'சத்தியம் மிக உயர்ந்த தருமம்', 'தருமம் வெற்றி பெறும்' என்ற ஓர் உண்மைத் தத்துவத்தை மகாபாரதம் உலகுக்கு எடுத்துக்காட்டுகின்றது. தருமம் இரண்டு மனித உருவம் தாங்கிச் செயற்பட்டதையும் மகாபாரதத்தில் காண்கின்றோம். ஒருவர் தருமர், மற்றவர் விதுரர். அறவுரை கூறி நின்றார் விதுரர். அதேநேரம் தருமர் அறத்தைப் பேணிக் காக்க ஆயுதத்தை நாடினார். அதில் இருவரும் வென்றனர்.
பார்வதி, பரமசிவன், இந்திரன், வாயுபகவான், தருமதேவதை, முருகக் கடவுள், சூரியன், அசுவினித்தேவர்கள், சப்தரிஷிகள், முனிவர்கள், மகரிஷிகள், நாரதர், வியாசர், துர்வாச மகரிஷி, பராசர முனிவர், கண்ணன், பலராமர், அகஸ்தியர், சத்தியபாமா, அனுமன் ஆகிய மேலோர் அனைவரும் மகாபாரதம் முழுவதும் உலாவித் திரிந்து தத்தமது ஞானத் தத்துவங்களை வீசிச் சென்றமையால் மகாபாரதம் ஈடிணையற்ற இதிகாசமாக மக்கள் மத்தியில் நிலவுகின்றது.
மகாபாரதத்தில் நட்பு, ஞானம், சத்தியம், தவம், தானம், ஆசை, தியாகம், அறியாமை, விரோதம், சுவர்க்கம், நரகம், பிறப்பு, காதல், திருமணம், இறப்பு, போர், அழிவு, பணிவு, அறிவு, சுத்தம், தூய்மை, பரிசுத்தம், கல்வி, அறம், பொருள், இன்பம், முக்தி, காலத்தின் வலிமை, காலத்தின் நியதி, வினையின் பயன், பாவம், புண்ணியம், இன்சொல்லின் சிறப்பு, உபவாசத்தின் உயர்ச்சி, குதிரை யாகம், இராஜசூய யாகம், கர்மவினை, சாபம், துறவு வாழ்க்கை ஆகிய விடயங்கள் பரவலாகப் பேசப்பட்டு அவற்றிற்குரிய விடைகளும் காணப்பட்டுள்ளதையும் காண்கின்றோம்.
அறம், மறம் ஆகிய இரு நிலைகளில் நின்றவர்களையும் மகாபாரதம் பட்டியலிட்டுக் காட்டுகின்றது. அறநிலையில் சந்தனு, பீஷ்மர், விதுரர், பாண்டு, தருமர், பீமன், அருச்சுனன், நகுலன், சகாதேவன், துரோணர், துருபதன், பலராமர், கிருஷ்ணன், கங்காதேவி, சத்தியவதி, குந்தி, மாத்ரி, திரௌபதி, சுபத்திரை, உத்தரை ஆகியோர் நின்று அறங்கூறிப் பேரும் புகழும் பெற்றனர். அதேநேரம் மறநிலையில் திருதராட்டிரன், காந்தாரி, துரியோதனன் ஆகிய தொண்ணூற்றி ஒன்பது சகோதரர்கள், சகுனி, அசுவத்தாமன், கர்ணன் ஆகியோர் மறங்காத்து மாண்டொழிந்தனர்.
குந்தியானவள் ஒரு முனிவரால் அருளிக் கொடுக்கப்பட்ட மந்திரத்தை உச்சரித்ததால் கர்ணன், தருமர், பீமன், அருச்சுனன் ஆகியோர் வந்துதித்தனர். அதன்பின் குந்தி, மாத்ரிக்கு அந்த மந்திரத்தை உபதேசித்தாள். மாத்ரி அந்த மந்திரத்தை இரட்டையர்களான அசுவினி தேவர்களை நினைந்து உச்சரிக்க நகுலன், சகாதேவர் என்னும் இரட்டையர் பிறந்தனர். இன்னும் வியாசர் மூலமாக அம்பிகை, அம்பாலிகை, பணிப்பெண் ஆகிய மூவருக்கும் முறையே திருதராட்டிரன், பாண்டு, விதுரர் ஆகியோர் பிறந்தனர். அக்காலத்தில் அரச மகளிர் மந்திரம் உச்சரித்தும், முனிவர்கள் மூலமும் மகப்பேறு பெற்ற அதிசயச் செய்திகளையும் காண்கின்றோம்.
மன்னர் பலதார மணம் புரிவது ஒரு வழக்காக இருந்துள்ளதை மகாபாரதத்தில் காணக் கூடியதாக உள்ளது. சந்தனு மன்னன் கங்காதேவி, சத்தியவதி ஆகிய இருவரையும், விசித்திரவீரிய அரசன் அம்பிகை, அம்பாலிகை ஆகியோரையும், வியாச மகரிஷி அம்பிகை, அம்பாலிகை, பணிப்பெண் ஆகிய மூவரையும், திருதராட்டிர வேந்தன் காந்தாரி, காந்தாரியின் பத்துச் rNfhதரிகள் ஆகிய பதினொருவரையும், பாண்டு மன்னன் குந்தி, மாத்ரி ஆகிய இருவரையும், அருச்சுன அரசன் திரௌபதி, சுபத்திரை ஆகிய இருவரையும், பீமன் ஆன அரசன் திரௌபதி, இடும்பி ஆகிய இருவரையும் திருமணம் செய்து கொண்டனர். அக்கால மன்னர்கள் அதிகமாகப் போர் தொடுத்து மடிவதாலும், தத்தமது அரசுக்குப் பல வாரிசுகளை வைத்திருக்க வேண்டியதாலும், அவர்கள் பலதார மணம் புரிந்தனர் போலும்.
மேற்காட்டிய அரசியர்களான கங்காதேவி, சத்தியவதி, அம்பை, அம்பிகை, அம்பாலிகை, காந்தாரி, குந்தி, மாத்ரி, திரௌபதி, சுபத்திரை, உத்தரை ஆகியோர் தத்தமக்குரிய மன்னர்களுடன் இணைந்து வாழ்ந்து, அரசுப் பரம்பரையை நிலைநாட்ட உதவி நின்று, அரச வாரிசுகளைப் பெற்றுக் கொடுத்து, ஆட்சிப் பொறுப்பிலும் உதவி நின்று, தம் மன்னர்களை அறநெறிக்குட்படுத்தி ஆகிய பெரும் பொறுப்புகளில் ஈடுபட்டுள்ள அரசியர்கள் வாழ்த்திப் போற்றற்குரியோராவர்.
Best Blogger Gadgets
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக