குஜராத்தில் நரேந்திர மோடி அப்புடி என்ன செய்துட்டார்? ஒரு பார்வை

நரேந்திரமோடி ஹாட்ரிக் சாதனையாக 3-வது முறையாக குஜராத்தின் முதல்-மந்திரி ஆசனத்தில் அமரப் போகிறார். ந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களையும் விட குஜராத் மட்டும் தனியாக கவனிக் கப்படுகிறது. என்ன காரணம்ப மோடி என்ற ஒரே தலைவரை சுற்றி சுழலும் பல்வேறு யூகங்களும், ஆச்சர்யங்களும்தான்.
 
மத அடிப்படைவாதி... மத மோதல்களுக்கு காரணமானவர்... என்று இந்தியாவிலும், உலக நாடுகளிலும் பல்வேறு முத்திரைகள் குத்தப்பட்டாலும் குஜராத் மக்கள் தங்களின் மானசீக ஹீரோவாக மோடியை ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.
 
குஜராத்தின் நிரந்தர 'ஹீரோ' நரேந்திரமோடி: தமிழக தலைவர்கள், பிரமுகர்கள் கருத்து
 
போற்றுவார் போற்றட்டும், புழுதிவாரி தூற்றுவோர் தூற்றட்டும் நம் பணியை நாம் செய்வோம் என்ற லட்சிய தாகத்தோடு அவர் ஆற்றிவரும் சாதனைகள்தான் அவரை வெற்றி திருமகனாக வாகை சூட வைத்துள்ளது.
 
மோடி வெற்றியின் ரகசியம் என்ன? என்பது பற்றி குஜராத் தேர்தலில் பிரசாரம் செய்து திரும்பிய தமிழக பா.ஜனதா தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-
 
நரேந்திர மோடி பற்றி தவறான தோற்றத்தை வெளியே சித்தரிக்கிறார்கள். ஆனால் அந்த மாநில மக்கள், அந்த மாநிலத்தை பார்த்தவர்கள், மோடியோடு பழகியவர்கள் இதை ஏற்கமாட்டார்கள். அவர் குஜராத் மீது அளவு கடந்த பாசம் வைத்துள்ளார். ஒரு காலத்தில் கலவர பூமியாக காட்சியளித்தது.
 
ஆனால் அவரது ஆட்சியில் கலவரங்கள் இல்லை. யாரும் பாதிக்கப்பட கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார். மதத்தின் அடிப்படையில் யாரையும் அவர் பிரித்து பார்ப்பதில்லை. எல்லோரும் வளர்ச்சி அடைந்தால்தான் மாநிலம் முன்னேறும் என்று அனைத்து தரப்பு மக்களின் முன்னேற்றத்துக்காக பாடுபடுகிறார்.
 
கேசுபாய் பட்டேலை பிரித்ததும் பட்டேல் சமூகத்தின் ஓட்டை பிரித்துவிடலாம் என்று எதிர்க்கட்சிகள் கனவு கண்டன. ஆனால் அந்த சமூக ஓட்டு சிதறவில்லை. சாதி, மத அடிப்படையில் அந்த மாநிலத்தில் யாருக்கும் சலுகை காட்டுவதில்லை. கடந்த முறை நான் பிரசாரத்துக்கு சென்றபோது இருந்த ஆதரவை விட இப்போது ஆதரவு பெருகி இருந்ததை என்னால் பார்க்க முடிந்தது. குஜராத்தின் வளர்ச்சி ஒட்டு மொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
 
நர்மதை ஆற்று தண்ணீரை பல பகுதிகளுக்கு திருப்பி விட்டுள்ளனர். புதிய சாலைகள், ஆயிரக்கணக்கில் தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளது. இதனால் விவசாயமும் செழிக்கிறது. நிலத்தடி நீரும் காக்கப்படுகிறது. 2001-க்கு முன்பு 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு லாரிகளில் குடிநீர் சப்ளை செய்யப்பட்டது. இன்று அந்த நிலை இல்லை.
 
விவசாயத்துக்காக 15 லட்சம் பம்பு செட்டுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இலவசம் கிடையாது.
 
சூரியஒளி மின்உற்பத்தி, காற்றாலை மின்உற்பத்தி மூலம் தேவைக்கு அதிகமான மின்சாரம் உற்பத்தி வழங்கப்படுகிறது. தமிழகத்துக்கு 1000 மெகாவாட் மின்சாரம் வழங்க அந்த மாநிலம் தயாராக இருக்கிறது. பல்வேறு தொழிற்சாலைகள் பல பகுதிகளில் தொடங்கப்பட்டுள்ளது. இதனால் வேலைவாய்ப்பு பெருமளவில் பெருகி உள்ளது.
 
2001-க்கு முன்பு கல்வியை இடையில் நிறுத்தும் மாணவர்கள் 50 சதவீதத்துக்கு மேல் இருந்தனர். இப்போது கல்வி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி அந்த நிலையை மாற்றி இருக்கிறார்கள். பெண் கல்விக்கு முக்கியத்துவம் வழங்கி வருகிறார்கள். ஒவ்வொரு விசயத்திலும் முதல்- மந்திரியாக இல்லாமல் மக்களில் ஒருவராக இருந்து அவரே நேரடியாக கவனம் செலுத்துகிறார். புதிய தொழில் நுட்பங்களை பழமை மாறாமல் புகுத்தி வருகிறார்.
 
அனைத்து கிராம பஞ்சாயத்துகளையும், கம்ப்யூட்டர் மூலம் இணைத்து உட்கார்ந்த இடத்தில் இருந்தே ஒவ்வொரு கிராமத்தையும் நேரடியாக கண்காணிக்கிறார்.
 
அர்ப்பணிப்புடன் கூடிய அவரது உழைப்பும், மாநிலத்தின் வளர்ச்சியும்தான் மக்களை ஈர்த்துள்ளது.
 
வெளியே என்னதான் முத்திரை குத்தப்பட்டாலும் குஜராத்தில் வாழும் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் அனைவரும் பாகுபாடு இல்லாமல் அவரை ஆதரிக்கிறார்கள். மற்ற கட்சிக்காரர்கள் கூட மோடி வெற்றி பெற்றால்தான் மாநிலம் வளரும் என்று கூறுகிறார்கள்.
 
எனவே அவரது வெற்றி எதிர்பார்த்ததுதான். எத்தனை அரசியல் புயல்கள் வீசினாலும் நரேந்திர மோடி என்ற இரும்பு மனிதரை வீழ்த்தி விட முடியாது.
 
இவ்வாறு அவர் கூறினார்.
 
முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி (பா.ம.க.) கூறியதாவது:-
 
நரேந்திர மோடியை பொறுத்தவரையில் மிகவும் எளிமையானவர். நான் மந்திரியாக இருந்தபோது 3 முறை அந்த மாநிலத்துக்கு சென்றுள்ளேன். அவரது உழைப்பு, சிந்தனை அனைத்தும் அந்த மாநிலத்தை சார்ந்தே இருக்கும். நேர்மையாக மக்களுக்காக உழைக்க கூடியவர்.
 
பூரண மதுவிலக்கை அமல்படுத்தி இளைஞர் சக்தியை மாநில வளர்ச்சிக்காக நல்ல முறையில் பயன்படுத்தி வருகிறார். எல்லா முதல்- மந்திரிகளுக்கும் அவர் எடுத்துக்காட்டாக திகழ்கிறார். மக்கள் நலனுக்காக பாடுபட்டால் மக்கள் மனதில் இருந்து அகற்ற முடியாது என்பதை நரேந்திர மோடியின் வெற்றி நிரூபித்து வருகிறது.
 
அசோக் பி.வியாஸ் (திருவல்லிக்கேணி):- எங்கள் பூர்வீகம் ஆமதாபாத். ஆனால் நான் பிறந்து வளர்ந்தது சென்னையில்தான். இப்போது உறவினர்களை பார்ப்பதற்காக அவ்வப்போது குஜராத் செல்வேன்.
ஒவ்வொரு முறை செல்லும்போதும் அங்கு பார்க்கும் வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது.
 
எப்படியோ கிடந்த சாலைகள் இன்று எப்படியோ மாறி உள்ளன. அப்படிப்பட்ட தரமான சாலைகளை வேறு எங்கும் நான் பார்க்கவில்லை.
பஸ் போக்குவரத்து வித்தியாசமாக உள்ளது. ரோட்டின் நடுவில் பஸ்கள் செல்ல தனிவழி. போக்குவரத்து இடைஞ்சல் இல்லாமல் வாகனங்கள் செல்லமுடியும். பாலங்கள், மேம்பாலங்கள், பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் உள்பட பல வளர்ச்சியை நான் பார்த்து வருகிறேன்.
 
எங்கள் நகரத்துக்கு பக்கத்தில் ஆனந்த் என்ற சிறு கிராமம் உள்ளது. குடியிருக்கவே லாயக்கில்லாத அந்த கிராமத்தில் இப்போது செல்வம் கொழிக்கிறது. அங்கு வளர்க்கப்படும் பசுமாடுகள், பால்கறக்க நவீன எந்திரங்கள். அங்கு கிடைப்பதுபோல் தரமான பாலை எங்கும் வாங்க முடியாது. இப்படி ஒரு கிராமமே வளரும்போது ஒட்டுமொத்த மாநிலமும் வளர்ச்சி காணும். எனவேதான் மக்கள் மத்தியில் மோடி ஹீரோவாக காட்சியளிக்கிறார்.
 
பாயின்ட் மணி (தொழில் அதிபர்):- தொழில் ரீதியாக அடிக்கடி குஜராத் செல்கிறேன். அங்குள்ள நிர்வாக முறையே ஆச்சரியப்பட வைக்கிறது. எந்த தொழில் தொடங்க அந்த மாநிலத்துக்கு சென்றாலும் அரசே ஊக்கப்படுத்துகிறது. அந்த தொழிலால் ஏற்படும் பிரச்சினைகளுக்கும் அரசு தீர்வு காண்கிறது. உதாரணமாக திருப்பூர் பகுதியில் சாயப்பட்டறை பிரச்சினை எழுந்தபோது பலர் குஜராத் சென்று தொழிலை செய்தார்கள்.
 
அப்போது சாய கழிவுகளை சுத்திகரித்து கடலில் கலந்தார்கள். விவசாயத்தையும், தொழிலையும் ஒன்றுபோல் ஊக்கப்படுத்துகிறார்கள். எதுவுமே இலவசம் இல்லை. அரசு துறைகளில் அரசியல் குறுக்கீடு இல்லை. பூரண மதுவிலக்கு அமுலில் உள்ளது. எல்லோரும் உழைப்பை நம்பி வருகிறார்கள். தேர்தலில் கூட ஆடம்பரத்தை பார்க்க முடியவில்லை.
உழைக்க வேண்டும், முன்னேற வேண்டும் என்று ஒவ்வொருவரும் உழைக்கிறார்கள்.
 
அதற்கு அரசின் ஊக்கமும் கைகொடுப்பதால் மக்கள் எல்லோரும் சமமாக வாழ்கிறார்கள். இங்கெல்லாம் பணக்காரர்கள் பணக்காரர்களாகவும், பாமரர்கள் பாமரர்களாகவும் இருப்பதால் இடைவெளி உள்ளது. அந்த இடைவெளி குஜராத்தில் இல்லை. எனவே எல்லாதரப்பு மக்களும் மோடியை ஆதரிக்கிறார்கள்.
 
சென்னை மாநகராட்சியில் இருந்து கடந்த ஆட்சியின்போது பல்வேறு கட்சிகளை சேர்ந்த 15 கவுன்சிலர்கள் குஜராத் மாநிலத்தை பார்வையிட சென்றார்கள். மோடி மக்களால் ஈர்க்கப்படுவது பற்றி அவர்களிடம் கேட்டபோது பெயரை வெளியிட மறுத்து கூறியதாவது:-
 
பிளேக் நோய் பாதித்து சுகாதார சீர்கேட்டுக்கு பெயர் போன நகரம் சூரத். இப்போது அந்த நகரம் சுகாதாரத்துக்கு முன்னுதாரணமாக திகழ்கிறது. ஆமதாபாத் நகரில் எங்கும் போக்குவரத்து நெரிசலை பார்க்க முடியவில்லை. நகராட்சி சார்பிலேயே பிரமாண்டமான ஆஸ்பத்திரி, மருத்துவ கல்லூரி நடத்துகிறார்கள். அதில் அரசியல் தலையீடு இல்லாமல் தனி கமிட்டி அமைத்து நிர்வாகம் செய்கிறார்கள்.
 
சாக்கடை நீரை கூட விட்டு வைக்கவில்லை. சூரத்தில் சாக்கடை நீரில் இருந்து மின்சாரம் தயாரித்து குறிப்பிட்ட பகுதிக்கு விநியோகிக்கிறார்கள். எல்லாவற்றையும் முறையாக செய்வதால் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு மோடியை யாராலும் அசைக்க முடியாது என்பதை நாங்கள் நேரிலேயே பார்க்க முடிந்தது என்றனர்.

Best Blogger Gadgets

1 கருத்து :

பெயரில்லா சொன்னது…

\\\\ ஆனால் அவரது ஆட்சியில் கலவரங்கள் இல்லை. யாரும் பாதிக்கப்பட கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார். மதத்தின் அடிப்படையில் யாரையும் அவர் பிரித்து பார்ப்பதில்லை.////

அப்போ 2002 யில் 3000 முஸ்லிம்களை கொன்று நரமாமிச பசியை தனித்துக் கொண்டது என்னவாம் திருவிழாவோ??? பச்சபொய் பேசியே பழக்கப்பட்டவர்கள் பி ஜே பி னர். இந்த லட்சணத்தில் மோடியை பிரதமராக்க போறாங்களாம் நினைத்தாலே பயமாக இருக்கிறது. மோடியை பிரதமரானாள் இந்தியா கலவர பூமியாக மாறி ஒருத்தரை ஒருத்தர் அடித்துக்கொண்டு சாகவேண்டியது தான்.

ஒரு இந்திய குடிமகன்

கருத்துரையிடுக