சரித்திர நாயகர்கள் . புரூஸ் லீ

புரூஸ் லீ என்று பிரபலமாக அறியப்பட்ட மார்ஷியல் ஆர்ட்ஸின் முடிசூடா மன்னனான புரூஸ் ஜுன் ஃபேன் லீ (நவம்பர் 27, 1940 - ஜூலை 20 1973) கலிஃபோர்னியாவில் இருக்கும் சான் பிரான்ஸிஸ்கோவில் பிறந்தாலும் வளர்ந்தது ஹாங்காங். இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான தற்பாதுகாப்புக்கலை நிபுணர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார். இவரது திரைப்படங்கள் காரணமாக மேற்கு நாடுகளில் சீனத் தற்பாதுகாப்புக்கலை தொடர்பில் அதீத ஆர்வம் ஏற்படமை குறிப்பிடத்தக்கது.
தற்காப்பு கலைக்கு உலக அங்கீகாரம் வாங்கிக் கொடுத்தவர் புரூஸ் லீ. இளைஞர்களின் ஆதர்ஷ நாயகன். உடம்பை எங்ஙனம் பேணுவது என உலகுக்கு கற்றுக் கொடுத்த ஆசான். தனது 33-வது வயதிலேயே புரூஸ் லீ மரணத்தை தழுவியது மகத்தான சோகம்.


புரூஸ் லீ சண்டையிடும் வேகம் பிரமிக்கத்தக்கது. இவரது கைகளும் கால்களும் எதிரியை தாக்கும் வேகத்துக்கு சினிமாவால் ஈடு கொடுக்க முடியவில்லை. பொதுவாக ஒரு வினாடிக்கு 24 பிரேம்கள் என்பதே சினிமா கணக்கு. புரூஸ் லீயின் வேகத்துக்கு ஈடுகொடுக்க ஒரு வினாடிக்கு 34 பிரேம்களாக மாற்றியமைத்தனர்.
இவரது தந்தை Lee Hoi - Chuen, ஒரு நடிகர். தாய் Grace ஒரு கத்தோலிகர்.


பெற்றோருடன் குழந்தையாக புரூஸ் லீ
புரூஸ் லீக்கு பெற்றோர்கள் ‘லீ ஜுன்பேன்’ என பெயர் வைத்தனர். சீன மொழியில் இதற்கு உலக பாதுகாவலர் என்று பொருள். இந்த பெயர் அமெரிக்க நர்ஸின் வாயில் நுழையவில்லை ‘ஜுன் பேன்’ சிரமமாக இருந்ததால் அந்த நர்ஸ் புரூஸ் என செல்லமாக கூப்பிட, அதுவே பிற்காலத்தில் அவரது பெயராக நிலைபெற்றது.
புரூஸ் லீக்கு மூன்று மாதம் ஆனபோது அவரது குடும்பம் ஹாங்காங் வந்தது. 12 வயதுவரை La Salle College-ல் (Secondary School) கல்வி பயின்றார் புரூஸ் லீ. பிறகு புனித பிரான்சிஸ் சேவியர் கல்லூரியில் அவரது படிப்பு தொடர்ந்தது.
1959 ஆம் ஆண்டு, ஒருவருடன் ஏற்பட்ட பிரச்சினையில் அந்த நபரை புரூஸ் லீ கடுமையாக தாக்கிவிட சிக்கல் பெரிதானது. புரூஸ்லீயின் நலன் கருதி அவரது பெற்றோரும், அமெரிக்காவில் இருக்கும் தனது பால்ய நண்பர் வீட்டிற்கு அவரை அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் நிகழ்கையில் அவருக்கு வயது 18.
புரூஸ் லீயின் நடிப்பு வாழ்க்கை அவரது சிறு வயதிலேயே தொடங்கியது. அவரது தந்தை ஒரு நடிகர் என்பதால் தனது 18-வயதிற்குள் இருபது படங்களில் நடித்தார். அமெரிக்காவில் இருந்தபோது ‘Batman’ படத்தின் தயாரிப்பாளர் William Dozier பார்வையில் பட்டது இவரது திரை வாழ்க்கையில் திருப்பு முனையை ஏற்படுத்தியது.
அவர் அமெரிக்காவில் இருந்தபோது ‘The Green Hornet’, ‘Iron Side’, ‘Here Come the Brides’ ஆகிய தொலைக்காட்சி தொடர்களில் நடித்தார். அமெரிக்காவிலிருந்து ஹாங்காங் திரும்பிய புரூஸ் லீயுடன் கோல்டன் ஹார்வெஸ்ட் கம்பெனி தயாரிப்பாளர் ரேமண்ட் செள ஒப்பந்தம் செய்து கொண்டார். இவரது தயாரிப்பில் புரூஸ் லீ நடித்து வெளிவந்த முதல்படம் பிக்பாஸ். 1971-ல் வெளிவந்த இப்படத்திற்கு முன்பே ஹாங்காங் முழுவதும் பிரபலமாகியிருந்தார் புரூஸ் லீ. பாக்சிங் சாம்பியனாகவும்,’Crawn Colony Cha Cha’ சாம்பினாகவும் அறியப்பட்டிருந்த நேரத்தில் இப்படம் வெளியானது.
கடத்தல் முதலாளிகளுக்கும் அப்பாவி தொழிலாளிக்களுக்கும் இடையே நடக்கும் போராட்டமே ‘பிக் பாஸ்’ படத்தின் கதை. புரூஸ் லீயின் அதிவேக சண்டைகளும், கண்களில் அவர் காட்டிய வெறியும் படத்தை மிகப்பெரிய அளவில் வெற்றி பெற செய்தது. ஆசியாவில் 12 மில்லியன் டாலர்களை இப்படம் வசூலித்தது.
இவர் யூனிவர்சிட்டி ஆஃப் வாஷிங்டன் என்ற கல்வி நிறுவனத்தில் சினிமா துறைக்கு ஏற்ற படிப்புகளைத் தேர்ந்தெடுத்து படித்தார். இந்த கல்லூரியில் தான் தனது வாழ்க்கை துணைவியான லின்டா எமரியை சந்தித்தார். இவர்களுக்கு 1964 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த தம்பதிகளுக்கு பிராண்டன் லீ என்ற மகனும், ஷெனான் லீ மகளும் பிறந்தார்கள். இருவரும் திரைத்துறையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய மகன் பிராண்டன் லீ, 1993 ஆம் ஆண்டு தி க்ரோ படத்தில் நடிக்கும்போது நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தார்.


லீ தி லிட்டின் டிராகன் என்ற புனைப்பெயரும் இயக்குநர் ஒருவரால் இவருக்கு வழங்கப்பட்டது. சைனீஸ் ராசிப்பலன்படி புரூஸ் பிறந்தது டிராகன் ஆண்டு. அதனால் என்னவோ அவருக்கு அந்த பெயர் மிகவும் பொருந்திவிட்டது.
1972-ல் ‘பிஸ்ட் ஆஃப் பியூரி’ படம் வெளியானது. தனது மாஸ்டரை கொன்றவர்களை புரூஸ் லீ பழிவாங்கும் கதை. நரம்புகள் புடைக்க எதிரியை ஒரே குத்தில் அவர் வீழ்த்தி ஆக்ரோஷமாக கூச்சலிடும் காட்சி ரசிகர்களின் ரத்த ஓட்டத்தை எகிறச் செய்தது. முப்பதுக்கும் மேற்பட்ட ஸ்டூடண்டுகளுடன் சண்டையிடும் காட்சி இதன் பிரதானம். 15 மில்லியன் டாலர்களை இப்படம் குவித்தது.
புரூஸ் லீ கதை எழுதி இயக்கிய ‘Way to the Dragon’ படம் ‘பிஸ்ட் ஆஃப் பியூரி’ வெளியான அதே ஆண்டு வெளியானது. (இப்படத்தை ‘ரிடர்ன் ஆஃப் தி டிராகன்’ எனவும் கூறுவர்). இப்படம் உலகம் முழுவதும் புரூஸ் லீயின் புகழை கொண்டு சேர்த்தது. அவருடன் சேர்ந்து குங்பூ கலையும் புகழடைந்தது.
இந்த காலகட்டத்தில் புரூஸ் லீயின் குங்பூ ஹாலிவுட் சினிமாவில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியது. முக்கியமாக ‘Way to the Dragon’ படத்தின் கிளைமாக்ஸில், தான் அமெரிக்காவில் இருந்தபோது சந்தித்த கராத்தே மாஸ்டர் சக்நாரிஸை புரூஸ் லீ பயன்படுத்தினார். ரோமில் எடுக்கப்பட்ட இப்படத்தின் கிளைமாக்ஸ் சண்டைக்காட்சியில் புரூஸ் லீயும் சக்நாரிஸும் மோதுவதை ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. அத்தனை ஆக்ரோஷமான அற்புதமான சண்டைக்காட்சி இது.
அமெரிக்க தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து புரூஸ் லீ உருவாக்கிய படம் ‘என்டர் தி ட்ராகன்’. ஹாலிவுட்டை மட்டுமின்றி உலகையே மிரட்டியது இந்தப் படம். அன்றைய அமெரிக்க டாலர் மதிப்பில் இது வசூலித்தது (அமெரிக்காவில் மட்டும்) 850, 000 டாலர்கள்! இன்றைய மதிப்பில் இது பல மில்லியன்கள் பெறும். உலகம் முழுவதும் இப்படம் 200 மில்லியன் டாலர்களை வசூலித்து புரூஸ் லீயை தற்காப்பு கலையின் முடிசூடா மன்னனாக்கியது.
1973 ஆம் ஆண்டு மே மாதம் 10 ஆம் தேதி “என்டர் தி டிராகன்” படத்திற்கு பின்னணி குரல் (Dubbing) பதிவு நடந்துகொண்டிருக்கும்போது உடம்பில் கடுமையான வலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன்பிறகு அவரது உடல்நிலையில் ஒரளவு முன்னேற்றம் ஏற்பட்டது.
ஜூலை மாதம் 20 ஆம் தேதி புரூஸ் லீயும் முன்னாள் ஜேம்ஸ் பாண்ட் ஜார்ஜ் லெசன்பையும் இணைந்து ஒரு படத்தில் நடிப்பதாக இருந்தது. அதனால் அதுகுறித்த கதை விவாதத்திலும் இருவரும் ஈடுபட்டிருந்தனர்.
ஆனால் “கேம் ஆஃப் டெத்” படத்தின் தயாரிப்பாளர் ரேமண்ட் சௌவ்வுடன் பிற்பகல் 2 மணிவரை புரூஸ்லீ இருந்ததாகவும், 4 மணிக்கு மேல் சக நடிகரான பெட்டி திங் பெய் வீட்டுக்கு புரூஸ் லீ சென்றதாகவும் புரூஸ் லீயின் மனைவி கூறி இருக்கிறார். அப்போது புருஸ் லீக்கு கடுமையான தலைவலி ஏற்பட்டதால் சக நடிகரான பெட்டி திங் பெய் அவருக்கு வலி நிவாரணி மருத்து கொடுத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அதனைத்தொடர்ந்து சரியாக 7.30 மணிக்கு ஓய்வெடுக்க செல்வதாக கூறிவிட்டு தூங்குவதற்கு சென்ற புரூஸ் லீ, மீண்டும் எழாததை கண்டு அதிர்ச்சி அடைந்த சிலர் உடனே குயின் எலிசபெத் மருத்துவமனைக்கு அழைத்து சென்றதாகவும், அதற்குமுன் அவரை பிழைக்க வைக்க முயற்சி செய்ததாக மருத்துவர் ஒருவர் சாட்சியம் அளித்திருக்கிறார். ஆனால் ஆம்புலன்ஸ், மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே புரூஸ் லீயின் உயிர் பிரிந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.
இறுதியில், அவரது உடலை பரிசோதித்த மருத்துவர்கள், கண்களில் தென்படும்படி அவரது உடலில் எந்த காயங்களும் இல்லையென்றும், ஆனால் அவரது மூளையின் அளவு மட்டும் 13 சதவீதம் பெரிதாகி இருந்ததாக தெரிவித்திருக்கிறார்கள்..
ஆனால் அவரை போட்டியாக நினைக்கும் சிலர் அவருக்கு உணவில் நஞ்சு கலந்துகொடுத்திருக்கிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இன்றுவரை இளைஞர்களது ஆதர்ஷ நாயகனான புரூஸ் லீ நடித்தது வெறும் 5 படங்கள் மட்டுமே.
உலத்தையே புரட்டிப்போட்ட அந்தப் படங்கள்என்டர் த டிராகன்

த பிக் பாஸ்

ரிட்டர்ன் ஆப் த டிராகன்

பிஸ்ட் ஆப் பியூரி

Way of the dragan.


புரூஸ் லீ உடம்பை பேணிய விதம் அலாதியானது. காலை ஏழு மணி முதல் ஒன்பது மணி வரை வயிறு மற்று தசைகளுக்கான பயிற்சி. பிறகு எடை பயிற்சி மற்றும் சைக்கிளிங். புரூஸ் லீ விரும்பி செய்த மற்றொரு பயிற்சி ஓடுவது. ஐந்து முதல் ஆறு மைல்கள் அதி வேகமாக ஓடிக்கொண்டே ஐந்து நிமிடத்துக்கொருமுறை வேகத்தை மாற்றிக் கொள்வது.
புரூஸ் லீ உடல் உறுதி சம்பந்தப்பட்ட நூற்றுக்கணக்கான புத்தகங்களை சேகரித்து வைத்திருந்தார். பிரத்யேகமா செய்த உணவுகளையே அவர் பெரும்பாலும் எடுத்துக் கொண்டார். ஒருவர் உள்ளங்கையை மூடி திறப்பதற்குள் அவரது கையை தாக்கும் அளவுக்கு வேகம் புரூஸ் லீயிடம் இருந்தது. ஒரு கையின் சுண்டுவிரல் மற்றும் கட்டை விரலை மட்டும் பயன்படுத்தி தண்டால் எடுக்கும் அளவுக்கு விரல்களை உறுதிப்படுத்தி வைத்திருந்தது இன்னொரு ஆச்சரியம்.
முப்பது வயதிலேயே புகழின் எல்லா சிகரங்களையும் தொட்டுப் பார்த்தவர் முன் கோபத்துடன் நடந்து கொண்டது ஏராளமான விரோதிகளை அவருக்கு சம்பாதித்து கொடுத்தது. படத்தில் இவருடன் சண்டையிடுகிறவர்கள் மூக்கை உடைத்துக் கொள்வதும், பற்களை பறி கொடுப்பதும் சாதாரணம்.
திரையில் இத்தனை ஆக்ரோஜமாக இத்தனை உண்மையாக நிகழ்த்தி காட்டிவர்கள் புரூஸ் லீக்கு முன்பும் இல்லை பின்பும் இல்லை. அவருக்கு மரியாதை செய்யும் வகையில் ஹாங்காங் அரசு இரண்டு வருடங்களுக்கு முன்பு அவரது முழு உருவ வெண்கல சிலையை 46 லட்சம் செலவில் நிறுவியது. டைம்ஸ் பத்திரிகை சென்ற நூற்றாண்டின் சமூகத்தை பாதித்த சிறந்த 100 மனிதர்கள் பட்டியலில் புரூஸ் லீயையும் சேர்த்துள்ளது.
ஹாங்காங்கில் உள்ள அவரது சிலை

ஒரு கலையை எப்படி நேசிப்பது, அதனை எங்ஙனம் உச்சத்துக்கு கொண்டு செல்வது என்பதை கற்றுக் கொள்ளும் அரிய ஆசானாகவே இன்னும் விளங்குகிறார் புரூஸ் லீ. அவர் இறந்து இத்தனை வருடங்கள் ஆன பிறகும் அவர் அமர்ந்த நாற்காலி காலியாகவே உள்ளது. அதில் அமரும் தகுதியுள்ள ஒருவர் இன்னும் பிறக்கவில்லை. இனிமேலும் பிறக்க போவதில்லை

ஓட்டுப்போட என்னை அழுத்து


Best Blogger Gadgets

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

படிக்க வந்த நண்பர்களெல்லாம் ஒட்டு போட்டுட்டு போங்களே!!

இந்த இடுகை உங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் வாக்களிக்கவும்.


தமிழ்மணத்தில் ஆதரவு வாக்களிக்க உள்ள கருவிபட்டையில் மேல்நோக்கியுள்ள கைவிரலை சொடுக்கவும்