ஜீவகாருண்யம்

புலி சிங்கம் முதலிய மிருகங்கள் மற்றொரு சீவனைக் கொன்று தின்று தாமச ஆகாரத்தால் பசியாற்றித் திருப்தி இன்பத்தை யடைந்து சந்தோஷ’க்கின்றன; அந்தச் சந்தோஷம் கடவுளியற்கை விளக்க ஏக தேசமும் சீவன் இயற்கைவிளக்க நிறைவும் என்று கொள்ளக்கூடாதோ என்னில்:- கூடாது. தாமச ஆகாரத்தால் பூரண சத்துவமாகிய கடவுளியற்கைவிளக்க ஏகதேசமும் ஏகதேச சத்துவமாகிய ஆன்ம இயற்கைவிளக்கமும் விளங்கா; இருளால் ஒளி விளங்காதது போல். இதைத் தாமச ஆகாரமென்பது. என்னையெனில்:- கடவுள் விளக்கம் வெளிப்படாதபடி ஆன்ம விளக்கத்தை மறைத்த இம்சை ஆகாரமாதலால் தாமச ஆகாரமாயிற்று. இந்த ஆகாரத்தால் வந்த திருப்தி யின்பமாகிய சந்தோஷ விளக்கம் எதனுடைய விளக்க மென்னில்:- அனாதி பசுகரணமாயாவிளக்கம் என்று அறியவேண்டும். பசு வென்பது என்னை? ஆணவம் மாயை கன்மம் என்கிற மும்மல பந்தத்தால் ஒன்றுபட்டு அறிவிழந்த ஆன்மாவையே பசு வென்பது. அப்பசுவிற்கு விளக்கந் தோன்றுவது எப்படியென்னில்:- சூரியனை மறைத்த மேகவண்ணத்திலுள்ள இருளினிடத்தும் சூரியப்பிரகாச விசேஷந் தோன்றுதலால் அவ்விருளும் விளக்கமாக வழங்குகின்றது. அது போல், அசுத்தமாயாகரணங்களும் தாமச குணமும் இருள் வண்ணமுடைய வாயினும் தம்மால் மறைக்கப்பட்ட பரசீவவிளக்க விசேஷத்தால் அசுத்தமாயாகரணமும் தாமசகுணமும் விளக்கமாக வழங்குகின்றன. இதனால், தாமச ஆகாரத்தில் வரும் விளக்கம் அசுத்தமாயாகரண விளக்கமே என்றறியவேண்டும்.

ஆனால் மரம் புல் நெல் முதலான தாவரங்களும் உயிராகவே சொல்லப்படுகின்றனவே, அவைகளை இம்சைசெய்து ஆகாரமாகக் கொண்டால் அவை தாமச ஆகார மல்லவோ, அதனால் வந்த சந்தோஷம் அசுத்த மனோகரண சந்தோஷமல்லவோ என்னில்:- மரம் புல் நெல் முதலான தாவரங்களும் உயிர்கள்தான். அவைகளை இம்சைசெய்து ஆகாரங்கொண்டால் அது ஏகதேச தாமச ஆகாரந்தான். அந்த ஆகாரத்தால் வந்த சந்தோஷமும் அசுத்தாகரண சந்தோஷந்தான். ஆனாலும் அப்படியல்ல. மரம் புல் நெல் முதலான சீவர்கள் பரிச மென்கிற ஓரறிவையுடைய சீவர்களாதலாலும், அவ்வுடம்பில் சீவவிளக்கம் ஒருசார் விளங்குதலாலும், அவ்வுயிர்கள் தோன்றும் வித்துக்களும் மற்ற வித்துக்கள் போல் சயமாதலாலும், அவ்வித்துக்களை நாமே விதைத்து உயிர் விளைவு செய்யக்கூடுமாதலாலும், அவ்வுயிர்களை வேறுசெய்யாமல் அவ்வுயிர்களினிடத்து உயிரில்லாமல் உயிர் தோன்றற்கிடமான சடங்களாகத் தோன்றிய வித்துக்களையும் காய்களையும் கனிகளையும் பூக்களையும் கிழங்குகளையும் தழைகளையும் ஆகாரங்களாகக் கொள்வதேயன்றி அவ்வுயிருள்ள முதல்களை ஆகாரமாகக் கொள்ளாதபடியாலும், அவைகளில் வித்து காய் கனி முதலானவை கொள்ளும்போது சுக்கிலம் நகம் ரோமம் முதலிய வைகளை வாங்கும் போது இம்சை உண்டாகாமை போல் இம்சை உண்டாகாத படியாலும், தாவர வர்க்கங்களுக்கு மன முதலான அந்தக் கரணங்கள் விருத்தி யில்லாதபடியாலும் அது உயிர்க்கொலையுமல்ல; துன்ப முண்டுபண்ணுவது மல்ல; அதனால் அது சீவகாருணிய விரோதமாகாது. அந்த ஆகாரத்தால் வந்த சந்தோஷமும் சீவவிளக்க சகிதமான கடவுள் விளக்கமேயாகு மென்று அறியவேண்டும்.

மர முதலிய தாவங்களில் தோன்றிய வித்துக்களை இனி உயிரேறுதற் கிடமாகிய சடங்க ளென்பது எப்படியென்னில்:- வித்துக்களில் சீவனிருந்தால் நிலத்தில் விதையா முன்னமே விளைய வேண்டும்; நிலத்தில் விதைத்த காலத்தும் சில வித்துக்கள் விளையாமலே யிருக்கின்றன. அன்றியும் வித்தென்பது காரணம். இந்தக் காரணம் உடம்பு தோன்றுதற்கே யென்று சிறு பிள்ளைகளாலும் அறியப்படும். அன்றி உயிர் நித்தியம், உடம்பு அநித்தியம்; நித்தியமான உயிர் காரணம் வேண்டாது; அநித்தியமாகிய உடம்பே காரணம் வேண்டும். ஆகலில் வித்துக்களைச் சடமென்றறிய வேண்டும். ஆனால் வித்துக்களிடத்து ஆன்மாக்கள் ஏறுவது எப்படி யென்னில்:- நிலத்திற் கலந்த வித்திற்கு நீர்விடில் அந்த நீரின் வழியாகக் கடவுள் அருள் நியதியின்படி ஆன்மாக்கள் அணுத் தேகத்தோடு கூடி நிலத்திற் சென்று அந்நிலத்தின் பக்குவ சத்தியோடு கலந்து வித்துக்களினிடமாகச் செல்கின்றன வென்று அறிய வேண்டும்.

முளைகளையே பிடுங்கப்படா தென்று சிலர் சொல்கின்றார்கள்; வித்து காய் இலை முதலியவைகளைப் புசிக்கலாமென்று சொல்வதெப்படி யென்னில்:- வித்து நிலத்திற் படிந்தபின் நீர் வழியாக ஆன்மாவானது சென்று பக்குவ சத்தியிற் கலந்து வித்திலேறி முளைத்தபடியால், முளையானது வித்து காய் முதலியவைகளைப் போலச் சடமல்ல. ஆகலால், முளைகளைப் பிடுங்கப்படாதென்பது உண்மையென்று அறிய வேண்டும்.

வித்து காய் கனி முதலியவற்றில் உயிர்க்கொலை இல்லாவிடினும் நகம் ரோமம் சுக்கிலம் முதலியவற்றிலிருக்கிற அசுத்தமாவதில்லையோ என்னில்:- தத்துவவிருத்தியும் தாது விருத்தியும் இல்லாதபடியால் அசுத்தமுமில்லை.

ஆகலில் மரம் புல் நெல் முதலியவைகளின் வித்து காய் கனி தழை முதலியவற்றைப் புசிப்பது சீவகாருணிய விரோதமல்ல என்றறிய வேண்டும்.




பசி நீக்குதல் சிறந்த ஜீவகாருண்யம்



அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க


சுத்த சன்மார்க்க அன்பன்
பாலமுருகன்
காஞ்சிபுரம்

Best Blogger Gadgets

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக