வெற்றியை நெருங்கி விட்டோம் ....YOU CAN WIN

 YOU CAN WIN  

வெற்றி பெறுபவர்கள் - வித்தியாசமான வேலைகளை செய்வதில்லை. செய்யும் வேலைகளை வித்தியாசமாக செய்கிறார்கள். செய்யும் வேலைகளை உண்மையிலேயே நல்ல முறையில் செய்வது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. வேலை சந்தோசம் அளிப்பதாக இருக்க வேண்டும். மனது மலர்ச்சியுடன் எப்போதும் இருக்க வேண்டும்.

எவ்வளவு பெரிய நீச்சல் வீரனாக இருந்தாலும், நீச்சல் அடிக்கும் குளத்தில் முழங்காலுக்கும் கீழ் தண்ணீர் இருந்தால் எப்படி நீந்துவது? அந்த தண்ணீர் போலத்தான் மனதும். நாம என்னதான் திறமையுடன் இருந்தாலும், மனதுக்கு உவகை அளிக்கக் கூடிய வகையில் ஒருவர் வேலை பார்க்கும் சூழல் இல்லையெனில், அவருக்குத் திறமை இருந்தும் என்ன பயன் இருக்க கூடும்?

ஒரு சிலர் நிலைமை படு மோசம்..... சாவி கொடுத்த பொம்மை கதை தான்.

ஒரு டாக்டர், நர்சிடம் அரை மணிக்கொரு முறை நோயாளி ஒருவருக்கு  டெம்பரேச்சர் எடுக்கச் சொல்லியிருந்தார். காலையில் இந்த வேலையைக் கொடுத்து விட்டு சாயந்திரம் வந்தார். நோயாளிகளையும் தலைமாட்டில் இருந்த சார்ட்டுகளையும் பார்த்தார். குறிப்பிட்ட அந்த நர்சிடம் வந்தார்.
“அந்த ஆளுக்கு அரை மணிக்கொருதரம் டெம்பரேச்சர் எடுத்துகிட்டு இருக்கியா?”
“ஆமாம் சார். இப்பக் கூட பதினஞ்சு நிமிஷம் முன்னே எடுத்தேன்”
“போதும் நிறுத்திடலாம். அந்த ஆள் செத்து மூணு மணி நேரம் ஆச்சு”
 படிச்சதும் படக்குன்னு சிரிப்பு வருதா? கொஞ்சம் யோசிச்சுப் பார்த்தா நாமளே கூட, ஒரு கால கட்டத்துக்கு அப்புறம் இப்படித்தான் வேலை பார்க்கிறோம். வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்கள் என்று நாம் கூறுபவர்கள் நாம் செய்யும் ஒரு சில வேலையை பார்க்கும்போது, இந்த நர்சைப் போலத் தான் நம்மை பார்க்கின்றனர்.
ஏன், எதுக்குன்னே தெரியாம , நாள் ஆக ஆக, அப்படியே மனசு ஒரு வேலைக்கு பழக்கமாகி , அங்கேயே செட் ஆகிடும். பழகும்போது ரொம்ப ஆர்வமா இருக்கும் ஒரு விஷயம், பழகப் பழக - அதில் எக்ஸ்பெர்ட் ஆகி, அதன் பிறகு இறங்கு முகம் ஆரம்பிக்கும். என்ன தான் நாம் ஆர்வமாக, பொறுப்பாக ஒரு வேலையைப் பார்த்தாலும், இதுதான் அந்த வேலையின் உச்சம் என்று யாரோ ஒருவர் கூறி விட்டாலோ, அல்லது நமது மனது ஒப்புக்கொண்டு விட்டாலோ, அதைத் தாண்டி யோசிக்க மாட்டோம்....
அதே வேலையை திரும்ப திரும்ப பார்க்கும் சூழ்நிலை , உள்ளுக்குள்ளே ஒரு சலிப்பு ஏற்படுத்திவிடும். ஒரே மாதிரி வேலை, ஒரே கம்பெனியில் பல வருடங்களாக வேலை பார்ப்பது எல்லாம் - ஒருகட்டத்தில் ஆளே இல்லையானாலும், டீ ஆத்தும் லெவலுக்குக் கொண்டுபோய் விட்டு விடும். 
வாழ்க்கையில் சாதனையாளர்களுக்கும், சாமானியர்களுக்கும் உள்ள வேறுபாடு என்ன என்று - லட்சக்கணக்கில் புத்தகங்கள் வந்து குவிந்து விட்டன. ஏன், நமக்கே எத்தனையோ பேர் சொல்லி இருப்பாங்க. மெயில் வந்து இருக்கும். சினிமால பார்த்து இருப்போம். அதை எல்லாம் படிச்ச கொஞ்ச நேரத்துக்கு ஜிவ்வுன்னு இருக்கும். அதுக்கு அப்புறம் அப்படியே மறந்து போகும்... ஓடு , ஓடுன்னு ஓடிஓடியே - வழக்கமான வேலைகளைப் பார்த்து பார்த்து - அப்படியே ஒரு லெவல்ல நின்று விடுகிறோம்.

