உலக சைவ காங்கிரஸ் என்ற அமைப்பு சார்பில் உலக சைவ தின விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி, மாணவ-மாணவிகளுக்கு சைவ உணவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் பேச்சு போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவியம் வரைதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
உலக சைவ தினத்தின் நிறைவு விழா நேற்று மாலை நடந்தது. இந்த நிகழ்ச்சியில் அரிஹந்த் நிறுவனங்களின் இயக்குனர் விரேந்திரமால் ஜெயின், கனரா வங்கி உதவி பொதுமேலாளர் ஆர்.கணேசன், உலக சைவ காங்கிரஸ் அமைப்பின் தேசிய தலைவர் தாராசந்த் துகர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில், சைவ உணவை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றியும், அதனால் அதிக நாள் உயிர் வாழ முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டது. மருத்துவர் ஆர்.தனபால் எழுதிய `சைவ உணவுகளின் மகிமை' என்ற புத்தகம் வெளியிடப்பட்டது.
மாணவர்களுக்கிடையே நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் சைவ உணவை சாப்பிட்டு 101 வயது வரை நலமுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் முதியவர் காளியப்பனுக்கு விழாவில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
சைவ உணவைப் பற்றி காளியப்பன் கூறுகையில், என்னுடைய சொந்த ஊர் விருதுநகராகும். 1909-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நான் பிறந்தேன். சுதந்திர போராட்ட காலத்தின் போது, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்சின் இந்திய தேசிய ராணுவப்படையில் இணைந்து போராடினேன். அப்போது ஜப்பான், தாய்லாந்து, இந்தோனேஷியா, சீனா உள்பட பல நாடுகளுக்கு சென்றிருக்கிறேன். 1947-ம் ஆண்டு முதல் சுத்த சைவத்திற்கு மாறினேன். அதனால்தான் இவ்வளவு காலம் உயிரோடு இருக்க முடிகிறது.
நான் தற்போது என்னுடைய மனைவி கணபதி அம்மாளுடன் தஞ்சாவூர் தென்கீழ் அலங்கத்தில் வசித்து வருகிறேன். இன்று வரை எந்த நோயும் வந்ததில்லை. மருத்துவரிடம் சென்றதும் இல்லை. சைவ உணவை சாப்பிட்டு, ஒழுக்கத்துடன் வாழ்ந்து வந்தால் அனைவரும் 100 வயது வரை வாழ முடியும் என்று கூறினார்.
Best Blogger Gadgets
1 கருத்து :
நன்றி.மதுரை சரவணன்
கருத்துரையிடுக