இராமலிங்க அடிகளார் - வள்ளலார்


இராமலிங்க அடிகள் துறவியைப் போல வாழ்ந்தாலும், தன் மீது அன்பு கொண்ட அன்பர்களுக்காகவும், அடியார்களுக்காகவும் மிகவும் மனம் இரங்குவார். அவர்களுக்கு ஏற்படும் துன்பங்கள் கண்டு மனம் வருந்துவார்.


ஒரு முறை பெரும் பணக்காரரான அன்பர் ஒருவர் தனது இல்லத் திருமணத்திற்கு அடிகளாரை அழைத்திருந்தார். அன்பரின் மனம் கோணக் கூடாது என்பதற்காக வள்ளலாரும் திருமணத்திற்கு வர இசைந்தார்.

குறிப்பிட்ட நாளில் அந்த அன்பரின் இல்லம் நோக்கிச் சென்றார். ஆனால் அங்கு அவர் கண்ட காட்சி அவரது உள்ளத்தை தைத்தது. இல்ல வாயிலில் நின்று கொண்டிருந்த உறவினர்களில் சிலர், செல்வந்தர்களையும், ஆடம்பர உடையணிந்தவர்களையும் மட்டுமே உள்ளே அனுப்பினர். மற்றவர்களை அனுமதிக்காமல் இருந்தனர். எனவே மிகவும் எளிமையான தம்மையும் உள்ளே அனுமதிக்கமாட்டார்கள் என நினைத்த வள்ளலார், எதிரே உள்ள வீட்டுத் திண்ணையில் போய் உட்கார்ந்து விட்டார். பின் கீழ்கண்டவாறு ஒரு குறிப்பையும் எழுதி, அதை அந்தச் செல்வந்தரிடம் சேர்ப்பிக்குமாறு ஒரு சிறுவனிடம் கூறி உள்ளே செல்லாமல் வெளியிலேயே இருந்து விட்டார்.

” சோடில்லை மேல் வெள்ளைச் சொக்காய் இல்லை

நல்ல சோமன் இல்லை

பாடில்லை; கையிற் பணமில்லை

தேகப் பருமன் இல்லை

வீடில்லை. யாதொரு வீறாப்பும் இல்லை.

விவாகமது நாடில்லை நீ

நெஞ்சமே! எந்த ஆற்றினில் நண்ணினையே!”

அடிகளாரின் இந்தப் பாடலைப் படித்தார் அந்தச் செல்வந்தர். உள்ளம் பதைத்தார். வெளியே ஓடோடிச் சென்று அடிகளாரின் கால்களில் வீழ்ந்தார். தம்மை மன்னிக்குமாறு வேண்டினார். அவரை உள்ளே அழைத்துச் சென்றதுடன், அன்று முதல் ஏழை, பணக்காரன் வேறுபாடின்றி அனைவருடனும் சமமாகப் பழகலானார்.

இவ்வாறு தனது நடத்தையின் மூலமும், சிறு பாடல்களின் மூலமும் எத்தனையோ அன்பர்களை நல்வழிப்படுத்தி இருக்கிறார் இராமலிங்க அடிகளார்.

எத்துணையும் பேதமுறா தெவ்வுயிரும்

தம்உயிர்போல் எண்ணி உள்ளே

ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்

யாவர்அவர் உளந்தான் சுத்த

சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும்

இடம்எனநான் தெரிந்தேன் அந்த

வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திடஎன்

சிந்தைமிக விழைந்தேன்

என்கிறார் ஞான சத்குரு வள்ளலார். எல்லாவுயிரையும் தம் உயிராய் எண்ணி வாழ்ந்த மகான் திருவடி போற்றுவோம்.


தே. பாலமுருகன்
காஞ்சிபுரம்


Best Blogger Gadgets

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக