இளம் வழக்கறிஞரை மகாத்மா காந்தியாக உருவாக்கியதில் தமிழர்களுக்குப் பெரும் பங்கு உண்டு.

பாரிஸ்டர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்ற இளம் வழக்கறிஞரை மகாத்மா காந்தியாக உருவாக்கியதில் தமிழர்களுக்குப் பெரும் பங்கு உண்டு.


தென்னாப்பிரிக்காவில் இருந்தபோது ஒப்பந்தக் கூலிகளாக அழைத்துச் செல்லப்பட்ட தமிழர்களுக்கு வெள்ளை முதலாளிகள் இழைத்த கொடுமைகளுக்கு எதிராகத்தான் அவர் தனது முதல் போராட்டத்தைத் தொடங்கினார். பாலசுந்தரம் எனும் தமிழ் ஒப்பந்தக் கூலியை அவருடைய வெள்ளை எஜமானன் மிகக் கடுமையாகத் தாக்கிக் கொடுமை செய்த வழக்கை ஏற்று நடத்தி அந்த அப்பாவித் தமிழனுக்கு நீதி கிடைக்க உதவியதன் மூலம் அவர் வாழ்வில் மிகப் பெரும் திருப்பம் ஏற்பட்டது.


1894-ம் ஆண்டு "நேட்டால் இந்தியன் காங்கிரஸ்' என்ற பெயரில் ஓர் அமைப்பை காந்தியடிகள் தோற்றுவித்தார். இந்த அமைப்பில் முக்கிய பங்கு வகித்தவர்கள் தமிழர்களே. தென்னாப்பிரிக்காவில் காந்தியடிகள் 20 ஆண்டுகளுக்கு மேல் தங்கியிருந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி இந்திய மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை நீக்குவதற்கு வழிவகுத்தார்.


1920-ம் ஆண்டு முதல் 1947--ம் ஆண்டு வரை 27 ஆண்டுகள் இந்தியாவில் சுதந்திரப் போராட்டத்தை காந்தியடிகள் வழிநடத்தினார். ஆனால் அதற்கான பயிற்சியையும் பக்குவத்தையும் அவருக்குத் தென்னாப்பிரிக்காவில் நடத்திய போராட்டங்கள் அளித்திருந்தன. அதற்கு முழுமையாகக் காரணமானவர்கள் தமிழர்களே.


தென்னாப்பிரிக்காவில் அவர் நடத்திய போராட்டத்தில் வள்ளியம்மை, நாகப்பன், நாராயணசாமி ஆகிய 3 தமிழர்கள் உயிர்த் தியாகம் செய்தனர்.


பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் இப்போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றனர். பல தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக நாடு கடத்தப்பட்டனர். ஆனாலும் காந்தியடிகளுக்குத் தோள் கொடுத்து துணை நிற்பதிலிருந்து தமிழர்கள் பின்வாங்கவில்லை.


வள்ளியம்மை குறித்தும் தனக்குத் தோள் கொடுத்துத் துணை நின்ற தமிழர்கள் குறித்தும் காந்தியடிகள் குறிப்பிட்ட கருத்துகள் அவர் எவ்வளவு உயர்வாகத் தமிழர்களை மதித்தார் என்பதற்குச் சான்றாகத் திகழ்கின்றன.


காந்தியடிகள் அரை நிர்வாணப் பக்கிரி கோலத்துக்கு மாறியதும் தமிழகத்தில்தான். 22-9-1921 அன்று காந்தியடிகள் மதுரையில் தங்கியிருந்தபோது அன்று அதிகாலையில் எழுந்து தனக்குத் துணையாக இருந்த விருதுநகர் காங்கிரஸ் தொண்டர் பழனிகுமாரு பிள்ளையை எழுப்பி கதர் வேட்டியைப் பிடிக்கச் சொல்லி இரண்டாகக் கிழித்து ஒரு பாதியை இடுப்பில் கட்டிக்கொண்டு மற்றொரு பாதியை தோளில் போர்த்திக் கொண்டார். அன்றிலிருந்து அவர் மறைவு வரை இதுவே அவரது உடையாயிற்று.


காந்தியடிகளின் மனசாட்சிக் காவலர் என்று அழைக்கப்படும் அளவுக்கு அவரைப் பற்றி உள்ளும் புறமும் தெரிந்து அவருடைய பணிகள் எல்லாவற்றுக்கும் துணை நின்றவர் ராஜாஜி ஆவார்.


காந்திய இயக்கத்துக்குத் தமிழகத்தில் கிராமம் கிராமமாகச் சென்று தொண்டர் படையைத் திரட்டியவர் காமராஜ் ஆவார்.


காந்தியப் பொருளாதாரத் தத்துவத்துக்கு வடிவம் அமைத்துத் தந்த பெருமைக்குரியவர் ஜே. சி. குமரப்பா ஆவார். காந்தியடிகளின் ஆதாரக் கல்வித் திட்டத்தை உருவாக்கியவர் அரியநாயகம் என்னும் ஈழத் தமிழர்.

இப்படி காந்தியடிகளுக்கு பலவகையிலும் துணையாக நின்று பெருந்தொண்டாற்றியவர்கள் தமிழர்களே.


ஜோசப் கொர்னலியஸ் செல்லதுரை குமரப்பா. சென்னையில் உயர் கல்வி கற்ற இவர் 1912-ம் ஆண்டு லண்டன் சென்று பட்டயக் கணக்கர் படிப்பில் சேர்ந்தார். பிறகு லண்டனில் சிறிது காலம் பணியாற்றிவிட்டு 1919-ல் இந்தியாவுக்குத் திரும்பி மும்பையில் சொந்தமாகவே பட்டயக் கணக்கு நிறுவனத்தைத் தொடங்கி நடத்தினார். 1928-ம் ஆண்டு அமெரிக்காவுக்குச் சென்று நிர்வாக மேலாண்மை படித்தார். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் பயின்றார். 1929-ம் ஆண்டு இந்தியாவுக்குத் திரும்பினார். பிரிட்டிஷ் அரசு தன்னுடைய வரிவிதிப்புக் கொள்கையின் மூலம் இந்தியாவை எப்படியெல்லாம் சுரண்டுகிறது என்பது குறித்து ஒரு நூலை எழுதினார். காந்தியடிகளின் பார்வைக்கு அந்த நூலைக் கொண்டு செல்ல விரும்பினார். காந்தியடிகளின் செயலாளராக இருந்த பியரிலால் மூலம் அந்த விருப்பம் நிறைவேறியது.


1929-ம் ஆண்டு மே மாதம் 9-ம் தேதி பிற்பகல் 2:30 மணிக்கு சபர்மதி ஆசிரமத்தில் காந்தியடிகளை அவர் சந்தித்தார். இந்தச் சந்திப்பு அவரின் வாழ்க்கைப் போக்கை மாற்றிவிட்டது. அவரது நூலைத் தனது "யங் இந்தியா' இதழில் தொடர் கட்டுரையாக வெளியிடுவதாக காந்தியடிகள் கூறியபோது அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. தனது பொருளாதாரச் சிந்தனைகளும் குமரப்பாவின் பொருளாதாரச் சிந்தனைகளும் ஒரே மாதிரியாக அமைந்ததைக் கண்ட காந்தியடிகள் இதனை இதனால் இவன் முடிக்கும் எனக் கருதினார்.


காந்தியடிகளால் தோற்றுவிக்கப்பட்ட தேசியப் பல்கலைக்கழகமான குஜராத் வித்யா பீடத்தில் பொருளாதாரப் பேராசிரியராக குமரப்பாவை நியமிக்க காந்தியடிகள் ஏற்பாடு செய்தார். இதன் மூலம் குமரப்பாவின் சொந்த வாழ்க்கை பெரும் மாறுதலுக்குள்ளானது. திருமணத்தைத் துறந்து காந்தியத் தொண்டராக வாழத் தன்னை அவர் அர்ப்பணித்துக் கொண்டார். காந்தியடிகளுக்கு அவர் மீது உள்ள நம்பிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தது. 1931-ம் ஆண்டு புகழ்பெற்ற தண்டி உப்புச் சத்தியாகிரக யாத்திரையை காந்தியடிகள் தொடங்கியபோது குமரப்பாவை யங் இந்தியாவின் ஆசிரியர் பொறுப்பில் நியமித்தார்.


காந்தியடிகளைச் சுற்றி எத்தனையோ தலைவர்களும் அறிஞர் பெருமக்களும் இருந்த போதிலும் அவர்களில் யாரையும் இப்பதவியில் அவர் நியமிக்கவில்லை. குமரப்பாவை இப்பதவிக்கு அவர் தேர்ந்தெடுத்தார். அனல் பறக்கும் கட்டுரைகளை எழுதியதற்காக குமரப்பாவுக்கு ஒன்றரை ஆண்டு காலச் சிறைத் தண்டனை பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் விதிக்கப்பட்டது. ஆனால் காந்தி இர்வின் உடன்பாடு ஏற்பட்டதனால் சில நாள்களிலேயே அவர் விடுதலை செய்யப்பட்டார்.


1932-ம் ஆண்டு காந்தியடிகள் கைது செய்யப்பட்டபோதும் யங் இந்தியா இதழின் ஆசிரியர் பொறுப்பை மீண்டும் குமரப்பா ஏற்க நேர்ந்தது. அப்போதும் இவர் எழுதிய கட்டுரைகளுக்காக இவருக்கு இரண்டரை ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனைக் காலம் முழுவதையும் நாசிக் சிறையில் அவர் கழித்தார்.


1934-ம் ஆண்டு சிறையிலிருந்து வெளிவந்தவுடன் காந்தியடிகள் இவரை பிகார் பூகம்ப நிவாரணப் பணிகளுக்கு அனுப்பி வைத்தார். அவர் அங்கிருந்து டாக்டர் ராஜேந்திர பிரசாத்துக்குத் துணையாக ஓராண்டு காலம் பணியாற்றினார்.


1935-ம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரசின் சார்பில் அகில இந்தியக் கிராமத் தொழில்கள் சங்கம் தோற்றுவிக்கப்பட்டது. இதன் தலைவராகக் காந்தியடிகளும் செயலாளர் மற்றும் அமைப்பாளராக குமரப்பாவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த அமைப்பின் மூலம் நாடெங்கும் கிராமத் தொழில்களைத் திருத்தி அமைக்கவும் அதன் வளர்ச்சிக்கு உதவும் பல்வேறு தொழில்நுட்பங்களை வழங்கவும் இந்த அமைப்பு பெரும் பணியாற்றியது. கிராம உத்யோக் பத்திரிக்கா என்ற பெயரில் மாத இதழ் ஒன்றையும் குமரப்பா நடத்தினார்.


1938-ம் ஆண்டு காங்கிரஸ் தலைவராக சுபாஷ் சந்திர போஸ் இருந்தபோது தேசியத் திட்டக் குழு ஒன்றை அவர் அமைத்தார். பிற்காலத்தில் நாடு சுதந்திரம் பெற்றபோது உருவாக்கப்பட்ட தேசியத் திட்டக் குழுவுக்கு இதுவே முன்னோடியாகும். இக்குழுவுக்குத் தலைவராக ஜவாஹர்லால் நேரு நியமிக்கப்பட்டார். காந்தியடிகள் மற்றும் நேருவின் வற்புறுத்தலுக்கு இணங்க இக்குழுவில் அங்கம் வகிக்க இசைந்த குமரப்பா 3 மாதங்களில் இக்குழுவில் இருந்து விலகினார். திட்ட அணுகுமுறையில் அவருக்கு இருந்த கருத்து வேறுபாடே இதற்குக் காரணமாகும்.


1942-ம் ஆண்டு ஆகஸ்டு போராட்டத்தின்போது அதில் ஈடுபட்டு பல்வேறு தலைமறைவு நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக இரண்டரை ஆண்டுக் காலம் சிறையிலடைக்கப்பட்டு 1945-ம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார். சிறையிலிருந்த போது "நிரந்தரப் பொருளாதாரம்', "இயேசு பிரானின் போதனைகளும், செயற்பாடுகளும்' எனும் இரு நூல்களை எழுதினார். இந்த நூல்களைப் படித்து வியந்து போற்றிய காந்தியடிகள் குஜராத் வித்யா பீடத்தின் மூலம் இவருக்கு இரு முனைவர் பட்டங்களை வழங்கச் செய்தார்.


இந்தியாவுக்குச் சுதந்திரம் வழங்குவது குறித்து இந்தியத் தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்காக பிரிட்டிஷ் அரசால் அனுப்பப்பட்ட நாடாளுமன்றக் குழு காந்தியடிகளை சென்னையில் 23-1-1946 அன்று சந்தித்துப் பேசியது. இந்தியாவின் பொருளாதார சமுதாய சிக்கல்கள் குறித்து ஜே.சி. குமரப்பா, அவர் சகோதரர் பரதன் குமரப்பா ஆகியோரைச் சந்தித்துப் பேசுமாறு காந்தியடிகள் நாடாளுமன்றக் குழுவை வேண்டிக் கொண்டார். எனவே அக்குழுவினர் இருவரையும் சந்தித்துப் பேசி பல விவரங்களை அறிந்து கொண்டனர். அந்த இரு சகோதரர்களுக்கும் காந்தியடிகள் அளித்த முக்கியத்துவத்தை இந்நிகழ்ச்சி சுட்டிக்காட்டுகிறது.


நாடு சுதந்திரம் பெற்ற பிறகு அவருக்கு அதிகார அரசியலில் நாட்டமில்லை. இந்தியாவின் முதலாவது நிதியமைச்சராக இவரே நியமிக்கப்படுவார் என்ற நம்பிக்கை நாடெங்கும் பரவியிருந்தது. ஆனாலும் எந்த பதவியையும் ஏற்க அவர் முன்வரவில்லை.

1947-ம் ஆண்டு காங்கிரஸ் செயற்குழுவில் இருந்து ஜெயப்பிரகாஷ் நாராயணன் விலகியபோது இவரை நியமிக்க காங்கிரஸ் தலைமை முடிவு செய்தது. ஆனால் காந்தியடிகள் வற்புறுத்தியும்கூட இவர் அதை ஏற்க மறுத்தார். காங்கிரஸ் கட்சிக்குள் இருந்த இடதுசாரிகள் மற்றும் வலதுசாரிகள் ஏற்கக்கூடிய பொருளாதாரக் கொள்கை ஒன்றை வகுத்து பிரதமர் நேருவிடம் இவர் அளித்தார். ஆனால் காந்தியடிகளின் மறைவுக்குப் பிறகு குமரப்பாவின் ஆலோசனைகளை நேரு ஏற்கவில்லை. இந்தியாவில் சோஷலிச முறையில் தொழிற்புரட்சி ஒன்றை ஏற்படுத்துவதையே அவர் விரும்பினார். அந்த அடிப்படையில் அரசுத் துறையில் கனரகத் தொழில்களை உருவாக்கினார்.


ஆனால் குமரப்பாவோ இயற்கையோடு இயைந்த தொழிற்புரட்சி ஏற்பட வேண்டுமென்று விரும்பினார். கடலில் உள்ள நீர் சூரிய வெப்பத்தால் ஆவியாகி மேலே சென்று மேகமாகி மீண்டும் நிலத்தில் மழையாகப் பொழிகிறது.


ஆறுகளில் பெருகி ஓடி வரும் மழை நீர் கடலில் கலக்கிறது. இது இயற்கையான சுழற்சியாகும். இந்த இயற்கை நெறியை மறந்து செயற்படும் நாடு குழப்பத்தில் ஆழும் என குமரப்பா கருதினார்.


ஒவ்வொரு கிராமமும் அங்கு வாழும் மக்களுக்குத் தேவையான பொருள்களை அங்கேயே கைத்தொழில் முறையில் உற்பத்தி செய்ய வேண்டும். ஒவ்வொரு கிராமமும் தன்னிறைவு பெற்ற கிராமமாக மாறுவது மொத்தத்தில் நாட்டைத் தன்னிறைவு பெற்ற நாடாக மாற்றிவிடும் எனக் கருதினார். ஆனால் காந்தியடிகளுக்குப் பிறகு அவரது யோசனைகளை ஏற்கவோ, செயற்படுத்தவோ யாரும் தயாராக இல்லை.


1950-களின் தொடக்கத்தில் சீனா, சோவியத் ஒன்றியம், கிழக்கு ஐரோப்பிய நாடுகள் ஆகியவற்றுக்கு அவர் நல்லெண்ணத் தூதுவராகச் சென்று வந்தார். அந்நாடுகளில் ஏற்பட்டிருக்கும் புரட்சிகரமான மாற்றங்களை நேரில் காணும் ஒரு வாய்ப்பாக இந்தப் பயணத்தை அவர் பயன்படுத்திக் கொண்டார்.


இந்தியாவில் விரைவான தொழில்மயக் கொள்கையும் நிலச் சீர்த்திருத்தத்தைப் பற்றி உண்மையாக எந்த நடவடிக்கையும் இல்லாதிருப்பதையும் அதற்கு நேர்மாறாக இந்நாடுகளில் நிலைமை இருப்பதையும் நேரில் கண்டார். அந்தப் பயணத்துக்குப் பிறகு இந்நாடுகளில் நிலவும் தன்னிறைவு உணர்வை அவர் பாராட்டினார்.


மக்களின் அடிப்படை வாழ்வில் முன்னேற்றம் காண்பதை நோக்கமாகக் கொண்டு அரசுகள் இயங்குவதை அவர் மிகவும் பாராட்டினார். உண்மையான காந்தியவாதியான அவர் கம்யூனிச நாடுகள் குறித்து வெளியிட்ட கருத்துகள் பலருக்கு வியப்பை அளித்தன.


இரண்டாம் உலகப் போருக்குப் பின்னால் உலகப் பெரும் வல்லரசாக அமெரிக்கா உருவானதையும் அவர் கண்டார். ஐரோப்பிய ஏகாதிபத்திய நாடுகளுக்குப் பதிலாக அமெரிக்கா புதிய ஏகாதிபத்தியமாக உருவானதை அவர் கண்டித்தார்.


கொரியாவில் அமெரிக்கா நாபாம் குண்டுகளையும், கிருமி குண்டுகளையும் வீசியதை அவர் கடுமையாகக் கண்டனம் செய்தார். அமெரிக்காவுக்கு எதிராகப் பொருளாதாரப் புறக்கணிப்பு நடவடிக்கையை மேற்கொள்ள இந்தியா உள்பட உலக நாடுகள் முன்வரவேண்டுமென்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.


வினோபா பாவே தலைமையில் நடைபெற்ற பூதான இயக்கமும் அவரது விமர்சனத்துக்கு உள்ளாயிற்று. நிலத்தைத் தானமாகப் பெற்று நிலமில்லாதவர்களுக்கு அதை வழங்குவதோடு பூதான இயக்கத்தின் கடமை முடிந்துவிடாது. நிலத்தைப் பெற்ற ஏழை எளிய மக்கள் அதில் வேளாண்மை செய்யவும் தங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ளவும் வழிவகை செய்ய வேண்டும்.


அதற்கு அந்த மக்களைப் பயிற்றுவிப்பதற்குத் தொண்டர்களும் வேண்டும். இதையெல்லாம் செய்யாமல் பூதான இயக்கம் இயங்குவது வெற்றி பெறாது என்று அவர் கூறியபோது, பலரும் அவர்மீது கோபப்பட்டனர். ஆனால் அவர் கூறியதுதான் சரியானதென்பதை காலம் நிரூபித்தது.


சர்வோதய இயக்கம் குறித்தும் அவருக்கு இதுபோன்ற கருத்துகள் இருந்தன. அதை அவர் வெளிப்படுத்தத் தயங்கவில்லை. இதை அந்த இயக்கத்திலிருந்த பலர் விரும்பவில்லை. ஆனாலும் அவர் மனதில் பட்டதை மறைக்காமல் கூறினார்.


தேசத்தந்தை காந்தியடிகளுக்குப் பொருளாதாரத் திட்டம், நிர்மாணத் திட்டம், கைத்தொழில் திட்டம் போன்ற பல துறைகளில் அரிய ஆலோசனைகளை வழங்கி அவரால் பாராட்டப்படும் நிலையில் இருந்த நிகரற்ற தமிழர் ஜே.சி. குமரப்பா.


காந்தியடிகளின் நெருங்கிய சகாக்களாக இருந்த அத்தனை தலைவர்களுடனும் தோழமை உணர்வோடு பழகியவர் அவர். ஆனாலும் ஒருபோதும் அவற்றைப் பயன்படுத்திப் பதவி நாடாதவர்.


காந்தியடிகள் எப்படி அதிகாரப் பதவிகள் எதையும் நாடாமல் வாழ்ந்தாரோ, அதைப்போல அவருடைய உண்மையான சீடரான குமரப்பாவும் "என் கடன் பணி செய்து கிடப்பதே' என்ற நாவுக்கரசரின் வாக்குக்கு ஏற்ப வாழ்ந்தார்.


காந்தியடிகளின் மறைவுக்குப் பிறகும் அவர் வழியிலிருந்து கொஞ்சமும் விலகாமல் உறுதியாக நடந்தவர் குமரப்பா. இதன் காரணமாகவே தன்னுடைய பழைய சகாக்களின் புறக்கணிப்புக்கு அவர் ஆளானார். அதைக் குறித்தெல்லாம் அவர் ஒருபோதும் கவலைப்படவில்லை. உண்மையான காந்தியவாதியாக இறுதிவரை வாழ்ந்தார்.


மதுரை மாவட்டம் கல்லுப்பட்டியிலிருந்த காந்தி நிகேதன் ஆசிரமத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்று அருந்தொண்டு புரிந்தார். இறுதியாக சென்னை அரசு மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டபோது வினோபா பாவே, குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத், ராஜாஜி, காமராஜ் போன்ற பல தலைவர்கள் அவரைச் சந்தித்தனர்.


அவருடைய சகா அரியநாயகம், சகோதரர் பரதன் குமரப்பா ஆகியோர் அவர் அருகேயே இருந்தனர். அவருடைய குருநாதர் காந்தியடிகள் மறைந்த அதே நாளான 30-1-1960 அன்று அவர் மறைந்தார்.


காந்தியப் பொருளாதாரத்தை வடிவமைத்த அந்தத் தமிழனின் 50-வது நினைவுநாள்.


யார் யாருக்கெல்லாமோ பிறந்த நாளும், நினைவு நாளும் நடத்தப்படுகிறது. குமரப்பாவைப் பற்றி நினைக்கக் காங்கிரஸ்காரர்களுக்குக்கூட நேரமுமில்லை, மனமுமில்லை.


தமிழன் நன்றி கெட்டவனாக இருக்கலாம். ஆனால், உலகம் அப்படியல்ல. குமரப்பாவின் நிலைத்த பொருளாதாரக் கொள்கையும், அவர் முன்வைத்த மரபுசாரா எரிசக்திக் கொள்கையும் உலகளாவிய சிந்தனையைத் தூண்டியிருக்கிறது.

Best Blogger Gadgets

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக