நேதாஜி

நேதாஜி (தலைவர்) என்று இந்திய மக்களால் மரியாதையுடன் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் (ஜனவரி 23, 1897 - ஆகஸ்ட் 18 1945) இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவராவார். இரண்டாம் உலகப் போர் சமயத்தில் வெளிநாடுகளில் போர்க் கைதிகளாய் இருந்த நூற்றுக்கணக்கான இந்தியர்களை ஒன்றுதிரட்டி இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி அப்போது இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயர்க்கு எதிராக தாக்குதல் நடத்தியவர்.

இவர் 1945 ஆகஸ்ட் 18 அன்று தைவான் நாட்டில் ஒரு விமான விபத்தில் இறந்து விட்டதாக கருதப்பட்டாலும், அவர் அப்போது இறக்கவில்லை என்பதற்கு பல சான்றுகள் உள்ளன. அவர் ரஷ்யாவிற்கு சென்று 1970களில் இறந்துவிட்டதாகவும், அல்லது ஒரு சன்னியாசியின் வடிவில் வட இந்தியாவில் மறைமுகமாக வாழ்ந்து 1985இல் இறந்து விட்டதாகவும் பல கருத்துக்கள் உள்ளன. 1945 ஆம் வருடம் ஆகஸ்ட் 14 முதல் செப்டம்பர் 20 வரை எந்த விமான விபத்தும் தைவானில் ஏற்படவில்லை என அந்நாட்டு அரசு தெரிவித்திருப்பது போஸ் அவ்வாண்டு இறக்கவில்லை என்ற வாதத்திற்கு வலுவூட்டியுள்ளது. இந்திய அரசால் நியமிக்கப்பட்டு இதைப்பற்றி விசாரித்து வரும் முகர்ஜி கமிஷன், தன் இறுதி அறிக்கையை 2005 நவம்பரில் வெளியிடும் என்று தெரிகிறது.


சுபாஷ் சந்திர போஸ் 1897 ஆம் வருடம் இந்தியாவின் ஒரிசா மாநிலத்தில்லுள்ள கட்டாக் என்ற இடத்தில் பிறந்தார். இவரது தந்தையார் ஜானகிநாத் போஸ். போஸ் ராகின்சேவ் காலேஜ் ஸ்கூல் - கட்டாக், ஸ்காடிஷ் சர்ச் ஸ்கூல், கல்கட்டா மற்றும் பிட்ஷ்வில்லியம் காலேஜ் ஆகிய இடங்களில் படித்தார். 1920 இல் இந்திய மக்கள் சேவை படிப்புக்கான நுழைவுத்தேர்வில் பங்கேற்ற அவர் இந்தியாவிலேயே நான்காவதாக வந்தார். எனினும் ஏப்ரல் 1891 இல் மதிப்புமிக்க இந்திய மக்கள் சேவையிலிருந்து வெளியேறிய அவர் இந்திய சுதந்திர போரட்டத்தில் பங்கேற்றார்.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸை வங்கம் தந்த சிங்கம் என்பார்கள். அவரைத் தந்தது வங்கம் என்றாலும், அவர் பாரதத்துக்கே சொந்தம். அவரது புற வாழ்க்கை சாகசங்களும் மர்மமும் நிறைந்ததுதான். ஆனால், அவரது அக வெளியில் நிறைந்திருந்தது அரவிந்தரும் விவேகானந்தரும் தந்த ஆன்மீக அமைதி. ஓர் ஆசிரியர் அவரைத் தொப்பி அணிந்த துறவி என்று வருணித்தது பொருத்தமே. எளியவர்க்கு இரங்கும் குணமும், “போற்றுபவர் போற்றட்டும், புழுதி வாரித் தூற்றுபவர் தூற்றட்டும், ஏற்றதொரு கருத்தை என் உள்ளம் என்றால் எடுத்துரைப்பேன் எவர் வரினும் நில்லேன் அஞ்சேன்” என்ற கண்ணதாசன் கவிதை வரிகளுக்கு இலக்கியமான அச்சமின்மையும் அவரோடு கூடப் பிறந்தவை.

அவரது வாழ்க்கை இந்திய சுதந்திரப் போராட்டத்தோடு பின்னிப் பிணைந்ததுதான். எனினும், தமது மெய்த்துணிவு காரணமாக, பிரதான நீரோட்டத்திலிருந்து பிரிந்து சென்று தமக்கென்று ஒரு தனிப் பாதையை வகுத்துக்கொண்டு, தலைமை தாங்கி நடத்தத் துணிந்த காவிய நாயகன் நம் நேதாஜி.

பரபரப்பான அவரது வாழ்க்கை படிக்கப் படிக்கச் சுவை குன்றாதது. இந்தப் படைப்பில் அவரது வரலாற்றினைக் கதை போலச் சொல்லுவதுடன் நில்லாமல், கடிதங்கள், உரைகள், உரையாடல்கள், மற்றும் முற்றுப்பெறாத அவரது சுய சரிதை மூலம் அவர் வெளிப்படுத்தியிருக்கும் அவரது ஆழ்ந்த மனச் சிந்தனைகளையும் கொண்டு வர முயல்கிறோம். அது மட்டும் இல்லாமல், அவர் வாழ்ந்த காலக்கட்டத்தில் நிகழ்ந்த சுதந்திரப் போராட்ட விவரங்களையும் ஓரளவு கொண்டு வர உத்தேசித்துள்ளோம்.

சுக்கைப்போல, மிளகைப் போல, சும்மா பெறவில்லை நாம் இந்த சுதந்திரத்தை என்ற பிரக்ஞையையும், நாட்டின் மேன்மைக்காக எந்தத் தியாகத்தையும் மேற்கொள்ளும் துணிவையும் இளைஞர்கள் மத்தியில் ஓரளவாவது சிலிர்த்தெழ வைக்க முடியுமானால் இந்த வீர வரலாற்றை எழுத முனைந்தது பயனுள்ளது என்றே கருதுவோம்.

பிறப்பும் குடும்பப் பின்னணியும்

1897 ஜனவரி 23 சனிக்கிழமை. துந்துபிகள் முழங்கவில்லை. வீணைத் தந்திகள் தாமாக இசைக்கவில்லை. வானிலிருந்து ஒரு நட்சத்திரம் கீழிறங்கவில்லை. “வானத்து அமரன் இங்கு வந்தான்காண்" என்று குதூகலிக்க எந்த அறிகுறியும் இல்லை. கட்டாக்கைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜானகிநாத போசுக்கும் பிரபாவதி தேவிக்கும் ஒன்பதாவதாகப் பிறந்த குழந்தையே சுபாஷ் சந்திரன். ஆண் குழந்தைகளில் இவர் ஆறாவது. அவரது பெற்றோருக்கு மொத்தம் 14 குழந்தைகள். குழந்தைகள் அதிகம் என்பது மட்டுமல்லாமல், சித்தப்பா, மாமா போன்றோர் குடும்பங்களும் இணைந்த கூட்டுக்குடும்பமே அது. இதைத் தவிர, ஆடு, மாடு, கோழி, குருவி, மயில், குதிரை, கீரிப்பிள்ளை எல்லாம் நிறைந்த வசுதைவ குடும்பம் அவரது. காக்கை குருவி எங்கள் ஜாதி என்றது இவர் குடும்பத்துக்கு சரியாகவே பொருந்தும். இப்படி இருக்கையில் எப்படி அந்தக் குடும்பத்தில் ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக் கவனம் செலுத்த முடியும்? சுபாஷை முழுக்க முழுக்க கவனித்துக்கொண்டது சாரதா என்ற ஆயாதான். ராஜா என்று கூப்பிட்டு அவரை அன்பாகப் பார்த்துக்கொள்வார். இந்த நிலைமை பற்றி சுபாஷ் என்ன சொல்கிறார்?

“பெற்றோர் என் மீது அதிக அன்பு காட்ட முடியாமல் போனது அதிருஷ்டமாயிற்று. என் எதிர்காலத்துக்கு அதுவே நல்ல ஆரம்பமாயிற்று. இதனால்தான், நான் தூயவனானேன். சமுதாயத்துக்குச் சோம்பலின்றி உழைக்கும் ஊழியன் ஆனேன் என்றாலும், மனம் விட்டுப் பலரோடு கலகலப்பாகப் பழகும் பெரிய குடும்பத்தில் பிறந்திருந்தும் கூச்ச சுபாவம் என்னை விட்டு அகலவில்லை” என்று சுபாஷ் கூறிக்கொள்கிறார்.

சுபாஷ் போசின் பரம்பரை பெருமைப்பட்டுக் கொள்ளத் தக்க பரம்பரையே. அவரது தாத்தா ஹரநாத போஸ் துர்க்கைக்கு ஆடு வெட்டி பலியிட்டு திருவிழா நடத்தும் குறிப்பிட்ட வைணவப் பரம்பரையை சேர்ந்தவராயிருந்தும் அந்தப் பழக்கத்தையே அடியோடு நிறுத்தியவர். சுபாஷின் தந்தை ஜானகிநாத் வழக்கறிஞர், கல்லூரிப் பேராசிரியர் பணிகளை மேற்கொண்டிருக்கிறார். பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் ராவ் பஹதூர் பட்டம் பெற்றவர். 1930 ல் அரசாங்கத்தின் அடக்குமுறையைக் கண்டித்து அந்தப் பட்டத்தைத் துறந்தார்.

கிராம சேவை, கல்விப்பணி இரண்டிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். 1921ல் ஒத்துழையாமை இயக்கம் நடந்த போது காந்தியடிகளின் காதி, தேசிய கல்வித் திட்டம் இவற்றின் மேம்பாட்டுக்காகத் தமது ஒத்துழைப்பை நல்கினார். தமது தாயாரைப் பற்றி சுபாஷ் சொல்வது: “குறிப்பிடத்தக்க பெண்மணி. உறுதியான மனமும், காரிய சாத்தியமான அனுபவமும் எவரும் மரியாதை காட்டும் பண்பும் என் தாயிடம் நிரம்பவே உண்டு.”


ஒரு இந்திய யாத்திரிகனின் சில சிந்தனைகள்

சுபாஷின் இளமைப்பருவம் பற்றி நாம் தெரிந்துகொள்ள உதவுவது முற்றுப்பெறாத அவரது சுய சரிதைதான். இதன் தலைப்பு, “ஒருஇந்திய யாத்திரிகன்”. இதனைத் தமிழில் சக்திமோஹன் என்பவர் அழகாக மொழிபெயர்த்திருக்கிறார். இந்த சுய சரிதத்தில் அவர் இந்தியா அடிமைப்பட்டு நிலைகுலைந்து போனதன் காரணங்களைப்பற்றி சிந்தித்து எழுதியுள்ளார்.

‘பிரிட்டிஷ் ஆட்சி இந்த நாட்டில் அடியிட்டதன் காரணம் அவர்களது சொந்த சக்தியோ, சாதுர்யமோ அல்ல. நமது நாட்டுப் பங்காளிகளில் சிலர் ஒத்துழைத்ததால்தான் அந்த ஆட்சி அமைந்தது என்பதை யாரும் எந்தச் சந்தர்ப்பத்திலும் மறந்துவிடக்கூடாது. இப்படித் தனது ஆட்சியை இந்தியாவில் நிறுவிய பிரிட்டன் இந்துக்களையும் முஸ்லிம்களையும் வேறு வேறாக்கி தனது ஆட்சி வளர வழி ஏற்படுத்திக்கொண்டது. இத்தகைய இழிநிலைக்குக் காரணம் பிரிட்டனின் சக்தியா, நமது ஆராயும் திறனை நாம் பயன்படுத்தத் தவறியதா என்பதை ஒவ்வொருவரும் தங்களைத் தாங்களே கேட்டுக்கொள்ள வேண்டும்’ என்று அவர் எழுதுகிறார்.

வங்கப் பிரிவினை

சுபாஷுக்கு எட்டு வயதே ஆகியிருந்தபோது - 1905 ல் வங்கப் பிரிவினை காரணமாக, நாட்டில் பெரியதொரு எழுச்சி ஏற்பட்டது. வங்காளம் அந்தக் காலத்தில் ஒரிஸாவையும் பீஹாரையும் உள்ளடக்கிய பெரியதொரு மாகாணமாக இருந்தது. திறமையான நிர்வாக வசதி என்று காரணம் சொல்லி கல்கத்தாவின் ஆதிக்கத்தில் இருந்த கிழக்கு மாநிலங்களைப் பிரிப்பது என்று வைஸ்ராய் கர்ஸன் பிரபு முடிவு செய்து விட்டார். 1905 அக்டோபர் 16ம் தேதி இந்தப் பிரிவினை அமலுக்கு வந்துவிட்டது. கர்ஸன் பிரபு சொன்ன காரணத்தை வங்க மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. கிழக்கு வங்காளத்தில் இருந்த முஸ்லிம்களையும், மேற்கு வங்காளத்தில் இருந்த இந்துக்களையும் பிரிக்க முயல்வதே உள்நோக்கம் என்று இரு மதத்தினரும் நம்பினார்கள். வங்க மக்களை அடக்கி ஒடுக்குவதற்கான இந்த முயற்சியைக் கண்டித்து வங்கமே திரண்டது. இந்துக்களும் முஸ்லிம்களும் ஒன்றிணைந்து கல்கத்தா வீதிகளில் வந்தே மாதரம் என்று கோஷித்தபடி ஊர்வலம் வந்தார்கள். இந்தியா முழுவதுமே இந்தப் போரில் கலந்துகொண்டது. 1905 காசி காங்கிரஸுக்குத் தலைமை வகித்த கோகலே, “தேசிய உணர்ச்சியை நம்மவர்களிடையே எழுப்ப கர்ஸன் பெரும் உதவி செய்திருக்கிறார்” என்றார். இந்த வங்கப் பிரிவினையைப் பற்றி எழுதுகையில் அரசியலில் ஈடுபடும் ஒருவன் மேற்கொள்ளவேண்டிய நெறிகளைப் பற்றி சுபாஷ் எழுதிச் சொல்கிறார். “அரசியலுக்குத் தன்னை அர்ப்பணிக்க வேண்டும் என எண்ணுகிற ஒருவன், முதலில் தன்னைத் தூய்மைப்படுத்தி எந்தவிதக் கொடுமைகளையும் தாங்கிக் கொள்கிற சக்தியையும் மனத் திண்மையையும் திரட்டிக்கொள்ள வேண்டும். ஏனென்றால் அரசியலில் அந்த அளவுக்குப் புனிதத் தன்மை கலந்திருக்கிறது. அரசியலைக் கடைசி வரை தியாக நோக்கோடு வகிக்க வேண்டுமானால் மனதை ஒருங்குபடுத்தி போக்கை நெறிப்படுத்திக்கொள்ள வேண்டும். தனது வாழ்க்கையில் ஏதேனும் ஒரு கொள்கையை அனுசரிக்க வேண்டும் என்று விரும்பினால் கடைசிவரை அதையே வழுவாமல் தொடர வேண்டும். இடையில் ஏற்படும் இன்னல்களுக்காக கொண்ட கொள்கையை இடையிலே துவள விடக்கூடாது.” சுபாஷ் தமது பிற்கால வாழ்க்கையில் கைக்கொண்ட செயல்பாடுகள் அவர் வகுத்துக்கொண்ட நெறிமுறைக்கு ஒத்துவருவதை உரிய சந்தர்ப்பத்தில் காண்போம்.

ஆரம்பக்கல்வி

1902 ல் சுபாஷின் பள்ளிப் படிப்பு தொடங்கியது. அவரது வாழ்க்கையே ஒரு போராட்டக் களமாக இருக்கப் போகிறது என்பதன் முன் அறிவிப்பாகவோ என்னவோ பள்ளிக்குக் கிளம்பிய முதல் நாளே அவருக்கு விபத்தும் ரத்தக்காயமும் ஏற்பட்டன. வண்டியில் ஏறப்போன தருணம். வண்டி புறப்பட்டு விட்டது. தலை குப்புற விழுந்து இரண்டு நாள் படுத்த படுக்கை. மூன்றாம் நாளே பள்ளிக்குச் செல்ல முடிந்தது.

ஆங்கிலக் கல்வியை பாரதியார் "அல்லல் மிக்கதோர் மண்படு கல்வி" என்பார். "சூதிலாத உளத்தினன் எந்தைதான் சூழ்ந்தெனக்கு நலன் செய நாடியே" ஆங்கிலப் பள்ளியில் சேர்த்ததாக பாரதி சொல்லுவார். இதே நிலைதான் சுபாஷுக்கும். ஆங்கிலம் படித்தவர்களுக்குத் தனியரு மதிப்பும் மரியாதையும் இருந்தது அந்த நாளில் (நாளிலும்?). சுபாஷ் சேர்ந்த பாப்டிஸ்ட் மிஷன் பள்ளியில் கல்வி ஆங்கில வழிதான். வங்காளி ஒரு பாடமாகக் கூடக் கிடையாது. அந்தப் பள்ளியில் சேர்க்கை ஐரோப்பியர்களுக்கும் ஆங்கிலோ இந்தியர்களுக்கும் மட்டும்தான். இடம் இருந்தால் 15%க்கு மேற்படாமல் இந்தியக் குழந்தைகளைச் சேர்த்துக்கொள்வார்கள். இந்திய மாணவர்கள் பாரபட்சமாகவே அந்தப் பள்ளியில் நடத்தப்பட்டார்கள். அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தால் கூட அவர்களுக்கு உபகாரச் சம்பளம் பெறும் தகுதிக்கான பரீட்சை எழுத அனுமதி கிடையாது. தொண்டர் படையணி, துப்பாக்கிப் பயிற்சி இந்திய மாணவர்களுக்குக் கிடையாது.

இந்தியாவில் இந்தியப் பணத்தைக் கொண்டு நடக்கும் இத்தகைய பள்ளிகளில் இப்படி பாரபட்சமாக நடந்துகொள்வது நாடெங்கும் ஒரு எழுச்சியை ஏற்படுத்தத்தான் செய்தது. தாய்மொழி பயிலவேண்டும் என்றதொரு தாகமும் விழிப்புணர்ச்சியும் ஏற்பட்டன. இதன் விளைவாக கல்கத்தா பல்கலைக்கழகத்தில் மெட்ரிக்குலேஷன், இண்டர்மீடியட், பட்டப் படிப்புகளுக்கு வங்காளப்பாடம் கட்டாயமாக்கப்பட்டது. இதுவே சுபாஷுக்கு நல்ல வாய்ப்பாக அமைந்தது. வங்காளி மொழி கற்றுக்கொள்ளும் அவசியத்துக்காக, பெற்றோர்கள் அவரை 1909ம் ஆண்டு கட்டாக்கிலுள்ள ராவென்ஷா பள்ளியில் சேர்த்தார்கள்.

மிஷன் பள்ளியில் சுபாஷுக்கு நண்பர்கள் யாரும் கிடையாது. ஏழாண்டுகள் பயின்ற பள்ளியை விட்டுப் போனதில் தமக்கு எந்த விதப் பிரிவாற்றாமையும் தோன்றவில்லை என்கிறார் சுபாஷ். மிஷனரிப் பள்ளியில் தமது அன்புக்கும் மரியாதைக்கும் உரியவராகி இருந்த ஒரே ஆசிரியை என்று சாரா லாரென்ஸ் என்பவரைக் குறிப்பிடுகிறார் அவர். குழந்தைகளின் மனதறிந்து, அவரவர் திறமையைக் கண்டுபிடித்து அதற்கேற்ப பாடம் போதிப்பதில் வல்லவர் அந்தப் பெண்மணி.

புதிய சூழ்நிலை

ஆங்கிலப் பள்ளியில் படித்திருந்தது காரணமாகப் பெற்றிருந்த சிறந்த ஆங்கிலத் திறமை அவருக்கு நல்ல மதிப்பைப் பெற்றுத் தந்தது. ஆனால், வங்காளி மொழியிலோ அவரது அறிவு ஏறத்தாழ பூஜ்யம். அந்தப் பள்ளி மாணவர்களோ பெரும் திறமை பெற்று விளங்கினார்கள். சுபாஷ் வெட்கப்பட்டு வேதனைப் படும்படியான ஒரு சம்பவம் நடந்தது. வங்காள மொழியில் பசு என்பது பற்றி ஒரு கட்டுரை வரையச் சொல்லி ஒரு தேர்வு. வரைந்து தள்ளினார் நம் சுபாஷ் தமக்குத் தெரிந்த தாய்மொழியில். ஆசிரியர் அதை வகுப்பில் படித்துக்காட்ட வகுப்பு முழுதும் ஒரே சிரிப்பு. வெட்கித் தலைகுனிந்தார் சுபாஷ். அந்த நிமிஷமே ஒரு உறுதி எடுத்துக்கொண்டார். சில வாரங்கள் இரவு பகலாகத் தீவிரமாகப் படித்து வங்காள மொழியின் அடிப்படைகளைத் தெரிந்துகொண்டு விட்டார். விரைவிலேயே, மொழியில் மற்றவர்களுக்கு ஈடான தேர்ச்சி பெற்று விட்டார். இது மாணவர்கள், ஆசிரியர்கள் மத்தியில் இவருக்கு நன்மதிப்பைப் பெற்றுத் தந்தது.

படிப்பில் சூரராக இருந்த சுபாஷுக்கு விளையாட்டில் ஈடுபாடு இல்லை. அவரது ஆர்வமெல்லாம் இயற்கை எழிலில் லயித்திருப்பதிலும், தோட்ட வேலையிலும்தான். இவற்றுக்கான சூழ்நிலையும் வாய்ப்பும் அவரது வீட்டில் நிறையவே இருந்தன.

வேணி மாதவதாஸ்

ராவென்ஷா பள்ளியில் சுபாஷைக் கவர்ந்தவர் தலைமை ஆசிரியர் வேணி மாதவதாஸ். பார்த்தவர்களைப் பாசத்தோடு வணங்க வைக்கும் அவரது தோற்றப் பொலிவு சுபாஷைப் பெரிதும் ஈர்த்தது. தமது எதிர்கால லட்சியத்துக்கும் ஒழுக்கம் நிறைந்த வாழ்வுக்கும் ஆதர்ச புருஷராக அவரை மானசீகமாக ஏற்றுக்கொண்டார். அவரிடம் பயின்ற மாணவர்கள் உதவாக்கரையாகப் போகவே முடியாது என்ற அளவுக்கு தெய்வீக சக்தி படைத்தவராக அவரைக் கருதினார். அவரது வகுப்புகளை ஆவலுடன் எதிர்நோக்குவார். அவர் மாற்றலாகிப் போனபோது பீறிட்டு வந்த அழுகையை சுபாஷால் அடக்கவே முடியவில்லை. தாசுக்கும் ஏறத்தாழ அதே நிலைதான். நெடுநாளைக்கு இருவரும் கடிதப் போக்குவரத்து வைத்துக் கொண்டிருந்தார்கள். புதிய சிந்தனைகளுடன், எதிர்காலத்தின் ஏற்றமிகு குடிமகனாக வருவதற்கான ஆலோசனைகளையும், உந்துதல்களையும் தாராளமாக வழங்கி வந்தார் தாஸ். இயற்கையை விரும்பித் துதிப்பதன்மூலம் வாழ்க்கைக்கு வேண்டிய அளவு தூய நெறியைப் பெறலாம் என்பது சுபாஷுக்கு அவர் வழங்கிய அறிவுரைகளில் ஒன்று.

பிஞ்சு மனத்தின் தவிப்பு

குறிக்கோள் நிர்ணயம், சுய முன்னேற்றம், மோட்டிவேஷன் என்றெல்லாம் சொல்பவர்கள், சில நேரங்களில் கொஞ்சம் மிகையாகவே செய்து விடுவதாகத் தோன்றுகிறது. சுபாஷின் பள்ளியில் ஒரு பயிற்சி கொடுத்தார்கள் "எதிர்காலத்தில் நீ என்னவாக விரும்புகிறாய்?" இது பற்றி விரிவாக எழுத வேண்டும். இந்தக் கட்டுரை, போட்டிக்கானது. சுபாஷுக்கு ஒன்றும் தோன்றவில்லை. ஏதோ நீதிபதியாவது என் குறிக்கோள் என்று எழுதிவிட்டார். பிற்பாடு அவர் சொல்கிறார்: " பத்து வயதில் ஒரு குழந்தைக்கு இது பற்றி எல்லாம் எப்படி யோசிக்கத்தெரியும்?" யோசிக்க யோசிக்க சுபாஷுக்கு ஒரே குழப்பமாகவே இருந்திருக்கிறது. நீதிபதியாக வேண்டும் என்பது ஆசை. அது எப்படி லட்சியமாகும்? இது குறித்து சுபாஷ் சொல்வது: "விவரம் அறியாப் பருவத்தில் பெரிய பிரச்னை பற்றிக் கேட்டால் இப்படித்தான் நிகழும். லட்சியத்தின் பல பரிமாணங்களையும் அளவிடத் தெரிந்த வயது வரும்போதுதான் தனி மனிதனின் சுயநல ஆசைக்கும், சேவை மனப்பான்மையுள்ள லட்சியத்துக்கும் உள்ள வித்தியாசம் தெரிய வரும்."

வாழ்க்கையில் பிடிப்புப் பெற ஒரு லட்சியம் வேண்டும். அது மட்டுமல்லாமல், என்ன இடையூறு வந்தாலும், லட்சியத்தை விட்டு விலகாமல் இருக்கும் மன உறுதி வேண்டும். (சுபாஷின் இந்த இளவயது சிந்தனைகள்தாம், பிற்காலத்தில் அவரது பல செயல்பாடுகளுக்கும் ஆதாரமாக அமைந்தன என்பதைப் பின்னால் பார்க்கப் போகிறோம்.)

ஏதாவது ஒரு லட்சியத்துடன்தான் வாழவேண்டும் என்பது சுபாஷுக்குப் பிடிபட்டுவிட்டது. என்ன லட்சியத்தைக் கைக்கொள்வது என்பதில்தான் குழப்பம். வேணி மாதவதாஸ் சொல்வது போல, இயற்கையைத் துதிப்பதும், அனுபவிப்பதும் மனத்துக்கு இதமாகவும் இனிமையாகவும் இருக்கும். மனத்தைத் தூய்மைப்படுத்தும். என்றாலும் அது எப்படி வாழ்க்கையின் லட்சியம் ஆகும்?

இப்படியே சிந்தனை வயப்பட்டிருந்ததால் அவரது முகமே ஒரு சிந்தனைப் பட்டறை ஆகிவிட்டதாம். சொல்கிறார் அவர்!

ஒளி கிடைத்தது; வழி தெரிந்தது!

நெஞ்சில் வேட்கை மட்டும் தீவிரமாக - தண்ணீரில் மூழ்கியவன் வெளியே வரத் தவிப்பது போல - இருந்தால் வழி தானாகக் கிடைக்கும் என்பார்கள். உண்மைதான். தவித்துக் கொண்டிருந்த சுபாஷின் வழியில் விவேகானந்தர் வந்து சேர்ந்தார். உறவினர் வீட்டு அலமாரியிலிருந்து அவர் எதிர்ப்பட்டார். யதேச்சையாகக் கிடைத்த புத்தகத்தில் அவர் கண்ணில் பட்ட சில வரிகள் சுபாஷைப் பிரமிக்க வைத்தன. தமது பிரச்சினைக்கு தீர்வு அந்த புரட்சித் துறவியிடம்தான் இருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டார். மனிதனின் இயல்பு தெய்வீகமானது, அந்த தெய்வீகத்தை வெளிப்படுத்துவதே குறிக்கோள். அறையில் உட்கார்ந்து கொண்டு கீதை படித்துக் கொண்டிருப்பதைக் காட்டிலும், வறியவர்க்கு சேவை செய்வதே மேலானது. ஒரு நாய் பசித்திருந்தால் கூட, நாம் ஆன்மீகம் பேசிக்கொண்டிருப்பதில் எந்தப் பயனும் இல்லை. ஏழை இந்தியன், பிராமண இந்தியன், தாழ்த்தப்பட்ட இந்தியன் எல்லாருமே என் உயிரில் கலந்தவர்கள் என்று முழங்கு. தரித்திர நாராயணனுக்கு செய்யும் சேவையே இறைவனுக்குச் செய்யும் சேவை என்பதை உணர்.

இப்படியெல்லாமா ஒரு சாமியார் சொல்லுவார்? படிக்கப் படிக்க அதிசயமாயிற்று சுபாஷுக்கு. விவேகானந்தரின் மொத்தக் கருத்துகளையும் படித்து முடித்ததும், தானாகவே ஒரு வெளிச்சம் கிட்டிவிட்டது. அவரது அத்தனை போதனைகளின் சாராம்சமும், எளியவர்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பது தெளிவாயிற்று. அதுவே தமது வாழ்க்கையின் லட்சியம் என்று புரிந்துகொண்டார் சுபாஷ்.

பதினைந்தாவது வயதில், வீரத்துறவியின் பாதைக்கு வந்து விட்டார், நமது காவிய நாயகன். விவேகானந்தரின் வழியாக, அவரது குருநாதர் ராமகிருஷ்ண பரமஹம்ஸரிடமும் ஈர்க்கப்பட்டார். ராமகிருஷ்ண பரமஹம்ஸர் எழுதப்படிக்கத் தெரியாதவர். அவர் எதையும் எழுதி வைக்கவில்லை. என்றாலும் அவரது வாழ்க்கையே அவரது செய்தி. பரமஹம்ஸரிடமிருந்து என்ன கற்றுக் கொண்டார் சுபாஷ்? ஒழுக்க நெறி தவறி நடப்பவர்கள் என்னதான் படிப்பாளிகளாய் இருந்தாலும், பதவி வகிப்பவர்களாய் இருந்தாலும் பயனற்றவர்கள். ஒழுக்கமுள்ளவனே முடிந்த அளவுக்கு நல்லவர்களை உருவாக்க முடியும். இதுவே ராமகிருஷ்ண பரமஹம்ஸரிடமிருந்து தாம் கற்றுக்கொண்ட பாடம் என்று சுபாஷ் சொல்கிறார்.

இந்தக் காலகட்டத்தில் சுபாஷுடன் சேர்ந்து ஒரு சத்சங்கமே உருவாகி விட்டது. விவேகானந்தர், ராமகிருஷ்ணரின், போதனைகளைப் படிப்பது, விவாதிப்பது, இப்படி ஒரு அருள்நெறித் திருக்கூட்டமாக அமைந்து விட்டது அவரது நண்பர் குழாம். ஆரம்பத்தில் எள்ளி நகையாடியவர்கள்கூட, அவருடன் சேர்ந்து கொண்டார்கள். அல்லது வியந்து பாராட்ட ஆரம்பித்தார்கள். நடத்தை, பண்பாடு இவை காரணமாக, பள்ளியில் சக மாணவர்களிடமும், ஆசிரியர்களிடமும் இவர்களுக்கு நல்ல மதிப்பு.

ஆனால், வீட்டிலோ இதற்கு எதிர்ப்பு அதிகமாகி விட்டது. சகவாசங்களை விட்டு விட வேண்டும், அடிக்கடி வெளியில் செல்லக் கூடாது' என்றெல்லாம் ஆணையிடத் தொடங்கினார்கள். குடும்பப் பெரியவர்களின் பயம் சுபாஷ் கெட்ட வழியில் சென்று விடுவார் என்பதல்ல, உடம்பைக் கெடுத்துக் கொள்வார், படிப்பைக் கோட்டை விட்டுவிடுவார் என்பதே. அவரைப் பெரிய பதவியில் வைத்துக் காணவேண்டும் என்பதல்லவா அவர்களது கனவு?
சுபாஷுக்கோ மேற்கொண்ட லட்சியத்தில் உறுதி குலையவில்லை. வீட்டில் இருந்தால்தானே இந்தக் கட்டுப்பாடு? வீட்டை விட்டு எப்போது வெளியேறுவது என்று உரிய சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்.

யோக நிஷ்டை

யோகத்திலும் அவருக்கு ஈடுபாடு ஏற்பட்டது. தக்க குரு கிடைக்காததால், புத்தகத்தைப் படித்துவிட்டு யோகம் பயில ஆரம்பித்து விட்டார். ஒரு சமயம் ஒரு வேடிக்கையான நிகழ்ச்சி நடந்தது. இரவு தனி அறையில் யோகநிஷ்டையில் அமர்ந்துவிட்டார். வீட்டுப் பணிப்பெண் இவர் நிஷ்டையில் இருப்பது தெரியாமல், இவர் மேல் படுக்கையை விரித்துவிட்டார். தட்டுவதற்காகத் தலையணையை எடுத்தபோது, ஏதோ உடம்பு தட்டுப்படவே, அலறியடித்துக் கொண்டு வெளியேற, குடும்பம் முழுதும் திரண்டு விட்டது. அப்படியும் ஸ்வாமி நிஷ்டை கலைந்து எழுந்திருக்கவே இல்லை. இது நெடுநாள் வரைக்கும் ஒரு குடும்ப நகைச்சுவை ஆகிவிட்டது.

குரு சொன்னதை அப்படியே..

குரு இல்லாத யோகப்பயிற்சிதான் விபரீதம் தந்தது. குரு தேடும் படலம் ஆரம்பம் ஆயிற்று. கட்டாக்குக்கு 90 வயது சாமியார் ஒருவர் வந்தார். பெரிய மனிதர் ஒருவர் வீட்டில் தங்கியிருந்து உபதேசங்கள் செய்தார். அவர் அளித்தது மூன்று போதனைகள். 1) புலால் உண்ணாமை. 2) தினசரி பஜனை; இது இரண்டிலும் சிக்கல் எதுவும் இல்லை. மூன்றாவதுதான் கொஞ்சம் வித்தியாசமானது. தினமும் காலையில் எழுந்ததும் பெற்றோரைத் துதித்து அவர்கள் எதிரில் நின்று தியானம் செய்து விட்டே வேறு வேலைகளைக் கவனிக்கவேண்டும். தயங்காமல் இந்த வேடிக்கையை ஆரம்பித்துவிட்டார். பெற்றோர்களுக்கு இது வியப்பாக இருந்தது. அப்பா தூங்கிக் கொண்டிருந்தாலும், படித்துக் கொண்டிருந்தாலும், கவலையே படாமல், நமஸ்கரித்து தியானம் செய்து விட்டுத்தான் போவார் சுபாஷ். என்ன சுபாஷ் இதெல்லாம்? என்று தந்தை ஒரு முறை கேட்டார். சுபாஷ் பதில் சொன்னால்தானே? ஏதோ சாமியார் உபதேசம் என்று பெற்றோர்களும் விட்டு விட்டார்கள்.

கிராம சேவையும் அரசியலும்

16 வது வயதில் கிராம முன்னேற்ற வேலைகளில் ஈடுபடுவது என்று தீர்மானித்துக் கொண்டு ஒரு கிராமத்துக்கு நண்பர்களுடன் போனார். பிள்ளைகளை அழைத்து வைத்துக்கொண்டு பாடம் கற்பித்தார். நல்ல வரவேற்பு. அடுத்த கிராமத்திலோ படு ஏமாற்றம். இவர்களைப் பார்த்தவுடனே கிராம மக்கள் எல்லாம் ஓடி ஒளிந்து கொண்டு விட்டார்கள். புதிதாக யாராவது நல்ல உடை உடுத்துக்கொண்டு கிராமத்துக்குப் போனால், அரசாங்க அதிகாரிகள் வரிவசூல் செய்ய, அல்லது வேறு ஏதாவது காரணமாக வந்திருக்கிறார்கள் என்று எண்ணி ஓடி ஒளிவது அந்தக் காலத்து வழக்கமாம். பாரதியார் தான் பாடி வைத்திருக்கிறாரே,
"சிப்பாயைக் கண்டஞ்சுவார், ஊர்ச் சேவகன் வருதல் கண்டு மனம் பதைப்பார்... நெஞ்சு பொறுக்குதில்லையே.." என்று? அடிமை நாட்டில் அதுதான் நிலை.

1912 ல் கல்கத்தாவிலிருந்து கட்டாக்குக்கு ஓர் அரசியல் இயக்கத்தைச் சார்ந்த மாணவன் ஒருவன் வந்திருந்தான். அவனோடு தொடர்பு கொண்டு பல ஆண்டுகள் கடிதப் போக்குவரத்து வைத்திருந்தார் சுபாஷ். இதுதான் அவரது முதல் அரசியல் நுழைவு என்று சொல்லலாம் போல..

பெற்றோருக்கு இன்ப அதிர்ச்சி..

மெட்ரிகுலேஷன் தேர்வில் சுபாஷாவது, தேறுவதாவது என்றுதான் பெற்றோர் நினைத்துக்கொண்டிருந்தார்கள். பேப்பரில் முடிவுகள் வந்ததும், மூன்றாம் வகுப்பில் அவர் நம்பரைப் பார்த்து இல்லாமல் போகவே தோல்வி என்றே முடிவுகட்டி விட்டார்கள். ஆனால், அவர் தேறியுள்ளதோ, முதல் வகுப்பில், மாகாணத்தில் இரண்டாவதாக என்று தெரிந்தபோது அவர்களுக்கு அதிர்ச்சியோ அதிர்ச்சி. இன்ப அதிர்ச்சி. இந்த சந்தோஷத்தில் அவருக்கு வெகுமதியாக கல்கத்தாவுக்கு விடுமுறைக்கு அனுப்பிவைத்தார்கள்

உள்நோக்கிய பயணம்

விடுமுறைக்காக கல்கத்தா வந்த சுபாஷ் 1913ம் வருஷம், பதினாறாவது வயதில் பிரசிடென்சி கல்லூரியில் சேர்ந்தார். இந்தச் செய்தியைச் சொல்லிவிட்டுக் கதையை முன்னோக்கிச் செலுத்துவது வரலாறு என்ற அளவில் போதுமானது. எனினும், சுபாஷ் தாம் கல்லூரியில் சேர்ந்ததைச் சொல்லுவதற்கு முன்னால் தமது பல சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்கிறார். அவற்றையெல்லாம் இங்கு சுருக்கமாகவாவது குறிப்பிடுவது, புறவாழ்வில் பல சாகசங்கள் புரிந்த அவரது அக வாழ்வை- உள்நோக்கிய பயணத்தைப் -புரிந்துகொள்ள உதவும்.

விடுமுறைக்காக கல்கத்தா வந்த சுபாஷ், கடைசிவரை, தமக்கு அந்த நகரத்துடன் தொடர்பு நீடிக்கும் என்று அந்த சமயம் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. பலவகைக் கேளிக்கைகளும், அதிசயங்களும் நிறைந்த ஊர் கல்கத்தா. திட்டவட்டமான கொள்கைப் பிடிப்பு இல்லாமல் துவளும் மனோபாவம் கொண்டவராகத் தாம் இருந்திருந்தால், திசை மாறிப் போயிருப்போம் என்று சுபாஷ் குறிப்பிடுகிறார்.

அவரது லட்சியம் மனிதகுல சேவை. அதன் அடிப்படை புனித வாழ்வு. அதனைச் செயலாக்கத் தத்துவப் பயிற்சி வேண்டும் என்ற திட்டத்துடன் அவர் தமது கல்கத்தா வாழ்வைத் தொடங்கினார்.

ஆழ்ந்த சிந்தனைகளால் மனச்சுமை. குடும்பத்தாரின் புரிந்துகொள்ளாத மனோபாவம். தாம் ஓர் இருமுனைப் போராட்டத்தில் இருந்ததாக அவர் குறிப்பிடுகிறார். அந்தப் போராட்டத்துக்கும் அவர் நன்றி பாராட்டுகிறார். அதன் விளைவாகவே அவருக்கு வாழ்வில் தன்னம்பிக்கை பிறந்தது.

இந்தச் சிந்தனைகளோடு இணைத்து குழந்தைகளைப் பெரியவர்கள் எப்படி வளர்க்க வேண்டும் என்பது பற்றிய தமது எண்ணங்களை அவர் பகிர்ந்து கொள்கிறார். “எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே; அவன் நல்லவனாவதும் தீயவனாவதும் அன்னை வளர்ப்பினிலே." என்ற பாடலை எம்.ஜி.ஆர் வாயிலாகக் கேட்டிருக்கிறோம். இதே கருத்தைத்தான் சுபாஷ¤ம் சொல்லியிருக்கிறார். குழந்தைகளின், ஆரம்ப எண்ணங்கள் நல்லபடி இருக்க வேண்டும் என்பதில் பெற்றோர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். குழந்தைகளின் மனப்போக்கைப் புரிந்துகொள்ள வேண்டும். அவர்களின் இயற்கையான ஆர்வத்தையும் போக்கையும் மாற்றி பலவந்தமாகத் தம் வழியில் திருப்ப முனைந்தால், நன்மையில்லாமல் தீமையே விளையும். குழந்தைகளின் பிடிவாதத்தை அடக்க, பேய் பிசாசு பூதம் என்று சொல்லிவைப்பது தவறு. (“வேப்ப மர உச்சியிலெ பேயண்ணு இருக்குதுன்னு சொல்லி வைப்பாங்க; அதை நம்பி விடாதே, நீயும் வெம்பிவிடாதே".. என்ற பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பாட்டு ஞாபகத்துக்கு வருகிறதா?)

சுபாஷின் சிந்தனைகள் பாரதியைத்தான் நினைவு படுத்துகின்றன. “தேடிச் சோறு நிதம் தின்று பல சின்னஞ்சிறுகதைகள் பேசி.. வாடித் துன்பம் மிக உழன்று.. நரை கூடிக் கிழப்பருவம் எய்திப் பின் கூற்றுக்கிரையென" மாய என்று ஏற்பட்டதல்ல இந்த மனித வாழ்க்கை. இது இறைவன் தந்த பரிசு என்று கொண்டு வாழ்வாங்கு வாழ வேண்டும் என்பதே சுபாஷின் கொள்கை. ஆழ்ந்த சமயப் பற்றும் யோகப் பயிற்சியும் அவருக்கு இந்த உள்நோக்கிய பயணத்தில் பெரிதும் துணை நின்றன.

மண்ணில் பிறந்த மனிதன் மகத்தான செயல் புரிவதை லட்சியமாகக் கொள்ள வேண்டும். அத்தகைய சாதனையை மேற்கொள்ளும்போது இன்னல்கள் வராமல் இருக்காது. அந்த இன்னல்களை சமாளித்து முன்னேறுவதற்குப் பெயரே புரட்சி. தான் கொண்ட லட்சியத்துக்காகப் பிறருக்குத் துன்பம் தருவதல்ல புரட்சி. பிறர் நலனுக்காகத் துன்பத்தை தான் ஏற்றுக்கொள்பவனே புரட்சிக்காரன். இது ஆன்மிகம் அரசியல் இரண்டுக்குமே பொருந்தும். (சுபாஷின் இந்தக் கருத்து அடிப்படையில் மகாத்மா காந்தியின் சத்தியாக்கிரஹ தத்துவத்துடன் ஒத்துப்போவது போலவே தோன்றுகிறது. காந்தியின் தத்துவம் மாற்றுக் கருத்துக் கொண்டவனைப் பகைவனாகக் கருதக் கூடாது. செயலையும், செயல் புரிபவனையும் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும். சத்தியம் என்று நாம் கருதுவதை நிலைநாட்ட, எதிராளியின் மீது வன்முறையை ஏவி விடக் கூடாது. துன்பத்தை நாம் வலிந்தேற்றுக்கொண்டு, அவனது மன மாற்றத்துக்கு முயலவேண்டும். சத்தியாக்கிரகப் போரில் அன்பே ஆயுதம்.... இது போகிற போக்கில்.. நாம் நேதாஜிக்குத் திரும்புவோம்.) இத்தகைய புனித செயல்பாட்டுக்கு மனக்கட்டுப்பாடு அவசியம். மனிதனுக்கு மனம்தான் மன்னன் எனில், மனத்துக்கு தூய எண்ணமே மன்னன். சேவை நோக்கமும் தூய எண்ணமும் கொண்டவனுக்கு மனத்தை அடக்கியாள்வது சிரமமே அல்ல.

இலட்சியவாதிக்குப் பருவ உணர்வுகள் தடை என்பது சுபாஷின் தீவிரமான கருத்து. “காமினி, காஞ்சனம்" என்பார் ராமகிருஷ்ண பரமஹம்சர். புலனடக்கத்தின் சக்தியில் அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டவர் விவேகானந்தர். சிகாகோ மாநாட்டில் தாம் அனைவரையும் ஈர்க்க முடிந்ததற்குக் காரணம் தமது சிறிதும் வழுவாத பிரம்மசரியமே என்பார் அவர். சுபாஷ் பருவ உணர்வுகளைக் கட்டுப்படுத்துவதற்குத் தீவிரமாக முயன்று வெற்றி கண்டார்.

இந்த இடத்திலும் மகாத்மாவின் செயல்பாடுகளை ஒப்புநோக்குவது பொருத்தமானதே. தென் ஆப்பிரிக்காவில் பொதுப்பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட மகாத்மா, இல்லற வாழ்வு பொதுப்பணிக்குத் தடையாக இருக்கும் என்று கருதினார். தான், தன் மனைவி குடும்பம் என்று உழல்வது இலட்சிய வாழ்வுக்கு ஏற்றதல்ல என்று கொண்டார். குடும்பத்தை, நண்பர்கள், சகாக்கள் கொண்ட, பெரிய குடும்பமாகவும், பின்னர், பலரும் கூடி வாழும் ஆசிரமமாகவும் விஸ்தரித்துக்கொண்டார். மனைவியிடமே அன்பு செலுத்தும் இல்லற வாழ்க்கை, அன்பைப் பரவலாகச் செலுத்துவதற்குத் தடையாகும் என்று கருதி, 1906 ல் தமது 37 வது வயதில் பிரம்மசரிய விரதத்தை வலிந்தேற்றுக் கொண்டார்.

இலக்கு நோக்கிய பயணம்

கல்லூரியில் ஆரம்ப நாட்களில் நகர்ப்புறத்து மாணவர்களின் பொறாமை நிறைந்த கவனம் சுபாஷ் மீது படிந்தது. நகர்ப்புறத்து மாணவர்களை விட அவர் அதிக மதிப்பெண் வாங்கியிருந்ததுதான் காரணம். எனினும் இது அதிக நாள் நீடிக்கவில்லை. சுபாஷ¤க்கு நாளடைவில் அதிக நண்பர்கள் சேர்ந்துவிட்டார்கள். கல்லூரி மாணவர்களிடையே பல்வேறு சுபாவங்கள் கொண்ட குழுக்கள் இருந்தன. மிகவும் கர்வமாக, வேறு யாருடனும் கலந்து கொள்ளாத மேட்டுக்குடியினர் ஒரு குழு; கையில் எப்போதும் புத்தகமும் கனத்த மூக்குக் கண்ணாடியுமாக புத்தகப்பூச்சிகள் ஒரு குழு; புரட்சிக்காரர்கள் ஒரு பக்கம்; சுபாஷைப் போல படிப்பில் ஆர்வம், அதே நேரத்தில் விவேகானந்தரிடம் பற்று, ஆன்மீகத்தில் நாட்டம் இப்படி ஒரு குழு. அந்தக் கல்லூரியில் நிறைய புரட்சிக்காரர்கள் இருந்தபடியால் சி.ஐ.டி.,களின் கண்காணிப்பு, சோதனைகள், புரட்சி சம்பந்தமான பிரசுரங்கள், குறிப்புகள் பறிமுதல் மாமூலாக நடக்கும். சுபாஷின் குழு ஆன்மீகத்தோடு சமுதாய சேவையிலும் ஈடுபட்டதால் எங்கே ஆன்மீகம் என்ற பேரில் புரட்சிக்கு வித்தூன்றுகிறார்களோ என்ற சந்தேகத்தில் அவரது குழுவும் சோதனைக்கு உள்ளாகி, பின்னர் ஐயம் விலகப் பெற்றது.

நாட்டின் முன்னேற்றத்துக்கு வழி, முதல்தரமான கல்விக் கழகங்களை நிறுவுவதுதான் என்று சுபாஷ¤ம் அவரது நண்பர்களும் கருதினார்கள். இதற்காக ரவீந்திரநாத் தாகூரின் சாந்தி நிகேதன் ஆஸ்ரமத்துக்குச் சென்று பார்வையிட்டார்கள். சுபாஷ¤க்கு அடிக்கடி ரவீந்திரரைச் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. அவரைத் தரிசித்த ஒவ்வொரு தருணத்திலும் அவரிடமிருந்து ஆசிகளையும் அபரிமிதமான உற்சாகத்தையும் பெற்றார். கிராம முன்னேற்றம் தான் நாட்டின் முன்னேற்றத்துக்கு வழி வகுக்கும் என்பதில் இருவரும் ஒத்த கருத்துடன் இருந்தார்கள். கிராம முன்னேற்றத்துக்காகச் செய்ய வேண்டிய பணிகளையும் செயல்முறைகளையும் பற்றி பலமுறை தாகூர் சுபாஷ¤க்கு அறிவுறுத்தியிருக்கிறார்.

அக்கால மணவர்களுக்கு அரவிந்தர் ஓர் ஆதர்ச புருஷர். அவர் நடத்திய சூர்யா பத்திரிகையை சுபாஷ¤ம் அவரது நண்பர்களும் தவறாது வாசித்து வந்தனர். அரவிந்தர் அரசியலில் ஒரு தீவிரவாதியே. நாட்டின் முதல் தேவை பூரண சுதந்திரமே, அதில் ஒரு மாற்றுக் குறைந்தாலும் அது போலியே, நமக்குத் தேவையில்லை என்பது அவரது கருத்து. காங்கிரசில் அவர் இடதுசாரி. தீப்பொறி பறக்கவும், அதே நேரத்தில் கண்ணியமாகவும் அவர் பேசிய பேச்சுக்கள் அவரை மக்கள் மனநாயகன் ஆக்கின. அரசியலைப் போலவே ஆன்மீகத்திலும் தீவிரமானவர் அரவிந்தர். அரசியலும் ஆன்மீகமும் பிரிக்க முடியாதவை என்பது அவரது திடமான எண்ணம். எனவே சுபாஷை அவர் கவர்ந்ததில் வியப்பில்லை.

“தெய்வீக ஒளியில் நாம் ஆன்ம உணர்வோடு மூழ்கி எழுந்தால், நம்மைச் சுற்றி பல ஆன்மீகச் சுடர்கள் மின்வெட்டுவதைக் கண்டு மகிழலாம். மக்கள் சேவையை விரும்பினால் ஆன்மீகப் பயிற்சி மூலம் நம்மை நாம் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும். இல்லாத வரை, தெய்வத்தின் நடமாடும் உருவங்களான மக்களுக்கு உண்மையில் பயன் தரும் சேவை செய்வதற்கான மனநிலையும் உடல் தென்பும் ஏற்படாது.”

“நீங்கள் பெரிய மனிதர்கள் ஆக வேண்டும்; உங்களுக்காக அல்ல, இந்தியாவை உயர்த்துவதற்காக. உலக நாடுகளின் முன்னே இந்தியா தலை நிமிர்ந்து நிற்க வேண்டும். இந்தியா செழித்தோங்க வேண்டும். இதற்காகப் பணிபுரியுங்கள். இந்தியாவின் வளத்துக்காக நீங்கள் துன்பத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்.” போன்ற அரவிந்தரின் அறிவுரைகள் சுபாஷின் மனத்தில் நீங்கா இடம்பெற்றன.

லாலா லஜபதி ராய், ‘சுயராஜ்யமே நமது பிறப்புரிமை' என்று முழங்கிய லோகமான்ய பாலகங்காதர திலகர், விபின சந்திர பாலர், மூவரும், “லால், பால், பால்(Lal, Bal, Pal)என்று மும்மணிகளாகப் போற்றப்பட்டனர். இவர்களது பேச்சுகளும், எழுத்துகளும் சுபாஷின் நண்பர்களுக்கு வீர உணர்வை ஊட்டின. இந்தக் காலகட்டத்தில், மகாத்மா காந்தியின் தென்னாப்பிரிக்க சத்தியாகிரக போராட்டத்தை ஒட்டி கல்கத்தாவில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் சுரேந்திரநாத் பானர்ஜியின் பேச்சைக் கேட்கும் வாய்ப்பு சுபாஷ¤க்குக் கிடைத்தது. அவரது வார்த்தைகளிலிருந்த மின் சக்தி சுபாஷை வசீகரித்தது, என்றாலும் சுபாஷின் முதல் வோட்டு, அரவிந்தரின் எளிமை நிரம்பிய பேச்சுக்குத்தான்.

கல்லூரி விடுமுறை நாட்களில் சமூக சேவையாக, பொருள், துணிமணிகளை வீடுவீடாகச் சென்று இறைஞ்சி இரந்து அவைகளை வறியவர்களுக்காகப் பயன்படுத்தினார். வெள்ள நிவாரணப் பணிகளிலும் ஈடுபட்டார் சுபாஷ். விடுமுறைக்காக கட்டாக் சென்றிருந்த போது அருகிலுள்ள ஊர்களில் காலரா பரவி வருவதை அறிந்தார். கிராமம் கிராமமாக சென்று காலரா நோய் பரவுவதைத் தடுப்பதிலும், நோயுற்றவர்களுக்குப் பணிவிடை செய்வதிலும் தீவிரமாக ஈடுபட்டார்கள் சுபாஷ¤ம் அவரது நண்பர்களும். சுபாஷின் பெற்றோர்களுக்கு இதிலெல்லாம் சிறிதும் இஷ்டமில்லை. மகனுக்குத் தொற்று வியாதி வந்துவிடக்கூடாதே என்ற பெற்றோரின் இயல்பான ஆதங்கம்தான். அவரைத் தடுக்கவும் முடியாமல், கவலைப்படாமல் நிம்மதியாக இருக்கவும் முடியாமல் அவதிப்பட்டார்கள்.

சமுதாயப் பணியோடு இணைந்த ஆன்மீகம், தேசிய சிந்தனை இவை இருந்தபோதும், உலகம் மாயை என்ற தத்துவம் அவரது மனத்தில் அடிநாதமாக இருந்து சங்கடப்படுத்திக் கொண்டுதான் இருந்தது. சரியானதொரு குருவை, அவர் இமயமலைச் சாரல்களில், காடுகளில் தேடி அலைந்தார். ரிஷிகேசம், ஹரித்வார், மதுரா, பிருந்தாவன், காசி, கயை போன்ற புனிதத் தலங்களுக்குச் சென்றார். பல சாது சன்னியாசிகளை சந்தித்து அவர்களது போதனைகளைக் கேட்டறிந்தார். ஆனால் யாரிடமும் அவர் மனம் லயிக்கவில்லை. இரண்டு மாதத் தேடுகையில் சுபாஷ¤க்குப் பல அனுபவங்கள் கிடைத்தன. ஜாதி மதம் போன்ற பிரிவினைகள் சாதுக்கள் வட்டாரத்திலும் நடைமுறையில் இருப்பதைக் கண்டார். மனிதன் பல விஷயங்களில் மிருகங்களை விடக் கேவலமாக வாழ்கிறான் என்பதையும், எப்படி வாழவேண்டும் என்பதையும் அனுபவப்பூர்வமாகக் கண்டுணர்ந்து கொண்டார்.

“தேய்ந்து போன கரடுமுரடான பாதையில் சென்று உனது சக்தியை வீணாக்கிக் கொள்ளாதே. உன் அருகிலேயே உள்ள செப்பனிட்ட பாதையில் செல். பரிபூர்ண சக்தியின் தோற்றத்தை உன் உள்ளத்திலே கொள். அடிமை குணங்களான சந்தேகம், அச்சம், பொறாமை, பலவீனம் இவற்றை விட்டு விலகி வா. நாம் தொண்டர்கள். இறைவனின் குழந்தைகள். இந்த ஆழ்ந்த நம்பிக்கையுடன் சேவை செய்யப் புறப்படு." என்ற விவேகானந்தரின் வீர வரிகள் புதுப்பொலிவோடு அவரது மனதில் வந்து நிலைத்தன.

துறவுநிலை மனப்பான்மையுடன், உலக வாழ்வில் ஈடுபட்டுக்கொண்டே சேவை செய்யவேண்டும் என்ற உறுதியுடன் வீடு திரும்பினார்.

இடையே அவரைக் காணாமல் பெற்றோர்கள், சோதிடம், ஜாதகம் என்று அலைந்து கொண்டிருந்தார்கள். இவரைக் கண்டதும் மகிழ்ச்சிப் பெருக்குடன் ஆனந்தக் கண்ணீர் சொரிந்தபடி அவரை ஆரத் தழுவிக்கொண்டார்கள்.

முதல் உலகப் போரும் அரசியல் சிந்தனைகளும்

கடும் அலைச்சலினாலும், மன உளைச்சலினாலும் சுபாஷின் உடல்நிலை சீர்குலைந்து போனது. டைபாய்டு காய்ச்சலில் படுத்த படுக்கையானார். மருந்துகள், ஓய்வு, அம்மாவின் பரிவும் பாசமும் இவை அனைத்தும் துணையாக, சில மாதங்களில் சுபாஷ் உடல்நிலை தேறப் பெற்றார்.

இந்தக் காலகட்டம் இந்திய வரலாற்றில் முக்கியமானதொன்றாகும். இந்திய அரசியல் அமைப்பில் சில சீர்திருத்தங்களைப் பற்றி விவாதிப்பதற்காக இந்திய தேசிய காங்கிரசின் பிரதிநிதிகளாக பூபேந்திரநாத் பாசு, ஜின்னா, லஜபதி ராய் மற்றும் மூவர் லண்டனில் இருந்தார்கள். இந்த சீர்திருத்தங்கள் பற்றி இருவேறு கருத்துகள் நிலவின. சிவில் நிர்வாகம் இந்தியர்களுக்குத் தரப்பட வேண்டும், பாதுகாப்புப் பொறுப்பு பிரிட்டிஷாரிடம் இருக்கட்டும் என்பது ஒரு கருத்து. இதற்கு மாற்றுக் கருத்து இத்தகைய சீர்திருத்தம் பயனில்லை என்பது. இந்தியாவின் விசுவாசத்தின் விலை முழு சுதந்திரமே என்று முழங்கினவர் அன்னி பெசண்ட் அம்மையார். இவரை ஜின்னாவும் லஜபதி ராயும் ஆதரித்தார்கள். இந்த நிலையில் முதல் உலகப் போர் பிரகடனம் வந்தது. இந்திய காங்கிரஸ் பிரதிநிதிகள் போர் முயற்சியில் அரசுக்கு முழு ஆதரவு தெரிவித்துக் கடிதம் கொடுத்தார்கள்.

ஆறு வருஷம் மாண்டலே தனிமைச் சிறையில் வாடிவிட்டு ஜூன் 17, 1914ல் விடுதலையாகி வந்த திலகருக்கு அன்பு நிறைந்த வரவேற்பு அளிக்கப்பட்டது. பதிலளித்துப் பேசிய திலகர், மக்கள் தம்மை இன்னும் மறக்காமல் அன்பு செலுத்தி வருவதற்கு நன்றி தெரிவித்தார். முன்பு போலவே பணியில் ஈடுபடப் போவதாக அறிவித்தார். செயல்பாடுகளில் சில மாற்றங்கள் இருக்கக் கூடும் என்றும் கூறினார். போர் சம்பந்தமான அவரது கருத்து, பெரியவரோ சின்னவரோ, ஏழையோ பணக்காரரோ அனைவரது கடமையும் இந்த சந்தர்ப்பத்தில் பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பதே என்பதுதான். புரட்சியாளர்களைத் தவிர அத்தனை பேரும் பொதுவாக, போர் வந்துள்ள சூழ்நிலையில் பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு ஒத்துழைக்க வேண்டும் என்பதாகவே கருதினர். காந்தியின் தலைமையில் 80 தொண்டர்கள் முதலுதவி பயிற்சி பெற்று போரில் அடிபட்டவர்களுக்கு சிகிச்சை அளித்தார்கள். சரோஜினி நாயுடுவும் கஸ்தூர்பா காந்தியும் போர் வீரர்களுக்கு உடைகள் தைத்துத் தந்தார்கள்.

இன்றைக்கு யோசித்துப் பார்த்தால் இந்த நிலைப்பாடு பொருத்தமற்றதாகவும், வியப்பை ஊட்டுவதாகவும் இருக்கும். எனவே இது சம்பந்தமாக சில கருத்துகளை சொல்ல வேண்டியதாக இருக்கிறது. 1919ல் நாம் பின்னால் விவரிக்கப் போகும் சில சம்பவங்கள் நிகழ்ந்தன. அதற்கு முன் வரை, காந்தி மற்றும் பெரும்பாலான இந்தியர்களின் சிந்தனை இவ்வாறே அமைந்தது. நாம் பிரிட்டிஷ் அரசின் விசுவாசமிக்க பிரஜைகள். எனவே, அந்த அரசின் பிரிட்டிஷ் பிரஜைகளுக்கு அளிக்கப்படுவது போன்ற சம உரிமைகளைத் தருவது அவர்களது கடமை. கேட்பது நமது உரிமை. அதே நேரத்தில், அந்த அரசின் பிரஜைகள் என்ற முறையில் நாம் நமது கடமைகளைச் செய்ய வேண்டும் (“உறவுக்குக் கை கொடுப்போம்; உரிமைக்குக் குரல் கொடுப்போம்" - என்று இதைச் சொல்லலாமா?)


இதைத் தவிர, காந்தி சில அடிப்படை விழுமியங்களைக் கொண்டிருந்தார். ஒரு கோரிக்கையின் வெற்றி, அதன் அடிப்படை நியாயத்தைப் பொறுத்து அமைய வேண்டுமே தவிர, எதிராளியின் சங்கடத்தைப் பயன்படுத்திக் கொண்டு அமையக்கூடாது. இதுவே சத்தியாகிரகத்தின் அடிப்படைத் தத்துவம். தென் ஆப்பிரிக்காவில் முன்னர் ஒரு முறை இது போலவே செயல்பட்டிருக்கிறார் காந்தி. இந்தியர்களுக்கு எதிரான அநீதியான சட்டங்களை எதிர்த்து சத்தியாகிரகப் போர் உச்ச கட்டத்தில் இருந்த தருணம். அந்த சமயத்தில் ரயில்வேயின் ஆங்கிலேய ஊழியர்கள் வேலை நிறுத்தம் தொடங்கினார்கள். இதுவே நல்ல தருணம், போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்துவோம் என்று நண்பர்கள் சொன்னதை ஏற்காமல் போராட்டத்தை விலக்கிக் கொண்டார் காந்தி.

இதை இங்கு சொல்ல வந்த காரணம் என்னவென்றால், நேதாஜியும் காந்தியும் செயல்முறைகள் பற்றிய அடிப்படையான சில சிந்தனைகளில் வேறுபட்டு நின்றார்கள். எனினும், தேச பக்தியில் ஒருவருக்கொருவர் சளைத்தவர்களல்லர். இந்த வேறுபாடுகள் காரணமாக ஒருவருக்கொருவர் அன்பிலும் மரியாதையிலும் எள்ளளவும் குறையவில்லை. இதைப் புரிந்துகொண்டால் தான், பாரபட்சமற்ற நோக்குடன் வரலாற்றுக் கண்ணோட்டத்தில் சுபாஷின் வாழ்க்கையைப் புரிந்துகொள்ள முடியும்.

இது ஒரு புறம் இருக்க, அந்தக் காலகட்ட அரசியல் நிகழ்ச்சிகளைப் பற்றி சுபாஷ் என்ன நினைத்தார்? இது பற்றி அவர் வார்த்தைகளிலேயே கேட்போம்:

“புரட்சிக்காரர்களுடன் நான் பழகியிருக்கிறேன். ஆனால் அவர்களுடன் ஒன்றியதில்லை. புரட்சியின் பிடியிலும் நான் அப்போது சிக்கவில்லை. ஆனால் மகாத்மா காந்தி மாதிரி அஹிம்சையில் நம்பிக்கை வைத்து புரட்சியில் ஈடுபட விரும்பாதவனல்ல நான். அன்றைய நிலையில் தனி ஒரு உலகில் வாழ்ந்து கொண்டிருந்தேன். தேசிய மறு சீரமைப்பின் மூலம்தான் இந்திய மக்களுக்கு சாசுவதமான சாதகங்கள் புரிய முடியும் என்ற நம்பிக்கையில் அதற்குத் திட்டமிட்டுக் கொண்டிருந்ததால் தீவிரவாதப் புரட்சி இயக்கம் என்னை இழுக்க முடியவில்லை. முதலில் அரசியலை நன்கு தெரிந்துகொண்டு பிறகு சுதந்திரமாக ஒரு வழியை வகுத்துக் கொள்வது என்று நான் தனிப்பட முடிவுகட்டிக் கொண்டேன்."

சொந்த நாட்டில் பிறர்க்கடிமை செய்து துஞ்சிடோம்!

நச்சுக் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட சுபாஷ் மீண்டெழுந்து படிப்பைத் தொடர சில மாதங்கள் பிடித்தன. இரண்டு வருஷங்களாகவே குரு வேட்டையிலும், சமூக சேவையிலும், நோயிலும் இழுபட்டதால் அவரது படிப்பு வெகுவாகப் பாதிக்கப்பட்டிருந்தது. இடைக்காலத்தில் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்தும் இறுதித் தேர்வில் பட்டியலில் பின்தங்கி விட்டார்.

தத்துவப் படிப்பில் தேற வேண்டும் என்ற நெடுங்கால ஆசை காரணமாகப் பட்டப் படிப்பில் தத்துவத்தை சிறப்புப் பாடமாக எடுத்துக்கொண்டார். ஆனால் அவருக்கு போதிக்கப்பட்டது மேலை நாட்டுத் தத்துவம். அது அவருக்கு ஏமாற்றமே தந்தது. மேற்கத்திய தத்துவம் சந்தேகத்திலேயே ஆரம்பிக்கிறது. திட்டவட்டமான முடிவை ஏற்படுத்திக் கொடுக்கும் சக்தி அதற்கு இல்லை. தவறு ஏற்படாமல் இருக்க அது வழி செய்யவில்லை. உண்மைக்கு அதில் முக்கியத்துவம் இல்லை. உண்மையை உயிராகக் கொண்ட வேதாந்த வழியில் பயிற்சி பெற்றவராகையால் சுபாஷ¤க்கு மேற்கத்திய தத்துவம் அவ்வளவு ஆர்வத்தைத் தரவில்லை.

இந்த நாட்களில் சுபாஷ¤க்கு பிரிட்டிஷார் நடந்துகொள்ளும் முறையப் பார்க்கும் வாய்ப்பு ஏற்பட்டது. கல்லூரிக்குப் போகும் போதும் வரும் போதும் பிரிட்டிஷார் வசிக்கும் பாதை வழியாகத்தான் போய்வர வேண்டும். அவர்களின் ஆணவப் போக்கு அவருக்கு ‘நெஞ்சில் தைத்த முள்’ளாக இருந்தது. டிராம் வண்டியில் பயணம் செய்கையில் அவர்கள் முன் வரிசையில் இந்தியர்கள் யாராவது உட்கார்ந்திருந்தால் அவர்கள் மேல் உதைத்துக் கொண்டுதான் உட்காருவார்கள். அவர்களை இந்தியர்கள் யாராவது பார்த்தால் எழுந்து நின்று மரியாதை செய்ய வேண்டும். இல்லையென்றால் அடித்து உதைத்து அவமானப் படுத்துவார்கள். உயர் வகுப்பு டிக்கெட் வாங்கியிருந்தாலும், பிரிட்டிஷார் அந்தப் பெட்டியில் ஏறினால், அதில் இந்தியர்கள் பயணம் செய்யக்கூடாது. உதைத்து வெளியே தள்ளி விடுவார்கள். (இத்தகைய ஒரு நிகழ்ச்சி தென் ஆப்பிரிக்காவில் நடந்ததுதானே மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் மனத்தில் ஒரு உத்வேகத்தை ஏற்படுத்தி அவரை மகாத்மா ஆக்கியது!)

“சொந்த நாட்டில் பிறர்க்கடிமை செய்தே
துஞ்சிடோம் இனி அஞ்சிடோம்!
எந்த நாட்டிலும் இந்த அநீதிகள்
ஏற்குமோ? தெய்வம் பார்க்குமோ?

நாங்கள் முப்பது கோடி ஜனங்களும்
நாய்களோ? பன்றிச் சேய்களோ?
நீங்கள் மட்டும் மனிதர்களோ? இது
நீதமோ? பிடி வாதமோ?'

என்று பாரதி பாடியது போன்ற கருத்துகள் இளம் சுபாஷின் மனத்தில் அலைமோதியிருக்க வேண்டும்.

சுபாஷின் வாழ்க்கையில் பெரும் பாதிப்பை எற்படுத்திய நிகழ்ச்சி அப்போதுதான் நடந்தது. 1916 ஜனவரி. ஒரு நாள் காலை. ஆங்கிலப் பேராசிரியர் ஒருவர் சில மாணவர்களை அடித்து விட்டார். அது குறித்து விசாரணை நடந்தது. விசாரணைக்குப் போகும் வழியில் அந்தப் பேராசிரியரின் அறை இருந்தது. மாணவர்கள் சத்தம் போட்டுக்கொண்டு சென்றது அவருக்கு ஆத்திரமூட்டவே, அவர் வெளியே வந்து சில மாணவர்களை வலுக்கட்டயமாகப் பிடித்து வெளியே தள்ளி விட்டார். வகுப்பு பிரதிநிதி என்ற முறையில் சுபாஷ் முதல்வரிடம் சென்று அந்தப் பேராசிரியர் மாணவர்களிடம் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார். முதல்வர் கோரிக்கையை ஏற்காததுடன், அந்த ஆங்கிலப் பேராசிரியருக்கு சாதகமாகவும் பேசினார். ஆத்திரம் கொண்ட மாணவர்கள் மறு நாள் வேலை நிறுத்தத்தில் இறங்கி விட்டார்கள். மாணவர்கள் மீது பல நடவடிக்கைகள் எடுக்கப் பட்டன. அபராதமும் விதிக்கப் பட்டது.

ஒரு மாதம் கழித்து மீண்டும் அதே ஆங்கிலப் பேராசிரியர் மீண்டும் ஒரு மாணவனை அடித்து விட்டார். முறையீடு, வேலை நிறுத்தம் போன்ற சட்டபூர்வமான வழிகள் பலன் அளிக்கவில்லை என்று உணர்ந்திருந்த மாணவர்கள் அந்தப் பேராசிரியரை அவமானப்படுத்தி விட்டார்கள். விஷயத்தை மிகைப்படுத்தி அந்தப் பேராசிரியர் மாணவர்கள் தன்னை மாடியிலிருந்து உருட்டி விட்டதாகப் புகார் செய்து விட்டார்.
விஷயம் பத்திரிகைகளில் தலைப்புச் செய்தி ஆயிற்று. நகரெங்கும் ஒரே பரபரப்பு. இது பற்றியே பேச்சு. அரசாங்கம் கல்லூரியை மூடும்படி உத்தரவிட்டது. சுபாஷ¤ம் மற்றும் சில மாணவர்களும் கல்லூரியிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டார்கள். பின் சுபாஷ் கல்லூரியிலிருந்து வெளியேற்றப்பட்டு விட்டார். உண்மை என்னவென்றால், இந்த சம்பவத்தில் சுபாஷ் சிறிதும் சம்பந்தப்பட்டிருக்கவே இல்லை. பிரதிநிதி என்ற முறையில் மாணவர் தரப்பு வாதங்களை எடுத்து வைத்ததே அவர் செய்தது. இந்த அளவு தலையீடு கூட வேண்டாம் என்று அவர்பால் அன்பு செலுத்தியவர்கள் சொல்லியும் அவர் கேட்க மறுத்து விட்டார்.

அரசு கமிட்டி கல்லூரி முதல்வரின் உத்தரவை உறுதி செய்தது. இந்தக் கமிட்டி முன் மாணவர்கள் மிது அடுக்கடுக்காக ஏவி விடப்பட்டிருந்த அடக்குமுறைகளைப் பற்றி எல்லாம் சுபாஷ் எடுத்துரைத்தது செவிடன் காதில் ஊதிய சங்காயிற்று. மதிப்புக்குரியவர் என்று கருதப்பட்ட இந்தியர் ஆசுடோஷ் முகர்ஜி தலைவராக இருந்தும், சுபாஷ¤க்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கவில்லை. வேறு எந்தக் கல்லூரியிலாவது சேர்ந்து படிக்க அனுமதி கோரி வேண்டியதும் சுபாஷ¤க்கு நிராகரிக்கப்பட்டது. மற்ற எல்லா மாணவர்களுக்கும்

மன்னிப்பளிக்கப்பட்டிருந்தும், சுபாஷின் படிப்புக்கு மூடி போட்டு முத்திரை இட்டது இந்த சம்பவம். சுபாஷ் தமக்குத் தாமே ஒரு படிப்பினையை சொல்லிக் கொண்டார். பொது நலன் சம்பந்தமாகத் தமக்குத் தோன்றுவதை உடனே செயலாற்ற வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டார். தலைவனாகவும் தொண்டனாகவும் இயங்கும் அளவுக்குத் தம்மைத் தாமே பக்குவப்படுத்திக் கொண்டார். எத்தகைய எதிர் காலத்தையும் சிரமமின்றி சமாளிக்கலாம் என்ற துணிச்சல் அவருக்கு ஏற்பட்டது. “இதெல்லம் கல்லூரி முதல்வர் எனக்குச் செய்த பேருதவிதான்” என்று சொல்லிக்கொள்கிறார் அவர்.

இந்த அவரது தியாகம் மாணவர்களிடையே அவரது மதிப்பை உயர்த்தியது. இதில் அதிசயமான ஒரு விஷயம் என்றால் அவரது பெற்றோர்கள் அவரிடம் இதற்காகக் கோபப்படவில்லை. முடிவைப் பற்றிக் கவலைப்படாமல் உள்ளதை உள்ள படியே சொன்னதற்காக சுபாஷை மதித்தார்கள். இந்த சம்பவத்தின் மூலம் பெற்றோருக்கும் அவருக்குமிருந்த உறவு நிலை முன்னை விடப் பன்மடங்கு பெருகவே செய்தது.

அவரது சகோதரர்களும் செய்ய வேண்டிய நேரத்தில் செய்ய வேண்டிய காரியத்தை செய்ததாகவே கருதி, அவரது நிலை குறித்து அனுதாபம் காட்டினார்களே தவிர அவமானப் படுத்தவில்லை. மாணவர்களில் சிலர் என்னவோ, அதிகார சக்தியிடம் சுபாஷ் நேரடியாக மோதியிருக்கக் கூடாது என்று அபிப்பிராயப் பட்டார்கள். அவர் மீது உள்ள அன்பு காரணமாகவே அவர்கள் அவ்வாறு கருதினார்கள். சுபாஷ் மட்டும் தான் செய்தது பற்றி சிறிதளவும் வருத்தப்படவே இல்லை. இதுதான் நியாயம் என்பது நிச்சயமாகத் தெரியும்போது, விளைவைப் பற்றிக் கவலைப் படாமல், போராட வேண்டியதுதான் கடமை என்பதில் அவர் உறுதியாகவே இருந்தார். இந்த உறுதியான செயல்பாட்டைத்தான் அவர் வாழ்க்கை முழுவதும் பார்க்கப் போகிறோம்.

ஐ.சி.எஸ். படிக்கிறாயா?

கல்லூரியிலிருந்து வெளியேற்றப்பட்டு கட்டாக் வந்த சுபாஷை வெறுமை சூழ்ந்திருக்க வேண்டும். கல்லூரி விலக்கத்துக்குக் கால வரம்பு உண்டா? அதிகாரிகள் மனம் மாறி மீண்டும் படிப்பைத் தொடங்க அனுமதிப்பார்களா? எதுவும் நிச்சயமாகத் தெரியவில்லை. மேல் நாடு சென்று படிக்கப் பெற்றோரிடம் அனுமதி கேட்ட போது, கல்கத்தா படிப்பை முடித்தால்தான் மேல்நாடு செல்ல அனுமதிக்க முடியும் என்று திட்டவட்டமாகச் சொல்லிவிட்டார்கள்.

இந்தக் காலகட்டத்தில் நண்பர்களுடன் சேர்ந்துகொண்டு சமூக சேவையில் தீவிரமாக ஈடுபட்டார் சுபாஷ். கட்டாக்கில் அந்த சமயம் காலரா நோய் பரவியிருந்தது. சுபாஷ¤ம் அவரது நண்பர்களும், நோயளிகளுக்குத் தீவிரமாகப் பணிவிடை செய்தார்கள். இதில் இன்னொரு அம்சமும் இருந்தது. காலராவால் இறந்தவர்களுக்கு இறுதிச் சடங்குகள் செய்ய யாரும் முன்வரவில்லை. தகனம் செய்ய சம்பந்தப்பட்ட தொழிலாளிகளும் மறுத்து விட்டார்கள். இந்த நிலையில் சுபாஷ¤ம் அவரது நண்பர்களும் அத்தனை காரியங்களையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்தார்கள்.

இத்தகைய சேவையின் தொடர்ச்சியாக அவர்கள் ஒரு இளைஞர் சமூக சேவை இயக்கத்தைத் தொடங்கினார்கள். இதில் ஓர் அனுபவம்...

இந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்பு கொண்ட ஒரு மாணவர் விடுதி. இதில் மாணவர்களைச் சேர்த்துக்கொள்ள ஜாதி மதம் எதுவும் கேட்பதில்லை. இந்த விடுதியில் சேர்ந்த ஒரு மாணவன் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவன் என்று தெரிய வந்தது. விடுதியில் வேலை பார்த்த பணியாளர்கள், அந்த மாணவரை விடுதியில் இருந்து நீக்காவிட்டால் தாங்கள் பணியில் இருந்து விலகிவிடப் போவதாக அச்சுறுத்தினார்கள். என்ன செய்வது? சுபாஷ¤ம் அவரது நண்பர்களும் திட்டவட்டமான ஒரு முடிவு எடுத்தார்கள். மனிதர்களுக்குள் ஜாதியினால் வேறுபாடு பார்ப்பவர்கள் இங்கு வேலை பார்க்கத் தேவையில்லை என்று. அச்சுறுத்தியவர்கள் அடி பணிந்தார்கள். யாரும் விலகவில்லை. தடையின்றி அந்த மாணவர் விடுதியில் தொடர்ந்தார்.

இதற்குப் பிறகு இந்தத் தாழ்த்தப்பட்ட நண்பருக்கு நச்சுக் காய்ச்சல் வந்து விட்டது. சுபாஷ¤ம் அவரது நண்பர்களும் அவருக்கு மிகுந்த கவனத்துடன் பணிவிடை செய்தார்கள். இதில் ஆச்சரியப்படத் தக்க விஷயம் என்னவென்றால், இந்த மாணவருக்குப் பணிவிடைகள் செய்ய சுபாஷின் தாயாரே ஆர்வத்துடன் முன்வந்தார். சொந்த மகனைப் பார்த்துக் கொள்வது போல் அவனைப் பார்த்துக் கொண்டார். தமது தாயாரின் ஆர்வத்தாலும், தீண்டாமை ஒழிப்பில் தம் முதல் முயற்சி வெற்றி பெற்றதாலும் சுபாஷ¤க்கு ஒரே பூரிப்பு.

காந்தியின் வாழ்க்கையிலும் தீண்டாமைக்கு எதிரான இதே போல ஒரு நிகழ்ச்சி நடந்தது ஒப்பிட்டுப் பார்க்கத் தக்கது. அகமதாபாதில் அவரது சத்தியாக்ரக ஆசிரமத்தில், தாதாபாய், தானிபென் என்ற தம்பதிகளையும் அவர்களது லட்சுமி என்ற குழந்தையையும் காந்தி சேர்த்துக் கொண்டார். இவர்கள் அரிசன வகுப்பைச் சேர்ந்தவர்கள். இதற்கு எதிராக சில ஆசிரமவாசிகள், மற்றும் அக்கம்பக்கத்திலுள்ளோரிடம் இருந்து எதிர்ப்புக் கிளம்பியது. அக்கம்பக்கத்தில் உள்ளோர் தொல்லை தந்தார்கள். ஆதரவாளர்கள் பண உதவியை நிறுத்தி விட்டார்கள். சமூகப் புறக்கணிப்பு செய்யப் போவதாகவும் செய்திகள் வந்தன. இந்த நிலையில் ஆசிரமத்தைத் தொடர்ந்து நடத்துவதேகூட சிரமமாகி விட்டது. காந்தி அடி பணிவதில்லை என்று தீர்மானித்தார். தேவைப்பட்டால், அரிசனக் குடியிருப்புக்கே ஆசிரமத்தை மாற்றிக் கொண்டு, உடல் உழைப்பின் மூலம் பொருள் தேடிக்கொள்வது என்று முடிவு செய்தார். இந்த சமயத்தில், இறையருள் முன் நிற்க, முன்பின் தெரியாத ஒருவர் ஆசிரமத்துக்கே வந்து 13000 ரூபாய் கொடுத்து விட்டுப் போனார். பணப் பிரச்சினை தீர்ந்தது. மற்ற பிரச்சினைகளும் தாமாக விலகி விட்டன. (பணம் கொடுத்த மனிதர் தொழிலதிபர் அம்பாலால் சாராபாய் என்று பிற்பாடு தெரிய வந்தது. பின் ஒரு சமயத்தில், பிரச்சினை அடிப்படையில் இந்த சாராபாய்க்கு எதிராகவே காந்தி மில் தொழிலாளர்கள் போராட்டத்தை முன்னி‎ன்று நடத்தினார் என்பது துணைத் தகவல்.)

இந்த விஷயங்களால் எல்லாம் நாம் அனைவரும் கற்றுக் கொள்ளக் கூடிய பாடம் ஒன்று இருக்கிறது. நாம் ஒரு கொள்கையில் உறுதியாக இருந்தால் அதற்காகக் கூரை மேல் ஏறிக்கொண்டு கூச்சல் போட வேண்டும் என்பது இல்லை. மற்றவர்களிடம் நமது கொள்கையை நிலை நாட்ட ஆக்ரோஷமாகச் சண்டை போட வேண்டும் என்பது இல்லை. உறுதியாக நம் நிலையில் நின்று செய்ய வேண்டிய காரியத்தைச் செய்து கொண்டிருந்தாலே போதும். எதிர்த்தவர்களும் தடுத்தவர்களும், விலகிப் போவது மட்டுமல்ல, கூடவே இணைந்து பணி செய்வதற்கான வாய்ப்பும் உண்டு. அது மட்டுமின்றி, நல்ல காரியத்துக்காக முனைந்து செயல் படும்போது, தெய்வம் நமக்கு முன்னால் போய் நின்று நமது காரிய சித்திக்கு உதவும். வள்ளுவரின் வார்த்தையில், 'தெய்வம் மடி செற்றுத் தான் முந்துறும்.'

இந்த சந்தர்ப்பத்தில் பல்கலைக்கழகத்தினர் மறுப்பு சொல்லாதிருந்தால் வேறு கல்லூரியில் சேர்ந்து படிக்க வாய்ப்பு இருக்கும் என்று சுபாஷ¤க்குத் தெரிய வந்தது. சுபாஷ் நேராகக் கல்கத்தா சென்று ஸ்காட்டிஷ் கல்லூரி முதல்வரான வெள்ளையரைச் சந்தித்துத் தம்மைப் பற்றிய அத்தனை விவரங்களையும் ஒளிவு மறைவில்லாமல் சொன்னார். முதல்வர் நல்ல மனிதர். பழைய கல்லூரி முதலில் தடையின்மை சான்றிதழ் அளித்தால் தாம் தமது கல்லூரியில் சேர்த்துக் கொள்வதாக வாக்களித்தார். சுபாஷின் அண்ணன் சரத் சந்திர போஸ் பழய கல்லூரி முதல்வரிடம் சென்று பேசி அவ்வாறே சான்றிதழ் வாங்கித் தந்ததில் சுபாஷ் பி.ஏ. வகுப்பில் சேர்ந்தார். முழு அக்கரையுடன் படித்து முதல் மாணவராகத் தேறினார். அதே நேரத்தில் பிரதேச ராணுவத்திலும் சேர்ந்து தேர்ச்சி பெற்று நல்ல மதிப்பெண்களும் சா'ன்றும் பெற்றார். தொடர்ந்து படிக்க எம்.ஏ. வகுப்பில் சேர்ந்தார்.

அப்போது அவசர அவசரமாகத் தந்தையார் கூப்பிடுவதாக சுபாஷ¤க்கு ஓர் அழைப்பு வந்தது. என்னவேன்று புரியாமல் அவர் வீட்டுக்குச் சென்றபோது, தந்தையாரும், அண்ணன் சரத் சந்திர போசும் அருகருகே உட்கார்ந்திருந்திந்தார்கள். 'ஐ.சி.எஸ். படிக்க வேண்டும். உடனடியாக இங்கிலாந்து செல்ல வேண்டும். சரி தானே' என்று கேட்டார் தந்தையார். ஒன்றும் புரியாமல் நின்றர் சுபாஷ்.' இருபத்து நா‎ன்கு மணி நேரம் அவகாசம். யோசித்துப் பதில் சொல்' என்றார் தந்தையார்.

ஏன் இந்த அவசர அழைப்பு? காரணமிருக்கிறது.

நாட்டில் கொந்தளிப்பு - நாயகனின் மனத் தவிப்பு

அவசரம் அவசரமாக சுபாஷின் தந்தை அவரை அழைத்து ஐ.சி.எஸ். படிப்புக்காக லண்டன் அனுப்பத் துடித்ததற்கு ஒரு காரணம் இருக்கத்தான் செய்தது.

அன்றைய அரசியல் சூழலைப் பற்றிக் கொஞ்சம் பார்க்க வேண்டும். பிரிட்டிஷ் அரசு ரவுலட் சட்டம் என்று சொல்லப்பட்ட ஓர் அடக்கு முறைச் சட்டத்தைக் கொண்டு வந்தது. இன்றைக்கு நாம் கண்ட தடா, பொடா சட்டங்களுக்கெல்லாம் முன்னோடி அந்தச் சட்டம். அதன்படி, யாரையும் விசாரணையின்றிக் கைது செய்து உள்ளே தள்ளலாம். அப்பீல் கிப்பீல் ஒன்றும் கிடையாது. இதை எதிர்த்து நாடே கொந்தளித்துக் கொண்டிருந்தது. மகாத்மா காந்தி இந்த சட்டத்தை எதிர்த்துத்தான் ஹர்த்தால் என்ற அமைதிப் போராட்ட முறையை உருவாக்கினார். நாடு முழுவதும் ஒரு நாள் இந்த சட்டத்தை எதிர்த்து உண்ணா விரதம் இருக்க வேண்டும். பிரார்த்தனை செய்ய வேண்டும். மக்கள் நலன் சம்பந்தப்பட்ட அத்தியாவசிய வேலைகள் தவிர மற்ற எல்லாப் பணிகளும் நிறுத்தப்பட வேண்டும், தடை செய்யப்பட்ட புத்தகங்களை அச்சிட்டு வினியோகிக்க வேண்டும். முதலில் இதற்கான தேதி 1919 மார்ச் 30 என்று நிர்ணயிக்கப்பட்டது. பின்னர், நாட்டின் பல பகுதிகளுக்கும் செய்தி தெரிந்து தயார் செய்து கொள்ள அவகாசம் வேண்டும் என்பதற்காக ஏப்ரல் 6ஆம் தேதிக்கு இது ஒத்தி வைக்கப்பட்டது. (இப்போது போல அப்போதெல்லாம் என்ன இண்டர்நெட்டா இருந்தது, உடனுக்குடனே தொடர்பு கொள்ள?) பல இடங்களில் ஹர்த்தால், தேதி மாற்றியது தெரியாமல், மார்ச் 30ஆம் தேதியே இது அனுஷ்டிக்கப்பட்டது.

பஞ்சாப் மாநிலத்தில் ஹர்த்தால் அமைதியாகவும், வெற்றிகரமாகவும் ஏப்ரல் 6ஆம் தேதி அனுஷ்டிக்கப்பட்டது. அமிர்தசரஸில் மார்ச் 30ஆம் தேதியும் ஹர்த்தால் அனுஷ்டித்தார்கள். ஏப்ரல் 9ஆம் தேதி இந்துக்களும் முஸ்லிம்களும், ஒர்றுமையுடன் கூடி ராமநவமி ஊர்வலத்தை பிரம்மாண்டமாக நடத்தினார்கள். மக்கள் எழுச்சியைக் கண்டு மிரண்ட மைக்கேல் ஓ ட்வையர் என்ற லெ·ப்டினண்ட் கவர்னர், சத்யபால், கிச்லூ என்ற இரண்டு தலைவர்களைக் கைது செய்து நாடு கடத்தினார். இது பெருத்த கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இரு தரப்பிலும் வன்முறைகள் இருந்தன. ஏப்ரல் 12ஆம் தெதி ஜாலியன் வாலாபாக் என்ற மைதானத்தில் ஒரு பொதுக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஜெனரல் டயர் என்ற அதிகாரி பொறுப்பேற்றுக்கொண்டு, ராணுவத்தின் கட்டுப்பாட்டைத் தன் வசம் வைத்துக் கொண்டிருந்தான். கூட்டம் நடந்த இடத்துக்கு துருப்புகளுடன் அவன் விரைந்தான். அந்த மைதானத்தைப் பற்றிச் சொல்ல வேண்டும். உள்ளே வரவும், வெளியே போகவும் ஒரே குறுகிய வழிதான். 10000 பேர் அந்த மைதானத்தில் இருக்கிறார்கள். குருவிகளை சுட்டுத் தள்ளுவது போல் சடசடவென்று1650 ரவுண்டுகள் சுட்டான். ரவைகள் தீர்ந்தவுடன்தான் நிறுத்தினான். ஓடவோ, ரவைகளிலிருந்து தப்பிக்கவோ முடியாமல் மக்கள், மிதி பட்டு, அடி பட்டு, குண்டடி பட்டு செத்த காட்சி, மனித குல வரலாற்றிலேயே மறக்க முடியாத ஈனமான செயல். இறப்பு எண்ணீகை 379, காயம் பட்டவர்கள் 200 என்று அரசாங்கமே கூறியது. அவ்வளவுதானா இருக்கும்? நாமே முடிவு கட்டிக் கொள்ளலாம். "துப்பாக்கி ரவைகள் தீர்ந்து விட்டன. இல்லாவிட்டால் ,மேலும் சுட்டுக்கொண்டே இருந்திருப்பேன்." என்று கொக்கரித்தான் டயர். இவனுக்கு, பிரிட்டிஷ் பாராளுமன்றம் பாராட்டு தெரிவித்தது. அந்த நாட்டில் பண முடிப்பு ஒன்றும் அளிக்கப்பட்டது.

அதை விடக் கொடுமை என்னவென்றால், இதன் பின், ராணுவச்சட்டம் அமுலுக்குக் கொண்டு வரப்பட்டது. குழந்தைகள், பல மைல் தூரம், நடக்க வைத்து, பிரிட்டிஷ் கொடிக்கு வணக்கம் தெரிவிக்க வேண்டும் என்று கட்டாயப் படுத்தப் பட்டார்கள். மக்கள் கூண்டுகளில் அடைக்கப்பட்டுக் காட்சிப் பொருள் ஆக்கப்பட்டார்கள். சரமாரியாக சவுக்கடி தண்டனை கொடுக்கப் பட்டது. இன்னும் கேளுங்கள், ஒரு ஆங்கிலேய மாதை இந்தியர்கள் அவமதித்து விட்டார்கள் என்பதற்காக, அந்த வீதியில் செல்லும் இந்தியர்கள் அத்தனை பேரும், வயிற்றைத் தேய்த்து ஊர்ந்து செல்ல வேண்டும் என்று ஆணை பிறப்பிக்கப் பட்டது.

இந்த அரசோடு எந்த விதத்திலும் ஒத்துழைக்கவே முடியாது என்று காந்தி திடமாகத் தெரிந்து கொண்டது இந்த நிகழ்ச்சிகளுக்குப் பிறகுதான். அந்த வகையில் 1919ஆம் ஆண்டு இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் ஒரு watershed எனலாம்.

இவை பற்றியெல்லாம் தெரிந்து கொண்டு மனம் கொந்தளித்துப் போயிருந்தார் சுபாஷ். தமது சகோதரர்களுடன் தீவிரமாகப் பேசியிருக்கிறார். இதைத் தெரிந்து கொண்ட அவர் தந்தையார், சுபாஷ் இந்தியாவில் இருந்தால் அவரது உணர்ச்சி வேகத்தைக் கட்டுப் படுத்த முடியாது, அவரது எதிர்காலமே பாழாகி விடும் என்பதற்காகவே, அவரை அவசரம் அவசரமாக லண்டனுக்கு அனுப்பிவிடத் தீர்மானித்தார்

ஐ.சி.எஸ். மாணவர் சுபாஷ்

என்ன முடிவு செய்வது?

குழப்பமாகத்தான் இருந்தது சுபாஷ¤க்கு. ஐ.சி.எஸ். படித்து அன்னியர் ஆட்சியில் வேலை பார்க்க வேண்டுமா என்று தயக்கம். சிறந்த நிர்வாகத் திறமை பெற்று, தாய்நாட்டுக்குப் பணி புரிய முடியுமோ என்ற ஓர் ஆசை. தேர்வில் பிரிட்டிஷாருடன் போட்டி போட்டு வென்றால் இந்தியர்களின் திறமையை எடுத்துக்காட்ட முடியுமே என்றும் ஒரு எண்ணம். இவற்றுக்கிடையே ஊசலாடிய சுபாஷ், 24 மாதங்கள் படிக்க வேண்டிய ஐ.சி.எஸ். படிப்புக்கு நமக்குக் கிடைத்திருப்பதோ எட்டே மாதங்கள். கேம்பிரிட்ஜில் சேர்ந்து படித்து, பரீட்சை தேறிய பிறகு முடிவெடுத்துக் கொள்ளலாம், இப்போதைக்கு அப்பா சொல்வதைக் கேட்டு லண்டன் போகலாம் என்று முடிவு எடுத்தார். இந்த முடிவை சில மணி நேரங்களிலேயே எடுத்து, தந்தையிடம் சொல்லிவிட்டார்.

1915 செப்டம்பர் 15ஆம் தேதி கப்பலில் லண்டனுக்குப் பயணமானார் சுபாஷ். அவர் லண்டன் சென்றடைந்தது அக்டோபர் 25ம் தேதி வாக்கில். ("நான் பிரயாணம் செய்த கப்பலை விட மெதுவாகச் செல்லும் கப்பல் வேறு இருக்க முடியாது என்றே நினைக்கிறேன்."). படிப்புக்காக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்த அவருக்கு அங்கு மாணவர்களுக்கு இருந்த சுதந்திரம் வியப்பையும் மகிழ்ச்சியையும் தந்தது. நேரத்தை வீணடிக்காமல், கவனத்தைச் சிதற விடாமல், முழு முனைப்புடன் படிப்பில் ஈடுபட்டார் அவர். அவரது ஐ.சி.எஸ். நாட்களில் நடந்த சில முக்கிய விஷயங்களை மட்டும் மேலோட்டமாகப் பார்க்கலாம்.

ஜாலியன்வாலாபாக் படுகொலை, பிரிட்டனில் வகுப்புக் கலவரம் என்பது போலத் திரித்துக் கூறப் பட்டிருந்தது. பிரிட்டிஷ் பொது மக்களிடையேயும், மாணவர்களிடையேயும் இந்த பஞ்சாப் படு கொலையைச் செய்த டயரிடம் பெரு மதிப்பு இருந்தது சுபாஷ¤க்கு சினத்தையும் வருத்தத்தையும் அளித்தது. இந்த சந்தர்ப்பத்தில், இந்தியர்கள் பால் பரிவு கொண்ட பிரிட்டிஷ் தொழிற்கட்சியைச் சேர்ந்த தலைவர் சர் ஆஸ்வால்டு மோஸ்லே இந்தப் படு கொலையைக் கண்டித்துப் பேசியது, அந்த நாட்டில் பரபரப்பையும், சுபாஷ¤க்கு மகிழ்ச்சியையும் அளித்தது.

லோகமான்ய பால கங்கதர திலகர் இந்தக் கால கட்டத்தில் கேம்பிரிட்ஜுக்கு விஜயம் செய்தார். இதைத் தடுக்க பிரிட்டிஷ் இந்திய மந்திரி அலுவலகமும், வெளிநாட்டுத் துறையும் எடுத்த முயற்சிகள் எவையும் பலிக்கவில்லை. சிறப்பான ஆங்கிலத்தில் இந்திய தேசிய உணர்வுகள் பற்றியும், பிறப்புரிமையான சுதந்திரம் அடைந்தே ஆக வேண்டிய அவசியம் பற்றியும் அவர் பேசிய உரை, மாணவர்க¨ளை மட்டுமல்லாது கல்லூரி நிர்வாகிகளையும் கவர்ந்தது.

லண்டனுக்கு சரோஜினி தேவி வருகை தந்து, இந்திய சமூகத்தினரின் வரவேற்பைப் பெற்றதும் இந்தத் தருணத்தில்தான். அவர் ஆற்றிய வீர உரை, சுபாஷை ஊக்குவித்ததில் வியப்பில்லை. இத்தகைய அறிவும் ஆற்றலும் பெற்ற இந்தியப் பெண்மணி ஒருவர் இருப்பது அவருக்குப் பெரிதும் பெருமை தந்தது.

கருத்தூன்றிப் படித்த சுபாஷ் எட்டு மாதப் படிப்பிலேயே, ஈராண்டுகள் தொடர்ந்து படித்தவர்கள் போட்டியிட்ட தேர்வில் வென்று விட்டார். அதுவும் எப்படி? அந்த ஆண்டுத் தேர்விலேயே 4-வது மாணவராக!

ஐ.சி.எஸ். பரீட்சை தேறிய மாணவர்களுக்கு இந்தியாவில் நடைமுறைப் பயிற்சி உண்டு. அதற்காக விவரங்கள் அடங்கிய தாள் ஒன்று அவர்களுக்குக் கொடுக்கப்படும். அத்தகைய தாள் ஒன்று சுபாஷ¤க்கும் கொடுக்கப்பட்டது. அதனைப் படித்த அவர் கொதித்தெழுந்தார். அப்படி என்ன இருந்தது அந்தத் தாளில்?

'இந்தியாவில் குதிரைகளைப் பராமரிப்பதில் கவனமாக இருக்க வேண்டும். இந்தியக் குதிரைக்காரர்கள் குதிரைக்குப் போடும் உணவையே தின்று விடுவார்கள். இந்திய வர்த்தகர்கள் மோசமானவர்கள். நாணயம் அற்றவர்கள். சொன்னதை நிறைவேற்ற மாட்டார்கள்".

சினம் கொண்ட சுபாஷ் மற்ற இந்திய ஐ.சி.எஸ். வெற்றியாளர்களை சேர்த்துக் கொண்டு ஒரு மறுப்புக் கடிதம் தயார் செய்தார். இந்தக் கருத்தைக் கண்டித்தும், ஆட்சேபகரமான பகுதியை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார். ஆனால், மற்ற மாணவர்கள் ஒவ்வொருவராக சாக்கு போக்கு சொல்லி, கையெழுத்து போடாமல் நழுவி விட்டார்கள். ஐ.சி.எஸ். கனி கைக்கெட்டிய தருணத்தில் நழுவிப் போய்விட்டால் என்ன செய்வது என்ற சாதாரணர்களுக்கே உரிய பயம். நம் நாயகர் அசாதாரணமனவர். துணிந்து கையெழுத்திட்டு அனுப்பி வைத்தார். பலன்? அந்த அறிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டது.

மிகக் கடினமான தேர்வில் குறுகிய காலத்தில் நல்ல மதிப்பெண்கள் பெற்று, ரேங்க்கில் தேறிய சுபாஷை வாழ்த்தி நண்பர்களிடமிருந்தும் உறவினர்களிடமிருந்தும் வாழ்த்துகள் வந்து குவிந்தன

பதவி வேண்டாம்-உதறித் தள்ளினார்!

லண்டனில் உள்ள இந்திய மந்திரி மாண்டேகுவின் அறை.
தள்ளுகதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்தார் நம் நாயகன். ஏற்கெனவே அப்பாயிண்ட்மெண்ட் இருந்தது.
பார்த்துக் கொண்டிருந்த கோப்புகளிலிருந்து தலையை நிமிர்த்தி “யெஸ், கம் இன்" என்றார் மாண்டேகு. அமரச்சொன்னார். சூரியன் அஸ்தமிக்காத பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை இந்தியாவில் தாங்கி நிற்கப்போகும் ஒரு தூண் - ஐ.சி.எஸ். அதிகாரி ஆயிற்றே? மரியாதை உண்டுதான்.

மவுனமாகத் தன் கையில் கொண்டு வந்திருந்த கடிதத்தை எடுத்து நீட்டினார் சுபாஷ்.

அதில் கண்டது:

“முப்பது கோடி இந்தியர்கள் அடிமைத்தளையில் உழலும்போது நான் பிரிட்டிஷ் அரசுக்கு சேவகம் செய்ய விரும்பவில்லை. ஆகவே என் ஐ.சி.எஸ் பதவியிலிருந்து விலகுகிறேன்."

கண்ணாடியைக் கழற்றித் துடைத்துக் கொண்டு சுபாஷை வியப்பு விரியப் பார்த்தார் மந்திரி. இந்திர போகப் பதவி ஆயிற்றே? அதை விடுவார்களா, நம்ப முடியவில்லை அவருக்கு. நமது நாயகரோ இந்திய விடுதலையைத் தவிர எச்சுவை பெறினும் வேண்டாதவர் என்பது அவருக்குத் தெரியாது.

“அவசரப் படாதே. டயம் தருகிறேன். யோசித்து முடிவு எடு." என்றார் பிரபு.

நிதானமாகப் பதில் சொன்னார் சுபாஷ். “நன்றாக யோசித்துத்தான் முடிவு எடுத்திருக்கிறேன். எங்கள் நாட்டில் காந்திஜியின் தலைமையில் ஒத்துழையாமை இயக்கம் நடந்து கொண்டிருக்கிறது. பதவிகளையும் விருதுகளையும் இந்தியர்கள் துச்சமெனத் தூக்கியெறிந்து கொண்டிருக்கிறார்கள். மாணவர்கள் எதிர்காலத்தைத் தியாகம் செய்து பள்ளிகளிலிருந்தும் கல்லூரிகளிலிருந்தும் வெளியேறுகிறார்கள். இந்த சந்தர்ப்பத்தில் நான் அதிகர பீ¢டத்தில் அடிவருடியாக அமர்ந்திருப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை. நான் முடிவு எடுத்தது எடுத்ததுதான்" என்று சொல்லி விட்டு விருட்டென்று வெளியேறினார் சுபாஷ்.

நம்பமுடியாமல் அவர் சென்ற திசையையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார் மாண்டேகு.

தமது முடிவு குறித்து அன்பு மனம் கொண்ட சகோதரர் சரத் சந்திர போசுக்கு சுபாஷ் எழுதிய கடிதங்களிலிருந்து சில வரிகளை இங்கே தருவது அவரது எண்ணப் போக்கை நாம் புரிந்து கொள்ள உதவும். (சக்தி மோகன் தமிழாக்க நூலிலிருந்து.)

“ஐ.சி.எஸ்.பட்டம் என்னை ஒரு கமிஷனராக்கும். ஒரு தலைமைச் செயலராக்கும். மேலும் பல உயர் பதவிகளில் என்னைத் தூக்கி வைக்கும். வாழ்நாள் முழுக்க அதிகார பாக்கியங்களோடு களிக்கலாம். இதில் ஐயமே இல்லை. இப்பதவி என் புற வாழ்வை மேம்பட வைக்கும். அக வாழ்வை மேம்பட வைக்குமா? ஒருபோதும் கிடையாது.

உள்ளுணர்ச்சிக்கு ஒவ்வாத, தேச உணர்ச்சியைக் கொழுந்து விட்டு எரியச்செய்யாத ஒரு பதவியை அன்னிய ஆட்சியில் வகிப்பது என்பதை விட மனத் துரோகம் என்பது வேறு இருக்க முடியாது.

நான் தேசியத் தொண்டனாக இருப்பதற்குப் பெற்ற தகுதியை, ஐ.சி.எஸ். பதவியை வகிக்கப் பெறவில்லை..

அரசாங்கப் பதவியில் இருந்து கொண்டே “முடிந்ததைச்" செய்யலாம்தான். அந்த “முடிந்தது" என்பதற்கு நிலைத்தன்மை எதுவும் கிடையாது.

பிறந்த நாட்டின் எதிர்காலத்தை விடுதலையில் நிலைநாட்டிக் குதூகலிக்க வைக்க நான் செய்ய விரும்பும் காணிக்கையாக ஐ.சி.எஸ். பட்டத்தையும் அது அளிக்கும் பெரும் பதவியையும் செலுத்தத் தயாராக இருக்கிறேன்.

குறிப்பாக சி.ஆர்.தாசைப் பாருங்கள். அவர் படிப்பென்ன, வருமானம் என்ன, புகழ் என்ன, குடும்பப் பொறுப்புகள் எவ்வளவு, கொஞ்சமா? அவரே எல்லாவற்றையும் தியாகம் செய்துவிட்டு தாய்நாட்டுக்கான பணியை மேற்கொண்டு விட்டபோது எந்தவித சொந்தப் பொறுப்பும் இல்லாத என் போன்ற இளைஞர்கள் தியாகம் செய்வது பெரிதோ பெருமையானதோ அல்ல..

தேசியக் கல்லூரியும் புதிதாகத் தோன்றியுள்ள ஸ்வராஜ் தினசரிப் பத்திரிகையும் எனது சேவையை ஏற்கக் காத்திருப்பதாகவே நம்புகிறேன்..

வறுமையும் தேச சேவையும் குரூரமானவை என்று எல்லாருமே ஒதுங்கியிருந்தால் ஒரு பரமஹம்சரையோ, விவேகானந்தரையோ, திலகரையோ, அரவிந்தரையோ பெற்றிருக்க முடியுமா?

இப்படி ஒரு முக்கிய காலக் கட்டத்தில் பிரிட்டிஷ் அரசில் கவர்னர் பதவி வகிப்பவனும் சரி, பியூன் வேலை பார்ப்பவனும் சரி, இருவருமே இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி பலப்பட உதவி செய்கிறவர்களே..."

தந்தைக்கு இதில் விருப்பமில்லை என்று தெரியும். இருந்தும் நாட்டின் சுதந்திரத்தைப் பொறுத்த இந்த விஷயத்தில் தந்தை சொல்லை மீறுவதுதான் சரி என்று திடமான முடிவு எடுத்தார் சுபாஷ்.
இளங்கோ
நிர்வாக குழுவினர்

Best Blogger Gadgets

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக