சென்னை விவேகானந்தர் இல்லத்திற்கும்(ஐஸ் ஹவுஸ்), விவேகானந்தருக்கும் என்ன தொடர்பு?இந்த விவேகானந்தர் இல்லத்திற்கும், விவேகானந்தருக்கும் என்ன தொடர்பு?

சுவாமி விவேகானந்தர் 1892-ஆம் ஆண்டு தமிழ்நாட்டிற்கு முதல் முறையாக வந்தார். அப்போதுதான் அவர் 1892-ஆம் ஆண்டு டிசம்பர் கடைசியில், கன்னியாகுமரியில் இப்போது விவேகானந்தர் நினைவுச் சின்னம் இருக்கும் குன்றின் மீது அமர்ந்து தியானம் செய்தார். அங்கிருந்து அவர் மதுரைக்கு வந்தபோது, ராமநாதபுர அரசர் பாஸ்கர சேதுபதியைச் சந்தித்தார். ராமேஸ்வரம், பாண்டிச்சேரி வழியாக சுவாமி விவேகானந்தர் சென்னைக்கு வந்தார்.
சென்னையில் அவர் மயிலாப்பூரில் தங்கினார்.சென்னையில் அவருக்குச் சீடர்கள் பலர் உருவானார்கள்.

சென்னையில் இருந்தபோதுதான் சுவாமி விவேகானந்தர், அமெரிக்காவில் நடைபெற இருந்த சிகாகோ சர்வ சமயப் பேரவையில் கலந்து கொள்வதுப் பற்றி இறுதி முடிவெடுத்தார். சென்னை அன்பர்கள் தந்த ஊக்கத்தின் பேரில் அவர் அமெரிக்கா சென்றார்.

1893-ஆம் ஆண்டு செப்டம்பர் 11-ஆம் நாள் சிகாகோவில் சர்வ சமயப் பேரவை நடைபெற்றது. அதில் இந்து மதத்தின் பிரதிநிதியாகக் கலந்துகொண்டு சுவாமி விவேகானந்தர் நிகழ்த்திய சொற்பொழிவுகள் அவருக்கு உலகளாவிய பெரும் புகழைத் தேடித் தந்தன. அதைத் தொடர்ந்து அவர் சுமார் 4 ஆண்டுகள் மேலை நாடுகளில் தங்கி, வேதாந்தப் பிரசாரத்தில் ஈடுபட்டார். பிறகு அவர் 1897-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் நாள் இரண்டாம் முறையாகத் தமிழ் நாட்டிற்கு வந்தார். அப்போது அவர் பாம்பன், ராமேஸ்வரம், ராமநாதபுரம், மானாமதுரை, பரமக்குடி, மதுரை, கும்பகோணம் ஆகிய ஊர்களில் சொற்பொழிவுகள் நிகழ்த்தியபடியே சென்னைக்கு வந்தார்.

சென்னைக்கு இரண்டாம் முறை வந்தபோது அவர் திருவல்லிக்கேணியிலுள்ள 'ஐஸ் ஹவுஸ்' என்ற கட்டிடத்தில் தங்கினார். அந்தக் கட்டிடம்தான் இப்போது 'விவேகானந்தர் இல்லம்' என்று அழைக்கப்படுகிறது.விவேகானந்தர் இல்லம்... 1897-ஆம் ஆண்டு பிப்ரவரி 6 முதல் 14-ஆம் தேதி வரையில் ஒன்பது நாட்கள் சுவாமி விவேகானந்தர் இந்த ஐஸ் ஹவுஸ் கட்டிடத்தில் தங்கியிருந்தார். அப்போது அவர் சென்னையில் புகழ் பெற்ற ஆறு சொற்பொழிவுகள் நிகழ்த்தினார்.

நம்நாடு அந்நியர் ஆதிக்கத்தில் இருந்தபோது கப்பலிருந்து வரும் ஐஸ் பார்களை அடுக்கி வைக்க ஏற்ற வகையில் இக்கட்டிடத்தை ஐஸ் கிடங்காகப் பயன்படுத்தி வந்தனர். அதனாலேயே "ஐஸ் ஹவுஸ்" என்ற பெயர் ஏற்பட்டது.

விவேகானந்தர் அங்கு தங்கியிருந்தபோது அந்தக் கட்டிடத்திற்கு "ஐஸ் ஹவுஸ்" என்றுதான் பெயர். பின்னர் விவேகானந்தரின் சீடரான பிலிகிரி ஐயங்காரால் வாங்கப்பட்டு "காஸில் கெர்னன்" (கருணை இல்லம்) என்ற பெயரைப் பெற்றது.

1963-ஆம் வருடம் விவேகானந்தரின் நூற்றாண்டு விழா சமயத்தில், இந்தக் கட்டிடத்திற்கு "விவேகானந்தர் இல்லம்" என்று தமிழ்நாடு அரசு பெயர் சூட்டியது.

1897-ஆம் ஆண்டு சுவாமி விவேகானந்தர் ஐஸ் ஹவுஸ் கட்டிடத்தில் தங்கியிருந்தபோது அவரிடம் சென்னை அன்பர்கள், "சென்னையில் ஸ்ரீராமகிருஷ்ண மடம் ஆரம்பியுங்கள்" என்று கேட்டுக் கொண்டார்கள். அவர்களின் வேண்டுகோளை விவேகானந்தர் ஏற்றுக் கொண்டார்.
அதன்படி விவேகானந்தர் கல்கத்தா சென்றதும், ஸ்ரீராமகிருஷ்ணரின் சீடர்களில் ஒருவரான சுவாமி ராமகிருஷ்ணானந்தரைச் சென்னைக்கு அனுப்பினார்.

சுவாமி ராமகிருஷ்ணானந்தர் 1897-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் சென்னையில் ஸ்ரீராமகிருஷ்ண மடம் நிறுவினார்.

1897-ஆம் ஆண்டு முதல் 1906 வரையில் சுமார் 10 ஆண்டுகள், காஸில் கெர்னன் கட்டிடத்தில்தான் ஸ்ரீராமகிருஷ்ண மடம் இயங்கி வந்தது.

அங்கு ஸ்ரீராமகிருஷ்ண மடம் இயங்கி வந்தபோது ஸ்ரீராமகிருஷ்ணரின் சீடர்களான சுவாமி சிவானந்தர், சுவாமி நிரஞ்சனானந்தர், சுவாமி திரிகுணாதீதானந்தர், சுவாமி அபேதானந்தர் ஆகியவர்கள் வந்திருக்கிறார்கள். இவர்களைத் தவிர ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் மூத்தத் துறவிகளான மகான்கள் பலர் அங்கு வந்திருக்கிறார்கள். சகோதரி நிவேதிதாவும் அங்கு வந்திருக்கிறார்.

ஸ்ரீசாரதா தேவியாரின் சீடர்கள், சுவாமி விவேகானந்தரின் சீடர்கள் உட்பட பெரியோர்கள் பலர் காஸில் கெர்னனுக்கு வந்திருக்கிறார்கள்.

1902-ஆம் ஆண்டு ஜூலை 4-ஆம் நாள் சுவாமி விவேகானந்தர், பேலூர் ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் மகாசமாதி அடைந்தார். அதற்கு அடுத்தாண்டு அதாவது, 1903-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் காஸில் கெர்னன் கட்டிடத்தில்தான் முதல் முறையாக "விவேகானந்தர் ஜயந்தி" கொண்டாடப்பட்டது.

இப்போது உலகில் எத்தனையோ இடங்களில் எவ்வளவோ பேர் விவேகானந்தஜயந்தியைக் கொண்டாடுகிறார்கள். ஆனால் உலகில் முதல் முதலில் விவேகானந்த ஜயந்தி கொண்டாடப்பட்ட இடம் என்ற பெருமை காஸில் கெர்னனுக்கு (கருணை இல்லத்திற்கு) மட்டும் உண்டு.
1897-ல் காஸில் கெர்னன் கட்டிடத்தில் மடம் ஆரம்பிக்கப்பட்டதே தவிர, அந்தக் கட்டிடம் ஸ்ரீராமகிருஷ்ண மடத்திற்குச் சொந்தமான கட்டிடம் அல்ல.

1906-ஆம் ஆண்டு காஸில் கெர்னன் கட்டிடம் ஏலத்திற்கு வந்தது. அப்போது அந்தக் கட்டிடத்தை விலைக்கு வாங்கக் கூடிய பண வசதி ஸ்ரீராமகிருஷ்ண மடத்திற்கு இல்லை.

1906-ஆம் ஆண்டு விவேகானந்தர் இல்லத்திலிருந்து இப்போது மயிலாப்பூரில் இருக்கும் இடத்திற்கு மடம் மாறியது.

1963-ஆம் ஆண்டு விவேகானந்தர் நூற்றாண்டு விழா இந்தியா முழுவதும் பெரிய அளவில் கொண்டாடப்பட்டது. அப்போது விவேகானந்தர் இல்லத்தின் அருகிலிருக்கும் விவேகானந்தர் சிலையை ஸ்ரீராமகிருஷ்ண மடம் நிறுவியது.


பிறகு 1986-ஆம் ஆண்டு இந்திய அரசு சுவாமி விவேகானந்தர் பிறந்த ஜனவரி 12-ஆம் தேதியை 'தேசிய இளைஞர் தினம்' என்று அறிவித்தது. அப்போது முதல் ஒவ்வொரு வருடமும் ஜனவரி 12-ஆம் தேதியன்று, விவேகானந்தர் இல்லத்தின் அருகிலிருக்கும் விவேகானந்தர் சிலை அருகில், விவேகானந்த ஜயந்தியை தேசிய இளைஞர் தினமாக மாணவ மாணவிகளுக்காக ஸ்ரீராமகிருஷ்ண மடம் கொண்டாடி வருகிறது.

அன்றைய தினம் பல்வேறு கல்வி நிறுவனங்களையும் சேர்ந்த மாணவ மாணவிகள் நிறைய பேர் அங்கு கூடுவார்கள். அவர்களுக்கு ஸ்ரீராமகிருஷ்ண மடத்தைச் சேர்ந்த துறவிகள் தமிழிலும் ஆங்கிலத்திலும் சொற்பொழிவுகள் நிகழ்த்தும் வழக்கம் இருந்து வருகிறது.

 Source:
அம்பலத்திலிருந்து "விவேகானந்தர் இல்லம்" பற்றி ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் ஆசிரியர் சுவாமி கமலாத்மானந்தர்

ஓட்டுப்போட என்னை அழுத்து


Best Blogger Gadgets

1 கருத்து :

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இவ்வளவு விளக்கமாக அறிந்ததில்லை... மிக்க நன்றிங்க...

கருத்துரையிடுக

படிக்க வந்த நண்பர்களெல்லாம் ஒட்டு போட்டுட்டு போங்களே!!

இந்த இடுகை உங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் வாக்களிக்கவும்.


தமிழ்மணத்தில் ஆதரவு வாக்களிக்க உள்ள கருவிபட்டையில் மேல்நோக்கியுள்ள கைவிரலை சொடுக்கவும்