விழுந்தவனுக்கு ஒரு கடிதம்

விழுந்தவனுக்கு ஒரு கடிதம்
.......................

எழுந்திரு தோழா,
தோல்வியொன்றும் சமுத்திரமன்று
துவண்டு போக,
நீ எழுந்து நின்றால்
அது சிறிய சாலவம்

கரங்களில் அள்ளிய வாழ்க்கை
விரல்களின் இடுக்கு வழி
ஒழுகியதென்றா கவலையுற்றாய்

நழுவிய துளிகள் மீண்டும்
உன் காலடியிலேயே விழுகுமப்பா
எழுந்திரு...

மனிதனின் பரிணாமம்
விலங்கை தோலுரித்து
உன்னை வெளிக்கொணர்ந்தது
நீ உன்னை உரித்து
என்னவென்று உணரலாம்
எழுந்திரு

நான்
இமயமாய் உயர வேண்டுமென
இறைவனிடம்
வரம் கேட்கிறாய்,

புத்தியை பூட்டி
சாவியை தொலைத்தவனே !!

இறைவன் வீணைதான் தருவான்
இசையை நீதான் மீட்டிக்கொள்ள வேண்டும்

நடக்கும் வரைதான் நதி
தன் நடையை நிறுத்திக்கொண்டால்
அது குட்டை

இங்கு விழுவதல்ல அவமானம்
விழுந்தவன் அசைவற்று போனால்
அதுதான் அவமானம்
விழுந்த உன் விரல் அசைந்தாலும் போதும்
நீ புதிதாய் பிறந்து விடுகிறாய்
எழுந்திரு

வாழ்கையை வென்றவனெல்லாம்
அதிகாலை எழுந்தவனாம்
குறித்துக் கொள் உன் படுக்கையில்

கனவுகளோடு கண்களை மூடு
குறிக்கோளோடு கண்களை திற

உன் முன் இருப்பது விளக்கா
நீ தீபம் !
முட்களின் புதரா ?
நீ தீ !!

தாகமாய் இருந்த முயற்சிகளை
சுவாசமாய் மாற்று

இதுவரை நீ கடந்து வந்தது
கள்ளிக்காடு
இனி தாண்டப் போவதோ
நெருப்பு பள்ளங்கள்

ஆனால்
சினங்கள் களைந்து
புன்னகை எனும்
சிறகுகள் தரித்துக் கொள்

தோல்விகள் உன்னை சூழ்வினும்
காற்றில் கரையும் கற்பூரம் போல
திரவமின்றி வாயுவாக
பதங்கமாகிப் பழகு

இன்று உன்னில் விழுந்த தோல்விகள்
மண்ணில் புதையுண்ட நிலக்கரி ,
காலங்களின் வயது நரைக்கும் போது
அது வைரமாகிப் போகும்.


Posted By,
கமலேஷ்

Best Blogger Gadgets

1 கருத்து :

பெயரில்லா சொன்னது…

இதுவரை நீ கடந்து வந்தது
கள்ளிக்காடு
இனி தாண்டப் போவதோ
நெருப்பு பள்ளங்கள்

ஆனால்
சினங்கள் களைந்து
புன்னகை எனும்
சிறகுகள் தரித்துக் கொள்

கருத்துரையிடுக