இந்தியா முழு சுகாதாரம் என்பது எட்டாக்கனியாகி விடாது..!​​

100 கோடியைத் தாண்டிய மக்கள்தொகை,உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு,​​ கணினி,​​ விண்வெளித் துறையில் வல்லரசுகளோடு போட்டிபோடும் வளர்ச்சி,​​ 50 கோடிக்கும் மேற்பட்ட இளைஞர்களுடன் ஏராளமான மனிதவளம்,​​ மதம்,​​ மொழிகளால் பிளவுபட்டிருந்தாலும் அரை நூற்றாண்டுக்கும் மேலாக ஒன்றுபட்டிருக்கும் தேசம் என ​ இந்தியா பற்றிய கண்ணோட்டம் இப்போது மாறியிருக்கலாம்.

​ ஆனால்,​​ எல்லாவற்றையும் பின்னுக்குத் தள்ளிவிடுவதைப்போல உள்ளது,​​ சுற்றுப்புறச் ​ சுகாதாரத்தைக் கடைப்பிடிப்பதில் மக்களிடம் உள்ள அலட்சியப் போக்கு.

​ ​ நமது கலாசாரம் தொன்மையானது,​​ ஒழுக்கமானது எனப் பெருமைப்பட்டுக் கொண்டாலும்,​​ குறிப்பாக சுகாதார மேம்பாட்டில் வளர்ந்த நாடுகளை விட,​​ வெகுவாகப் பின்தங்கி உள்ளோம் என்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.

​ இப்போது,​​ தொலைக்காட்சிகளில் தமிழில் மொழிமாற்றம் செய்து நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறது ஒரு சேனல்.​ அதில்,​​ ஒளிபரப்பான ஒரு நிகழ்ச்சி சுவாரஸ்யமாக இருந்தாலும்,​​ அதன் கருத்தாக்கம்..​ வர்ணனை..​ வருத்தமளிப்பதாக இருந்தது.​ ​

​ ​ அந்நிகழ்ச்சியில்,​​ புகழ்பெற்ற தாஜ்மகால் அமைந்துள்ள ஆக்ராவைச் சுற்றி கேமராவோடு வலம் வருகிறார் வர்ணனையாளரான வெளிநாட்டு இளைஞர்.​ அந்நகர் பற்றியும்,​​ வீதிகளில் மலஜலம் கழிக்கும் குழந்தைகள்,​​ சாலையோர உணவகங்கள்,​​ அருகில் குவிந்திருக்கும் குப்பைகள்,​​ வீதிகளில் திரியும் கால்நடைகள்,​​ பிச்சைக்காரர்கள்,​​ கழைக் கூத்தாடிகள்,​​ குடிசைப்பகுதிகள் என ஒவ்வோர் இடமாக கேமராவை நுட்பமாகச் சுழற்றி,​​ தமக்கே உரிய பாணியில் கிண்டலடித்துக் கொண்டே செல்கிறார் அந்த இளைஞர்.​ கடைசியில் "ஒரே நாற்றம்.​ குடலைப் புரட்டுது;​ ஏண்டா இங்க வந்தோம்னு ஆச்சு' என அலுத்துக் கொள்வதோடு நிகழ்ச்சி முடிவடைகிறது.

​ ​ அந்நிகழ்ச்சி,எவ்வித பாதிப்பையோ,​​ மாற்றத்தையோ இங்கு ஏற்படுத்திவிடப் ​ போவதில்லை.​ ஆனால்,​​ உலகம் முழுவதும் வெவ்வேறு மொழிகளில் அந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகும்போது,​​ அதைப் பார்க்கும் மேலைநாட்டவர்களிடம்,​​ இந்தியா பற்றி எதிர்மறையான கண்ணோட்டம் உருவாவதைத் தவிர்க்க முடியாது.

​ ​ அண்மையில்,​​ நாளிதழ்களில் "நகராட்சிப் பணியாளர்கள் நூதனப் போராட்டம்' என்ற செய்தி வெளியானது.​ அதில்,​​ அரசு மருத்துவமனையின் முன்புறம் குப்பைத் தொட்டி வைக்கப்பட்டிருந்தது.​ இந்நிலையில்,​​ மருத்துவமனை ஊழியர்கள் மருத்துவக் கழிவுகளைக் குப்பைத் தொட்டியில் கொட்டாமல்,​​ கண்ட இடங்களில் கொட்டி வந்துள்ளனர்.​ எவ்வளவோ எடுத்துச்சொல்லியும் கேட்காததால்,​​ பொறுமையிழந்த துப்புரவு ஊழியர்கள்,​​ திடீரென குப்பைகள் அனைத்தையும் வாரி,​​ மருத்துவமனை நுழைவாயிலில் கொட்டி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

​ ​ அது,​​ மாவட்ட நிர்வாகத்தின் கவனத்தை ஈர்த்து பேச்சுவார்த்தை நடத்தி,​​ குப்பைப் பிரச்னை ஒருவழியாக முடிவுக்கு வந்தது.

​ ​ நகரில் கொட்டப்படும் குப்பைகளை மறுசுழற்சி செய்வதற்காக,​​ மாநகராட்சி சார்பில் ஒரு திட்டம் செயல்படுத்தப்பட்டது.

​ ​ மக்கும் குப்பைகள்,​​ மக்காத குப்பைகள் என பிரித்துப் போடுவதற்காக வீடுகள்தோறும் வெவ்வேறு நிறங்களில் ​(பச்சை,​​ சிவப்பு)​ பிளாஸ்டிக் பக்கெட்டுகள் இலவசமாக வழங்கப்பட்டன.​ இப்போது,​​ அத்திட்டம் தோல்வியடைந்து விட்டதாக மாநகராட்சி அதிகாரிகளே ​ ஒப்புக்கொள்கின்றனர்.

​ வாங்கியே பழக்கப்பட்டுவிட்ட மக்களுக்கு,​​ இலவசமாகக் கிடைத்த புத்தம் புதிய ​ பக்கெட்டுகளில் குப்பைகளைக் கொட்ட மனம் வருமா..?​ ​

​ பெரும்பாலானோர்,​​ அவற்றை வேறு பயன்பாட்டுக்கு வைத்துக் கொண்டு,​​ வழக்கம்போல,​​ வீதியில் குப்பைகளைக் கொட்டி, பணிச் சுமையை அதிகப்படுத்துவதாக துப்புரவுப் பணியாளர்கள் வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர்.

​ ​ லாரிகளில் சரியாக தார்ப்பாயால் மூடாமல்,​​ வீதியெங்கும் குப்பைகளைச் சிதற விட்டுச் செல்வது,​​ பல நாள்களாக அள்ளப்படாமல் தொட்டிகளில் நிரம்பி நாற்றமடிக்கும் குப்பைகள் என துப்புரவுப் பணியாளர்கள் மீதும் பொதுமக்களிடமிருந்து ​ பல்வேறு புகார்கள்.​ ​

​ மாநாடு,​​ விழாக்கள்,​​ பூங்கா உள்ளிட்ட பொது இடங்களில் குப்பைகள்,​​ உணவுக் கழிவுகளை அமர்ந்த இடங்களிலேயே போட்டுவிட்டுச் செல்லும் பொதுமக்கள்,​​ பஸ் நிலையம்,​​ வழிபாட்டுத் தலங்களின் சுவரில்கூட,​​ கூச்சமின்றி இயற்கை உபாதையைத் தணித்துவிட்டுச் செல்லும் பாதசாரிகள்,​​ வெள்ளம் வரும்போது தவிர,​​ மற்ற காலங்களில் நகரில் மிகப் பெரிய குப்பைக் கிடங்காகவும்,​​ திறந்தவெளிக் கழிப்பிடமாகவும் ஆகிவிட்ட ஆறுகள்,​​ சாயக் கழிவுகளால் விஷமாகிப்போன நதிகள் என,​​ சுகாதாரக்கேடு தீராத நோயாக நீடித்து,​​ மக்களுக்குப் பல்வேறு நோய்களைப் பரப்பி வருகிறது.​ ​ ​

÷அமைச்சர்கள்,​​ உயர் அதிகாரிகள் வருகையின்போது மட்டும் அரசு மருத்துவமனைகள்,​​ சாலைகள் வெள்ளையடிக்கப்பட்டு பளிச்சென இருப்பதும்,​​ மற்ற நேரங்களில் சுகாதாரக் கேட்டின் உறைவிடமாக அவை திகழ்வதும்,​​ "நம்மை யார் கேட்கப் போகிறார்கள்..?' என்ற சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களின் அசிரத்தையான மனோபாவம்தான்.

​ இந்தியாவில் ஆண்டுதோறும் கோடிக்கணக்கான ரூபாய் சுகாதார மேம்பாட்டுப் பணிகளுக்காக ஒதுக்கப்படுகிறது.​ ஆனால்,​​ மலைபோலக் குவியும் குப்பைகளால்,​​ மெட்ரோ நகரங்கள்கூட அழுக்கடைந்து காணப்படுவதாக,​​ மத்திய அமைச்சர் குறைபட்டுக் கொள்ளும் அளவுக்குத்தான் நிலைமை நீடிக்கிறது.

​ ​ கடுமையான சட்டங்களால்,​​ மக்களின் மனோபாவத்தை ஒரேநாளில் மாற்றிவிட முடியாது.​ "மூவாயிரம் அடி பயணமும்,​​ முதல் அடியில் தொடங்குகிறது' என்பதற்கேற்ப அரசு,​​ தூய்மைப் பணியை புதிய ஓர் இயக்கமாகத் தொடங்கி,​​ பல்வேறு ​ அமைப்புகளையும் இணைத்துக் கொண்டு முனைப்புடன் செயல்பட்டால்,​​ முழு சுகாதாரம் என்பது எட்டாக்கனியாகி விடாது..!​​

ஓட்டுப்போட என்னை அழுத்து


Best Blogger Gadgets

2 கருத்துகள் :

Thevesh சொன்னது…

ஆயிரம் வருடங்கள் சென்றாலும் சுகாதாரம் நிறைந்த
நாடக இந்தியா வரப்போவதில்லை.பூலோக நரகமே
இந்தியத்திருநாடுதானே அதில் என்ன சந்தேகம்.லஞ்சம்
ஒழிந்தால் வறுமை ஒழியும் வறுமை ஒழிந்தால்சுகாதா
ரம் மேம்பெறும். ஒரு நேர்மையுள்ள சர்வாதிகாரி இந்
நாட்டை எடுத்து ஆளவேண்டும்.அப்போது இந்த நாடு
முதன்மைநாடாகச்சுபீட்ஷம் பெறும்.

*VELMAHESH* சொன்னது…

it is possible?

கருத்துரையிடுக

படிக்க வந்த நண்பர்களெல்லாம் ஒட்டு போட்டுட்டு போங்களே!!

இந்த இடுகை உங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் வாக்களிக்கவும்.


தமிழ்மணத்தில் ஆதரவு வாக்களிக்க உள்ள கருவிபட்டையில் மேல்நோக்கியுள்ள கைவிரலை சொடுக்கவும்