படித்ததில் பிடித்தது: பெற்றோரும் குழந்தைகளே!





யதான தாய் தன் மகனுடன் தோட்டத்தில் அமர்ந்து இருக்கிறாள். ஒரு மரத்தில் அமர்ந்திருக்கும் சிறு பறவையைக் காட்டி, 'மகனே, அது என்ன பறவை?' என்கிறாள். 'மைனா' என்கிறான் மகன். அந்தப் பறவை வேறு மரத்தில் போய் அமர்கிறது. மறுபடியும் தாய் அது என்ன பறவை எனக் கேட்கிறாள். 'மைனா' என்கிறான் மகன். அடுத்து வேறு மரத்துக்கு அந்தப் பறவை தாவுகிறது. மூன்றாவது முறையாக அம்மா அதே கேள்வியைக் கேட்கிறாள். ''உனக்கென்ன பைத்தியமா பிடிச்சிருக்கு. அதான் சொல்றேன்ல... அது மைனான்னு...'' என எரிந்து விழுகிறான் மகன். அந்தத் தாய் வீட்டுக்குள் போய் தன் டைரியை எடுத்து வருகிறாள். மகனிடம் கொடுக்கிறாள்.
''என் மகனுக்கு அப்போது இரண்டு வயது. நானும் என் மகனும் தோட்டத்தில் அமர்ந்திருந்தோம். அப்போது மைனா ஒன்று பறந்து வர 'அது என்ன?' எனக் கேட்டான் என் மகன். 'மைனா' என்றேன். மைனா அடுத்த மரத்துக்குத் தாவியபோது மறுபடியும் அது என்ன எனக் கேட்டான். 'மைனா' என்றேன். இப்படியாக ஒவ்வொரு மரமாக மைனா தாவியபோதும் என் மகன் கேள்வி கேட்டுக்கொண்டே இருந்தான். ஒவ்வொரு முறையும் மைனா... மைனா எனச் சொன்னபோது அந்த மைனாவைப் போலவே ஆனந்தத்தில் நான் பறந்துகொண்டு இருந்தேன்!''
சென்ற வருடத்தின் சிறந்த குறும்படமாக சர்வதேச விருது பெற்ற  படத்தின் காட்சி இது. அலுவலகம், நட்பு வட்டாரம், ஃபேஸ்புக் என எது எதற்கோ நேரம் ஒதுக்கும் நாம் நம் பெற்றோருக்காக ஒரு நாளைக்கு எவ்வளவு நேரத்தை ஒதுக்குகிறோம்? அவர்களுக்கான தேவைகளை நம்மில் எத்தனை பேர் மனம்விட்டுக் கேட்கிறோம்? தள்ளாத வயதில் பேரன் - பேத்திகளைக் கொஞ்சி மகிழும் காலத்தில் பல பெற்றோர்கள் வறுமையிலும் தனிமையிலும் தவிக்கும் அவலத்தை எப்படித் தவிர்ப்பது?
''சம்பாத்தியத்தை நோக்கியே சுழலும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த பலருக்கு வயதான பெற்றோரைக் கவனிக்க நேரம் இல்லை. நாலு வார்த்தை பரிவாய்ப் பேசக்கூட பொறுமை இல்லை.
வறுமையில் வாடும் ஏழ்மை நிலையில் இருக்கும் பெற்றோர்களோ உழைப்பதற்குத் தயாராக இருந்தும், உடலில் வலு இல்லாமல், ஒடுங்கிக்கிடக்கின்றனர். இதுதான் இன்றைய வயோதிகப் பெற்றோர்களின் யதார்த்த நிலை. இதற்கு உதாரணமாக நான் பார்த்த முதியவரைப் பற்றிச் சொல்கிறேன்.
80 வயது வயோதிகரின் மருமகள், 'என் மாமனார் நடக்கவே முடியாமல் சோர்ந்து விழுகிறார். கொஞ்சம் வீட்டுக்கு வந்து பார்க்க முடியுமா?' என்று விடிகாலை எனக்கு போன் செய்தார். ஓரளவு வசதியான வீடுதான். கிருமித் தொற்றால் அந்த முதியவர் பாதிக்கப்பட்டிருந்தார். ஊசியைப் போட்டுவிட்டு மாத்திரைகளைக் கொடுத்தேன். கிளம்பும்போது அந்தப் பெரியவர், 'வாயில நாலு பல்லுதான் இருக்கு... சாப்பிடவே முடியலை. அதை எடுத்துவிட்டுடுங்க' என்றார். அருகே இருந்த அவருடைய மனைவி, 'எனக்கு கண் சரியாத் தெரியலை... அதையும் பார்த்திடுங்களேன்' என்றார். 'கண் டாக்டர்கிட்ட போய்க் கண் பரிசோதனை செய்து, கண்ணாடி போடணும். நீங்க பல் டாக்டரைப் பார்க்கணும்' என்று அட்வைஸ் தந்துவிட்டு, அந்த அறையைவிட்டு வெளியே வந்தேன். அங்கே நீல நிறக் கண்களோடு அந்த முதியவரின் பேத்தியைப் பார்த்தேன். 'நிஜமாவே கண் நீலமா?' என்று நான் வியந்து கேட்க, 'இல்லை டாக்டர், லென்ஸ் போட்டிருக்கா. காலேஜ் படிக்கிறதால அவ டிரெஸுக்கு மேட்சா கலர் கலரா லென்ஸ் வாங்கித் தந்திருக்கேன்' என்று பெருமிதத்துடன் சொன்னார் அந்த மருமகள்.
படிக்கும் மகள், மகனுக்காக லட்சங்களைச் செலவழிக்கும் அதே பெற்றோர், தங்களைப் பெற்றவர்களின் சின்னச் சின்ன அவசியத் தேவைகளைக்கூடப் பூர்த்திசெய்ய மறந்துவிடுகின்றனர். அவர்களின் தேவைகளை அறிந்து, பிரச்னைகளைப் புரிந்து, பேசுவதைக் காது கொடுத்துக் கேட்டாலே போதும். அவர்கள் வாழும் காலம் வரை நிம்மதியும் சந்தோஷமும் நிரந்தரமாய் இருக்கும்''

பேச்சு சுதந்திரம் பேரானந்தம்!
பெரியவர்களின் வடிகாலே... பேச்சுதான். தேக்கிவைத்த ஆசைகள், கனவுகள், இன்ன பிற நினைவுகளைப் பற்றிப் பேசும்போது, அதைக் காது கொடுத்துக் கேளுங்கள். 'நீங்க படிச்ச காலத்தில் பரிசுகள் வாங்கியிருக்கீங் களா?' என்று நீங்களோ அல்லது பேரப் பிள்ளைகளோ கேட்கும்போது, பாட்டியின் முகத்தில் தெரியும் பரவசத்தை வார்த்தைக ளால் விவரிக்க முடியாது. விசேஷ நாட்களில் பாடச் சொல்லி, பாட்டியின் கச்சேரியை ரசிக்கலாம். கை வேலைப்பாட்டில் திறமை இருந்தால், அவர் செய்த பொருட்களைக் கொண்டு வீட்டை அலங்கரிக்கலாம். தனக்கு இந்த வீட்டில் மதிப்பு இருக்கிறது என்பதை உணர ஒரு வாய்ப்பும் மன பாரத்தை இறக்கிவைத்த சந்தோஷமும் அவர்களுக்குக் கிடைத்துவிடும்.

குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை!
அம்மாக்களைப் பொருத்தவரை என்னதான் வயதாகிவிட்டாலும் அவர்களுக்கு அடுக்களையில் வேலை செய்வது மிகவும் பிடிக்கும். தனது மகனுக்கும் பேரக் குழந்தைகளுக்கும் தினம் தினம் என்று இல்லாவிட்டாலும் நாள்  கிழமைகளின் போதாவது தன் கையால் எதையாவது சமைத்துக் கொடுக்க வேண்டும் என்ற ஆசை வரும். அப்படிப்பட்டவர் என்றாவது ஒரு நாள் கேசரியில் சர்க்கரை போட மறந்திருக்கலாம். அதனால், 'அம்மா. உனக்குதான் வயசாடுச்சு இல்ல... பேசாம ஒரு மூலையிலே உட்கார். இனி மேல் நீ கிச்சன் பக்கம் போக வேண்டாம்' என்று முகத்தில் அடித்தாற்போல் பேசுவதோ... 'நல்ல வேளை உப்பைக் கொட்டாம இருந்தீங்களே...' என்று கிண்டலடிப்பதோ, அவர்களது மனதை ரணப்படுத்தும் என்பதை நினைவில்கொள்ளுங்கள்.

உணவே மருந்து

வயதான பெற்றோர்களுக்குக் குறைவான கலோரி உள்ள சத்தான உணவே போதுமானது. எலும்புகளை வலுவாக்கக் கொள்ளு, புரதச் சத்துக்கு காளான், கோதுமை, கொண்டைக் கடலை, பட்டாணி இவற்றைத் தினமும் சேர்த்துக் கொடுக்கலாம். ஓட்ஸில் அதிக புரதம், கலோரி, நார்ச் சத்து, ஆன்ட்டி ஆக்சிடென்ட்ஸ், வைட்டமின்கள் மற்றும் தாது உப்புகள் இருப்பதால் அது அவர்களுக்கு மிகவும் நல்லது. மலச்சிக்கலையும் தவிர்க்கும். அரிசியைக் குறைத்து கேழ்வரகை உணவில் சேர்ப்பதன் மூலம் உடலில் சுண்ணாம்புச் சத்து சேரும். எடை அதிகரிக்கும் மாவுச் சத்துள்ள கிழங்கு வகைகள், கொழுப்பு நிறைந்த எண்ணெய், நெய், வெண்ணெய் ஆகியவற்றைக் குறைவாகத் தந்தால் போதும். இரும்புச் சத்து நிறைந்த கீரை, பேரீச்சம்பழம், வெல்லம், தேன் மற்றும் சிட்ரஸ் பழங்கள் போன்றவற்றை அவர்கள் சாப்பிட்டால், ரத்த சோகை வராமல் இருக்கும். எந்தச் சாப்பாடாக இருந்தாலும் உப்பு குறைவாக இருந்தால், அவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் வராமல் தடுக்க முடியும். அதே சமயம், உடலில் உப்பின் அளவும் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நாள் ஒன்றுக்குக் குறைந்தபட்சம் ஒன்றரை லிட்டர் தண்ணீர் குடித்தால், மலச்சிக்கல், சோர்வு, பலவீனம், நீரிழப்பு போன்ற பல்வேறு பிரச்னைகளை அவர்கள் தடுக்கலாம்.

உற்சாகம் தரும் உடற்பயிற்சி
60 வயதைக் கடந்தவர்களாக இருந்தாலும்கூட வாரத்துக்கு மூன்று மணி நேரம் நடந்தால், மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு 35 முதல் 45 சதவிகிதம் குறைவு. ஐந்து மணி நேரம் நடந்தால், 50 சதவிகிதம் மாரடைப்பு வாய்ப்பு குறையும். ரத்த ஓட்டமும் சீராகும். உங்கள் அப்பா - அம்மாவை அருகில் இருக்கும் பூங்கா, மைதானத்துக்குச் சென்று உடற்பயிற்சியோடு, நடைப்பயிற்சி செய்யச் சொல்லலாம். விடியற்காலையில் நடப்பது அவர்களது உடலுக்குப் புத்துணர்ச்சியைக் கொடுக்கும். மற்றவர்களுடன் கலந்து உரையாடும்போது மனதில் உற்சாகம் பாயும். நல்ல உறக்கம் கிடைக்கும். பார்வைக் கோளாறு, மூட்டு வலி மற்றும் பக்கவாதப் பிரச்னை உள்ளவர்களாக இருந்தால், உட்கார்ந்த நிலையிலேயே உடலின் மேற்பகுதிக்கு மட்டும் பயிற்சி செய்யச் சொல்லி உற்சாகப்படுத்தலாம். பெற்றோர்கள் தனியாக நடந்து செல்வதாக இருந்தால், அடையாள அட்டையை அவர்களது பேன்ட் அல்லது சட்டை பாக்கெட்டில் வைத்து அனுப்புங்கள்.  

தடுக்கி விழுவதைத் தவிர்க்கலாம்
வயதானவர்கள் சில சமயங்களில் தடுக்கி விழ நேரிடும். இதனால், எலும்பு முறிய வாய்ப்பு உண்டு. இதைத் தடுக்க அவர்களின் வசதியைக் கருத்தில்கொண்டு அவர்கள் புழங்கும் அறை, கழிப்பறை மற்றும் நடக்கும் இடங்களில் சொரசொரப்பான டைல்ஸைப் பதிப்பது நல்லது. அவர்கள் அதிகமாக நடமாடும் இடங்களில் ஆங்காங்கே, பிடிமானத்துக்கு கைப்பிடிகளைப் பொருத்துவது அவர்களுக்குப் பேருதவியாக இருக்கும். மிருதுவான செருப்பாக இல்லாமல், முள் போல் பதிக்கப்பட்ட ரப்பர் செருப்புகளை வாங்கித் தரலாம். வெஸ்டர்ன் டாய்லெட் மூட்டு வலிப் பிரச்னை வராமல் தடுக்கும். குளிக்கும் அறை, நடக்கும் இடங்கள், தூங்கும் அறை இவற்றில் போதிய வெளிச்சம் இருக்கும்படியாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். நடக்கும் இடத்தில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்வது அவசியம். தள்ளாடியபடி நடப்பவர்களுக்குக்  கைப்பிடி (Walking stick) அல்லது வாக்கர் (Walker) கொடுக்கலாம்.

நோய்க்கு நிரந்தரத் தீர்வு
முதுமையில் மனச்சோர்வு, மறதி நோய் மற்றும் மனப்பதற்றம் போன்ற தொல்லைகள் வர வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன. அதனால், வயதானவர்களுக்கு நினைவாற்றல் குறையும். நாளடைவில், தன்னையே மறக்கும் நிலை உருவாகும். வீட்டிலே சின்னச் சின்ன உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, தியானம் போன்றவற்றை மேற்கொள்ளச் செய்யலாம். இதனால் மறதி நோய்கள் வருவதைத் தவிர்க்க முடியும்.
பொதுவாக வயதானவர்களுக்கு எந்த வேளை எந்த மாத்திரை சாப்பிட வேண்டும் என்று பார்த்து எடுத்து சாப்பிடத் தெரியாது. பெற்றெடுத்த பிள்ளைகள் வேளாவேளைக்குத் தங்கள் கையால் மருந்து கொடுத்தால், அது அவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும். இதற்குச் சாத்தியம் இல்லை என்றால், குறைந்தபட்சம் எந்த வேளைக்கு எந்த மருந்துகளைச் சாப்பிட வேண்டும் என்பதை நாமே தனித்தனி சின்ன பொட்டலங்களாக மடித்துவைத்துவிட்டு வந்தால், அது அவர்களுக்குப் பேருதவியாக இருக்கும்.
நோய்க்கு மருந்து மாத்திரைகள் எடுத்துக்கொள்பவர்கள், 'ஒரு வேளை மறந்துவிட்டோமே...' என்று அடுத்த வேளை மருந்தையும் சேர்த்துச் சாப்பிட்டுவிடக் கூடாது. கை - கால்களில் எரிச்சல் ஏற்பட்டால், அது சர்க்கரை நோய் அறிகுறியாக இருக்கலாம். முகம், கால்களில் ஏற்படும் வீக்கம், உயர் ரத்த அழுத்தத்துக்கு அறிகுறியாக இருக்கலாம். நோய் வருமுன் காப்பதற்கு வருடம் ஒரு முறை முழு உடல் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். கண், பல், காது ஆகியவற்றைக் கண்டிப்பாகப் பரிசோதித்துக்கொள்ள வைப்பது அவசியம்.

தனிமையைத் தவிர்க்கவும்

முதுமையின் விரோதி தனிமை. முதுமையில் தனிமையோடு முடங்கிக் கிடப்பவர்களுக்கு மூப்பின் விளைவு ஆறு மடங்கு அதிகரிக்கும். தள்ளாத வயதில் கணவன் - மனைவி இருவரில் ஒருவரின் இழப்பு மற்றொருவருக்குத் தாங்க முடியாத தளர்வை ஏற்படுத்திவிடும். இழப்பை ஈடுசெய்ய முடியாது என்றாலும், கூடப்பிறந்த உறவுகள், அவர்களுடன் வசித்த, படித்த, பணிபுரிந்த நட்பு வட்டாரங்களைத் தேடிப் பிடித்து வீட்டுக்கே வரவழைத்து வேதனையை மறக்கச் செய்யலாம். பெற்றோர்கள் தனியாக வசிக்க வேண்டிய நிலை ஏற்படும்போது, நீங்கள் வசிக்கும் வீட்டுக்கு அருகிலேயே குடி வைத்துக்கொள்ளுங்கள். வாரம் ஒரு முறை குடும்பத்தினருடன் சென்று பார்ப்பதை வழக்கமாகக்கொள்ளுங்கள். ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பெற்றோரையும் அழைத்துக்கொண்டு வெளியூர்களுக்குச் செல்வதை கட்டாயமாக்கிக்கொள்ளுங்கள்.
நீங்கள் வெளியூர்வாசிகளாக இருந்தால் உறவு - நட்பு வட்டாரங்களுக்கு அருகில் பெற்றோரைக் குடி அமர்த்தலாம். அவ்வப்போது போன் மூலமாக நலம் விசாரிக்கலாம். இதனால், நீங்கள் அருகிலேயே இருப்பதுபோன்ற உணர்வு அவர்களுக்கு ஏற்படும். கேரம், பல்லாங்குழி, பரமபதம் போன்ற விளையாட்டுப் பொருட்களை வாங்கித் தாருங்கள். குழந்தைகளைப் போல அவர்கள் விளையாடி மகிழ்வதைப் பாருங்கள். உங்களுக்கும் ஆனந்தம் பொங்கும்.

தொல்லை இல்லாத் தூக்கம்

வயது ஏற ஏறத் தூக்கம் குறையத் தொடங்கும். ஒரு நாளில், அவர்களுக்குக் குறைந்தது ஐந்து முதல் ஆறு மணி நேரத் தூக்கம் அவசியம். முடிந்த வரை பகலில் தூங்காமல் ஈசி சேரில் சாய்ந்தபடி அவர்களை ஓய்வெடுக்க ஆலோசனை சொல்லுங்கள். தூங்குவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பாக உணவைக் கொடுத்துவிடுங்கள். அதுவும் கெட்டியான உணவாக இல்லாமல், நீராகாரமான உணவாக இருப்பது நல்லது. சூடான, குளிர்ச்சியான பானங்களைக் குடிக்கக் கொடுக்காதீர்கள். தூங்கப் போகும் சமயத்தில் அதிகப்படியான தண்ணீரைக் குடிக்கக் கூடாது. இதனால், அடிக்கடி சிறுநீர் கழிக்க எழ வேண்டி இருக்கும். பெற்றோரின் அறையில் அதிக சத்தம் இல்லாத, அவர்களுக்குப் பிடித்த இனிமையான இசையைத் தவழவிடுங்கள். நிம்மதியாகத் தூங்குவார்கள்!



Best Blogger Gadgets

4 கருத்துகள் :

பெயரில்லா சொன்னது…

அம்மா. உனக்குதான் வயசாடுச்சு இல்ல... பேசாம ஒரு மூலையிலே உட்கார். இனி மேல் நீ கிச்சன் பக்கம் போக வேண்டாம்' என்று முகத்தில் அடித்தாற்போல் பேசுவதோ... 'நல்ல வேளை உப்பைக் கொட்டாம இருந்தீங்களே...' என்று கிண்டலடிப்பதோ, அவர்களது மனதை ரணப்படுத்தும் என்பதை நினைவில்கொள்ளுங்கள்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ஒவ்வொரு தலைப்பிற்கும் நல்ல கருத்துக்கள் பல... அவரவர் தானாக உணர வேண்டும்...

Unknown சொன்னது…

முதுமையின் காலம் எத்தனை எத்தனை முகம் தெரியாத வருத்தங்களை சுமக்கிறது ஒவ்வொரு நாளும். ஆனால், எந்த வலியையும் காட்டிக் கொள்வதில்லையே ஏன்?

அன்பு

நம்மால் முடிகிற ஒரு காரியத்தை நாம் செய்யாமலே இருக்கிறோம். எத்தனை ஜென்மங்கள் எடுத்து என்ன பயன்.

அ. வேல்முருகன் சொன்னது…

அனைவரும் பின்பற்ற வேண்டிய செயல் முறைகள்

கருத்துரையிடுக