லியொனார்டோ டா வின்சி

லியொனார்டோ டா வின்சி




லியொனார்டோ டா வின்சி (Leonardo da Vinci, ஏப்ரல் 15, 1452 - மே 2, 1519) ஒரு புகழ் பெற்ற இத்தாலிய மறுமலர்ச்சிக் கட்டிடக்கலைஞரும், கண்டுபிடிப்பாளரும், பொறியியலாளரும், சிற்பியும், ஓவியரும் ஆவார். ஒரு பல்துறை மேதையாகக் கருதப்பட்டவர். குறிப்பாக இவரது, சிறப்பான ஒவியங்களுக்காகப் பரவலாக அறியப்பட்டவர். "கடைசி விருந்து" (The Last Supper), "மோனா லிசா" (Mona Lisa) போன்ற ஒவியங்கள் உலகப் புகழ் பெற்றவை. உரிய காலத்துக்கு மிக முன்னதாகவே செய்யப்பட்ட பல கண்டுபிடிப்புக்கள் தொடர்பிலும் இவர் பெயர் பெற்றவர். எனினும் இவரது காலத்தில் இவை எதுவும் வெளியிடப்படவில்லை. அத்துடன் இவர், உடற்கூற்றியல், வானியல் மற்றும் குடிசார் பொறியியல் துறைகளின் வளர்ச்சியிலும் பெரும்பங்கு ஆற்றியுள்ளார்.
பொருளடக்கம் [மறை]
1 வாழ்க்கை
1.1 தொடக்ககாலம்
1.2 வெரோசியோவின் வேலைத்தலம், 1466-1476
1.3 தொழில் புரிந்த காலம்
1.4 பிற்காலம்
2 தொடர்புகளும் செல்வாக்குகளும்
2.1 புளோரன்ஸ் - லியொனார்டோவின் கலை மற்றும் சமூகப் பின்னணி
3 கலை
4 அறிவியலும், பொறியியலும்
5 வெளி இணைப்புகள்
[தொகு]வாழ்க்கை

[தொகு]தொடக்ககாலம்


தானே வரைந்த அவரது உருவப்படம், ca. 1513
இவருடைய வாழ்க்கை ஜோர்ஜியோ வசாரியின், விட்டே என்னும் வாழ்க்கை வரலாற்று நூலில் விபரிக்கப்பட்டுள்ளது. லியொனார்டோ, இத்தாலியிலுள்ள, வின்சி என்னுமிடத்தில் பிறந்தார். இவருடைய தந்தையார் செர் பியரோ டா வின்சி, ஒரு நல்ல நிலையிலிருந்த நில உரிமையாளர் அல்லது கைப்பணியாளர், தாய் கத்தரீனா ஒரு விவசாயிகள் குடும்பப் பெண். கத்தரீனா, பியரோவுக்குச் சொந்தமாயிருந்த, மத்திய கிழக்கைச் சேர்ந்த ஒரு அடிமை என்ற கருத்தும் நிலவினாலும் இதற்கான வலுவான சான்றுகள் இல்லை. இவர் தனது தந்தையாருடன் புளோரன்சில் வளர்ந்தார். இவர் வாழ்க்கை முழுதும் ஒரு சைவ உணவுக்காரராகவே இருந்தார். இவர் புளோரன்சில் ஒரு ஒவியரின் கீழ் பயிற்சியாளராக இருந்து, பின்னர் சுதந்திரமான ஒவியர் ஆனார்.
இவரது காலம் ஐரோப்பாவில் நவீன பெயரிடு முறை நடைமுறைக்குவர முன்பாகும். இதனால் இவரது முழுப்பெயர், "லியனார்டோ டி செர் பியெரோ டா வின்சி" என்பதாகும். இது, "வின்சியைச் சேர்ந்த பியரோவின் மகன் லியனார்டோ" என்ற பொருளுடையது. இவர் தன்னுடைய ஆக்கங்களில், "லியனார்டோ" என்றோ அல்லது "நான் லியனார்டோ" (Io, Leonardo) என்றோதான் கையெழுத்திட்டார். இதனால் இவரது ஆக்கங்கள் பொதுவாக "டா வின்சிகள்" என்றில்லாமல், "லியொனார்டோக்கள்" என்றே குறிப்பிடப்படுகின்றன. இவர் ஒரு முறைதவறிப் பிறந்த பிள்ளை என்பதால், தந்தை பெயரைப் பயன்படுத்தாமல் விட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.


