எப்போதும் வளவளவென்று பேசிக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் பேசுவதற்கு யாராவது சம்பளம் வழங்கினால் மாட்டேன் என்றா சொல்வீர்கள். கொடுக்கிறார்களே? ரேடியோ நிறுவனங்களில் வாயாடிகளை தேடிப்பிடித்து ஆயிரக்கணக்கில் சம்பளம் கொடுக்கிறார்கள். பந்தயங்களில் குதிரை ஓட்டுபவர்கள் வெறும் ‘ஜாக்கி’. ரேடியோவில் நேயர்களை ஓட்டோ ஓட்டுவென்று ஓட்டுபவர்கள் ரேடியோ ஜாக்கி. சுருக்கமாக ஆர்.ஜே.
ஒரு காலத்தில் எல்லோருக்கும் துணைவனாக இருந்தது ரேடியோ. பாட்டு கேட்க, செய்தி கேட்க, நாடகம் கேட்க, ஒலிச்சித்திரம் கேட்கவென்று நிறைய ‘கேட்க’ சொல்லலாம். ஆனால் காட்சி ஊடகமான தொலைக்காட்சி வந்த புதிதில் ரேடியோவுக்கு இருந்த ‘மவுசு’ கொஞ்சம் குறைந்தது. தொலைக்காட்சி அளவுக்கு ரேடியோவில் பொழுதுபோக்கு அம்சங்கள் குறைவாக இருந்ததும் இதற்கு ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.
டிவி முன்பாகவே சம்மணம் போட்டு உட்கார்ந்திருந்தால் மற்ற வேலைகள் கெட்டுவிடும். ஆனால் ரேடியோ கேட்டுக் கொண்டே கம்ப்யூட்டரில் வேலை பார்க்கலாம். சமையல் செய்யலாம். உடற்பயிற்சி மேற்கொள்ளலாம். வாகனம் ஓட்டலாம். சும்மாவும் இருக்கலாம். கலகலப்புக்கு ரேடியோ நிச்சய உத்தரவாதம்!
மீண்டும் எஃப்.எம். (பண்பலை) வானொலிகள் வந்ததோ இல்லையோ.. மறுபடியும் பழைய மவுசு ரேடியோவுக்கு கிடைத்துவிட்டது. ஜாக்கிகள் விதவிதமான நிகழ்ச்சிகளை தந்து மீண்டும் ரேடியோ மறுமலர்ச்சி ஏற்படுத்தியிருக்கிறார்கள். முன்பெல்லாம் அரசின் தகவல் தொடர்பு ஊடகங்களான ஓரிரு வானொலி நிலையங்கள் விரல்விட்டு எண்ணும் அளவிலான சேவைகளையே கொஞ்சம் ‘வறட்சியான மொழியில்’ வழங்கி வந்தன.
ஆனால் இப்போதோ சூரியன், ரேடியோ மிர்ச்சி, ரேடியோ ஒன், ஹலோ, ஆஹா, பிக் என்று தனியார் எப்.எம். சேவைகள் வரிசையாக படையெடுத்து தமிழர்களின் காதில் தேனையும், பாலையும் இருபத்து நான்கு மணி நேரமும் தொடர்ச்சியாக ஊற்றிக் கொண்டேயிருக்கிறார்கள். அவர்களது ‘தமில்’ தான் தாங்கலை என்றாலும் தனியார் எப்.எம்.களின் வருகைக்கு பிறகு ஏராளமான வேலைவாய்ப்புகள்.. குறிப்பாக ரேடியோ ஜாக்கிகளின் தேவையும் அதிகரித்து வருகிறது என்பதை ஒப்புக்கொண்டே ஆகவேண்டும்.
ரேடியோ ஜாக்கிகள் என்றால் பொதுவாக பாடல் நிகழ்ச்சிகளை வழங்குபவர்கள் என்றே எல்லோரும் நினைக்கிறோம். இவர்கள் மட்டுமன்றி வேறு வேறு வித்தியாச நிகழ்ச்சிகளை வழங்குபவர்களையும் ரேடியோ ஜாக்கி என்றே அழைக்கலாம், தப்பில்லை. வீட்டு வரவேற்பறையில் நம்மோடு குலாவும் விருந்தினரைப் போன்ற உணர்வுகளை நிகழ்ச்சிகளின் மூலமாக தருபவர்கள் இவர்கள். முகம் காட்டாமலே நமக்கு நெருக்கமாகும் சுவாரஸ்யமான நட்புகள். ஒவ்வொரு வானொலி நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் இவர்களது பங்கு மிக முக்கியமானது. இவர்களுக்கு எல்லாம் இன்னமும் தமிழ்நாட்டில் ரசிகர்மன்றம் தொடங்கப்படாதது ஒன்றுதான் பாக்கி!
“எனக்குத் தெரிஞ்சு பத்தாவது படிச்சவங்கள்லேருந்து எம்.எஸ்.சி. படிச்சவங்க வரைக்கும் ரேடியோ ஜாக்கியா ஒர்க் பண்றாங்க. முறையான கல்வித்தகுதின்னு எதுவும் இந்தத் துறைக்கு அவசியமில்லை. குரல் இனிமையா இருக்கணும்னு சொல்ல மாட்டேன். ஆனா வசீகரமா இருக்கணும். மிமிக்ரி தெரிஞ்சா ரேடியோவில் ஜாக்கி ஆயிடலாம்னு ஒரு ‘மித்’ இருக்கு. அது தப்பு. சுவாரஸ்யமா நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிற திறமை, டைமிங் சென்ஸ் இதெல்லாம் தான் ரேடியோ ஜாக்கியா வரணும்னா முக்கியமான தகுதிகள்” என்கிறார் ரேடியோ ஒன் நிறுவனத்தில் நிகழ்ச்சிகளை வழங்கும் சுசித்ரா.
ரேடியோ ஜாக்கிகளுக்கு சமூகத்தில் கிடைக்கும் கூடுதல் கவனிப்புகள், சினிமா வாய்ப்புகள் போன்றவை அவரவர் தனிப்பட்ட திறமையைப் பொறுத்த விஷயம். வானொலியில் நிகழ்ச்சிகள் வழங்குவதால் மட்டுமே இவை கிடைத்துவிடாது என்பது சுசித்ராவின் கருத்து. இவர் மணிரத்னம் இயக்கிய ‘ஆயுத எழுத்து’ திரைப்படத்தில் நடித்திருக்கிறார். சினிமாவிலும் தொடர்ந்து பாடி வருகிறார்.
பிக் எப்.எம்.மில் பணிபுரியும் தீனாவும் பிரபலமான ரேடியோ ஜாக்கி. தற்போது ‘வெட்கத்தைக் கேட்டால் என்ன தருவாய்?’ என்ற திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். ரேடியோ மிர்ச்சியின் ஜாக்கியான சுஜாதா கமல்ஹாசனுடன் இரு படங்களில் உதவி இயக்கம், தயாரிப்பு, ஆடை வடிவமைப்பு போன்ற துறைகளில் பணிபுரிந்திருக்கிறார். ‘பாட்டுக்கு பாட்டு’ புகழ் அப்துல் ஹமீதைப் பற்றி அறிமுகப்படுத்தவே தேவையில்லை. இலங்கை வானொலியில் ’பாட்டுக்கு பாட்டு’ நிகழ்ச்சியை வழங்கிக் கொண்டிருந்தவர், இன்று அதே நிகழ்ச்சியை டிவியிலும், மேடைகளிலும் நடத்தி உலகத் தமிழர்களிடையே பிரபலமானவராக இருக்கிறார்.
நிகழ்ச்சிகளின் தன்மைக்கு ஏற்றவாறும், ஒவ்வொரு ரேடியோ ஸ்டேஷனுக்கு ஏற்றவாறும் இவர்களது பணிகளில் சின்ன சின்ன மாறுதல்கள் இருக்கும். பொதுவாக சில அடிப்படைத் தகுதிகளை மனதில் வைத்தே ஜாக்கிகளை ரேடியோ நிர்வாகம் தேர்ந்தெடுக்கிறது. தனியார் நிறுவனங்களில் முப்பத்தைந்து வயதுக்கு மிகாதவராக இருக்குமாறு பார்த்துக் கொள்கிறார்கள். குரல்வளமும், பேச்சுத்திறமையும் அடிப்படைத் தகுதி என்பது உங்களுக்கே தெரியும். உச்சரிப்பு தெளிவானதாக இருக்க வேண்டியது அவசியம்.
நாம் அன்றாடம் பயன்படுத்தும் சொற்களையே ரேடியோ ஜாக்கிகளும் நிகழ்ச்சிகளில் பயன்படுத்துகிறார்கள். எனவே மொழிப்புலமை கட்டாயம் இருந்தே ஆகவேண்டும் என்ற கட்டாயம் எதுவுமில்லை. மொழிப்புலமை இருந்தால் அது கூடுதல் தகுதியாக எடுத்துக்கொள்ளப்படும். பொழுதுபோக்கு துறைக்கு தேவையான எல்லாத் திறன்களும் ரேடியோ ஜாக்கிகளுக்கும் தேவை. ரேடியோ ஜாக்கிகளாக தேர்ந்தெடுக்கப் படுபவர்களுக்கு பொதுவாக தேர்ந்தெடுத்த நிறுவனமே பயிற்சியையும் வழங்குகிறது.
பல்கலைக்கழகங்கள் சிலவற்றிலும், சில கல்வி நிறுவனங்களிலும் வழங்கப்படும் கம்யூனிகேஷன்ஸ் & பிராட்காஸ்டிங் கல்வியை கற்பவர்கள் சுலபமாக ரேடியோ ஜாக்கி ஆகிவிடலாம். சில தனியார் கல்வி நிறுவனங்கள் குறுகியகால சான்றிதழ் படிப்பையும் வழங்குகிறது. இது இரண்டுமாத சான்றிதழ் கோர்ஸிலிருந்து, ஒருவருட டிப்ளமோ கோர்ஸ் வரை வேறுபடுகிறது.
வருமானத்தைப் பொறுத்தவரை இத்தொழிலில் வரையறை ஏதும் குறிப்பிட்டு சொல்லும்படி இல்லை. அவரவர் திறமைக்கும், உழைப்புக்கும் ஏற்றவகையில் பணம் கிடைக்கும். பயிற்சிக்காலத்திலேயே குறைந்தபட்சம் மாதத்துக்கு ஐந்தாயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம். ஒரு நாளைக்கு ஓரிரு மணி நேரமே ரேடியோக்களில் இவர்களுக்கு வேலை இருக்கும். மீதி இருக்கும் நேரத்தில் டப்பிங், விளம்பரப் படங்களுக்கு குரல் கொடுப்பது உள்ளிட்ட வருவாயைத் தரக்கூடிய வேறு பணிகளையும் செய்யலாம். இல்லையேல் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் ரேடியோ அலுவலகத்திலேயே நிர்வாகம் மாதிரியான வேறு பணிகளையும் செய்து கூடுதல் வருவாய் பெறலாம்.
“இன்று உலகம் முழுவதும் தமிழர்கள் பரந்து, விரிந்து வாழ்வதால் அவர்கள் வாழும் நாடுகளிலெல்லாம் வானொலிகள் தமிழ் சேவை தொடங்கி வருகின்றன. சாட்டிலைட் ரேடியோக்களும் தமிழ்சேவையை தொடங்கியிருக்கின்றன. அதுபோலவே இண்டர்நெட்டுகளில் இயங்கும் ரேடியோக்களும் பெருகிவருகின்றன. இப்படிப்பட்ட சூழலில் ரேடியோ ஜாக்கிகளுக்கான தேவை அதிகரித்துக் கொண்டே போகிறது. தகுதியும், திறமையும் இருப்பவர்களுக்கு இத்துறையில் நிச்சயம் பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது” என்கிறார் வளைகுடாவில் இருந்து ஒலிபரப்பாகும் சக்தி எப்.எம்.மில் பணியாற்றிய ஆர்.நாகப்பன்! இவர் இண்டர்நெட் ரேடியோக்களிலும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
‘வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!’ என்பது பழமொழி. வாய் மட்டும் போதாது. சில கூடுதல் தகுதிகளும் அதோடு இருந்தால் ரேடியோ ஜாக்கியாகி பிழைத்துக் கொள்ளலாம். பிழைப்போடு சேர்த்து புகழும், கூடுதல் கவனிப்புகளும் கிடைக்கப் போகிறது என்றால் கசக்கவா செய்யும்?
(நன்றி : புதிய தலைமுறை)
Best Blogger Gadgets
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக