தில்லையாடி வள்ளியம்மை - 2

தில்லையாடி வள்ளியம்மை


தனது பதினாறாவது வயதிலேயே ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடி உயிர்நீத்த ‘முதல்
விடுதலைப் போராளி’ வள்ளியம்மை, ஒரு தமிழ்ப் பெண்

1898 - 22.2.1914

வெள்ளையர்கள் தென்னாப்பிரிக்காவை அடிமைப்படுத்தி, தங்கள் ஆதிக்கத்தை
விரிவுபடுத்திக் கொண்டிருந்த காலம். தென்னாப்பிரிக்க மண்ணில் கரும்பு
போன்றவற்றைப் பயிரிட விரும்பிய வெள்ளையர்கள், பயிர்த்தொழில் தெரிந்த அடிமைகளைத்
தேடினர். அங்கிருந்த தென்னாப்பிரிக்க நீக்ரோ தொழிலாளர்களோ அடிக்கடி வெள்ளை
முதலாளிகளோடு முரட்டுத்தனமாக சண்டையிட்டனர். அதனால் தங்களது ஆதிக்கத்தில்
இருந்த இந்தியா போன்ற பிற காலனி நாடுகளிலிருந்து பண்ணைத் தொழிலுக்கேற்ற கூலிகளை
இறக்குமதி செய்துகொண்டனர்.

அப்படி ஒரு கூலித் தொழிலாளியாக தஞ்சை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த தில்லையாடி
என்ற கிராமத்திலிருந்து கப்பலேறி தென்னாப்பிரிக்காவிற்கு தன் மனைவி
மங்களத்துடன் சென்றவர்தான் முனுசாமி.

முனுசாமிக்கு தென்னாப்பிரிக்காவில் 1898_ஆம் ஆண்டு பிறந்தவள் வள்ளியம்மை.

எதிர்கால இன்பக் கனவுகளோடு சென்ற இந்தியத் தொழிலாளர்கள் அங்கே வெள்ளையர்களால்
அடிமைகளாக நடத்தப்பட்டனர். இந்தியர் ஒவ்வொருவரும் அங்கே வாழ 3 பவுன் தலைவரி
கட்ட வேண்டும். வாக்குரிமை கிடையாது. அனுமதியின்றி குறிப்பிட்ட பகுதிகளுக்குள்
நுழையக்கூடாது. வெள்ளையர் பள்ளிகளில் படிக்கமுடியாது. வெள்ளையர்களுடன் சமமாக
அமர்ந்து பயணம் செய்யக்கூடாது. இவ்வாறெல்லாம் ஒடுக்கப்பட்ட இந்தியக்குடிகள்
வாழும் பகுதிகள் சேரிகளாகப்பட்டன. சுகாதார வசதியின்றி நோய்களும் பரவின.

இந்தச் சூழலில்தான் 1893_ஆம் ஆண்டு மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி
தென்னாப்பிரிக்காவுக்கு வந்தார். தாதா அப்துல்லா கம்பெனிக்கான வழக்குகளை
ஓராண்டிற்குள் முடித்துத் திரும்பும் எண்ணத்துடன் வந்தவர், அங்கே
இந்தியர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளைக் கண்டு மனம் பதறினார். அதை
எதிர்த்துப் போராடவும், இந்தியர்களின் உரிமைகளை மீட்டுத் தரவும் துணிந்தார்.
ஓராண்டல்ல; ஈராண்டல்ல; _ இருபத்தியிரண்டு ஆண்டுகள் (நடுவில் 2 ஆண்டுகள்
நீங்கலாக) தென்னாப்பிரிக்காவிலேயே தங்கி விட்டார்.

இந்தியர்கள் மேல் விதிக்கப்பட்ட 3 பவுன் தலைவரி ரத்து செய்யப்பட வேண்டும் என்ற
கிளர்ச்சியைத் துவக்கினார். அப்போது தென்னாப்பிரிக்க ‘கேப்’ உச்சநீதிமன்ற
நீதிபதி ஒரு தீர்ப்பு கொடுத்தார். அந்த நாட்டில் இனி ‘கிறிஸ்தவ
சடங்குப்படியும், திருமணப் பதிவாளர் சட்டப்படியும் நடக்கும் திருமணங்கள்
மட்டுமே செல்லும். மற்ற எந்தத் திருமணமும் செல்லாது’ என்பதே அந்தத் தீர்ப்பு.

இதனால் அங்குள்ள இந்திய மக்கள் தங்கள் மத வழக்கப்படி செய்து கொண்ட திருமணங்கள்
அனைத்தும் செல்லாது என்றும், அவர்கள் குழந்தைகளுக்கும் சட்டப்படியான வாரிசு
உரிமை இல்லை என்றும் ஆயிற்று.

இத்தீர்ப்பினைக் கண்டு இந்திய வம்சாவளியினர் கிளர்ச்சியில் இறங்கினர். காந்திஜி
இவர்களை ஒன்றிணைத்து இயக்கமாக்கி, போராட்டத்தை வளர்த்தார்.

அந்தச் சமயத்தில் இந்தியர்கள் சார்பில் நடத்தப்பட்ட எல்லா
பொதுக்கூட்டங்களுக்கும் தன் தாயாருடன் சிறுமி வள்ளியம்மை சென்று வந்தாள்.
காந்தியின் சொற்பொழிவுகள் வள்ளியம்மை நெஞ்சில் ஆழப்பதிந்தன. விடுதலைக் கனலை
விரைந்து மூட்டின.

புதிதாக இந்தியர்கள் குடியேறுவதைத் தடுக்க டிரான்ஸ்வாலுக்குள் குடியிருந்த
ஒவ்வொரு இந்தியரின் விரல் ரேகையும் பதிவு செய்யப்பட்டது. இது வள்ளியம்மையின்
தன்மான உணர்வைத் தாக்கியது.

வெள்ளையரின் நிறவெறியை எதிர்த்து அண்ணல் காந்தியின் அறப்போரில் தன்னையும்
இணைத்துக் கொண்டாள் வள்ளியம்மை, அப்போது அவளுக்கு வயது பதினாறுதான்!

அதுவரை, போராட்டங்களில் பெண்கள் ஈடுபட வேண்டாம் என்று தடுத்து வந்த காந்திஜி,
இந்தப் போராட்டத்தில் பெண்களையும் சேர்த்துக் கொண்டார். ஏனெனில், ‘‘இந்த
திருமணச்சட்டம் பெண்களை நேரடியாக பாதிக்கக் கூடியது. கட்டிய மனைவியையே
அங்கீகாரமில்லாத நிலைக்கு ஆளாக்கி, குழந்தைகளின் வாழ்வுரிமையையும் பறிக்கும்
வன்கொடுமைச் சட்டம் இது!’’ என்றார் காந்தி.

1913 _ ஜோகன்ஸ்பர்க் நகரில் பெண்களின் சத்தியாகிரகப் போர்ப்படை கூடியது. ஆவேச
முழக்கத்துடன் ஆங்கில அரசின் நிறவெறித் திமிருக்கு எதிராக அணி திரண்டு
கிளம்பியது. அணியின் முதல் வரிசையில் நின்ற மூன்று பெண்மணிகள் _ கஸ்தூரிபா,
வள்ளியம்மை, வள்ளியம்மையின் தாயார்.

‘வெள்ளை ஏகாதிபத்தியத்தின் விலங்கொடிப்போம் வாருங்கள்!’ என்று வள்ளியம்மை முன்
வரிசையில் நின்று முழங்கிய முழக்கம் ஏனைய சத்தியாகிரகிகளை எழுச்சிகொள்ளச்
செய்தது! ‘எங்கள் தேசத்தில் சூரியன் அஸ்தமிப்பதில்லை’ என்று பிரிட்டிஷ் அரசு
பேசி வந்த ஆணவத்திற்கு அன்றுதான் அஸ்தமனம் தொடங்கியது! காலனி ஆதிக்கத்தின்
கட்டுப்பாட்டில் அழுந்திக் கிடந்த ஒரு சமூகம் அன்றுதான் வீறிட்டெழுந்தது!

ஊர்வலம் ஜோகன்ஸ்பர்க் நகரிலிருந்து நியூகாசில் நகருக்கு வள்ளியம்மையின் சங்கநாத
முழக்கத்துடன் முன்னேறியது.

நியூகாசில் போகும் வழியில் சார்லஸ் டவுன், டண்டி, லேடிமிஸ்த், மாரிட்ஸ் பர்க்,
டர்பன் போன்ற முக்கிய இடங்களில் சத்தியாக்கிரகிகள் தங்கிச் சென்றபோது, தன்
இளவயது காரணமாக ஓடியாடி, தன் உடன் வந்த சத்தியாகிரகிகளுக்கு வள்ளியம்மைதான்
இயன்றவரை தொண்டு செய்தாள்.

நியூகாசில் நகர நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்களில் பெரும்பாலோர் தமிழர்கள்.
அவர்களை வேலை நிறுத்தம் செய்யுமாறு முழங்கினார் காந்தி. உடனடியாக வேலை
நிறுத்தம் செய்தனர். தமது தமிழ்மக்களின் ஒத்துழைப்பைக் கண்டு மேலும்
உற்சாகமானாள் வள்ளியம்மை.

போராட்டப் பெண்கள் தடையை மீறி டிரான்ஸ்வால் நகர எல்லைக்குள் நுழைந்தபோது,
எல்லோரும் கைது செய்யப்பட்டனர்.

மூன்று மாதக் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு அனைவரும் சிறையில்
அடைக்கப்பட்டனர்.

பதினாறு வயது வள்ளியம்மையும் கடுங்காவல் தண்டனையை ஏற்று சிறை ஏகினாள். ஆனால்
சிறை அதிகாரிகளோ அவளிடம் கடுமையாக வேலை வாங்கினார்கள். சிறையிலே சுகாதாரக்
கேடான சூழ்நிலை. சிறை அறையில் தலைமாட்டிலே ஒரு மண்சட்டி, அதற்கொரு மூடி,
அதிலேதான் மலஜலம் கழித்துக்கொள்ள வேண்டும். காலையில் தூங்கி எழுந்ததும்
அதைக்கொண்டு போய் போட்டுவிட்டு, சட்டியைச் சுத்தம் செய்துகொண்டு வரவேண்டும்.
தகுந்த மருத்துவ வசதியும் இல்லை.

மெலிந்த தேகம் கொண்ட வள்ளியம்மை நோய்க்கு ஆளானாள். உடல்நலம் பாதிக்கப்பட்டாள்.
‘‘உரிய அபராதத் தொகை கட்டிவிட்டு சிறையிலிருந்து விடுதலை பெற்றுச் செல்’’
என்றான் வெள்ளைக்கார சிறை அதிகாரி.

‘‘அது சத்தியாகிரகப் போராளிக்கு இழுக்கு. செத்தாலும் சிறையிலேதான் சாவேன். அரசு
விதித்த அபராதத் தொகையைக் கட்டமாட்டேன்’’ என்று மறுத்துவிட்டாள் வள்ளியம்மை.

அடுத்த சில நாட்களில் அவளது உடல்நிலை மேலும் மோசமடைந்தது. அவள் கவலைக்கிடமான
நிலைமைக்கு ஆளாகி விட்டதாக மருத்துவர்கள் எச்சரித்தனர். அதனால், தண்டனைக் காலம்
முடியும் முன்பே, அவசரம் அவசரமாக வள்ளியம்மை 1914_பிப்ரவரி 11_ஆம் நாள்
சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டாள்.

மிகவும் பலவீனமான நிலையில் இருந்த அவளை ஒரு ஜமுக்காளத்தில் கிடத்தி
வீட்டிற்குக் கொண்டு சென்றனர்.

வீட்டில் கந்தல் துணி போலக் கிடத்தப்பட்ட வள்ளியம்மை அடுத்த பத்து நாட்களில்
22.2.1914 அன்று இறந்து போனாள்.

வள்ளியம்மையின் மரணம் காந்தியின் உள்ளத்தை உலுக்கிவிட்டது.

‘இந்தியன் ஒப்பீனியன்’ பத்திரிகையில் காந்தி ‘‘இந்தியாவின் புனிதமகள் ஒருத்தியை
இழந்துவிட்டோம். ஏன், எதற்கு என்று கேட்காமல் தனது கடமையைச் செய்தவள் அவள்.
மாதர்களுக்கே உரிய _ துன்பத்தைச் சகிக்கும் மனோபலமும், தன்மானமும் கொண்டவள்!
அவளது தியாகம் இந்திய சமூகத்திற்கு நிச்சயம் பலனளிக்கும்!’’ என்று மனமுருகி
எழுதினார்.

ஆம். அந்தப் போராட்டத்தின் காரணமாக இந்தியர்களின் மேல் விதிக்கப்பட்ட 3 பவுன்
தலைவரி ரத்து செய்யப்பட்டது. எல்லாத் திருமணங்களும் சட்டப்பூர்வமாக
அங்கீகரிக்கப்பட்டன.

ஜோகன்ஸ்பர்க்கில் வள்ளியம்மை அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நினைவுச் சின்னம்
ஒன்றை எழுப்பினார் காந்தி.

தனது சுயசரிதையில் பல இடங்களில் வள்ளியம்மையை நினைவுகூர்ந்து துக்கம் தாங்காமல்
எழுதுகிறார் காந்தி.

தன் உயிரைக் காத்த வள்ளியம்மையை காந்தியால் எப்படி மறக்கமுடியும்? ஆம்! ஒருமுறை
சத்தியாகிரகப் போராட்டத்தின்போது, வெறிபிடித்த வெள்ளையன் ஒருவன் காந்திஜியைச்
சுட துப்பாக்கியை உயர்த்திய போது, வள்ளியம்மை திடீரென்று ஓடிவந்து காந்தியின்
முன்னால் நின்று கொண்டு, ‘‘இப்போது காந்தியைச் சுடு, பார்க்கலாம்!’’ என்றாள்
ஆவேசமாக! அவளது நெஞ்சுரம் கண்டு அந்த வெள்ளையனே திகைத்துப்போனான்; திரும்பிப்
போனான்.

காந்திஜி தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது எல்லாக் கூட்டங்களிலும்
வள்ளியம்மையின் தியாகத்தைக் குறித்துப் பேசினார். அவள் பிறந்த தில்லையாடி
கிராமத்திற்குச் சென்று, அவளது உறவினர்களைச் சந்தித்துப் பேசினார்.

‘‘தென்னாப்பிரிக்காவில் வெள்ளையனின் துப்பாக்கி முன்பாக துணிச்சலுடன்
எதிர்நின்று அன்று தன்னைக் காப்பாற்றிய வள்ளியம்மை _ இன்று இந்தியன் கோட்ஸே
சுட்டுக் கொல்லும்போது _ குறுக்கே பாய்ந்து காப்பாற்ற நம்மருகே இல்லையே....!’’
என்று காந்தி தனது கடைசி மூச்சின்போது நினைத்திருப்பாரோ...?

1997_ல், வள்ளியம்மையின் நூற்றாண்டின்போது ஜோகன்ஸ்பர்க் நகரில் நெல்சன் மண்டேலா
முயற்சியால் வள்ளியம்மையின் கல்லறை புதுப்பிக்கப்பட்டு, விழா எடுக்கப்பட்டது.

ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடி உயிர்நீத்த ‘முதல் விடுதலைப் போராளி’
வள்ளியம்மை, ஒரு தமிழ்ப் பெண் என்பது நமக்கு மற்றொரு பெருமைதானே

ஓட்டுப்போட என்னை அழுத்து


Best Blogger Gadgets

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

படிக்க வந்த நண்பர்களெல்லாம் ஒட்டு போட்டுட்டு போங்களே!!

இந்த இடுகை உங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் வாக்களிக்கவும்.


தமிழ்மணத்தில் ஆதரவு வாக்களிக்க உள்ள கருவிபட்டையில் மேல்நோக்கியுள்ள கைவிரலை சொடுக்கவும்