அடிக்கும் பெண்கள்... அலறும் ஆண்கள்! இடிக்(தாய்)குலங்கள்!

பெண்களை ஆண்கள் அடிக்கும் வீட்டு வன்முறைக்கு எதிராக குரல் கொடுத்தது போக, தற்போது பின்னியெடுக்கும் பெண்களிடமிருந்து ஆண்களை காப்பாற்ற குரல்கள் எழ ஆரம்பித்துள்ளன.

மற்ற நாடுகள் எப்படியோ...? ஆனால் இந்தியா ஆணாதிக்க சமூகத்தைக் கொண்ட தேசம் என்றே பெண்ணுரிமைவாதிகளாலும், முற்போக்குவாதிகளாலும் வர்ணிக்கப்படுவதுண்டு!

ஆனால் அத்தகைய தேசத்திலும் சமீபகாலமாகவே பொய் புகார் கொடுத்து, கணவனை வரதட்சணை வழக்கில் உள்ளே தள்ளும் போக்கு ஒருபுறம் அதிகரித்துக்கொண்டிருக்க, மறுபுறம் பெண்களை பாதுகாக்க நிறைவேற்றப்பட்ட வீட்டு வன்முறைக்கு எதிரான சட்டத்திலும், ஏராளமான அப்பாவி ஆண்கள் கம்பி எண்ண வைக்கப்படுவதும் ஆங்காங்கே நடந்தேறிக்கொண்டிருக்கின்றன.

இதுபோக வழக்கு, வக்கீல் என்று இழுத்துவிடாமல், ' நானே டீல் பண்ணிக்கிறேன்' பேர் வழி என்று ஆண்களை பெண்கள் அடித்து துவைக்கும் சம்பவங்களும் ஆங்காங்கே அரங்கேறிக்கொண்டுள்ளன.

இந்நிலையில்தான் "பொறுத்தது போதும்; பொங்கி எழு தோழா!" என்ற ரீதீயில் ஆண்களின் உரிமைகளை பாதுகாக்கவும், ஆண்களை நியாயம் இல்லாமல் தண்டிக்கும், பெண்களிடம் இருந்து பாதுகாக்கவும் "ஆண்கள் உரிமை பாதுகாப்பு சங்கம்" என்ற புதிய சங்கம் சென்னையில் சமீபத்தில் துவக்கப்பட்டது.

இந்த சங்கம் துவக்கப்பட்டது தான் தாமதமாம். நான் முந்தி, நீ முந்தி என்று அடித்துபிடித்து ஆங்காங்கே ஆண்கள் ஆர்வத்துடன் இச்சங்கத்தில் தங்களை சேர்த்து கொண்டு வருகிறார்களாம்.

இதுபோக உலகம் முழுவதும் அடிவாங்கிக்கொண்டிருக்கும் (பெண்களிடம்தான்!) தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆண்களையும், உறுப்பினர்களாக சேர்ப்பதற்கான முயற்சி வேறு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அக்கம்பக்கம் பார்த்தபடியே ( அவ்வளவு பயம்... வீட்டம்மா மீது!) கிசுகிசுப்பாக கூறுகிறார் மேற்படி சங்கத்தை சேர்ந்த நிர்வாகி ஒருவர்!

சரி இந்த கூத்து தமிழகத்தில் மட்டும்தானா என்றால். அதுதான் இல்லை. டெல்லி, நாக்பூர் போன்ற நகரங்களிலெல்லாம் கூட ஆர்ப்பாட்டம், பேரணி போன்றவற்றை நடத்தி ஆண்கள் தங்களது உள்ளக்குமுறல்களை கொட்டியிருந்தனர்.

பெண்களுக்கு அதிகாரம் கொடுத்து ஆண்களை அதிகாரமற்றவர்களாக மாற்றி விட்டனர்; "ஆண்கள் என்ன ஏ.டி.எம்., மிஷின்களா?" என்றெல்லாம் கூட ஆவேச முழக்கங்கள் வெளிப்பட்டன.

“கணவர் மீது பெண்கள் புகார் கொடுத்தால் 498 ஏ பிரிவின் கீழ் ஆண்கள் தண்டிக்கப்படுகின்றனர். எந்த விசாரணையும் ஆண்களிடம் நடத்தப்படுவதில்லை. இந்த சட்டம் பெண்களுக்கு ஆதரவானது என்பதை விட மனைவிகளுக்கான சட்டம் என்று தான் சொல்ல வேண்டும்" என்றெல்லாம் வேறு புலம்பல்கள் கிளம்பின.

பாவம்! அவங்களும் எவ்வளவு காலத்திற்குத்தான் வலிக்காத மாதிரியே நடிப்பாங்க...?! அதான் கிளம்பிட்டாங்க சங்கமும், கொடியுமாக...!

சரி இங்கத்தான் இப்படி புலம்பிக்கிட்டு இருக்காங்க என்று நினைத்தால், தற்போது ஆண்களின்
அலறல் சத்தம் வருவது இங்கிலாந்திலிருந்து...!

பி.எச்.டி வாங்கும் அளவுக்கு அப்படி ஒரு நுணக்கமாம் அந்த ஊர் பெண்கள் அடிக்கும் அடியில்!

நம்ம ஊரை மாதிரியே பொறுத்து பொறுத்து பார்த்து, கடைசியில் வெட்கத்தை விட்டு யாரோ ஒருவர், நண்பரிடம் இது குறித்து புலம்ப, அதைக்கேட்ட அந்த நண்பர், " உன் வீட்டிலுமா?" என கேட்க, "என்னது உன் வீட்டிலேயுமாவா... அப்ப நீயும் நம்ம கேஸ்தானா?" என வடிவேல் ரேஞ்சுக்கு கேட்க, இப்படியான குமுறல்கள் புகார்களாக உருவெடுத்து காவல்நிலையங்களை தட்டும் போக்கு சமீபகாலமாக அதிகரித்து வருகிறதாம்!

இங்கிலாந்து முழுவதுமே பரவலாக இவ்வாறு வீட்டு வன்முறை தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளில், பாதிக்கப்பட்டவர்களில் 10 பேரில் 4 பேர் ஆண்களாக இருப்பது சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

பொதுவாகவே வீட்டு வன்முறையால் உண்மையில் பாதிக்கப்படுவது பெண்கள்தான் என்ற அழுத்தமான நம்பிக்கை காவல்துறையினரிடம் உள்ளதாகவும், இதன் காரணமாகவே வீட்டு வன்முறையால் - அதாவது தனது மனைவி அடிப்பதை - பாதிக்கப்படுவது குறித்து ஆண்கள் புகார் தெரிவித்தால் அவர்களுக்கு நீதித்துறையிலும், காவல் துறையிலும் உரிய நியாயமோ, நீதியோ கிடைப்பதில்லை என்று கூறுகிறது அந்த ஆய்வறிக்கை!

கடந்த 2008 - 09 ஆம் ஆண்டுகளில் மட்டும் வீட்டு வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுமார் 41,000 ஆண்கள் வழக்கு தொடர்ந்துள்ளனராம்.அதே சமயம் பெண்கள் தொடர்ந்த வழக்குகளின் எண்ணிக்கை 2,700 தானாம்.

இதன் மூலம் இங்கிலாந்தில் வீட்டு வன்முறைக்கு பாதிக்கப்படுபவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் ஆண்களே என்பது அம்பலமாகியுள்ளது.

மேலும் குடும்ப வன்முறை தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றங்கள் மற்றும் நீதிபதிகளிடத்தில், குடும்ப வன்முறையால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான் என்ற எண்ணம் ஆழமாக வேரூன்றி இருப்பதால், ஆண்களை அடித்து துன்புறுத்தும் மனைவிகள், அவர்களுக்கு எதிரான வழக்குகளிலிருந்து எளிதில் தப்பித்துவிடுகிறார்கள்.

இதனால் நீதிபதிகளிடம் காணப்படும் இந்த எண்ணத்தை அவர்களது பயிற்சி காலத்தின்போதே அகற்றும் வகையில் பயிற்சி அளிக்க வேண்டும் என்றும், இழைக்கப்படுகிற குற்றத்தை பாலினத்தை அடிப்படையாகக் கொண்டு அளவிடுவதை மாற்றி, சமமாக கருதும் வகையில் நீதிபதிகள் மற்றும் நீதிமன்றங்களுக்கான நெறிமுறைகள் மற்றும் சட்டவிதிகளில் மாற்றம் கொண்டு வரவேண்டும் என்றும் வலியுறுத்துகிறது இங்கிலாந்தில் தோன்றியுள்ள குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் ஆண்களுக்கு ஆதரவான சங்கத்தை சேர்ந்த மார்க் புரூக்ஸ் என்பவர்!

மார்க் புரூக்ஸ் சார்ந்துள்ள சங்கத்தைப்போன்றே மேலும் பல சங்கத்தைச் சேர்ந்தவர்களும் இதே ரீதியில் குரல் எழுப்பத் தொடங்கியிருப்பதால், இடிந்துபோய் இருக்கிறார்களாம் இங்கிலாந்தின் இடிக்(தாய்)குலங்கள்!

Best Blogger Gadgets

1 கருத்து :

பெயரில்லா சொன்னது…

வீட்டு வன்முறைக்கு பாதிக்கப்படுபவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் ஆண்களே என்பது அம்பலமாகியுள்ளது.

கருத்துரையிடுக