"ஷிவ்கேரா" ன்னு ஒருத்தர் -  " YOU CAN WIN  " அப்படின்னு ஒரு புத்தகம் எழுதி  இருக்கிறார். உலகப் புகழ் பெற்ற புத்தகம்.  அவரது தன்னம்பிக்கை வகுப்புகள், உரைகள் -  ஏராளமாக " You  Tube "  - பில் கிடைக்கும். ஒரு முறை பாருங்கள்... நிச்சயம் உங்களுக்கு Pop  Eye இன் Spinach  குடித்த தெம்பு கிடைக்கும்.இணையத்தில் இந்த புத்தகம் free  யாக கிடைக்கிறது. கூகுளில் தேடினால், நீங்களே டவுன்லோட் செய்து படிக்க முடியும்.

எதற்க்காக சொல்கிறேன் என்றால், உடல் ஒரு எந்திரம் போன்றது. அதற்கே ஓய்வு தேவைப்படும்போது - மனது ஒரு புதிரான ஒரு வஸ்து. அதற்க்கு புத்துணர்ச்சி தருவது மிக முக்கியம். மனத்தை சோர்வடையாமல் வைத்து இருப்பவர்கள் மட்டுமே, வாழ்வில் சிறப்பான நிலைமை அடைய இயலும்.

I am the champion. I can Win - இதை மட்டுமே திரும்ப திரும்ப நினையுங்கள். இந்த இரு வாக்கியங்கள், மனதுக்கு புது பலம் கொடுக்கும். சோர்வடையும் நிலைமையில் , இந்த வாக்கியங்கள் கொடுக்கும் சக்தி அளவிட முடியாதது.

சரி - வாழ்க்கையில் ஜெயித்தவர்களுக்கும், கடவுள் நம்பிக்கைக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா? சம்பந்தம் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் ஒவ்வொரு சாதனையாளனுக்கும் - அவன் மனதுக்கும் சம்பந்தம் இருக்கிறது.

எத்தனையோ  முறை  தோல்வி அடைந்தாலும் , இதோ வெற்றியை நெருங்கி விட்டோம் என்கிற மன வலிமை - நிச்சயம் ஒவ்வொரு வெற்றிக்கும் பின்னே இருக்கிறது. மனதுக்கும் , இறைவனுக்கும் சம்பந்தம் இருக்க முடியுமோ ஒருவேளை?

மகான் ஒருவர் கேட்கிறார்  : உங்கள் வீட்டுப் பூஜை அறையிலும், கோவில்களில் இருக்கும் சிலைகளிலும் பகவான் இருக்க முடியும் என்று நம்பி வணங்குகிறீர்களே அப்படி, எங்கும் வியாபித்து இருக்கும் அந்த பரப் பிரம்மம் - உங்கள் உள்ளும் உறைந்து இருக்கும் என்பதை நீங்கள் ஏன் நம்ப மறுக்கிறீர்கள்?   உங்களுக்குள் இருக்கும் இறைவன், எப்படி தோற்க முடியும்? அவமானப் பட முடியும்? இன்னொருவரை அவமதிக்க முடியும்?

மேஜை , நாற்காலி என்று இருக்கும் ஒவ்வொரு பொருளும் ஒருவர் படைத்தது தான் என்னும்போது, இந்த பிரபஞ்சத்தையும் ஒருவர் உருவாக்கி இருக்க வேண்டும் அல்லவா? அதைப் படைத்து , அதை இயக்கும் சக்தியின் ஒரு துளி , நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருப்பது சாத்தியம் தானே.... 

மரபணு, ஜீன்ஸ் என்று சொல்கிறோமே, அப்படிப் பார்த்தால் - அந்த இறைவனின் பரம்பரை தானே நாம் எல்லோரும்? 

உள் நின்று ஒளிரும் இறையை  நாம் உணர வேண்டும்..! எங்கும் உள்ள இறைவன் நம்முள் இருப்பதை உணர்ந்த பிறகு, இறைநிலையை விழிப்படையச் செய்த பிறகு, நிம்மதியும், சந்தோசமும், ஞானமும் சித்திக்கும்.

ஒருவர் மேல் விழும் மலர் மாலைகள் , அவருக்குள் இருக்கும் இறைவனுக்கே என்பதை உணர்ந்தவர்கள் , பெருமையும், செருக்கும் அடைவதில்லை.  ஞானிகள் அப்படித்தான் நினைக்கின்றனர். சில அரைவேக்காடுகள் தான் மாலை விழுந்த மமதையில் ஆட்டம் போட்டு, அடங்கிப் போகின்றனர்.

தன்னால் முடியும் நிலைமையில் முயற்சி செய்யாமல் , கடவுளை மட்டும் நம்புபவர்களை , கடவுள் கண்டுகொள்வதே இல்லையாம். தன் முழு சக்தியையும் உபயோகப்படுத்தி, ஒருவேளை முயற்சி கைகூடாதபொழுது , இறைவனை சரணாகதி அடைபவர்களை அவர் நிச்சயம் கை தூக்கி விடுவார். இது பகவான் ராமகிருஷ்ணர்  கூறிய வேத வாக்கு.....

கடவுள் நம்பிக்கை ஒரு மனிதனுக்கு அவசியமா என்பதற்கு விவேகானந்தர் என்ன சொல்கிறார் தெரியுமா?  சுட்டெரிக்கும் வெயிலில் ஒருவர் நடந்து போக வேண்டிய நிலை. தாங்கும் வலிமை உடையவர்கள் வெறும் காலுடன் நடக்கலாம். அதையே, இறை நம்பிக்கை உடையவர்கள் காலில் செருப்பும், கையில் ஒரு குடையும் கொண்டும் நடக்கிறார்கள் என்கிறார்.

கடவுளை நம்பி, தன் முயற்சிகளை முனைப்புடன் செய்பவர்கள் - ஒரு சுகமான பயணத்துக்குத் தயாராகிறார்கள். கரடு முரடான, முட்கள் நிறைந்த வாழ்க்கைப் பயணத்திற்கு - இறை நம்பிக்கை அவசியமான ஒன்று......

தன் மேல் நம்பிக்கை இருக்கும் ஒவ்வொருவரும் ஆன்மீகவாதி தான் என்கிறார் சுவாமி விவேகானந்தர். உங்கள் உள்ளிருக்கும் இறைவனை நம்புங்கள் என்பதற்காகத் தான் கூறி இருப்பார் என்று நான் நினைக்கிறேன்.
ஞானிகள் எந்த விஷயத்தையும் உடைத்து, வெளிப்படையாகப் பேசுவதில்லை. நம்மை சிந்திக்க வைத்து, நம்மை செயல்பட வைக்கின்றன அவர்களது போதனைகள்.


எத்தனையோ புத்தகங்கள் படித்தாலும், எவ்வளவோ ஞானிகளின் போதனைகளைக் கேட்டாலும் , அவரவர் மனது சொல்லும் காரியங்களைத் தான் ஒருவர் செய்ய முடியும். மனத்தை அறிந்து, அதைக் கட்டுப்படுத்தி, அதை எழுச்சி பெற செய்வது தான் - வெற்றி மந்திரம்.

சமீபத்தில் படித்த ஒரு விஷயத்தை கீழே கொடுத்துள்ளேன். இதில் எவ்வளவு அர்த்தம் பொதிந்துள்ளது என்பதைப் பாருங்கள்...

ஞானி ஒருவரிடம் ஒரு சீடன் புகார் செய்தான். “நீங்கள் கதைகள் சொல்லுகிறீர்கள். ஆனால் அவற்றின் பொருளை சொல்வதில்லை!”
அதற்க்கு அவர் கூறியது : "உனக்கு ஒருவர் பழம் கொடுக்கிறார். உனக்கு மகிழ்ச்சியாக இருக்கும். அதுவே அவர் அந்த பழத்தை கடித்து மென்று உன்னிடம் கொடுத்தால் எப்படி இருக்கும்?”

சீடர்கள் கடவுளைப்பற்றி நிறைய கேள்விகள் கேட்டனர்.
குரு சொன்னார். கடவுளை யாரும் முழுமையாக அறிய முடியாது. அவரைப் பற்றி யார் எதை சொன்னாலும் அது நிறைவற்றே இருக்கும்.

சீடர்களுக்கு அதிர்ச்சி!
"பின்னே ஏன் அவரைப் பற்றி பேசுகிறீர்கள்?”
குரு கேட்டார் “குயில் ஏன் பாடுகிறது?”

அறிஞர்கள் சொல்வதை புரிந்து கொள்ளவேண்டும். ஞானிகள் சொல்வதை சும்மா கேட்க வேண்டும்: மரங்களிடை சுழன்று வரும் காற்று போல; ஓடையின் சலசலப்பு போல; அருவியின் ஆர்ப்பரிப்பு போல, பறவையின் பாடல் போல. அது உனக்குள் புகுந்து சொல்ல முடியாத ஏதோ ஒன்றை விழிக்கச் செய்யும்.

இதைத் தான், நாங்களும் இந்த இணைய தளம் மூலம் செய்ய முயற்சி செய்கிறோம்...... ஏதோ ஒரு வகையில், நம் ஒவ்வொரு கட்டுரையும், வாசிப்பவர்கள் மனதில் தாக்கம் ஏற்படுத்த வேண்டும். வீணையின் நாதம் போல மனதுக்குள் புகுந்து , சொல்ல முடியாத ஒன்றை தட்டிஎழுப்ப வேண்டும்..... உங்கள் அன்பும் , ஆதரவும் இருக்கும் வரை, அது சாத்தியப்படும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது....

நமக்கு என்ன அருகதை என்பதை நம் வினைகள் தீர்மானிக்கின்றன. வெளியில் இறைவனைத் தேட வில்லையெனில், தன் நம்பிக்கை என்னும் உள்ளுக்குள் இருக்கும் அந்த சக்தியை முழுவதும் நம்புங்கள்....

வெற்றி சர்வ நிச்சயம்...!Read more: http://www.livingextra.com/2012_04_01_archive.html#ixzz2EjLicdjm

ஓட்டுப்போட என்னை அழுத்து


Best Blogger Gadgets

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

படிக்க வந்த நண்பர்களெல்லாம் ஒட்டு போட்டுட்டு போங்களே!!

இந்த இடுகை உங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் வாக்களிக்கவும்.


தமிழ்மணத்தில் ஆதரவு வாக்களிக்க உள்ள கருவிபட்டையில் மேல்நோக்கியுள்ள கைவிரலை சொடுக்கவும்