நேர்முகத்தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கான ஆலோசனைகளையும் கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம்.

நாம் வாழ்வில் எத்தனை எத்தனையோ சவால்களை எதிர்கொள்ள நேரிடுகிறது. அவற்றில் வெற்றி பெறும்பொழுதுதான் நாம் முன்னேற்றமடையவும் முடிகிறது. அத்தகைய சவால்களில் ஒன்றுதான் நேர்முகத்தேர்வு(Interview). நேர்முகத்தேர்வுகளில் பல வகை இருப்பினும், நாம் இங்கு பணிக்கான நேர்முகத்தேர்வுகள் குறித்தும், அதில் வெற்றி பெறுவதற்கான சில ஆலோசனைகளையும் கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம்.

வெற்றி முக்கோணம் (Success Triangle / KSA) என்று ஒன்று நிர்வாகவியலில் உள்ளது. அம்முக்கோணத்தின் மூன்று கூறுகளாக அறிவு (Knowledge), செயல்திறன் (Skill) மற்றும் மனப்பான்மை (Attitude) ஆகியவை குறிப்பிடப்படுகின்றன.(Attitude என்ற சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் மனப்பான்மை என்ற சொல்லே என்றாலும் இங்கு குணநலன் என்ற வார்த்தைதான் மிகப் பொருத்தமாக இருக்கும் என்பதால் நாம் இங்கு அச்சொல்லையே பயன்படுத்தலாம்). இந்த மூன்றும் ஒருசேரப் பயன்படுத்தப் படும்பொழுதுதான் வெற்றி கிட்டுகிறது. நாம் நமது நேர்முகத்தேர்வுக்குத் தயார் செய்து கொள்ளுகையில் இந்த மூன்று தளங்களிலும் நம்மைத் தயார்படுத்திக் கொள்ளுதல் அவசியம். நேர்முகத்தேர்வின் பொழுது என்ன செய்யவேண்டும், நேர்முகத்தேர்வை எப்படி எதிர்கொள்ளவேண்டும் என்று அறிந்து கொண்டு, அதற்கேற்றவாறு நம்மைத் தயார்படுத்திக்கொண்டால் வெற்றி நிச்சயம்.

அறிவினை மேம்படுத்துதல்:

உங்களுக்கு ஒரு நிறுவனத்தில் இருந்து அழைப்பு வந்தவுடன் நீங்கள் அந்த நிறுவனம் குறித்த சில தகவல்களைத் திரட்டுவது முக்கியம். அவர்களது கிளைகள், முக்கியமான தயாரிப்புகள் அல்லது சேவைகள், அவர்களது சமீபகால வியாபாரப் போக்குகள், வணிக ஒப்பந்தங்கள், நிறுவனத்தைத் துவங்கியவர் யார், தற்பொழுது தலைமை வகிப்பவர்கள் மற்றும் நிர்வாகக் குழுவினர் இவை குறித்த செய்திகளை நீங்கள் அறிந்து கொள்வது நீங்கள் கேள்விகளை எதிர்கொள்ளவும் சரியான முறையில் பதில் கொடுக்கவும் உதவும். உதாரணமாக நீங்கள் ஒரு சேவை நிறுவனத்தின் நேர்முகத்தேர்வை எதிர்கொள்ளும்பொழுது 'இந்த நிறுவனத்தில் சேருவது ஏன், உங்கள் குறிக்கோள் என்ன?' என்ற கேள்விக்கு 'பிறருக்கு உதவுவது' என்று கூறினால் பொருத்தமாக இருக்கும். ஒரு வணிக நிறுவனத்தில் அதே கேள்வி கேட்கப்பட்டால் முந்தைய பதில் உதவுமா? 'என் நிறுவனத்தின் வருமானத்தைப் பெருக்குவது, அதன் மூலம் நான் வாழ்வில் உயர்ந்த நிலையை அடைவது , இவையே எனது இலக்கு' என்ற விடைதானே தேர்வாளர்களைக் கவரும்?

அது மட்டுமல்ல, தேர்வாளர்கள் உங்களை அவர்களது நிறுவனம் குறித்த எந்தக் கேள்வியும் கேட்காவிடினும், நீங்கள் சந்தர்ப்பம் கிடைக்கையில் இந்த நிறுவனத்தில் சேர நீங்கள் ஏன் விரும்புகிறீர்கள் என்று கேட்கப்படுகையில் அந்நிறுவனத்தின் சிறப்பியல்புகள் குறித்துக் கூறி 'இத்தகைய நிறுவனத்தில் பணி செய்ய வாய்ப்புக் கிடைத்தால் அதை ஒரு பேறாகக் கருதுவேன்' என்று கூறுவது பலனளிக்கும். அது மட்டுமல்ல, அந்நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்த உங்கள் நேர்மறையான (Positive Comments) கருத்துகளைக் கூறி அதை மேம்படுத்த சில ஆலோசனைகளைக் கூறுவது அல்லது அவை குறித்த சில ஐயப்பாடுகளைத் தெளிவு படுத்திக் கொள்வது தேர்வாளர்களுக்கு உங்கள் மீதான நல்ல மதிப்பீடு ஏற்படவும் உங்கள் உண்மையான ஆர்வத்தை அறிந்துகொள்ளவும் பயன்படும்.

அது மட்டுமல்ல, நீங்கள் எந்தத் துறைக்கான நேர்முகத்தேர்விற்குச் செல்கிறீர்களோ, அத்துறை குறித்த சமீபகால நிகழ்வுகள், அத்துறையில் நடந்த முன்னேற்றங்கள் இவை குறித்து அறிந்து வைத்திருப்பது முக்கியம். உங்கள் கல்வித்தகுதிக்கேற்றவாறு உங்கள் பதில்கள் இருக்க வேண்டும்.

நீங்கள் படிப்பு முடித்து முதன் முதலில் வேலைக்கான நேர்முகத்தேர்விற்குச் செல்பவராக இருப்பின், உங்கள் கல்வி எப்படி அந்த நிறுவனத்திற்குப் பயன்படும் என்பது குறித்த தெளிவான பதிலைத் தயார் செய்து கொள்ளுங்கள். ஒரு பணியில் இருந்து மற்றொரு பணிக்கு விண்ணப்பித்திருந்தாலோ பழைய நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப் பட்டிருந்தாலோ அதற்கேற்றவாறு உங்களைத் தயார் செய்துகொள்ளுங்கள். உங்கள் பழைய நிறுவனத்தில் உங்கள் பணி விவரங்கள், உங்கள் சாதனைகள், உங்கள் அனுபவங்கள் இவை குறித்து பதில் சொல்ல உங்களைத் தயாராக்கிக்கொள்வது முக்கியம்.

உங்கள் செயல் திறனை வெளிப்படுத்துதல்:

நீங்கள் எத்துறை சார்ந்த பணிக்கான நேர்முகத்தேர்விற்குச் செல்கிறீகளோ, அத்துறை குறித்த ஏதாவது ஆய்வினை உங்கள் கல்லூரி அல்லது பள்ளி நாட்களில் மேற்கொண்டிருப்பின் அல்லது திட்டப்பணி (Project Work) அல்லது களப்பணி (Field Work) மேற்கொண்டிருப்பின் அது குறித்த விவரங்கள் அறிக்கைகளை ஒரு முறை புரட்டிப் பார்த்துக் கொள்ளவும்.

தொழில்நுட்பம் தொடர்பான பணிக்குச் செல்வதானால், அத்துறையில் நீங்கள் என்ன கற்றுக்கொண்டிருக்கிறீர்கள் அல்லது என்ன அனுபவம் பெற்றிருக்கிறீர்கள் என்பது குறித்து சுருக்கமாகவும் தெளிவாகவும் கூற உங்களைத் தயார் செய்து கொள்ளவும். அல்லது உங்களால் அப்பணி குறித்து மேற்கொள்ளப் பட்ட ஏதேனும் ஒரு செயல் திட்டத்தைக் காட்டுவது இன்னும் பயன் தரும். உதாரணமாக நீங்கள் ஒரு குறிப்பிட்ட கணிணி மென்பொருளைப் பயன்படுத்தி கணிப்பொறி நிரலைத் (Program) தயார் செய்யும் பணிக்கான நேர்முகத்தேர்விற்குச் செல்வதாக வைத்துக் கொள்வோம். நீங்கள் அந்த மென்பொருளைப் பயன்படுத்தி உருவாக்கிய நிரல் ஏதாவது இருப்பின் அதை எடுத்துச் செல்லலாம். இல்லையெனில் புதிதாக ஒன்றை உருவாக்குவதும் நல்லதே. முடியாத பட்சத்தில் அந்த மென்பொருள் குறித்த உங்கள் பணிகள் உங்கள் அனுபவங்கள் இவற்றை நல்ல முறையில் விளக்கத் தெரிய வேண்டும்.

இன்னொரு உதாரணத்தைப் பார்க்கலாம். நீங்கள் ஒரு நிறுவனத்தில் காரியதரிசியாகச் சேர்வதற்கான நேர்முகத்தேர்விற்குச் செல்கிறீர்கள் எனில் உங்கள் தட்டச்சு வேகமாகவும் தவறின்றியும் இருப்பது முக்கியம். நீங்கள் தட்டச்சு கற்றுக்கொண்டு ஓரிரு பல வருடங்கள் ஆகியிருக்குமானால் இப்பொழுது அது தொடர்பான நேர்முகத்தேர்விற்கு நீங்கள் செல்வதற்கு முன் ஓரிரு நாட்கள் பயிற்சி செய்வது முக்கியம். செயல் திறன் தொடர்பான எந்த நேர்முகத் தேர்வானாலும், அது குறித்த பயிற்சியுடன் செல்வது மிக அவசியம்.

குணநலன்கள் / மனப்பான்மை:

அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆராய்ச்சியில், ஒருவருக்கு வேலை கிடைப்பதில் முக்கியப்பங்கு வகிப்பது அதாவது ஏறத்தாழ 80% அவரது குணநலனே காரணமாகிறது எனவும், அவருடைய அறிவு, செயல் திறன் இவை 20% பங்கு மட்டுமே வகிக்கிறது எனவும் கண்டறியப் பட்டுள்ளது. ஒருவர் பழகும் விதம், தோற்றம், அவரது நேர்மறைச் சிந்தனைகள், தன்னம்பிக்கை, தலைமைப் பண்பு, ஆர்வம், கவனம், குழு மனப்பான்மை, நடவடிக்கைகள் இவை எல்லாமே ஒருவரது மனப்பான்மையின் அடிப்படையில்தான் அமைகின்றன. நீங்கள் எப்படி நேர்முகத் தேர்வை அணுகுகிறீர்கள் என்பது தேர்வாளர்களால் கவனிக்கப்படும். நேர்முகத்தேர்வின் மிக முக்கியமான குறிக்கோள் உங்கள் குணநலன்களைக் கணிப்பதுதான்.

ஓட்டுப்போட என்னை அழுத்து


Best Blogger Gadgets

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

படிக்க வந்த நண்பர்களெல்லாம் ஒட்டு போட்டுட்டு போங்களே!!

இந்த இடுகை உங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் வாக்களிக்கவும்.


தமிழ்மணத்தில் ஆதரவு வாக்களிக்க உள்ள கருவிபட்டையில் மேல்நோக்கியுள்ள கைவிரலை சொடுக்கவும்