பெருந்தலைவர் காமராஜர் - 3

தமிழ்த்தாய் ஈன்ற தவமகன்!
-பழ கருப்பையா
நெடிய பெரிய உருவம்; தெற்கத்தித் தமிழனுக்கே உரிய நாவற்பழக் கருப்பு; படர்ந்த முகம்; பெரிய கண்கள்; அந்தக் கண்களை நேருக்கு நேர் பார்த்துப் பேசுவது சிலருக்கே இயலக்கூடியது.
எடுத்த எடுப்பிலேயே “சொல்லுன்னேன்’ என்று செய்திக்கு வந்துவிடுவார். கருத்தோடு பேசினால் கேட்பார்; இல்லையென்றால் கருத்திருமன் ஆனாலும் “சும்மா உளறாதேன்னேன்’ என்று வாயை அடைக்கச் செய்து விடுவார்!
தமிழ்நாட்டில் ஒவ்வொரு நகரம், கிராமம் என்று அவர் தெரிந்து வைத்திருந்ததுபோல், அங்கே கட்சிப் பொறுப்பில் இருக்கின்ற ஒவ்வொருவரையும் குலங்கோத்திரத்தோடு தெரிந்து வைத்திருப்பார். யாரைத் தேர்தலில் நிறுத்த வேண்டும் என்று அவர்களின் நாளாசரி நடவடிக்கைகளிலிருந்து ஐந்தாண்டுகளுக்கு முன்னரே முடிவு செய்து வைத்திருப்பார்.
தேர்தலில் நிற்கக் கட்சியில் பணம் கட்டி இடங்கேட்கும் அவலநிலை அவர் காலத்திலில்லை. கருணாநிதியிலிருந்து விஜயகாந்த் வரை தேர்தலில் போட்டியிட விரும்பும் தன் கட்சியினர் ஒவ்வொருவரிடமும் கேட்கின்ற முதற் கேள்வி, “நீ தேர்தலில் எவ்வளவு செலவழிக்க முடியும்?’
காமராஜ் இப்படி ஒரு அருவருக்கத்தக்க கேள்வியை யாரிடமும் கேட்டதில்லை. ஒருவன் தேர்தலில் ஐந்து கோடி செலவழிக்க முடியும் என்றால், தேர்தலில் வெற்றி பெற்று வந்தபின், அவன் அந்தப் பணத்தைப் போல் ஐம்பது மடங்கைத் தேடிக்கொள்ள நினைப்பதை எப்படித் தடுக்க முடியும்? ஒருவன் ஐந்து கோடி செலவழித்தா மக்கள் பணி ஆற்ற வருவான்?
எத்தகைய போக்குகளை அனுமதித்தால், எத்தகைய பின் விளைவுகள் ஏற்படும் என்று சிந்திக்கும் திறன் காமராஜ் போன்ற இயற்கை அறிவு ஜீவிகளுக்கு நிறையவே இருந்தது!
காமராஜுக்கு ஒரு தனிச்செயலர் இருந்தார். அவர் பெயர் வெங்கட்ராமையர். கதர் வேட்டி சட்டையைத் துவைத்துத்தான் போட்டுக் கொள்வார். சலவை செய்து போட்டுக் கொள்ளச் சம்பளம் இடம் கொடுக்காது என்பார்.
எத்தனை தொழிலதிபர்கள் இவர் வழியாகத் தொழில் உரிமம் பெற்று வளம் கொழித்திருப்பார்கள்! அவர்களைப் பயன்படுத்திக் கொள்ளும் சிறு சலனமாவது இந்த வசதிக் குறைவானவருக்கு ஏற்பட்டதுண்டா?
பத்தாண்டுகள் முதலமைச்சராக இருந்த ஒருவரின் தனிச் செயலர் சாகும்போது, எம்.ஜி.ஆர். அவருடைய நிலைமை தெரிந்து வழங்கிய லாயிட்ஸ் அரசுக் குடியிருப்பில் 250 ரூபாய் வாடகை வீட்டில் குடி இருந்துவிட்டு இறந்து போனார்!
உயிர் குடியிருக்க வந்த கூடே சொந்தமில்லாமல் வெந்து போகிறபோது, தான் குடியிருக்கச் சொந்தமாக ஒரு வீடில்லாதது அவருக்கு ஒரு குறையாகவே தெரியவில்லை!
“ஒரு பெண் தன் கற்பைக் காத்துக் கொள்வதில் விடாப்பிடியாக இருப்பது போல, பெருமையும் கருதிக் கருதிக் காத்துக் கொள்ளப்பட்டால் உண்டு; இல்லை என்றால் இல்லை”, என்பான் வான்புகழ் வள்ளுவன்.
ஒரு தனிச் செயலரின் பெருமையே இத்தகையது என்றால், அவனுடைய தலைவனின் பெருமை எத்தகையதாய் இருக்கும்!
இன்றைய அமைச்சர்களின் தனிச் செயலர்களின் பணத்தை எல்லாம் பறிமுதல் செய்தால், ஆறு மாதங்களுக்குத் தமிழ்நாட்டில் வரியே போடாமல் ஆட்சி நடத்தலாம்!
நம்முடைய அமைச்சர்களின் பணத்தை எல்லாம் பறிமுதல் செய்தால், ஆறு மாதங்களுக்கு இந்தியாவையே வரிப் போடாமல் ஆட்சி நடத்தலாம்!
காமராஜ் நாட்டின் விடுதலைக்காகப் பத்தாண்டுகள் சிறையில் தவமிருந்தவர். நாட்டின் மேன்மைக்காகப் பத்தாண்டுகள் கோட்டையில் கோலோச்சியவர்!
ராஜாஜி கல்விக் கொள்கையில் குளறுபடிகள் செய்ய நேரிட்டு விட்டபோது, அந்த முதலமைச்சர் நாற்காலியை இழுத்துப் போட்டு உட்காரவும் காமராஜுக்குத் தெரிந்திருந்தது.
பத்திருபது ஆண்டுகள் தொடர்ந்து பதவிக் கள்ளை உண்டு விட்டபடியால் போதை தலைக்கேறிய பல காங்கிரஸ் அமைச்சர்களைப் பதவியை விட்டு இறக்குவதற்கு, ‘கே’ பிளான் என்று ஒன்றை அறிவித்து, எந்த அவப்பெயரும் இல்லாத தான், ஆட்சி நாற்காலியை உதறிக்காட்டி, மற்றவர்களைப் பதவி விலகச் செய்து, நேருவின் ஆட்சி இயந்திரம் திறம்பட உருள வழி செய்யவும் அவருக்குத் தெரிந்திருந்தது!
சீதையின் கேள்வன் ராமனைப் போல், காமராஜுக்குப் பதவி ஒரு பேறும் இல்லை; பதவியின்மை ஓர் இழப்பும் இல்லை.
அதுவும் ராஜாஜிக்குப் பிறகு நாடாள்வது எளிதில்லை. பரிந்துரைகளுக்காகத் தலைமைச் செயலகத்துக்குப் படையெடுத்த சட்டமன்ற உறுப்பினர்களைப் பார்த்து, உங்களுக்கெல்லாம் தலைமைச் செயலகத்தின் தாழ்வாரங்களில் என்ன வேலை என்று கேட்டவர் ராஜாஜி. விற்பனை வரியைப் புகுத்தியவர்; இரண்டாயிரம் ஆண்டுத் தமிழ்நாட்டில் குடியை முதன் முதலாகக் குற்றமாக அறிவித்தவர்; ஈடு இணையற்ற படிப்பாளி; இவர் தேறாத நூலுமில்லை; தெளியாத பொருளுமில்லை; பெரிய இலக்கியவாதி; ராஜதந்திரி! மணியம்மையை மணந்து கொள்ளலாமா வேண்டாமா என்று பெரியார் பிறவிப் பகைவரான ராஜாஜியிடம் போய் யோசனை கேட்டாரென்றால், எவ்வளவு மனச் சமநிலை உடையவராக ராஜாஜியைப் பெரியார் கருதியிருக்க வேண்டும்!
அவ்வளவு பெரிய ராஜாஜியைக் கீழே இறக்கவும், அவருடைய நாற்காலியை இழுத்துப் போட்டு உட்கார்ந்துகொண்டு நாடாளவும் எவ்வளவு பெரிய மனத்திறன் வேண்டும்! காமராஜின் பத்தாண்டு கால ஆட்சி, ராஜாஜியை மறக்கடித்து விட்டது என்பதுதான் அவருடைய ஆட்சியின் மாபெரும் சிறப்பு!
தமிழ்நாட்டின் கல்வியைச் சுருக்கித் தன்னுடைய புகழை அந்த ஒன்றில் மட்டும் விதிவசமாகச் சுருக்கிக் கொண்டுவிட்டார் ராஜாஜி.
தமிழ் இளைஞர்கள் உலக அளவில் போட்டியிடக் கல்வியறிவு பெறுவது எல்லாவற்றினும் தலையாயது என்பதைத் தன்னுடைய இயற்கையறிவு கொண்டு உணர்ந்த காமராஜ் ஊர்தோறும் பள்ளிகளைக் கட்டினார். ஆடு மேய்க்கச் செல்லுகின்ற பிள்ளைகளைப் பள்ளிக்கிழுக்கப் பகலுணவு அளித்தார். எம்.ஜி.ஆர். பெரும்புகழ் பெறக் காரணமான சத்துணவுத் திட்டத்தின் முன்னோடி காமராஜ்தான்!
கையளவு நீர் மேட்டிலிருந்து பள்ளத்தில் பாய்ந்தாலும், அங்கே நீர்மின் நிலையம் தோன்றிவிடும் காமராஜ் காலத்தில்!
பின்னால் வந்த கருணாநிதி மின் உற்பத்தி செய்யாமல் கம்பி மட்டும் நீட்டுகிறார் என்பதைக் காமராஜ், “கம்பி நீட்டப் போகிறார் கருணாநிதி”, என்று நகையாடினார்!
முந்தைய ராஜாஜி ஆட்சியோடு ஒப்பிடப்பட்டுக் “கல்விக் கண் திறந்த காமராஜ்” என்று போற்றப்பட்டார்!
பிந்தைய கருணாநிதி ஆட்சியோடும் ஒப்பிடப்பட்டு, “படிக்கச் சொன்னார் காமராஜ்; குடிக்கச் சொன்னார் கருணாநிதி” என்னும் வழக்கு மக்களிடையே வழங்கி நிலைபெரும் அளவுக்குக் காலந்தோறும் காமராஜ் புகழ் பெருகியது!
நாட்டின் விடுதலைக்காகச் சிறையிலிருந்த காமராஜ், நாடே இந்திராவால் சிறைக் கூடமாகிவிட்டது கண்டு பதறிவிட்டார்! வெள்ளைக்காரனிடமிருந்து பெரும்பாடு பட்டு விடுதலை பெற்று, நம் கண் முன்னாலேயே சொந்த நாட்டுக்காரியிடம் அந்த விடுதலையைக் தோற்று விட்டோமே என்னும் கவலை அவரைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தின்னத் தொடங்கியது.
பேச்சுச் சுதந்திரமில்லை; எழுத்துச் சுதந்திரமில்லை; கூட்டம் கூடுகிற சுதந்திரமில்லை; தொழிலாளர்கள் தங்களின் உரிமைகளை வலியுறுத்திப் போராடச் சுதந்திரமில்லை; இம்மென்றால் சிறைவாசம்; ஏனென்றால் வனவாசம்!
இந்திராவின் தேர்தலைச் செல்லாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்து விட்டதால், பிரதமர், தேர்தல் சட்டங்களுக்கு அப்பாற்பட்டவராகச் சட்டம் திருத்தப்பட்டது. நாடாளுமன்றத்தின் ஆயுள் நீட்டிக்கப்பட்டது.
ஜெயப்பிரகாஷ் நாராயண், மொரார்ஜி தேசாய் போன்ற தலைவர்கள், ஸ்டாலின் காலத்து ரஷ்யா போல, நள்ளிரவில் தாக்கப்பட்டுச் சிறை வைக்கப்பட்டனர். தனக்கேற்பட்ட நெருக்கடியை நாட்டுக்கேற்பட்ட நெருக்கடியாக்கி, எல்லாச் சுதந்திரங்களையும் பறித்து விட்டார் இந்திரா!
தான் வழி நடத்திய பழைய காங்கிரசைக் கருத்து வழிப்படுத்தி, அதனை இந்தச் சுதந்திரப் பறிப்புக்கு எதிராக அணி வகுக்கச் செய்து, ஒரு பெரும் போராட்டத்தை நடத்த எண்ணிய காலை, கிருபளானி போன்றவர்களின் அடுத்தடுத்த கைதுச் செய்திகள் காமராஜ் மனம் உடைந்து மரணமடையக் காரணமாயிற்று!
நாம் நாற்காலியில் ஏற்றி வைத்த ஒரு பெண், நாற்காலிதான் பெரிதென்று நாட்டை நாசமாக்கி விட்டாரே என்பதுதான் அவர் மன உடைவுக்குக் காரணம்!
அடிமை இந்தியாவில் பிறந்தார்;
சுதந்திர இந்தியாவில் கோலோச்சினார்;
மீண்டும் அடிமை இந்தியாவில் மறைந்தார்!
அன்னையின் விலங்கொடித்து அன்னியனை விரட்டினார்!
இன்னொரு அன்னையால் பாரத அன்னை விலங்கிடப்பட்ட காலை, மனம் உடைந்து மரணமடைந்தார்!
நாடு குறித்துத் தவிர அவருக்கென்ன தனிக் கவலை இருக்க முடியும்? அவர் உயிர்வாழ ஒரு நாள் முழுவதற்கும் தேவை ஆழாக்கு அரிசி; ஒரு நான்கு முழ வேஷ்டி; ஒரு தொளதொளத்த சட்டை; ஒரு மேல் துண்டு; படிப்பதற்கொரு கண்ணாடி; காலுக்கொரு செருப்பு!
ஒரே உறவினளுமான தாயும் இறந்து விட்டாள்! அவருக்கென்ன கவலை?
தலைமாட்டில் உட்கார்ந்து அழ மனையாளோ, கால்மாட்டில் உட்கார்ந்து அழ மக்களோ இல்லாதவர் அவர்!
அதனால் அவருடைய மரணத்தில் நாடே அழுதது; வானமும் அழுதது!
தாய் மகிழத் தான் மட்டும் வீறிட்டு அழுது கொண்டு பிறந்தவன், நாட்டை வீறிட்டழ வைத்து விட்டுத் தான் அமைதி கண்டு விட்டான்!
காமராஜால் பண்படுத்தப்பட்டு, வார்த்தெடுக்கப்பட்ட அன்றைய இளைஞர்கள், இந்தக் கட்டுரையாசிரியர் உள்பட, இன்று நடுவயதை அடைந்து புரப்பாரில்லாமல் நாசமாகிப் போனார்கள்!
ராஜாஜி, பெரியார், அண்ணா, காமராஜ் என்று ஒவ்வொருவராக அடுத்தடுத்துப் போய் விட்ட நிலையில், நாடு வெறுமை அடைந்து விட்டது!
கோல மயில்கள் குதித்தாடிய நாட்டில், வக்கரித்த வான்கோழிகள் கொக்கரிக்கின்றன! பண்பட்ட அரசியல் போய் பாழ்பட்ட அரசியல் வந்துவிட்டது!
காந்தி, காமராஜ் காலங்களில் அயோக்கியர்களாக இருந்தவர்கள் இருக்குமிடம் தெரியாமல் இருந்தார்கள்!
இன்று யோக்கியர்களாக உள்ளவர்கள் இருக்குமிடம் தெரியாமல் இருக்கிறார்கள்!
அறிவும், அடக்கமும், எளிமையும், நேர்மையும் குடிகொண்டிருந்த பொதுவாழ்வில், பதவிக்கும் பணத்துக்கும் பல்லிளிப்பதும், பகட்டும், வஞ்சமும், அடுத்துக் கெடுப்பதும் பெருகிவிட்ட பிறகு நாடு வேறு எப்படி இருக்க முடியும்?
இந்த லட்சணத்தில் அண்ணா அறிவாலயத்தை மேற்பார்வை முகவரியாக்கிக் கொண்டுள்ள நாலாந்தரக் காங்கிஸ்காரர்கள் கருணாநிதியை நடுநடுவே மிரட்டுவதற்காகக் “காமராஜர் ஆட்சியை அமைப்போம்’ என்று இடையிடையே மிரட்டுகிறார்கள்! கருணாநிதி பனங்காட்டு நரி!
கருணாநிதியின் கைப்பைக்குள் இருக்கிற பீட்டர் அல்போன்ஸும், பனை வாரியம்தான் விதி நமக்கு விட்ட வழி என்று அமைதி கொண்டு விட்ட குமரி அனந்தனும், வீரபாண்டியார் வெள்ளை வீசினால்தான் வெல்ல முடியும் என்னும் நிலையிலுள்ள தங்கபாலுவும், காமராஜ் உயிரோடிருந்த காலத்தில், “அவர் சோசலிசவாதியே அல்ல; பிற்போக்குவாதி என்றெல்லாம் காமராஜ் குறித்து இடக்காகப் பேசிவிட்டு, இன்று பன்னாட்டு முதலாளிகளின் பாதக்குறடுகளுக்கு மெருகெண்ணெய் பூசிவிடும் ப.சிதம்பரமும் எப்படிக் காமராஜ் ஆட்சியை அமைக்க முடியும்?
தனக்கு எந்த உடைமையுமில்லை; தனக்கு எந்த உறவுகளுமில்லை என்னும் நிலையிலேயே மக்களைச் சுற்றமாகச் சுற்றிக் கொள்ளும் தன்மை பிறக்கும்!
ஒரு காமராஜ் உருவாக இவ்வளவு பின்னணி வேண்டும்!
தமிழ்த்தாய் ஈன்ற தவமகன் அவன்!
நன்றி: தினமணி

ஓட்டுப்போட என்னை அழுத்து


Best Blogger Gadgets

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

படிக்க வந்த நண்பர்களெல்லாம் ஒட்டு போட்டுட்டு போங்களே!!

இந்த இடுகை உங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் வாக்களிக்கவும்.


தமிழ்மணத்தில் ஆதரவு வாக்களிக்க உள்ள கருவிபட்டையில் மேல்நோக்கியுள்ள கைவிரலை சொடுக்கவும்