நீங்கள் முக்தி பெற வேண்டுமா?

மனிதர்களாகப் பிறந்தவர்களின் ஆசை, முக்தி பெற வேண்டும் என்பதுதான்; ஆனால், இந்த முக்தி ஒரு சிலருக்கு தான் கிடைக்கிறது. சில ஷேத்திரங்கள், முக்தி ஸ்தலம் என்று சொல்லப்பட்டுள்ளது. கமலையில் (திருவாரூரில்) பிறந்தால், முக்தி; சிதம்பரத்தை (நடராஜரை) தரிசித்தால், முக்தி; திருவண்ணாமலையை (அண்ணா மலையை) நினைத்தாலே முக்தி; காசியில் இறந்தால், முக்தி என்றெல்லாம் கூறுகின்றனர்.

இதில், கமலையில் பிறப்பது இவன் கையில் இல்லை; அது, அவன் தாயாரின் விருப்பத்தைப் பொறுத்தது. அடுத்து, சிதம்பரத்தை தரிசித்தால் முக்தி. எத்தனையோ தடவை சிதம்பரம் வழியாகப் போவர்; ஆனால், இறங்கி, நடராஜ தரிசனம் செய்ய நேரமிராது. அடுத்தது, ரொம்ப சுலபம். அண்ணாமலையை நினைத்தாலே போதும், முக்தி கிடைக்குமாம். எவ்வளவோ வேலைகள், தொல்லைகள். அருணாசலத்தை, அது தான், திருவண்ணாமலை யாரை நினைக்க நேரமிராது. அடுத்தது, காசியில் மரிப்பவருக்கு முக்தி; ஆனால், அது எல்லாருக்கும் கிடைத்து விடாது. காசியில் மரிக்க வேண்டிய புண்ணியம் உள்ளவர்களை அழைத்து வரவும், புண்ணியமில்லாதவர்களை வரவிடாமல் தடுத்தும், அப்படி, யாராவது தங்கியிருந்தாலும், அவர்களை வெளியூருக்குக் கிளப்பி விடவும் தனித்தனியாக பூத கணங்களை அங்கே பகவான் வைத்திருப்பாராம்.


புண்ணியமில்லாதவன், காசிக்குப் போகிறேன் என்று, எத்தனை தடவை புறப்பட்டாலும் போக முடியாது; அதே போல், புண்ணியமில்லாதவன் அங்கிருந்தாலும் கடைசி காலத்தில் அங்கே மரிக்க முடியாது. புண்ணியமுள்ளவன் அங்கே இருந்தால் அது பாக்கியம் அல்லது வேறு எங்கேயாவது இருந்தாலும் மரண காலத்தில் அவன் அங்கே வந்து சேர்ந்து விடுவான். இது ஈ, எறும்பு முதல் எல்லா ஜீவன்களுக்கும் பொருந்தும். காசியிலுள்ள அனைத்து ஜீவன்களுக்கும் முக்தி!
காசி செல்ல ஏற்பாடு செய்கிறாள் ஒரு பாட்டியம்மா. எத்தனையோ சாமான்களை சேகரம் செய்து வைத்துக் கொள்கிறாள். கூடவே, ஒரு டின் நிறைய முறுக்கு எடுத்துக் கொள்கிறாள். காசியில் போய் டின்னைத் திறந்து பார்க்கிறாள். அதற்குள்ளே கட்டெறும்பு ஒன்று முழிச்சு, முழிச்சு பார்க்கிறது. "அட, சீ... கட்டெறும்பு, வந்துடுத்தே!' என்று சொல்லி, எறும்பை எடுத்து கீழே தரையில் போட்டு காலால் மர்த்தனம் செய்கிறாள்.
கட்டெறும்பு புண்ணியம் செய்திருந்தது. டிக்கட் கூட வாங்காமல், சாப்பாட்டு செலவும் இல்லாமல் காசியில் மரணம்; முக்தி! இது எல்லாருக்கும் கிடைத்துவிடாது.
அங்கே யாராவது மரணமடைந்தால், அழமாட்டார்கள்; காசி விசுவநாதன் அழைத்துக் கொண்டு விட்டான் என்பர்.


இறந்தவனுடைய அஸ்தியில் (எலும்புத் துண்டு) ஒன்றையாவது கங்கையில் போட வேண்டுமாம். இறந்தவனுக்கு புண்ணியலோக வாசம் கிடைக்கும். நாம் பாரதத்தில் எத்தனையோ ஷேத்திரங்கள், புண்ணிய நதிகள். என மனிதன் நற்கதி பெற பல மார்க்கங்கள் உள்ளன. இவைகளிலும் நம் கவனம் செல்ல வேண்டும்.

by Rupa

Best Blogger Gadgets

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக