"பசி என்பது என்ன? உயிர்களுக்குப் பசி என்னும் ஒன்று எதனால் இருக்கிறது?

"பசி என்பது என்ன? உயிர்களுக்குப் பசி என்னும் ஒன்று எதனால் இருக்கிறது? பசியின் காரணமாக, மனிதர்கள் என்னென்ன கொடுமைகளைச் செய்யத் துணிவார்கள்? பசியினால் ஓர் உயிருக்கு உண்டாகும் வேதனைகள் என்னென்ன?" என்று வள்ளலார் ஜீவகாருண்ய ஒழுக்கத்தை வலியுறுத்த, பசியைப் பற்றி அணுஅணுவாக அலசி ஆராய்ந்திருக்கிறார். பசியைப் பற்றிய அவரது கருத்துகள் இங்கே:

பசி என்ற ஒன்று இருப்பதேன்?

பசியில்லாவிட்டால் உணவுக்காக மக்கள் ஒருவரை ஒருவர் எதிர்பார்க்க மாட்டார்கள். அப்படியில்லாதபோது, ஒருவருக்கொருவர் உதவமாட்டார்கள். அப்படி உதவவில்லை என்றால், மனிதநேயம் இல்லாமல் போய்விடும்.

மனிதநேயம் இல்லாவிட்டால், கடவுள் அருள் கிட்டாது. எனவே, கடவுளை அறிய, கடவுளால் நமக்குக் கொடுக்கப்பட்ட ஓர் உதவிக் கருவிதான் பசி! பசி என்பது என்ன?

பசி என்பது, ஏழைகளின் உடலில் பற்றி எரியும் நெருப்பு.

பசி என்பது, ஏழைகளின் அறிவாகிய விளக்கை அணைக்க முயலும் விஷக்காற்று.

பசி என்பது, ஏழைகளின்மேல் பாய்ந்து கொல்லப் பார்க்கும் புலி.

பசி என்பது, உச்சி முதல் பாதம் வரை பாய்ந்து பரவும் விஷம்.

பசி நோயினால் ஏற்படும் கொடுமைகள்!

பசி நோய் என்பது மிகவும் பயங்கரமானது. அந்நோயைத் தீர்த்துக்கொள்ள, மக்கள் எத்தகைய பாவத்தையும் செய்ய அஞ்சமாட்டார்கள்.

பெற்றவர்கள், பிள்ளைகளை விற்பார்கள்.

இதன் விளைவாகப் பிள்ளைகள் அநாதைகளாகத் திரிவார்கள். பிச்சை எடுப்பார்கள். கடின வேலைகளில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

பிள்ளைகள், பெற்றவர்களை விற்பார்கள்.

இதன் விளைவாக, வயதானவர்கள் பரதேசங்களில், பரவீடுகளில் கடின உழைப்பில் ஈடுபட வேண்டியிருக்கும். பிச்சை எடுக்க நேரிடும். முதியோர் இல்லங்களில் தஞ்சம் புகுந்து, கூனிக் குறுக நேரிடும்.

வீடு, மாடு, நிலம், மற்ற உடைமைகள் அனைத்தையும் விற்று, மக்கள் பசிப்பிணியை அகற்றப் பார்ப்பார்கள்.

முனிவர்களையும் யோகிகளையும் சித்தர்களையும்கூடப் பசி தாக்கும். அச்சமயங்களில் அவர்கள் பிச்சை கேட்டு ஊருக்குள் நுழைவார்கள். பிச்சை கிடைக்காவிடில் சித்தம் கலங்குவார்கள்.

எந்நேரமும் காமத்தை விரும்பும் காமுகர்கள்கூடப் பசிப்பிணி தாக்கும்போது, காமம் மறந்து கலங்கு வார்கள்.

பசிப்பிணி தாக்கினால் என்னாகும்?

அறிவு மயங்கும்.

கடவுளைப் பற்றிய நினைப்பு அடியோடு ஒழிந்து போகும்.

சித்தம் கலங்கும்.


நம்பிக்கை குலையும்.

கண் பஞ்சடைந்து குழிந்துபோகும்.

காதில் இரைச்சல் ஏற்படும்.

நாக்கு உலர்ந்துபோகும்.

கை, கால் சோர்ந்து துவளும்.

வார்த்தை குழறும்.

வயிறு திகுதிகுவென எரியும்.

தாபமும் கோபமும் பெருகும்.

உயிர் விலகுவதற்கான அத்தனை அறிகுறிகளும் மேலும் மேலும் தோன்றும்.

நரக வேதனை, ஜனன வேதனை, மரண வேதனை ஆகிய வேதனைகளும் ஒன்றுதிரண்டால் என்ன வேதனை உண்டாகுமோ, அதுவே பசி வேதனை.

பசி அகன்றால் அடையும் ஆனந்தங்கள்!

உணவு கிடைத்து, உண்டு பசியாறியவுடன், பசியால் நேர்ந்த அத்தனை துன்பங்களும் அகலும்.

தத்துவங்கள் மறுபடி தழைக்கும்.

உள்ளம் குளிரும்.

சித்தம் தெளியும். உள்ளேயும் வெளியேயும் உயிர்க்களை உண்டாகும்.

கடவுள் நம்பிக்கை துளிர்க்கும்.

தாய், தந்தை, மனைவி, குழந்தைகள், நிலம், பொன், மணி ஆகியவற்றைக் காணும்போது கொள்ளும் மகிழ்ச்சியைவிட, பசியால் வேதனைப்படுபவர்கள் உணவைக் காணும்போது அதிக மகிழ்ச்சி அடைவார்கள். உணவைக் கண்டவுடனேயே அவ்வளவு மகிழ்ச்சி ஏற்படும் என்றால், அதை உட்கொண்டபின் அடையும் ஆனந்தம் எப்படிப்பட்டதாக இருக்கும்? ஆதலால், உணவைக் கடவுளுக்குச் சமமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.


பிற உயிர்களின் பசியாற்றி, ஒப்பில்லா திருப்தி இன்பத்தை அளிப்பவர்கள் புண்ணியர்கள். இந்தப் புண்ணியத்துக்கு எந்தப் புண்ணியத்தை இணையென்று சொல்ல முடியும்?

இந்தப் புண்ணியத்தைச் செய்கிற புண்ணியர்களை, எந்தத் தெய்வத்துக்கு ஈடாகச் சொல்வது?

இவர்களை, எல்லாத் தெய்வங்களுக்கும் மேலாகிய கடவுளின் அம்சமென்றே சத்தியமாக அறியவேண்டும்.

ஜீவகாருண்யம் கடைப்பிடிப்பதால் வரும் நன்மை!

சூலைநோய், குஷ்டநோய் போன்ற தீராத வியாதிகளால் அவதிப்படும் இல்லறவாசிகள், அந்நோய்களிலிருந்து விடுபடுவார்கள் என்பது சத்தியம்.

பல நாட்கள் குழந்தை பாக்கியம் இல்லாமல் மனவருத்தம் கொண்டவர் களுக்கு, குழந்தை பாக்கியம் உண்டாகும்.

தனக்கு அற்ப ஆயுள் என்றுஜோதிடம் மூலமாகவோ, மருத்துவம் மூலமாகவோ அறிந்து, மரணத்துக்குப் பயந்து கலங்கு கிறவர்களுக்கு ஜீவகாருண்ய ஒழுக்கம் நீண்ட ஆயுளைக் கொடுக்கும்.

கல்வி, அறிவு, செல்வம், போகம் ஆகியவற்றில் குறை உள்ளவர்கள், பசித்த ஏழைகளின் பசியாற்றினால் கல்வி, அறிவு, செல்வம் மற்றும் மகிழ்ச்சியை அளிக்கவல்ல போகங்கள் அனைத்தும் கிட்டும்.

பசித்தவர்களுக்குப் பசியாற்றுவதை விரதமாகக் கொண்ட மக்களுக்குக் கோடையில் வெயில் வருத்தாது. மண்ணும் சூடு செய்யாது. பெருமழை, பெருநெருப்பு, பெருங்காற்று ஆகியவற்றால் துன்பம் உண்டாகாது.

கள்வர்களாலும் விரோதிகளாலும் துன்புறுத்தப்பட மாட்டார்கள்.

அரசாங்கத்தால் அவமதிக்கப்பட மாட்டார்கள். சிறைவாசம் போன்ற கொடுமைகள் நேரிடாது.

வயல்களில் முயற்சி இன்றியே விளைச்சல் பெருகும்.

வியாபாரத்தில் தடையின்றி லாபம் கிடைக்கும்.

ஓட்டுப்போட என்னை அழுத்து


Best Blogger Gadgets

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

படிக்க வந்த நண்பர்களெல்லாம் ஒட்டு போட்டுட்டு போங்களே!!

இந்த இடுகை உங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் வாக்களிக்கவும்.


தமிழ்மணத்தில் ஆதரவு வாக்களிக்க உள்ள கருவிபட்டையில் மேல்நோக்கியுள்ள கைவிரலை சொடுக்கவும்