்தியாவுக்குள் அவர் உண்டாக்கியதால்தான் உலக சமாதானத்துக்கு வழிகாட்டும் தலைமைப்பண்புக்கு ஏற்ற நாடு என்ற தகுதி,​​ உலக அளவில் இந்தியாவுக்குக் கிடைத்தது.

இன்றைய இந்திய மாநிலங்களில் குறிப்பாக ஒன்றுபட்ட ஆந்திரத்தில் தனித் தெலங்கானா மாநிலம் ஏற்படுத்தக்கோரி,​​ தொடர் கிளர்ச்சிகள் நடக்கின்றன.​ தனி கூர்க்காலாந்து மாநிலம் வழங்கக்கோரி மேற்கு வங்கத்திலும்,​​ தனி விதர்பா மாநிலம் உருவாக்க வேண்டுமென்ற கருத்து உருவாகி மகாராஷ்டிரத்திலும் தொடர் ​ ஆர்ப்பாட்டங்கள் நடக்கின்றன.​ அத்துடன் மாநில உணர்வுகள் தலை தூக்கி அண்டை மாநிலங்களுடன் நடந்து வரும் பங்காளிச் சண்டைகள்.

உதாரணத்துக்குத் தமிழகத்துக்கும்,​​ கேரளத்துக்கும் இடையில் நடைபெற்று வரும் முல்லைப் பெரியாறு பிரச்னை.​ தமிழகத்துக்கும் கர்நாடகத்துக்கும் இடையே இன்று வரை முடிவுக்கு வராத காவிரி நதி நீர்ப் பிரச்னை.

தமிழகத்துக்கும்,​​ அண்டை மாநிலமான ஆந்திரத்துக்கும் இடையே பாலாற்றின் குறுக்கே அணை கட்டுவதில் பிரச்னை.​ தேசிய உணர்வுகள் மழுங்கடிக்கப்பட்டு மாநில உணர்வுகள் மேலோங்கி உள்ள இன்றைய நிகழ்வுகளால்,​​ இந்தியா என்ற கட்டுக்கோப்பான,​​ உறுதியான ஒன்றிய உணர்வுக்கு எந்த வகையிலும் சேதம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதே தேசிய உணர்வுள்ளோரின் கவலை.

அன்னியர்கள் இந்தியாவில் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்ட எண்ணிய காலத்தில்,​​ அன்றைய இந்தியா சிறு சிறு அரசுகளாய்ப் பிரிந்து,​​ துண்டு துண்டாய் அமைந்திருந்தமையால்,​​ அன்னியர்கள் தங்கள் பிரித்தாளும் சூழ்ச்சியின் மூலம் அந்த அரசுகளை அடிமைப்படுத்துவதற்கு ஏதுவான சூழல் இருந்தது.​ அந்த நிலை மீண்டும் உண்டாகத் துணை போகக் கூடாது.

உடலுக்கு,​​ தலை முதல் கால்வரை எவ்வாறு சீரான ரத்த ஓட்டம் அவசியமோ அதைப்போல் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை வாழ்கின்ற மக்கள் அனைவருக்கும்,​​ நம் அரசியல் சாசனத்தின்படி கிடைக்க வேண்டிய அடிப்படை வசதிகளும் அனைத்துப் பயன்களும் ஒரே மாதிரி சீராகக் கிடைக்கச் செய்வது மத்திய,​​ மாநில அரசுகளின் தலையாய கடமையாகும்.​ ​

அதிலிருந்து அரசுகள் பிறழ்கின்ற போதும்,​​ அதனால் தங்களுக்கு வேண்டிய சமநீதி கிடைக்காத போதும் அப்பகுதி மக்களுக்குத் தனித்துச் செல்ல வேண்டும் என்ற நோக்கமும்,​​ தங்கள் நோக்கம் நிறைவேறப் போராட்டம் என்ற ஆயுதத்தைக் கையில் ஏந்தலாம் என்ற எண்ணமும் உண்டாகிறது.

இந்தியா என்பது மொழிவாரி அடிப்படையில்,​​ பல மாநிலங்களாகப் பிரிந்திருந்தாலும்,​​ இத்தகைய மாநில அடிப்படையிலான தேசியத்தின் மீதும்,​​ அதன் ஒற்றுமை மீதும் அளவற்ற நம்பிக்கை உடையவராக அண்ணல் காந்தி விளங்கினார்.​ ​

ஒவ்வொரு மாநிலமும் தங்களுக்கென தனியான,​​ தனித்தன்மையும்,​​ தனி மொழி மற்றும் நாகரிக நடவடிக்கைகளை உள்ளடக்கியதாகவும் இருந்ததை அவர் பெரிதும் விரும்பி வரவேற்றார்.​ ​ அத்தகைய தனித்துவம் அந்த மாநிலங்களுக்கு இல்லையெனில்,​​ அவை தனி மாநிலங்களாக இருக்க வேண்டிய அவசியமே இல்லை என்றார்.​ ​ நம்முடைய இந்திய மாகாணங்கள் மிகப்பெரிய ஆறுகளாலும்,​​ உபநதிகளாலும் சூழப்பெற்று வல்லமை மிக்கதாய் அமைந்துள்ளன.​ அவைகளின் வல்லமையும்,​​ பூரணத் தன்மையும் போற்றுதலுக்குரியதாகவே இருக்கலாம்.

இத்தகைய உணர்வுகள் எல்லாம் அவரவர் தம் மாநிலங்களுக்குள்ளேயே இருக்க வேண்டும்.​ ​ மகாகவி ரவீந்திரநாத் தாகூரின் படைப்புகள் இந்தியா முழுமையும் ஊடுருவிப் பாய்ந்து,​​ பரந்து அவர்தம் பெருமையை உலகம் முழுவதும் பறைசாற்றலாம்.​ ​ அவர் வங்காளத்துக்கு மட்டுமே சொந்தமானவர் என்று யாரும் சொந்தம் கொண்டாட முடியாது.​ தாதாபாய் நெüரோஜி மகாராஷ்டிரத்துக்கோ அல்லது பார்சிகளுக்கு மட்டுமே உரியவர் அன்று.​ அவர் இந்தியா முழுமைக்கும் உரிமையானவர் ஆவார் என்று எடுத்துக்கூறி அண்ணல் காந்தி,​​ தன் இந்திய உணர்வைப் பறைசாற்றினார்.​ அதே நேரத்தில் மாநில உணர்வுகள் நிச்சயம் மதிக்கப்படவேண்டும் என்றும் வலியுறுத்தியவர் ​ காந்திஜி.​ 2.5.1915-ல் மயிலாடுதுறைக்கு அவர் வந்தபோது தமிழ்நாட்டு மக்கள் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை அளித்தனர்.​ அவருக்குப் படித்தளித்த வரவேற்பு இதழ் ஆங்கிலத்தில் அமைந்திருந்தது.

அப்போது மகாத்மா கோபப்பட்டுச் சொன்னார்.​ ""காங்கிரசின் திட்டங்களில் சுதேசி பற்றிய தீர்மானம் இருக்கிறது.​ ​ நீங்களோ உங்களது வரவேற்பு உரையை ஆங்கிலத்தில் அச்சிட்டுள்ளீர்கள்.​ ஆங்கிலத்தின் மீது எனக்கு வெறுப்புக் கிடையாது.​ ஆனாலும் தாய் மொழியைக் கொன்று விட்டு அதன் சமாதியின் மீது ஆங்கில மொழியை வளர்த்தீர்களானால் நீங்கள் சரியான முறையில் சுதேசியத்தைக் கடைபிடிக்கவில்லை என்பதுதான் பொருள்'' என்று கூறி மாநில உணர்வுகளின் அடிப்படையில் அமைவதுதான் உண்மையான தேசியம் என்று தன் கருத்தைப் பதிவு செய்தார்.

நாடு சுதந்திரம் பெற்றதற்குப் பின்பும்,​​ அரும்பாடுபட்டு,​​ பெற்ற சுதந்திரம் பாதுகாக்கப்பட தேச ஒற்றுமையை வலியுறுத்திய அண்ணல்,​​ இந்தியாவின் எந்த மாநிலத்திலும்,​​ மற்ற மாநிலத்தைச் சார்ந்தவர்கள் சென்று வரவும்,​​ அங்கு வாழவும் பாதுகாப்பு வழிவகைகளை அந்தந்த மாநில அரசுகள் விழிப்புடன் இருந்து செய்து தர வேண்டும் என்று கூறினார்.​ மற்ற மாநிலங்களிலிருந்து இடம் பெயர்ந்து வேறொரு மாநிலத்துக்கு வருபவர்கள் நாமும் இந்த மாநிலத்தைச் சார்ந்தவரே என்று எண்ணும் அளவுக்கு இணக்கத் தன்மையுடன் நடந்துகொள்ள வேண்டுமென்ற தன்னுடைய கருத்தை 21.9.1947 அரிஜன் இதழில் அவர் தெளிவுபடுத்தினார்.​ எல்லா மாநிலங்களும் இந்தியாவுக்குச் சொந்தமானது.​ ​ இந்தியா எல்லா மாநிலங்களுக்கும் சொந்தமானது.​ ​ இத்தகைய தன்மையுடன் நடந்துகொண்டால்,​​ இப்போக்கையே செயல்படுத்த மக்கள் அனைவரும் எண்ணினால் மேலும்,​​ மேலும் மாநிலங்களை உருவாக்கும் எண்ணத்துக்கு வேலையே இல்லை என்ற தன் எண்ணத்தை 7.11.1947 அரிஜன் இதழ் மூலம் பதிவு செய்தார்.

இந்திய மக்கள் அனைவரின் நலனையும் கருத்தில் கொண்டு வலிமையான இந்தியா என்ற பொது நோக்கத்துக்காகவும் மக்களுக்கு ஏற்படும் துன்பங்களைப் பகிர்ந்துகொள்வதற்காகவும் ஒற்றுமையை வலியுறுத்துகிறேன்.​ அதுவே தேச ஒற்றுமை நிலைபெற வழிவகுக்கும் என்றும் அண்ணல் குறிப்பிட்டார்.​ எவ்வகையிலும் நாடு பிரிக்கப்படுவதையோ,​​ துண்டாடப்படுவதையோ அவர் விரும்பவில்லை என்பதுடன் அதன் விளைவு குறித்த எச்சரிக்கையையும் விடுக்கத் தவறவில்லை.​ இந்தியா மிகப்பெரிய நாடு.​ அதனுள் இருக்கும் கனிமங்கள்,​​ தாதுக்கள் மற்றும் வாசனைப் பொருள்கள் உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லை என்பதுடன் அத்தகைய வளங்களை அவர்களால் உருவாக்கவும் முடியாது.

நாம் நமக்குள் சண்டையிட்டுக்கொண்டு இருந்தால் உலகில் சக்தி வாய்ந்த அதிகாரம் கொண்டவர்கள் நம்மீது ஆக்கிரமித்து இந்தியர்களிடமிருந்து,​​ இந்தியாவைப் பறித்து விடக்கூடும்.​ அத்துடன்,​​ நம்முடைய அனைத்து வளங்களும் நம்மை விட்டுச் சென்று விடும் என்ற எச்சரிக்கையை 17.11.1946 அரிஜன் இதழ் மூலம் விடுத்தார்.

அண்ணல் காந்தி வலியுறுத்திய நாட்டுப்பற்று என்பது இந்தியாவின் நன்மைக்காகவும்,​​ அதன் வலிமைக்காகவும் மட்டுமன்றி,​​ அது உலகம் தழுவியதாக இருக்க வேண்டுமென்று எண்ணினார்.​ ​ இந்த எண்ணத்தின் அடிப்படையில் தான் பின் நாளில் அவரது நிழலாய் இருந்த தேசியத் தலைவர்கள் பஞ்சசீலக் கொள்கையை உருவாக்கினார்கள்.​ ஒரு மனிதன் நாட்டுப்பற்றுக் கொண்டவனாக இருந்தால் மட்டுமே அவன் உலகப் பற்றாளனாக இருக்க முடியும் என்று அண்ணல் எடுத்துரைத்தார்.

வலிமை மிக்க,​​ வளமையான பாரதம் என்பது அவரின் லட்சியமாகவும்,​​ உலக சமாதானம் என்பது அவரது இலக்காகவும் இருந்தது.​ ​ ரஷிய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய்,​​ காந்தியின் எழுத்துகளைப் பற்றி குறிப்பிடுகின்றபோது,​​ ""காந்தி,​​ இந்தியாவுக்காக மட்டும் எழுதவில்லை,​​ அவர் உலகத்துக்காகவும் எழுதுகிறார்'' என்று குறிப்பிட்டார்.

அண்ணல் காந்தி தெரிவித்த ஒவ்வொரு கருத்தும்,​​ அவர் நமக்களித்த செய்திகளும் புறத்தூய்மையோடும்,​​ அகத்தூய்மையோடும் அவர் வாழ்ந்து காட்டிய நெறிமுறைகளும் இந்தியாவைப் பொறுத்தவரையில் இன்னும் எத்தனை நூறாண்டுகள் கடந்தாலும் அன்றைய இந்திய சூழலுக்கும் ஏற்புடைய கருத்துகளாய் இருக்கும்.​ ஆகவேதான் 1921-ம் ஆண்டில் தான் மரணமடைவதற்கு முன்னரே,​​

"முடிவில்லா கீர்த்தி பெற்றாய் ​

புவிக்குள்ளே முதன்மையுற்றாய்''

என்று அண்ணல் காந்தியைப் பற்றி தன்னுடைய மதிப்பீட்டை சாசனமாகப் பதிவு செய்து விட்டுச் சென்றார் மகாகவி பாரதியார்.

ஓட்டுப்போட என்னை அழுத்து


Best Blogger Gadgets

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

படிக்க வந்த நண்பர்களெல்லாம் ஒட்டு போட்டுட்டு போங்களே!!

இந்த இடுகை உங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் வாக்களிக்கவும்.


தமிழ்மணத்தில் ஆதரவு வாக்களிக்க உள்ள கருவிபட்டையில் மேல்நோக்கியுள்ள கைவிரலை சொடுக்கவும்