லியொனார்டோவினதாக அறியப்பட்ட மிகப் பழைய ஓவியம், ஆர்னோ பள்ளத்தாக்கு, (1473) - உஃபிசி
லியொனார்டோவின் தொடக்க காலம் பெரும்பாலும் வரலாற்று ஊகங்களே. 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவரும், மறுமலர்ச்சிக் கால ஓவியர்களைப் பற்றிய வரலாறுகளை எழுதியவருமான வாசரி என்பவர், லியொனார்டோ குறித்த ஒரு குறிப்பை எழுதியுள்ளார். ஒரு உள்ளூர் குடியானவன், லியனார்டோவின் தந்தையிடம் வந்து, திறமையான அவரது மகனைக் கொண்டு ஒரு வட்டமான பலகையில் படமொன்று வரைந்து தருமாறு கோரினானாம். இதற்கிணங்க லியொனார்டோ அப்பலகையில் பாம்புகள் தீயை உமிழ்வது போன்ற படமொன்றை வரைந்து கொடுத்தாராம். பார்ப்பதற்குப் பயத்தைக் கொடுத்த அந்த ஓவியத்தை, லியொனார்டோவின் தந்தை புளோரன்சின் கலைப்பொருள் விற்பனையாளரிடம் விற்றுவிட்டார். அவ்விற்பனையாளர் அதனை மிலானின் டியூக்கிடம் வெற்றார். இதன் மூலம் நல்ல இலாபம் பெற்ற லியொனார்டோவின் தந்தை இதயத்தை அம்பு துளைப்பது போன்ற இன்னொரு படத்தை விலைக்கு வாங்கிவந்து குடியானவனுக்குக் கொடுத்ததாக அக் குறிப்புச் சொல்கிறது.
[தொகு]வெரோசியோவின் வேலைத்தலம், 1466-1476


கிறிஸ்துவின் ஞானஸ்நானம் (1472–1475)—உஃபிசி, வெரோக்கியோவும், லியொனார்டோவும் வரைந்தது.
1466ல், 14 வயதாக இருக்கும்போது, அக்காலத்தில் மிகவும் வெற்றிகரமான ஓவியராக விளங்கியவரும், வெரோக்கியோ என அறியப்பட்டவருமான ஆண்ட்ரே டி சியோன் (Andrea di Cione) என்பவரிடம் லியொனார்டோ தொழில் பழகுவதற்காகச் சேர்ந்தார். வெரோக்கியோவின் வேலைத்தலம் புளோரன்சின் அறிவுசார் பகுதியில் இருந்ததால், லியொனார்டோவுக்கு கலைத்துறை தொடர்பான அறிவு கிடைத்தது. கிர்லாண்டாயோ, பெருஜீனோ, பொட்டிச்செல்லி, லொரென்சோ டி கிரெடி போன்ற புகழ்பெற்ற ஓவியர்களும் இதே வேலைத்தில் தொழில் பழகுவோராகவோ, வேறு வகையில் தொடர்பு உள்ளவர்களாகவோ இருந்துள்ளனர். லியொனார்டோவுக்குப் பல வகையான தொழில் நுட்பத் திறன்களின் அறிமுகம் கிடைத்ததோடு, வரைபு, வேதியியல், உலோகவியல், உலோகவேலை, சாந்து வார்ப்பு, தோல் வேலை, பொறிமுறை, தச்சுவேலை போன்றவற்றோடு வரைதல், ஓவியம், சிற்பம் முதலிய பல திறமைகளையும் கற்றுக்கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது.
வெரோக்கியோவின் வேலைத்தலத்தில் உருவானவற்றுள் பல அவரிடம் வேலை செய்தவர்களால் செய்யப்பட்டவை. வாசிரியின் கூற்றுப்படி, கிறிஸ்துவின் ஞானஸ்நானம் என்னும் ஓவியத்தை, வெரோக்கியோவும், லியொனார்டோவும் இணைந்து வரைந்தனர். யேசுவின் உடையை இளம் தேவதை ஏந்தியிருப்பதை லியொனார்டோ வரைந்த விதம், அவரது குருவையும் விஞ்சியதாக இருந்ததால், வெரோக்கியோ தனது தூரிகையைக் கீழே வத்துவிட்டு அதன் பின்னர் வரைவதையே நிறுத்திவிட்டார். இது ஒரு மிகைப்படுத்தப்பட்ட கூற்றாக இருக்கலாம். நெருக்கமாக ஆராயும்போது, இவ்வோவியம் லியொனார்டோவின் கைவண்ணமாகவே தோற்றுகிறது.
1472 ஆம் ஆண்டளவில், லியொனார்டோவின் 20 ஆவது வயதில், மருத்துவர்களினதும், கலைஞர்களினதும் குழுவான சென். லூக் குழுவில், வல்லுனராகத் தகுதி பெற்றார். ஆனால், லியொனார்டோவின் தந்தையார் இவருக்குத் தனியான வேலைத்தலம் ஒன்றை அமைத்துக் கொடுத்திருந்தும், வெரோக்கியோவுடன் இருந்த நெருக்கம் காரணமாகத் தொடர்ந்தும் அவருடன் இணைந்து வேலை செய்தார். லியொனர்டோ வரைந்ததாக அறியப்படும் மிகப் பழைய ஓவியம், பேனாவாலும், மையினாலும் வரையப்பட்ட ஆர்னோப் பள்ளத்தாக்கு ஓவியம் ஆகும். இது 1473 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதியிட்டு வரையப்பட்டுள்ளது.
[தொகு]தொழில் புரிந்த காலம்


The Adoration of the Magi, (1481)—உஃபிசி, புளோரன்ஸ், இத்தாலி. லியொனார்டோ மிலானுக்குச் சென்றிருந்தபோது இந்த முக்கியமான வேலை தடைப்பட்டது.
நீதிமன்றப் பதிவுகளின்படி, 1476 ஆம் ஆண்டில் சில குற்றச்சாட்டுகளின் பேரில் இவர்மேல் வழக்குத் தொடரப்பட்டுப் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார். 1476 முதல் 1481 ஆம் ஆண்டுவரை இவர் புளோரன்சில் தனது சொந்த வேலைத்தலத்தை நடத்திவந்ததாகக் கொள்ளப்படினும், 1476 முதல் 1478 ஆம் ஆண்டுவரை இவர் பற்றிய தகவல்கள் எதுவும் இல்லை. 1478ல், புனித பர்னாட் சிற்றாலயத்தில் The Adoration of the Magi என்ற ஓவியத்தை வரையும் பணி இவருக்குக் கிட்டியது.
1482 இலிருந்து, 1499 வரை மிலானின் "டியூக்"கான லுடோவிக்கோ ஸ்போர்ஸா என்பவரிடம் வேலை பார்த்துவந்ததுடன், பல பயிற்சியாளர்களுடன்கூடிய வேலைத்தலம் ஒன்றையும் நடத்திவந்தார். 1495ல், சார்ள்ஸ் VIII இன்கீழான பிரெஞ்சுப் படைகளின் தாக்குதலிலிருந்து மிலானைக் காப்பதற்காக, லியொனார்டோவின், "கிரான் கவால்லோ" என்னும் குதிரைச் சிலைக்காக ஒதுக்கப்பட்ட எழுபது தொன் வெண்கலம், ஆயுதங்கள் வார்ப்பதற்குப் பயன்படுத்தப்பட்டது.
1498ல் பிரான்சியர், லூயிஸ் XIII இன் கீழ் திரும்பி வந்தபோது, மிலான் எதிர்ப்பெதுவுமின்றி வீழ்ச்சியடைந்தது. ஸ்போர்ஸா பதவியிழந்தார். ஒரு நாள், தனது "கிரான் காவல்லோ"வுக்கான முழு அளவு களிமண் மாதிரியை, பிரான்சிய வில்வீரர்கள், குறிப்பயிற்சிக்குப் பயன்படுத்தியதைக் காணும்வரை, லியொனார்டோ மிலானிலேயே தங்கியிருந்தார். பின்னர் அவர் சாலையுடனும், அவரது நண்பரான லூக்கா பக்கியோலியுடனும் மந்துவாவுக்குச் சென்று இரண்டு மாதங்களுக்குப் பின் வெனிஸ் சென்றடைந்தார். 1500 ஏப்ப்ரலில் மீண்டும் புளோரன்சுக்கு வந்தார்.
புளோரன்சில் செஸாரே போர்கியா (போப் அலெக்சாண்டர் VI இன் மகன், "டூக்கா வலெண்டீனோ" என்றும் அழைக்கப்பட்டார்) என்பவரிடம் ஆயுதப்படைக் கட்டிடக்கலைஞராகவும், பொறியியலாளராகவும் பணியில் அமர்ந்தார். 1506 இல் மீண்டும், சுவிஸ் கூலிப்படைகளினால் பிரான்சியர் துரத்தப்பட்ட பின், மக்சிமிலியன் ஸ்போர்ஸா வின் வசம் வந்துவிட்ட, மிலானுக்குத் திரும்பினார். அங்கே அவர், இறக்கும்வரை அவரது தோழனாகவும், பின்னர் வாரிசாகவும் அமைந்த பிரான்சிஸ்கோ மெல்சியைச் சந்தித்தார்.
[தொகு]பிற்காலம்
1513 இலிருந்து 1516 வரை அவர் ரோம் நகரில் வாழ்ந்தார். அக்காலத்திலேயே, அங்கே ரபாயேலோ சண்டி மற்றும் மைக்கல் ஆஞ்சலோ போன்ற ஒவியர்கள் செயற்பட்டுக்கொண்டிருந்தார்கள். எனினும் இவருக்கு அவர்களுடன் அதிகத் தொடர்பு இருக்கவில்லை.
1515ல் பிரான்சின் பிரான்சிஸ் I மிலானைத் திரும்பக் கைப்பற்றிக் கொண்டான். பிரான்சின் அரசருக்கும், போப் லியோ Xக்கும் பொலொக்னாவில் நடைபெறவிருந்த சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்காக ஒரு இயந்திரச் சிங்கமொன்றைச் செய்வதற்கு லியொனார்டோ அமர்த்தப்படார். அப்பொழுதுதான் அரசரை லியொனார்டோ முதன் முதலில் சந்தித்திருக்கவேண்டும். 1516ல், அவர் பிரான்ஸிசின் பணியில் அமர்ந்தார். அரசரின் வாசஸ்தலத்துக்கு அருகில் குளொஸ் லுகே என்னும் மனோர் வீடு அவரது பயன்பாட்டுக்காக வழங்கப்பட்டதுடன், தாராளமன ஓய்வூதியமும் வழங்கப்பட்டது. அரசர் அவருக்கு நெருங்கிய நண்பரானார்.
1519 ல், பிரான்சிலுள்ள, குளோக்ஸ் என்னுமிடத்தில், லியொனார்டோ காலமானார். அவருடைய விருப்பப்படி 60 பிச்சைக்காரர்கள் அவரது பிணப்பெட்டியைத் தொடர்ந்து சென்றார்கள். அம்போயிஸ் கோட்டையிலுள்ள, சென்-ஹியூபெர்ட் சப்பலில் இவர் அடக்கம் செய்யப்பட்டார்.
[தொகு]தொடர்புகளும் செல்வாக்குகளும்

[தொகு]புளோரன்ஸ் - லியொனார்டோவின் கலை மற்றும் சமூகப் பின்னணி
லியொனார்டோ வெரோக்கியோவிடம் தொழில் பழகுவதற்குச் சேர்ந்த 1466 இலேயே வெரோக்கியோவின் ஆசிரியரான டொனெடெல்லோ (Donatello) இறந்தார். நிலத்தோற்ற ஓவியங்களின் வளர்ச்சிக்கு உதவிய ஓவியங்களை வரைந்த உக்கெல்லோ (Uccello) மிகவும் வயது முதிர்ந்தவராக இருந்தார். ஓவியர்களான பியெரோ டெல்லா பிரான்சிஸ்கா (Piero della Francesca), பிரா பிலிப்போ லிப்பி (Fra Filippo Lippi), லூக்கா டெல்லா ரோபியா (Luca della Robbia) என்போரும் கட்டிடக்கலைஞரும் எழுத்தாளருமான ஆல்பர்ட்டியும் அறுபது வயதைத் தாண்டியவர்களாகவும் இருந்தனர். அடுத்த தலைமுறையின் வெற்றிகரமான ஓவியர்களாக, லியொனார்டோவின் குரு வெரோக்கியோ, ஆன்டோனியோ பொலையுவோலோ (Antonio Pollaiuolo), சிற்பியான மினோ டா பியெசோலே (Mino da Fiesole) ஆகியோர் இருந்தனர்.
லியொனார்டோவின் இளமைக்காலம் மேற்படி ஓவியர்களால் அலங்கரிக்கபட்ட புளோரன்சிலேயே கழிந்தது. பொட்டிச்செல்லி, கிர்லாண்டாயோ, பெருஜீனோ ஆகியோர் லியொனார்டோவுக்குச் சமகாலத்தவர்கள். இவர்களை லியொனார்டோ வெரோக்கியோவின் வேலைத்தலத்திலும், மெடிசி அக்கடமியிலும் சந்தித்திருக்கக்கூடும். பொட்டிச்செல்லி மெடிசி குடும்பத்தால் விரும்பப்பட்டவராக இருந்ததால், ஒரு ஓவியராக அவரது வெற்றி உறுதிப்படுத்தப்பட்டது. கிர்லாண்டாயோ, பெருஜீனோ ஆகியோர் வசதி மிக்கவர்கள் பெரிய வேலைத்தலங்களை நடத்திவந்தனர். இவர்கள் இருவரும் மிகத் திறமையுடன் பணிசெய்து தமக்கு வேலை கொடுப்போரைத் திருப்திப்படுத்தினர். லியொனார்டோவுக்குக் கிடைத்த முதல் வேலை Adoration of the Magi என்னும் ஓவியமாகும். ஆனால் இது எப்போதுமே நிறைவடையவில்லை.
[தொகு]கலை



லியோனார்டோ டா வின்சி: கடைசி இராப்போசன விருந்து (1498)
லியோனார்டோ டா வின்சி, 1498ல் வரையப்பட்ட கடைசி விருந்து, மற்றும் 1503-1506ல் வரையப்பட்ட மோனோலிசா போன்ற ஒவியங்களுக்காகப் பெயர் பெற்றவர். இவருடைய 17 ஓவியங்கள் மட்டுமே இன்று தப்பியுள்ளன. சிற்பங்கள் எதுவும் அறியப்படவில்லை. அயர்லாந்தின் லிமெரிக்கிலுள்ள ஹண்ட் நூதனசாலையில் வைக்கப்பட்டுள்ள, வீடொன்றின் சிறிய சிற்பமொன்று இவர் செய்ததாகக் கருதப்படுகிறது. தப்பியுள்ள ஒவியங்களில் ஒன்று வட அமெரிக்காவில் உள்ளது.
லியொனார்டோ, பெரும்பாலும் பெரும் ஓவியங்களாகவே திட்டமிட்டார். அதனால் இத்திட்டங்கள் முற்றுப்பெறாமல் இடையிலேயே நிற்கவேண்டியேற்பட்டது.
மிலானில் நிறுவுவதற்கு, 7 மீட்டர் (24 அடி) உயரமுள்ள வெண்கலத்திலான குதிரைச் சிற்பமொன்றைச் செய்வதற்காக, மாதிரிகளும், திட்டங்களும் வகுப்பதில் பல வருடங்கள் செலவு செய்யப்பட்டன. எனினும் பிரான்சுடனான போர் காரணமாகத் திட்டம் முற்றுப்பெறவில்லை. தனிப்பட்ட முயற்சி காரணமாக, டாவின்சியின் திட்டங்கள் சிலவற்றின் அடிப்படையில் இதைப்போன்ற சிலையொன்று 1999ல் நியூயோர்க்கில் செய்யப்பட்டு, மிலானுக்கு வழங்கப்பட்டு அங்கே நிறுவப்பட்டது.


லியோனார்டோ டா வின்சி:
மோனா லிசா (1503-6)
புளோரன்சில், அங்கியாரிப் போர் என்ற தலைப்பில் பொது மியூரல் ஒன்றைச் செய்வதற்காக இவர் அமர்த்தப்பட்டார். இதற்கு நேரெதிர்ச் சுவரில், இவரது போட்டியாளரான மைக்கலாஞ்சலோ ஒவியம் வரைவதாக இருந்தது. பலவிதமான, சிறப்பான ஆரம்ப ஆய்வுப்படங்களை வரைந்த பின்னர் அவர் நகரிலிருந்து வெளியேறிவிட்டார். தொழில்நுட்பக் காரணங்களால் மியூரல் பூர்த்திசெய்யப்படவில்லை.
[தொகு]அறிவியலும், பொறியியலும்

இவருடைய கலைத்துவ வேலைகளிலும் பார்க்க அதிக கவர்ச்சியுடையனவாக, இவரது, அறிவியல் மற்றும் பொறியியல் ஆய்வுகள் அமைந்தனவெனலாம். இவ்வாய்வுகள் குறிப்புகளாகவும் படங்களாகவும் சுமார் 13,000 பக்கங்களில், குறிப்புப் புத்தகங்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இடதுகையால் எழுதுபவர், வாழ்நாள் முழுதும் கண்ணாடி விம்ப எழுத்துக்களையே பயன்படுத்திவந்தார்.
அறிவியல் சம்பந்தமான இவரது அணுகுமுறை அவதானிப்பு சார்ந்தது. விபரிப்பதன் மூலமும், அவற்றை மிக நுணுக்கமான விவரங்களுடன் வெளிப்படுத்துவதன் மூலமுமே, தோற்றப்பாடுகளை அவர் விளங்கிக்கொள்ள முயன்றார். சோதனைகளுக்கும், கோட்பாட்டு விளக்கங்களுக்கும் அவர் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. தனது வாழ்நாள் முழுவதும், எல்லாவற்றுக்குமான விபரமான வரைபடங்களைக் கொண்ட ஒரு கலைக்களஞ்சியமொன்றை உருவாக்கத் திட்டமிட்டுவந்தார். இவருக்கு லத்தீனிலும், கணிதத்திலும் முறையான கல்வி இல்லாமையால், லியோனார்டோ என்ற விஞ்ஞானி அக்கால அறிஞர்களால் புறக்கணிக்கப்பட்டார்.



விட்ருவியன் மனிதன்: லியொனார்டோ டா வின்சி
draws the human body
[தொகு]வெளி இணைப்புகள்

நிலாச்சாரல்.காம்-ல் லியொனார்டோ டா வின்சி
நிலாமுற்றம் கட்டுரை

Best Blogger Gadgets

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக