தும்மலும் தீர்க்காயுசும்!

அச்சு அச்சுன்னு அடுக்கடுக்கா தும்மல் போடுவாங்க கோமதியக்கா. "அட,அபசகுனம் புடிச்சவ, தும்மிட்டாளா...இனி போன காரியம் வெளங்கினமாதிரிதான்..." என்று.
வாசல்புறத்திலிருந்து வெறுப்போடு முனங்குவாங்க அவங்க மாமியார். அக்காவுக்கு கண்ணீர் கோர்த்துக்கொள்ளும் உடனே.

வந்தா நிறுத்தமுடியாது, வருமுன்னாலும் தடுக்கமுடியாது என்ற வகையில் இந்தத் தும்மலுக்கு முக்கிய இடமுண்டு. இதிலயும், ரெட்டைத்தும்மல் போட்டா ரொம்ப நல்லதுன்னு அடுத்த தும்மலை ஆர்வமா எதிர்பார்க்கவும் செய்வாங்க சிலர்.

கல்யாணமோ, வைபவமோ ஏதாவது நடக்கும்போது யாரும் தும்மல் தும்மிடக்கூடாதுன்னு, தும்மல் வந்தா, மூக்கைத் தேச்சுவிடு. தும்மல்போட்டுராதன்னு எப்பவும் எல்லாருக்கும் எச்சரிக்கை குடுப்பாங்க எங்க பெரியம்மா.

ஆனா, தும்மல் என்பது நாம, உடலுக்கு ஒவ்வாத பொருட்களைச் சுவாசிக்க நேர்ந்தால் அதைக் கண்டுபிடித்து உடனே வெளியேற்றும் அருமையான டெக்னிக் என்பது மருத்துவம் தெரிஞ்சவங்க சொல்ற விஷயம். சிலர் அதிகாலையில அடுக்கடுக்கா தும்மல்போடுவாங்க. உறக்கத்தின்போது உடலில்சேர்ந்த தேவையற்ற நீரை அதிகாலையில் உடம்பு வெளியேற்றும் முயற்சியே அதுவாகும். இது நல்ல உடம்புக்கான அறிகுறிதான் என்றும் சொல்லுவாங்க சிலர்.

சின்னக்குழந்தைங்க தும்மும்போது "நூறு" ன்னு சொல்லி, நூறு வயசு வாழணும் என்று குறிப்பாக வாழ்த்துவாங்க எங்க பக்கத்துப் பெரியவங்க. தும்முகிற அந்த வினாடியில் இதயம் நின்று மறுபடியும் இயங்கத் தொடங்குமாம். அதனால்தான் அந்த வாழ்த்து. தான் பெற்ற பிள்ளைகள் பேரன் பேத்தியெடுத்திருந்தாலும், அந்தப் பிள்ளைகள் தும்மும்போதும் பெற்றதாய் உட்காந்து, நூறுன்னு வாழ்த்துவதைப்பார்க்க மனசு நெகிழத்தான்செய்யும்.

இங்கேயும் ஒரு தும்மல் காட்சி...வள்ளுவரின் வார்த்தைகளில் எப்படி அழகாகியிருக்குதுன்னு பாருங்க.

"வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்
யாருள்ளித் தும்மினீர் என்று"

தலைவன் தும்முகிறான். உடனே அவனை வாழ்த்துகிறாள் தலைவி. ஆனால், வாழ்த்திய அடுத்த நிமிடமே, நான் இங்கே அருகிலிருக்கும்போது,வேறு யார் உங்களை நினைத்ததால் தும்மினீர்கள்?" என்று கேட்டு ஊடல்கொண்டு அழத்தொடங்குகிறாள் அவள்.

அடுத்து ஒரு சமயம், அவள் அழுதுவிடுவாளோ என்ற எண்ணத்தில், வந்த தும்மலை அடக்குகிறான் அவன். ஆனால் அவளோ, "உனக்கு வேண்டியவர்கள் நினைப்பதை நான் அறிந்துவிடக்கூடாதென்று வந்த தும்மலை அடக்குகிறாயோ?" என்று வருந்தி அழுகிறாள்.

"தும்முச் செறுப்ப அழுதாள் நுமருள்ளல்
எம்மை மறைத்திரோ என்று"

ரெண்டே ரெண்டு வரிகளில் ரெண்டுபேரோட மன உணர்வுகள் எவ்வளவு அழகா வெளிப்பட்டிருக்கு பாருங்க. இதுமாதிரி இன்னும் பல உணர்வுகளை வள்ளுவர் வார்த்தைகள்ல படிக்கணும்னா, காமத்துப்பால் புலவி நுணுக்கம் பகுதியில் படிக்கலாம்.

Posted By,

Best Blogger Gadgets

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக