நிலவில் ஹீலியம் கண்டுபிடிப்பு

நிலவை ஆராய அனுப்பப்பட்ட சந்திரயான் விண்கலம் செய்த ஆய்வில் அங்கு அபாயமற்ற மின் சக்தியை தரக்கூடிய ஹீலியம் 3 அணுப்பொருள் உள்ளதென்பது உறுதியாகியுள்ளதென்றும், நிலவில் உள்ள ஹீலியத்தைக் கொண்டு உலகின் எரிசக்தி தேவையை முழுமையாக தீர்த்துவிடலாம் என்று இந்திய விண்வெளி ஆய்வுக் கழகத்தின் முன்னாள் தலைவர் மாதவன் நாயர் கூறியுள்ளார்.

பெங்களூருவில் நடைபெற்றுவரும் 3 நாள் உலக வானியல் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய மாதவன் நாயர், “நிலவில் உள்ள ஹீலியத்தை வெட்டி பூமிக்கு கொண்டு வருவோமானால் அது உலகிற்கு நமது நாடு அளிக்கும் மிகப் பெரிய பங்கீடாக இருக்கும். நிலவில் மேற்பரப்பில் இருந்து அதனை வெட்டிக் கொண்டு வரக்கூடிய தானியங்கி மனித இயந்திரத்தை அடுத்த 10-15 ஆண்டுகளில் இந்தியா உருவாக்கிவிடும்” என்றும் கூறியுள்ளார்.

சந்திராயன் அனுப்பப்பட்டதன் நோக்கம் ஹீலியம் கண்டுபிடிப்பு அல்ல என்றாலும், அது அதன் துணைக் கண்டுபிடிப்பாகும் என்று கூறிய மாதவன் நாயர், ஹீலியம் மிக இலகுவான, கதிர்வீச்சற்ற, இரண்டு புரோட்டான்களையும், ஒரு நியூட்ரானையும் கொண்ட அணுப்பொருளாகும் என்றார்.

“நிலவின் மேல்பரப்பிலுள்ள டைட்டானியம் எனும் கனிமமே ஹீலியத்தை தன்னுள் ஏற்று, தக்கவைத்துள்ளது. அதனை பல ஆய்வுகளின் மூலம் உறுதிப்படுத்திவிட்டோம். டைட்டானியத்தின் தன்மை மிக நன்றாக உறுதியாகியுள்ளது. அது நிலவு முழுவதும் பரவிக்கிடக்கிறது. இதிலிருந்து நமக்குத் தேவையான அளவிற்கு ஹீலியம் 3 நிலவில் உள்ளதெனபதே” என்று கூறியுள்ள மாதவன் நாயர், சந்திரயானில் பொருத்தி அனுப்பி வைக்கப்பட்ட கனிம வளமறியும் உருவகப் பதிவுக் கருவி (Mineral and hyper spectral imager)ஹீலியம் இருப்பை உறுதி செய்தது என்றார்.

சூரியனில் இருந்து வெளியாகும் வெப்பப் புயலில் கலந்துவரும் ஹீலியம் நிலவின் பரப்பைத் தாக்கும்போது, அதன் மேற்பரப்பிலுள்ள மண்ணில் ஒன்றுகலந்து புதைந்துவிடுகிறது என்று அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.

Best Blogger Gadgets

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக