அர்ஜூனன் : கேசியை அழித்தவரே, தியாகத்தையும் துறவையும் பற்றி அறிய விரும்புகிறேன்.
பகவான் : பலனை விரும்பி செய்யும் செயல்களின் பலனை, தான் அனுபவிக்காமல் விட்டுக் கொடுப்பது தியாகம் என்றும், அச்செயல்களையே விட்டு விடுவது சன்யாசம் என்றும் பெரியோர்களால் அழைக்கப்படுகிறது.
எல்லாவிதமான பலன் தரும் செயல்களையும் துறக்குமாறு அறிஞர்கள் கூறுகின்றனர். ஆனால் யாகம், தானம், தவம் போன்ற தியாகச் செயல்கள் என்றுமே துறக்கப்படக்கூடாது என முனிவர்கள் கூறுகின்றனர்.
மஹாத்மாக்களைக் கூட தூய்மைப்படுத்துவதால் யாகம், தானம், தவம் போன்ற தியாகச் செயல்கள் என்றுமே துறக்கப்படக்கூடாது; பலன் பாராது ஒரு கடமையைப் போல இவை செய்யப்பட வேண்டும் என்பதே என் அபிப்ராயம்.
விதிக்கப்பட்ட கடமைகளை ஒருவன் துறக்கக்கூடாது; மோகத்தால் துறந்தால் அத்துறவு தமோ குணத்தாலானது.
கடமைகளை, உடல் வருத்தத்திற்குப் பயந்து துறந்தால், அது ரஜோ குணமாகும். இதற்கு துறவின் பலன் கிட்டாது.
செய்வதற்காக மட்டுமே, விதிக்கப்பட்ட கடமையைப் பலனில் பற்றின்றி செய்பவனது துறவு, சத்வ குணத்தாலானது.
சத்வ குணத்தவன், மங்கலச் செயல்களில் பற்று வைப்பதோ, அமங்கலச் செயல்களை வெறுப்பதோ இல்லை. செயல்பாடுகளிலும் அவனுக்கு சந்தேகம் வருவதில்லை.
உடலுடையவனுக்கு செயலைத் துறப்பது கடினம். எனவே செயலின் பலனைத் துறப்பவனே தியாகி எனப்படுவான்.
தியாகமற்றவனுக்கு இறப்பிற்குப் பின் சுவர்க்க, நரக அல்லது நடுநிலை எனும் மூவித கர்ம விளைவுகள் உண்டாகின்றன. சன்யாசிக்கு அவைகள் இல்லை.
பலவானே, செயலுக்கு முழுவடிவு தரும் ஐந்து காரணிகள் : இடம், இடமளிப்பவன், இந்திரியங்கள், இஷ்டம், இறுதியில் இறைவன் என ஸாங்க்ய தத்துவம் தெரிவிக்கிறது.
உடல் மனம் வாக்கினால் எதைச் செய்தாலும் அவை சரியானதோ அல்லது தவறானதோ இந்த ஐந்து காரணிகளாலேயே உருவாகின்றன. இக்காரணங்களைக் கருதாது, தன்னைக் காரணமாகக் கருதுபவன் அறிவாளி அல்ல; விஷயங்களை உள்ளபடி காண்பவனுமல்ல.
பொய் அகங்காரமின்றி, பற்றின்றி இருப்பவன் உலகத்தாரைக் கொன்றாலும் கொல்லாதவனாவான். தன் செயல்களால் அவன் பந்தப்படுவதில்லை.
அறிவு, அறிவின் இலக்கு, அறிபவன் இவையே செயலைத் தூண்டுபவை. கருவி, கர்மம், கர்த்தா இவை செயலுக்கான இருப்பிடங்களாகும்.
முக்குணங்களுக்கு ஏற்ப அறிவு, செயல் மற்றும் செயல்படுவோர் இருக்கின்றனர்.
வேறுபட்ட உயிரினங்களில் வேற்றுமையின்றி ஒரே ஆன்மீக இயற்கை (ஆன்மா) இருப்பதாய் காணும் அறிவு சத்வ குணத்திலானதாகக் கருதப்படுகிறது.
வெவ்வேறு உடல்களில் வெவ்வேறான உயிரினங்கள் இருப்பதாக அறியும் அறிவு ரஜோ குணத்தினாலானதாகக் கருதப்படுகிறது.
உண்மையைப் பற்றிய அறிவின்றி, ஒரு காரியத்தையே பிடிவாதமாய் பிடித்துக் கொண்டு, அதையே எல்லாமாக அறியும் அறிவு தமோ குணத்தாலானது.
பற்றின்றி, விருப்பு வெறுப்பின்றி, கடமையாகக் கருதி, பலன் விளைவுகளைத் துறந்து ஆற்றப்படும் செயல் சத்வ குணத்திலானதாகக் கருதப்படுகிறது.
பெரும் ஆசையுடனும், பெரும் முயற்சியுடன், பொய் அகங்காரத்துடன் ஆற்றப்படும் செயல்கள் ரஜோ குணத்திலானதாகக் கருதப்படுகிறது.
பின்விளைவயும், பந்தப்படுவதையும் பாராது அறியாமையுடனும், பிறருக்கு தீமை தரும்படியும் துவங்கப்பட்ட செயல்கள் தமோ குணத்திலானதாகக் கருதப்படுகிறது.
பற்று நீங்கியவனாய், பொய் அகங்காரமற்றவனாய், உற்சாகம் ஊக்கமுடையவனாய், வெற்றி தோல்விகளில் நடுநிலை கொண்டவனாய் செயல்படுபவன் சாத்வீகன் ஆவான்.
செயலின் பலனில் இச்சை கொண்டவனாய், அதனை அனுபவிக்க விரும்புகிறவனாய், பேராசை, பொறாமை கொண்டவனாய், தூய்மையற்றவனாய், மகிழ்வும் சோர்வும் கொள்பவனாய் செயல்படுபவன் ரஜோ குணத்தவன் ஆவான்.
சாஸ்திர விதிகளுக்கு எதிராய் நடப்பவனாய், அறிவற்றவனாய், முரடனாய், ஏமாற்றுபவனாய், புறங்கூறுபவனாய், சோம்பேறியாய், கடுகடுப்பு கொண்டவனாய், காலம் தாழ்த்துபவனாய் செயல்படுபவன் தமோ குணத்தவன் ஆவான்.
அர்ஜுனா, முக்குணங்களுக்கேற்ப செயலாற்றுபவனது விவேகமும், மன உறுதியும் மூவகைப்படும்.
செய்யத்தகுந்தது - தகாதவை எவை, பயம் கொள்ளத்தக்கது - தகாதது எவை, பந்தப்படுத்துவது - விடுபடுத்துவது எவை. இவைகளை முன்கூட்டியே அறியும் விவேகம் சத்வ குணத்திலானது. (நல்லது நல்லதாகவும், கெட்டது கெட்டதாகவும் தெரிகின்றது).
அங்கனம் பகுத்தறிய இயலாத, தர்ம அதர்மங்களின் போக்கினையறியாத ஒருவனின் விவேகம் ரஜோ குணத்திலானது. (நல்லது கெட்டது தெரியாது).
அதர்மத்தை தர்மமாகவும், தர்மத்தை அதர்மமாகவும் அறியும் விபரீத விவேகம் தமோ குணத்தாலானது. (நல்லதெல்லாம் கெட்டதாகவும், கெட்டதெல்லாம் நல்லதாகவும் தெரியும்).
மாறா உறுதியுடன், மனம், வாழ்வு, புலன் செயல்கள் இவற்றைக் கட்டுடன் வைத்திருப்பவனது உறுதி சத்வ குணத்திலானது.
அறம், பொருள், இன்பம் இவற்றின் பலன்களை பற்றுடன் விடாமல் வைத்திருப்பவனின் மன உறுதி ரஜோ குணத்திலானது.
அதிக உறக்கம், கனவு, அச்சம், கவலை, கடுப்பு, பிடிவாதம் கொண்டவனின் மனவுறுதி தமோ குணத்தாலானது.
கட்டுண்ட ஆன்மாக்களின் மூவித சுகங்களைப் பற்றி அறிவாயாக.
முதலில் விஷம் போன்றும், பிறகு அமிர்தம் போன்றும் அனுபவிக்கப்படும் சுகம் சத்வமானது.
விஷயத்தொடர்பில், முதலில் அமிர்தம் போன்றும், முடிவில் விஷம் போன்றும் அனுபவிக்கும் சுகம் ரஜோ குணத்திலானது.
தன்னுணர்வுக்குத் தடையாயும், துவக்க முதல் இறுதி வரை மயக்கத்துடனும், சோம்பலுடனும் அனுபவிக்கும் சுகம் தமோ குணத்திலானது.
தேவர் உலகிலும், இவ்வுலகிலும் ஜட இயற்கையின் முக்குணங்களிலிருந்து விடுபட்டவர் எவருமிலர்.
குணங்களுக்கும், அதன் தன்மைக்கேற்பவும் செயல்படுபவர்களாயும் (ஸ்வபாவம்) மக்கள் - அந்தணர், ஆள்வோர், வணிகர், உழைப்போர் என நால்விதமாக உள்ளனர்.
மன அடக்கம், புலனடக்கம், தவம், தூய்மை, பொறுமை, நேர்மை, விவேகம், இறைவன் இருப்பதை ஏற்று நடத்தல் - இவை அந்தணரின் இயல்பும் அதற்கேற்ற செயல்களுமாகும்.
தீரம், வீரம், உறுதி, வளமை, புறங்காட்டாமை, ஈகை, இறைமை ஆகியவை ஆள்வோருக்கான இயல்புகள்.
விவசாயம், பசுக்களைக் காத்தல், வளர்த்தல், வியாபாரம் இவை வணிகரின் இயல்புகள். இட்ட பணியைச் செய்தல் உழைப்போருக்கான இயல்புகள் ஆகும்.
அவரவர் தமது இயல்புக்கேற்ப செயல்படுவதால் மட்டுமே வாழ்வில் திருப்தியும், பக்குவமும் அடையலாம்.
எல்லா உயிர்களின் மூலமாயும், எங்கும் நிறைந்தும் இருப்பவருமான இறைவனை, தம் கடமைகளை சரிவர செய்தபடி வழிபடுவதால் ஒருவன் படிப்படியாக நல் நிலையை அடையலாம்.
நிறைவாய் ஆற்றப்படும் பிற தர்மத்தை விட - குறைவாய் ஆற்றப்பட்டாலும் சொந்த தர்மமே சிறந்தது. ஏனெனில் சொந்த தர்மத்தின் விளைவுகள் ஒருவனுக்கு பாவத்தைத் தருவதில்லை.
குற்றம் நிறைந்ததாயினும் தனது இயல்பான தர்மத்தை விட்டுவிடக் கூடாது. ஏனெனில் தீயைப் புகழ் சூழ்ந்திருப்பது போன்று எல்லா முயற்சிகளையும் குற்றம் சூழ்ந்துள்ளது.
விஷயங்களில் பற்றின்மையாலும், சுகங்களில் நாட்டமின்மையாலும் துறவின் அதே பக்குவத்தைப் பெறலாம்.
குந்தி மகனே, எப்படி செயல்பட்டால் பிரம்ம நிலையை அடையலாம் என்பதை சுருக்கமாகச் சொல்கிறேன்.
தூய அறிவுடன், உறுதியான மனதுடன், புலன் விஷயங்களைத் துறந்து, தனித்து வாழ்பவனும், சிறிதே உண்பவனும், உடலையும், நாவையும் அடக்கி தியானம், வைராக்கியத்துடன், கர்வம், வலிமை, பெருமை, காமம், கோபம், உடமையுணர்வு இல்லாதவனாயும் இருப்பவன் - நிச்சயமாக பிரம்மத்தளத்திற்கு உயர்த்தப்படுகிறான்.
அவன் உடனடியாக பரப்பிரம்மத்தை உணர்கிறான். அவன் இழப்பிற்காக வருந்துவதுமில்லை. எதையும் அடைவதற்காக ஏங்குவதுமில்லை. சம நோக்கு உடையவனாய் என்மீது தூய பக்தியைப் பெறுகிறான்.
பக்தித் தொண்டால் மட்டுமே என்னை உள்ளபடி ஆறிந்து எனது நாட்டிலுள் நுழைய முடியும்.
செயல்களில் ஈடுபட்டாலும் என் பக்தன் எனது கருணையால், எனது பாதுகாப்பில் அழிவற்ற பரமபதத்தை அடைகிறான்.
எனவே என்னையே சார்ந்து, எனது பாதுகாப்பில் செயல்படு. இதனால் என்னைப் பற்றிய முழு உணர்வுடையவனாய்.
எனது உணர்வினால் மட்டுமே எனது கருணையைப் பெற்று, எல்லா துன்பங்களையும் கடக்க முடியும். அகங்காரத்தால் இதை நீ ஏற்க மறுத்தால், உன்னை நீ இழப்பாய்.
என் பேச்சைக் கேளாமல், நீ போரிட மறுத்தால், உன் வீரம் வீணாகும். மேலும் நீ தவறாக வழி நடத்தப்பட்டு, உன் இயற்கையே உன்னைப் போரிட வைத்துவிடும். மயக்கத்தால் நீ செய்ய மறுப்பதை உன் ஸ்வபாவமே செய்ய வைத்துவிடும்.
அர்ஜூனா, முழுமுதற் கடவுள் ஒவ்வொருவரின் இதயத்திலும் இருந்தவாறு, இயந்திரம் போன்ற உயிரினங்களின் பயணத்தை வழி நடத்துகிறார். முழுவதும் அவரைச் சரணடை. அவரது கருணையால் தெய்வீக அமைதியையும் நித்திய தலத்தையும் அடைவாய்.
ஞானங்களிலெல்லாம் ரகசியமானதை உனக்குச் சொல்லி விட்டேன். இனி நீ ஆராய்ந்து உன் விருப்பப்படியே செய்.
என்னையே நினைத்து, என் பக்தனாயாவாக. என்னை வழிபட்டு உன் வணக்கங்களை எனக்கு சமர்ப்பிப்பாயாக. இவ்விதமாக நீ என்னிடம் தவறாது வந்து சேர்வாய். நீ எனக்கு நண்பன் என்பதால் இந்த வாக்குறுதியைத் தருகிறேன்.
எல்லா மதங்களையும், அவற்றின் மீதான உனது அபிமானங்களையும் விட்டு என்னைச் சரணடைந்தால், எல்லா பாப விளைவுகளிலிருந்தும் உன்னை நான் விடுவிக்கிறேன். நீ பயப்படத் தேவையில்லை.
தவமில்லாதவன், பக்தியற்றவன், எனக்குத் தொண்டாற்றுவதில் பொறாமையுள்ளவன் இவர்களுக்கு இந்த ரகசிய ஞானம் கூறப்படலாகாது.
பக்தர்களிடம் இந்த பரம ரகசியத்தை விளக்குகிறவனுக்கு, பக்தித் தொண்டு உறுதியாகிறது. அவன் முடிவில் என்னை அடைகிறான். அவனை விட எனக்கு விருப்பமான தொண்டன் உலகில் யாருமில்லை. எவரும் ஆகவும் முடியாது.
தர்மங்கள் நிறைந்த இவ்வுரையாடலைக் கற்பவன், அறிவால் என்னை வழிபடுகிறான் என நான் அறிவிக்கிறேன்.
பொறாமையின்றி, நம்பிக்கையுடன் இதைக் கேட்பவன், பாப விளைவுகளினின்றும் விடுபட்டு, நல்லோர் வாழும் உலகை அடைகிறான்.
தனஞ்சயா, கவனத்துடன் கேட்டாயா? உன் மயக்கம் நீங்கியதா?
அர்ஜூனன் : அச்யுதா, என் மயக்கம் தெளிந்தது; உமது கருணையால் எனது நினைவைப் பெற்றேன்; உறுதியானேன்; உமது சொற்படி நடக்கச் சித்தமாயிருக்கிறேன்.
சஞ்சயன் : இவ்வாறு மகாத்மாக்களான ஸ்ரீகிருஷ்ணரும், அர்ஜூனனும் உரையாடியதைக் கேட்டேன். அற்புதமான இவ்விஷயங்களைக் கேட்டதால் என் ரோமம் சிலிர்க்கின்றது. வியாஸ தேவரின் கருணையால் யோகிகளின் இறைவனான ஸ்ரீகிருஷ்ணர், அர்ஜூனனிடம் நேரடியாகக் கூறிய மிக ரகசியமான விஷயங்களை நான் மீண்டும் மீண்டும் எண்ணிப் பார்த்து கணம் தோறும் இன்பமடைகிறேன். மன்னா, பகவானின் அற்புத உருவை எண்ணி நான் வியப்புடன் மகிழ்கிறேன்.
யோகிகளுக்கெல்லாம் இறைவனான ஸ்ரீகிருஷ்ணரும், சிறந்த வில்வீரனான அர்ஜூனனும் இருக்குமிடத்தில், நிச்சயமாக செல்வமும், வெற்றியும், அசாதாரணமான திறனும், நீதியும் இருக்கும் என்பது எனது அபிப்ராயமாகும்.
====++++====
Best Blogger Gadgets
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக